29 Sept 2010

ஹைக்கூ.... உன்னோடு சேர்ந்து...

ஹைக்கூ.... உன்னோடு சேர்ந்து...


நடக்கும்போது சுகமாயிருக்கிறது...!
தனியே நிற்க்கும்போது வலிக்கிறது...!!
தயவுசெய்து என்னோடு வா...!
இன்னும் கொஞ்சதூரம்
நடக்கவேண்டும் நான்...!!
உன்னோடு சேர்ந்து...


***********************************************************************************

தென்றலும் அவளும்
ஒன்றுதான்...!
நெஞ்சோடு உணர்ந்தேன் நான்...!!
அவள் என்னை
தழுவும்போது...

-----அனீஷ்...

23 Sept 2010

போதும் இந்த பொல்லாத வாழ்க்கை

போதும் இந்த பொல்லாத வாழ்க்கை


முகமூடிகளை அணிந்துகொண்டு
முன்னுக்குப்பின்
முரணாகப் பேசும் மூடர்கள்...!

நம்பிக்கைகளுக்கும்
நம்பிக்கை துரோகத்திற்க்கும் இடையில்
நடைபிணமாகும் உயிர்...!

விழிகளில் நீரை வழியவிட்டு
விவாதம் செய்யும்
வீணாய்போன மனிதர்கள்...!

மனதோடு இருந்துவிட்டு - அந்த
மனதையே உடைத்து விடும்
மனித கூட்டம்...!

கனவுகளை புதைக்க சொல்லி
கல்லறைகளை உயிர்ப்பிக்கும்
சந்தர்ப்பவாதிகள்...!

ஏய் கடவுளே...
போதும் எனக்கு இந்த
வெறுத்துப் போகும்
பொல்லாத வாழ்க்கை...!

என் மூச்சை நிறுத்தி
என் இதயத்தை இறக்கவிடு
இப்போதே...

கடவுளே...!
கடைசியாய் ஒரு வேண்டுகோள்...!!
இன்னொரு ஜென்மம்
இனியும் எனக்கு தந்தால்
தயவுசெய்து நீ
மறுபடியும் என்னை
மனிதனாக மட்டும் படைத்துவிடாதே...

-----அனீஷ்...
வாழ்க்கை

வாழ்க்கை



நிஜங்களுக்கும்
நிழல்களுக்குமிடையில்
நிலைதடுமாறும் வயது...!

நம்பிக்கைகளுக்கும்

சந்தேகங்களுக்குமிடையில்
சஞ்சலப்படும் மனது...!

அன்புக்கு

அதிகபட்ச விலையாய்
அழுகையை தரும் மனிதர்கள்...!

கன்னத்தில் வழியும்

கண்ணீரைக் கண்டு
கைதட்டிச் சிரிக்கும் உலகம்...!

விரல்பிடித்து நடப்பதாய்

விளக்கம் சொல்லிவிட்டு
விலகிச் செல்லும் சிலர்...!

எவரிடத்தில்

எதையோ எதிர்பார்த்து
ஏமாந்து நிற்கும் இதயம்...!

தன்னம்பிக்கையோடு பயணிக்க சொல்லி

தயங்காமல் அழைக்கும்
தவறான பாதைகள்...!

கண் மூடினால் தெரியும்

கனவுகளை கூட
நிஜமென்று நம்பும் கண்கள்...!

முயன்றாலும் கிடைக்காததை

முழுமுயற்சியோடு தேடும்
முட்டாள்தனமான சில தேடல்கள்...!

தந்த இதயத்தை

தவறாமல்
திருப்பி வாங்கும் ஒருவர்...!

சந்தோஷங்களை பறித்துவிட்டு

கவலைகளை மட்டும் தரும்
காலச் சக்கரம்...!

இதுதான் வாழ்க்கை என்றில்லை...!

இவ்வளவுதான் வாழ்க்கை...


-----அனீஷ்...

17 Sept 2010

நீ இல்லை என்றால்...

நீ இல்லை என்றால்...


கால்கள் முளைத்த
நிலவாய் நின்றாய்...!
காற்றில் மிதக்கும்
இசையாய் வந்தாய்...!!

சுவாசத்தில் புகுந்து

உயிருக்குள் கலக்கிறாய்...!
நினைவுக்குள் நீயும்
நிஜங்களாய் மிதக்கிறாய்...!!

இதயத்தில் எனக்கொரு

இடம் தர மறுக்கிறாய்...!
தூரத்தில் இருந்தும்
தூக்கம் கெடுக்கிறாய்...!!

தினசரி கனவில்

தரிசனம் தந்தாய்...!
முகத்தை மறைத்து -என்னை
முழுதாய் கொன்றாய்...!!

இரவுகள் உன்னால்

நரகமானதே...!
இமைகளும் இப்போது
சுமைகளானதே...!!

இதயத்தின் துடிப்பு

இடியாய் கேட்குதே...!
உயிரும் உன்னால்
உடைந்து போகுதே...!!

சுவரங்கள் ஏழும் -உன்
குரலில் எதிரொலிக்குதே...!
நீ கொஞ்சம் சிரித்தால் -என்
நெஞ்சுக்குள் இசை தெறிக்குதே...!!

கண்ணே...! உன்னோடு வாழ
காத்திருக்கிறது என் உயிர்...!
நீ இல்லை என்றாலோ
நீடிக்காது இந்த உயிர்...!!

-----அனீஷ்...

16 Sept 2010

பிரிந்துவிடாதே என்னை...

பிரிந்துவிடாதே என்னை...


இயங்காமல் கிடந்த -என்
இதயத்துடிப்பின்
இடைவெளிக்கிடையில்
இசையை ஊற்றியவள் நீ...!

நிர்வாணமாய் கிடந்த -என்

நித்திரைக்கு
கனவுகளால்
ஆடை நெய்தவள் நீ...!

பச்சை நரம்பின்

பகுதி ஒவ்வொன்றிலும்
பரவசம்
பாய்ச்சியவள் நீ...!

உடைந்து கிடந்த -என்

உயிர் சிறகுகளை
ஓரப்பார்வைகளால்
ஒட்ட வைத்தவள் நீ...!

பேசத் தெரியாத -என்

பேனா முனைகளுக்கு
கவிதை பேச
கற்றுக் கொடுத்தவள் நீ...!

என் மூச்சுப்பையின்

ஏதோ ஒரு முனையில்
எனக்கு எல்லாமாய்
கலந்து கிடப்பவள் நீ...!

நட்பாய்,

கடைசியில் காதலாய்
மனதை
மழையாய் நனைத்தவள் நீ..!

இதயத்தில் அல்ல -உன்னை
உயிரில் சுமக்கிறேன் நான்...!
பிரிந்துவிடாதே என்னை...!!
மரித்துப் போய்விடுவேன் நான்...

-----அனீஷ்...

15 Sept 2010

காதல் வரும் நேரம்

காதல் வரும் நேரம்


மனமோ இங்கு
மழையில் நனையும்...!
உணர்வுகள் மெல்ல
குடையாய் விரியும்...!!

கால்கள் இரண்டும்

காற்றில் பறக்கும்...!
கைகளில் மெதுவாய்
பொய் சிறகுகள் முளைக்கும்...!!

விழிகள் இரண்டும்

உறக்கம் மறக்கும்...!
கனவில் புதிதாய்
நிறங்கள் பிறக்கும்...!!

உளறும் வார்த்தைகள்

கவிதைகளாகும்...!
மவுனங்கள் கூட
இசைகளாகும்...!!

உயிருக்குள் புதிதாய்

உயிரொன்று சேரும்...!
இதயம் நொடிதோறும்
இறந்து பிறக்கும்...!

எல்லாம் இந்த

காதல் வரும் நேரம்...

-----அனீஷ்...

14 Sept 2010

உன் காதல் கொடு

உன் காதல் கொடு


உன்னை பார்த்து செல்ல
பகலில் சூரியனும் உதிக்குதே...!
இதயமே...! இரவில் உன்னை
நிலவு வந்து ரசிக்குதே...!!

கண்ணாடி வானமும் -உன்

முன்னாடி உடையுதே...!
பெண்ணே...! உன்னை கண்டு
வெண்மேகம் உருகுதே...!!

உன் கூந்தலில் ஒட்டிக்கொள்ள

கோடி பூக்கள் வேண்டுதே...!
தேவதையே...! தென்றலும் உன்னை
தேடி வந்து தீண்டுதே...!!

உன் பாதம் பட

பாதைகள் தவம் கிடக்குதே...!
அழகே...! உன்னை தேடி இப்போது
அந்த வானவில்லும் நடக்குதே...!!

உன் கைகள் பட்டால்

காகிதப் பூக்கள் கூட
கண் திறக்கும்...!
அன்பே...! உன் காதல் கொடு -என்
இதயம் உனக்காய்
இன்னொருமுறை பிறக்கும்...!!

----அனீஷ்...

13 Sept 2010

நினைவுகள் போதும்...

நினைவுகள் போதும்...


மாறிக்கொண்டிருக்கும்
மனித வாழ்க்கை...!
தொலைப்பதற்க்கு எதுவுமில்லாதபோது
தேடுவதற்க்கும் இங்கு வழியில்லை...!!

கடைசிவரை -நான்

காப்பாற்றி வைத்திருந்த -என்
இதயம் அவளிடத்தில்
இப்போது தொலைந்துவிட்டது...

அவளுக்கும் எனக்குமிடையில்

அதிக துரம்...!
ஆனால் இதயங்களோ
அருகருகில்...!!

சுடும் என தெரிந்தும்

சூரியனை பிடிக்க ஆசைப்படுகிறேன்...!
எட்டாது என தெரிந்தும்
எட்டிப் பிடிக்க முயலுகிறேன்...!!

மறுத்துப் போகவும்

மறந்து செல்லவும்
மனதிற்க்கு தெரியவில்லை...!

தவறு என தெரிந்தும்

திருத்திக்கொள்ள மனமில்லை...!
தவறான பாதை என்றாலும்
திரும்பிப்போக விருப்பமில்லை...!!

அவளை பிரியும்போது கூட
அழமாட்டேன் நான்...!
கண்ணீர் துளியாய் அவள்
கரைந்து போய்விடுவாள் என்பதால்...

அவளிடம் தொலைத்த
என் இதயத்தை
அவளிடமே விட்டுப்போகிறேன்...

எனக்கென்று
அவள் இல்லையென்றாலும்
ஆயிரம் ஆண்டுகள்
நான் வாழ்ந்துவிடுவேன்...!
அவளின் இந்த நினைவுகளுடன்....
 
-----அனீஷ்...

9 Sept 2010

ஹைக்கூ.... நீ...!!!

ஹைக்கூ.... நீ...!!!


எந்த மலரும்
இத்தனை நிறமில்லை...!
கோபத்தில் சிவக்கும்
உன் கன்னங்களை விட...


***********************************************************************************

கடற்கரை மணலில்
கவிதைப் புத்தகம்...!
உன் காலடிச் சுவடு....


***********************************************************************************

மழையில் நனைகிறது
வானவில்...!
மழையில்
குடையில்லாமல்
நீ...

-----அனீஷ்...
என்ன தரப்போகிறாய் நீ எனக்கு...

என்ன தரப்போகிறாய் நீ எனக்கு...


பூவா -இல்லை நீ
பூகம்பமா...!
நிலவா -இல்லை நீ
நிஜமில்லையா...!!

ஆறடி உயரத்தை

அதற்க்குள்ளே மோகத்தை
அமிலமாய் ஏன் தெளித்தாய்...!

இளமையின் ஈரத்தை

இதயத்தின் ஓரத்தை
இரு விழிகளால் ஏன் அறுத்தாய்...!

ராத்திரி நிலவாய்

ரகசிய கனவில்
ரதியே ஏன் நுழைந்தாய்...!

ஏதோ சொல்லும் பார்வையை

என்னை கொல்லும் காதலை
எனக்குள்ளே ஏன் விதைத்தாய்...!

இறக்குது இதயம் -உன்

இருவிழி பார்வையில்...
பறக்குது மனது -உன்
பார்வையின் சிறகினில்...

மறுப்பதில் நியாயமில்லை

மனதை எனக்கு தந்துவிடு...!
மனதை நீ தரமறுத்தால்
மரணத்தையாவது எனக்கு கொடு...!!

 

-----அனீஷ்...

8 Sept 2010

நீ...

நீ...




கோடி நிலா
கூடி வந்ததுபோல்
உன் முகம்...
பவுர்ணமி நிலா கூட
பார்ப்பதற்கு இவ்வளவு அழகில்லை...!

வெள்ளை நதியில்
துள்ளி விளையாடும் -இரு
புள்ளி மீன்களாய்
உன் கண்கள்...

பிரம்மன் என்னை விட
பிரமாதமாய் கவிதை எழுதுகிறார்...!
கவிதையாய் உன் இரு
கன்னங்கள்...

இருவரி கவிதையாய் -உன்
இரு இதழ்கள்...!
அது உதிர்க்கும் வார்த்தைகளோ -என்
அடிநெஞ்சில் இசையாய்...

இருட்டை விழுங்கும்
இரவு நேர நட்சத்திரங்கள்...!
உன் கூந்தலிலிருந்து
உதிரும் பூக்கள்...

உன் கை பட்ட
உன் பேனாவின்
கிறுக்கல்கள் கூட
கவிதைகளாகும்....

கடற்கரை மணலில் -உன்
கால்கள் பதித்த சுவடுகளை -அந்த
கடல் அலையும் ஒருவேளை
காதலிக்கும்...

அழகு என்பது வெறும்
சொல் மட்டும் இல்லை...!
நீ இல்லை என்றால்
அழகென்ற சொல்லே இல்லை...!!


-----அனீஷ்...

7 Sept 2010

எதிரில் நீ...

எதிரில் நீ...

ஆயிரம் சிறகுகள் முளைத்து
ஆகாயத்தில் பறக்கிறேன் நான்...!


சுவாசிக்கும் காற்றிலோ
சூரியனின் வெப்பம்...!


இதயமோ துடிப்பதாய் நடித்து
இடைவெளியில்லாமல் வெடிக்கிறது...!


மனதின் வார்த்தைகளோ
மவுனங்கள் பட்டு உடைகிறது...!


எனக்கே தெரியாமல்
ஏதேதோ ஆகிறது எனக்கு...!


என் எதிரில்
நீ வரும்போது...


-----அனீஷ்...

6 Sept 2010

நீயும்... உன் நினைவுகளும்...

நீயும்... உன் நினைவுகளும்...


சுவாசிக்கும் காற்றிலும்
சுவடுகளில்லாமல்
சுற்றி வருகிறாய் நீ...!

ஊமையான என் இதயத்தை
உன் பெயர் சொல்லி
உரக்க கத்தவைக்கிறாய் நீ...!

பேசும் வார்த்தைகளில்
பாதி வார்த்தைகளுக்கு
பதிலகிறாய் நீ...!

ராத்திரி கனவுகளில்
ரகசியமாய் புகுந்து
ரகசியம் பேசுகிறாய் நீ...!

காற்றில்லாமல் ஒருவேளை
வாழ்ந்துவிடுவேன் நான்...!
ஆனால் மரித்துப்போய்விடுவேன்... !!
நீயும்
உன் நினைவுகளும்
இல்லாமல் போனால்....


------அனீஷ்...

3 Sept 2010

கொஞ்சம் கொஞ்சமாய்...

கொஞ்சம் கொஞ்சமாய்...


கொஞ்சம் கொஞ்சமாய்
உனக்குள் சரிந்தேன்...!
நீ பேசும் கணங்களில்...
மெல்ல மெல்லமாய்
உயிர் போகாமல் மரித்தேன்...!!
நீ சிரிக்கும் தருணங்களில்...

தட்டுத்தடுமாறி
விழுந்தேன் எழுந்தேன்...!
உன் கன்னக்குழியில்...
தொட்டு சூடேறி
புதைந்தேன் தொலைந்தேன்...!!
உன் நெஞ்சுக்குழியில்...

பனித்துளியாக உருகி
விண்வெளியோடு பறந்தேன்...!
தூரத்தில் நீ என்னை பார்க்கும்போது...
புல்வெளிமேலே பூக்கும்
மழைத்துளியாகிப் போனேன்...!!
தூக்கத்தில் உன் கனவுகள் என்னை தாக்கும்போது...

என் செல்கள் எல்லாம்
சில்லாக உடையும்...!
நீ இல்லை என்றால்...
சொல்லாத ஆசைகள்
மெல்லமாய் கைகூடும்...!!
நீ என் அருகில் நின்றால்...



-----அனீஷ்...

எனக்கும்... உனக்கும்...

எனக்கும்... உனக்கும்...



ஒற்றை புள்ளி நிலவை
மொட்டை மாடியிலிருந்து ரசிப்பது
எனக்கு பிடிக்கும்...!
உனக்கும் அது பிடிக்கும் என்பதால்...

அரைகுறையாய் தெரியும் -அந்த

பிறை நிலவில் பாதியை
எனக்கு பிடிக்காது...!
உனக்கு அது பிடிக்காது என்பதால்...

கொட்டும் நல்ல மழையில்

பட்டும் படாமல் நனைவது
எனக்கு பிடிக்கும்...!
உனக்கும் அது பிடிக்கும் என்பதால்...

கண்ணிமைக்கும் நொடியில் வரும்

மின்னல் ஒளி
எனக்கு பிடிக்காது...!
உனக்கு அது பிடிக்காது என்பதால்...

காற்றோடு மோதி

காதல் செய்யும் பூக்களை
எனக்கு பிடிக்கும்...!
உனக்கும் அது பிடிக்கும் என்பதால்...

அழகான பூக்களுக்கிடையில்

அசிங்கமான முட்களை
எனக்கு பிடிக்காது...!
உனக்கு அது பிடிக்காது என்பதால்...

சுகமாய் காதுகளை வருடும்

சுப்ரவாதம்
எனக்கு பிடிக்கும்...!
உனக்கும் அது பிடிக்கும் என்பதால்...

புரியாத வார்த்தைகள் கொண்ட

புதுப்பட பாடலொன்று
எனக்கு பிடிக்காது...!
உனக்கு அது பிடிக்காது என்பதால்...

உனக்கு பிடித்தவைகளெல்லாம்

எனக்கும் பிடிக்கும்...!
உனக்கு பிடிக்காதவைகளை
எனக்கும் பிடிப்பதில்லை...!!

இப்போது தெரிகிறதா...?

என்னை ஏன்
எனக்கே பிடிக்கவில்லை என்று...


-----அனீஷ்...