27 Mar 2011

உன் முன்னுரை - என் முடிவுரை

உன் முன்னுரை - என் முடிவுரை


நம்பிக்கைகள்
உடைக்கப்படும்போது
கீறல் விழும்
மனசு எனும் கண்ணாடி...!

கனவுகள்
கலைக்கப்படும்போது
வெற்றிடமாகும்
வாழ்க்கை பக்கங்கள்...!

அழ வைத்து
அனுபவங்களை கற்றுதரும்
அர்த்தமில்லாத
வாழ்க்கை பாடங்கள்...!

நிலவை தொலைத்த
அமாவாசை பொழுதுகளாய்,
இருட்டாகிப்போகும்
இதய அறைகள்...!

இப்பொழுதும்
வலிகளை சுமந்து
கனத்துப்போன
அதே இதயத்தோடு
தனிமையில் நான்...!

அளவுக்கு மீறிய அன்பு
இன்னும்
நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது...!
விழிகளின் ஓரங்களில்...

பழையதாகிப் போனதென
நீ கசக்கி எறிந்த
என் ஞாபக குப்பைகளில்
இன்னும் நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்...!
கரைந்து போன - உன்
காதலின் அடையாளங்களை...

உன் நிராகரிப்புகளால்
நிரபராதியான என் உணர்வுகள்
தினம் தினம்
தூக்கில் தொங்குகின்றன...!

மலராய் உன்னை - என்
மனதோடு அணைத்திருந்தேன்..!
முள்ளாய் நீ என்னை
முழுதாய் காயப்படுத்தினாய்...!

நடை பிணமாகிவிட்ட
நம்பிக்கைகள் - இன்னும்
உயிருடன் இருப்பதாக சொல்லி
கல்லறையை காட்டுகிறாய்..!

உன்னில் நான் காணும்
நான் விரும்பாத மாற்றங்கள்,
என் மனதை
மரண நிலைக்கே
எடுத்து சென்றுவிடலாம்...!

கடைசியாய் இன்னொருமுறை,
ஒரே ஒரு முறை
யோசித்துக்கொள்...!

எதற்கோ - நீ
எழுதும் முன்னுரை,
எனக்கு
முடிவுரையாக கூட மாறி விடலாம்...!

----அனீஷ் ஜெ...

23 Mar 2011

கிறுக்கல்களும் கவிதைகளாகும்...

கிறுக்கல்களும் கவிதைகளாகும்...


அடிவானம்
அழகான மஞ்சளை
முகம் முழுக்க
பூசிக்கொண்டிருந்தது...!

இருட்டுக் கல்லறையில்
சூரியன் மெல்லமாய்
புதைந்துக் கொண்டிருந்தது...!

கதிரவனின்
கடைசி ஒளி பட்டதில்
எதிரே தெரிந்த எல்லாமே
தங்கமாய் மின்னின...!

ஒரு
வெற்றுக் காகிதத்தை - என்
கையில் திணித்துக்கொண்டு
கவிதை எழுத சொன்னாள் அவள்...!

அழகான
அந்த காட்சியை
பேனா தூரிகையால்
வரிகளாக்க வேண்டினாள் அவள்...!

காதலும் நானும்
கவிதையின் எந்த வரியிலும்
கலந்துவிடக்கூடாது என்ற
கட்டளை வேறு...!

உன்னை தவிர
எதைப்பற்றியும் - எனக்கு
எழுத தெரியாது என்ற என்னை
செல்லமாய் முறைத்தாள் அவள்...!

மாலை நேரம்...!
சூரியன்...!!
நிலா...!!!
இவை எதுவும்
என் வரிகளுக்குள் சிக்கவில்லை..!

நொடிகள்
நிமிடங்களாக நகர,
என் எண்ணம் மட்டும்
அவளை சுற்றியே
அலைகிறது...!
இன்னும் நகராமல்...

அவளின்
சுவடுகளை சுமக்காமல்  - இதுவரை
எந்த கவிதை வரிகளையும்
என் பேனா பிரசவித்ததில்லை...!

இது எனக்கு
புதிதாயிருந்தது...!

அடிவானம்...!
அழகு சூரியன்...!!
ஏதேதோ கிறுக்கினேன் நான்...!

எழுதி முடித்து
ஒருமுறை வாசித்த போது
வரிகள் ஏனோ
மனதில் ஒட்டவில்லை...!

என் பேனாவே
என்னை பார்த்து
திட்டுவதுபோலிருந்தது...!

நான் கிறுக்கியவைகளில்
கவிதையின் சுவை
காணாமல் போயிருந்தது...!

காகித கிறுக்கலை
அவளிடம் நீட்டினேன்...!

மவுன மொழியில் வாசித்தாள்...!

வாசித்து முடித்த அவளிடம்
எப்படியிருக்கு
என கேட்டேன்...!

கவிதை நல்லாயிருக்கு என்றவளிடம்
கவிதையா? என
ஆச்சரியமாய் கேட்டது...!
என் கண்கள் இரண்டும்...

மவுனமாய் சிரித்தாள் அவள்...!

ஒருவேளை
என் கிறுக்கல்கள் கூட
கவிதையாயிருக்கலாம்...!
அவள் வாசித்த பின்பு...

----அனீஷ் ஜெ...

19 Mar 2011

ஒரே அர்த்தம்!

ஒரே அர்த்தம்!


அது ஒரு
அழகான இரவு...!

இருட்டை
பவுர்ணமி நிலா
விழுங்கிக்கொண்டிருந்தது...!

என் அருகில் அமர்ந்து
ஏதேதோ கதைகள்
பேசிக்கொண்டிருந்தாய் நீ...!

திடீரென
நான் உன்னிடம் கேட்டேன்...!
என்னை உனக்கு
எவ்வளவு பிடிக்கும் என்று...!!

யோசித்துக்கொண்டே பதில் சொன்னாய்...!
கடலின் ஆழம் போல்
என் காதல் ஆழமானது என்று....

நான் கேட்டேன்...!
கடலின் அழத்திற்கு
எல்லை உண்டல்லவா?
உன் காதலும்
அது போலவா என்று...

இல்லை இல்லை என்று
படபடவென மறுத்தாய் நீ...!
அப்போது
உன் முகத்தில் பிறந்த
சோக சுவடுகளையும்
நான் கவனிக்க தவறவில்லை...

எல்லையில்லாத உன் காதலை
கடலின் ஆழத்திற்கு
அளவிட முயற்சித்து
தோற்றுப்போனாய் நீ...!

புன்னைகைத்தேன் நான்...!

நான் கேட்ட கேள்வியை
இப்போது என்னிடமே
திருப்பிக்கேட்டாய் நீ...!

தூரத்து நிலவை காண்பித்தேன் நான்...!

புரியாமல் முழித்தாய் நீ...!

அந்த நிலாப்பொட்டை
ஒட்டி வைத்திருக்கும்,
வானமெனும் நெற்றியைபோல்
எல்லையில்லாதது
என் காதலென்றேன் நான்...!

உன்
கண்ணில் ஒரு துளி
கண்ணீர்துளி எட்டிப்பார்க்க - என்னை
கட்டியணைத்தாய் நீ...

அந்த கண்ணீர்துளிக்கும்,
அந்த அணைப்பிற்க்கும்
ஒரே ஒரு அர்த்தம்தான்
இருக்க முடியும்...!
கடலின் ஆழத்தையும்,
வானின் நீளத்தையும் விட
பெரியது...!
உன் காதல்...

----அனீஷ் ஜெ...

14 Mar 2011

முடியாத காதல் பயணம்!

முடியாத காதல் பயணம்!


அன்றொருநாள்...

சாலையோர பூங்காவில்
என் விரல் பிடித்து
நடந்துகொண்டிருந்தாய் நீ...

நீ அதிகம் பேசுவதில்லை...!

அமைதியின்
அடையாளங்களை
முழு நேரமும்
முகம் முழுவதும்
பூசி வைத்திருக்கிறாய்...!

உன்
மவுனங்களை உடைக்க
எப்பொழுதும் நான்
மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது...!

எப்போதாவது வரும்
என் கோப கனல்களும்
உன் கண்ணீர் துளி பட்டு
உருதெரியாமல் அழிந்துபோகிறது...!

ஒரே ஒருமுறை
உன் கோப முகத்தை
பார்க்க ஆசைப்பட்டு
ஒவ்வொருமுறையும் - நான்
தோற்றுப் போகிறேன்...!

காதலிக்க தொடங்கி
காலங்கள் பலவாகிவிட்டது...!
நீயோ இன்றுவரை
என் பேச்சுக்கும்
என்றுமே எதிர்ப்பை காட்டியதில்லை...!

ஆச்சரியமானவள்தான் நீ...!

என் வலிகளுக்கும்
உன் கண்கள் தான்
கண்ணீர் விடுகின்றன...!
என் கவலைகளுக்கு
உன் வார்ததைகள் தான்
ஆறுதலாகின்றன...!

என்னை அன்பு செய்வதைதவிர
எதுவுமே உனக்கு
தெரியாது என்றே
நினைக்கிறேன் நான்...!

உன்னை நான் சந்தித்தது
என் முற்ஜென்மத்தின்
பலனாகக்கூட இருக்கலாம்...!

உன்னை இழந்தால்
என் இதயம்
உடைந்தே போய்விடும்...!

என் விரல் பிடித்த
உன் கைகளை
இப்பொழுது நான்
இறுக பிடித்துக்கொண்டேன்...!

என் வாழ்கை முழுவதும்
உன்னோடு சேர்ந்து
நான் பயணிக்கவேண்டும்...!
முடியாத - ஒரு
காதல் பயணம்...

----அனீஷ் ஜெ...

5 Mar 2011

முகமூடிக்கு பின்னால்...

முகமூடிக்கு பின்னால்...


கச்சிதமாய் ஒட்டப்பட்ட
புன்னைகை துண்டுகள்...!
தேன் தடவிய
வார்த்தை நஞ்சுகள்...!!

பொய்களையும் உண்மைகளாக்கும்
ஏமாற்றுவேலை..!
வேஷம் போட்டு மோசம் செய்யும்
வாழ்க்கை நாடகங்கள்...!!

தூக்கிவிடுவதாய் சொல்லி
தூரத்திலிருந்து கைநீட்டி,
தூக்கிலிட்டு கொல்லும்
நம்பிக்கை துரோகங்கள்...!

உதவி செய்வதாய்
உத்திரவாதம் தந்துவிட்டு,
உபத்திரவம் செய்யும்
உபயோகமில்லாத சத்தியங்கள்...!

நம்பச்சொல்லி
நச்சரித்துக்கொண்டே,
வள்ளல்களாக வாரிவழங்கும்
வாக்குறுதிகள்...!

உண்மை அன்பென
உரக்க கத்திவிட்டு,
மறைமுகமாய்
மனதை உடைக்கும் போலிகள்...!

விழியின் கண்ணீர் துடைப்பதாய்
விளக்கம் சொல்லிவிட்டு - நமது
விழியருகே வரும்
விஷம் தடவிய விரல்கள்...!

மனித முகமூடிகளை
கிழித்தெறிந்துவிட்டு பார்த்தால்,
நல்லவன் என்று
நாம் நினைக்கும்
பூமி மனிதர்களில்
பாதி மனிதர்கள்
பயங்கரமானவர்களாகவே...!

நம்பிக்கைகுரியவராய் மாறி,
நமக்கே தெரியாமல் - இன்றும்
நம்மை ஏமாற்றிக்கொண்டு,
சிரித்துக்கொண்டிருக்கலாம்
சில முகங்கள்...!
முகமூடிக்கு பின்னால்....

----அனீஷ் ஜெ...