29 Jul 2011

ஹைக்கூ கவிதைகள் - காதல்

ஹைக்கூ கவிதைகள் - காதல்

 

மனசு இரண்டும் கூடல் செய்ய,
உயிருக்குள் புதிய உயிர் தரிக்க,
நம் இதயம் இரண்டிலுமாய்,
ஒட்டிப்பிறந்த
ஒற்றை குழந்தை...!
காதல்...


*****


உன் உதடுகளின்
மவுனப்பூட்டை - என்
உதட்டு சாவியால் திறக்க,
நான் செய்ய்யும் யுத்தம்...!
முத்தம்...

*****


உன் பார்வை
என்மேல் பட்டதும் - என்
இதயத்தின் ஓரம் பாய்ந்தது...!
இந்த மின்சாரம்...!!
காதல்...

----அனீஷ் ஜெ...

26 Jul 2011

பூக்கள் பேசுகின்றன !!

பூக்கள் பேசுகின்றன !!


அவள் வீட்டின்
அழகிய பூந்தோட்டத்தில்,
அவள்...

அவள் கையில் பூத்திருந்த
அந்த பூக்கூடை - அவள்
பூப்பறிக்க வந்திருப்பதை சொல்லியது...!

தோட்டம் முழுக்க
பூத்துக்கிடந்தது பூக்கள்...!
ஆனால் எந்த பூக்களும்,
அவள் உதடுகளில்
மொட்டு விட்டிருந்த
புன்னகை பூவைப்போல்
அழகில்லை...!!

பூக்களுக்கு வலிக்காமலே
பூக்களின்
உயிர் பறித்துக்கொண்டிருந்தாள் அவள்...!

அங்கிருந்தவைகளில் ஒரு பூ
அவள் பெயர் சொல்லி அழைத்தது...!

திரும்பிப்பார்த்த அவளிடம்
சிரித்துக்கொண்டே கேட்டது...!
நலமா என்று...

நீயா பேசுகிறாய் என்று - அந்த
நீல நிற பூவை
ஆச்சரியமாய் கேட்டாள் அவள்...!

ஆம் என்ற பூவிடம்
அவள் திருப்பிக்கேட்டாள்...!
பூக்கள் பேசுவதில்லையே என்று...

அழகானவர்களிடம் மட்டும்
நாங்கள் எங்கள்
மவுனங்களை உடைத்துவிட்டு
பேசிக்கொள்வோம் என்றது பூ...!

புன்னகைத்தாள் அவள்...!

பூவோ அவளிடம்
நீ தான் இவ்வுலகின் பேரழகி என்றது...!

நீண்ட யோசனைக்கு பின் - அவளோ
நீ பொய் சொல்கிறாய் பூவே என்றாள்...!
வார்த்தைகளில் பொய்தடவி,
வரிவரியாய் உன் அழகை விமர்சிக்க
நானொன்றும் கவிஞனில்லை என்றது பூ...!

இருவருக்குமிடையில்
இப்பொழுது நிசப்தம்...!

என்னை பறித்துவிடு என்றது பூ...!

நான் பறித்தால் - நீ
மரித்துப்போய் விடுவாய் என்றாள் அவள்...!!

படபடப்புடன் பூ சொன்னது
அப்படியென்றால்
இன்றென்னை பறித்துவிடாதே என்று...!

பரிதாபத்துடன்
பறிப்பதை தவிர்த்தாள்...!
அவள் அந்த பூவை...

அடுத்த பூவின்
அருகில் சென்றாள் அவள்...!

அதுவும் அவளிடம்
நலமா என்றது...!
பின்பு அவளை
அழகென்றது...!

அன்று
அவள் தோட்டத்தில்
எல்லா பூக்களும் பேச,
அவளோ வெறுங்கையோடு
வீடு திரும்பினாள்...!

பிழைத்துக்கொண்டதாய்
குதூகலித்துக்கொண்டன பூக்கள்...!

மறுநாள் விடிந்ததும்
பூந்தோட்டத்தை பார்த்தாள் அவள்...!
செடிகளும் பூக்களும் இல்லாமல்
பூந்தோட்டம் வெறுமையாய் கிடந்தது...!

ஆனால் நேற்றிரவு
அவள் கண்ட கனவில் மட்டும்
இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தது...!

அன்றென்னை
அவள் சந்தித்த போது
அவள் கனவில் வந்த பூக்கள்
அவளிடம்
பேசிக்கொண்டதாய் சொன்னாள்...!

நான் சொன்னேன்
உன்னிடம் கனவில்தான் பூக்கள் பேசும்...!
ஆனால் என்னிடமோ
நிஜத்திலே ஒரு பூ பேசுகிறது என்று...

----அனீஷ் ஜெ...

19 Jul 2011

யாருமற்ற தனிமையில்...

யாருமற்ற தனிமையில்...

  
மவுனத்திற்கும்,
மழைத்துளி
மண்ணில் விழும்
சத்தத்திற்கும்,
இடைப்பட்டதொரு
இன்னிசையாய் உன் குரல்...!

தூரத்து நிலவில்
தூரிகையால் வரைந்த
ஓவியமாய்
உன் அழகு...!

தோழியானதாலென்னவோ
இவை இரண்டையும்,
இதுவரை
உன்னிடம் சொல்ல
தோன்றவில்லை எனக்கு...!

இப்போதெல்லாம் - நான்
எதை சொன்னாலும் - சில
வெட்கத் துண்டுகள்

உன் முகத்தில்
ஒட்டிக்கொள்கின்றன...!

என்னிடம்
அதிகம் பேசவே
அடிக்கடி
திணறுகிறாய் நீ...!

நட்பின் எல்லையை
நாகரீகத்தோடு
சிலசமயம்
தாண்டுகிறாய்...!
கண்டுகொள்ளாதவனாய் நான்...!!

எனக்கு
பிடித்தவைகளையெல்லாம்,
நீயும்
பிடிக்கும் என்று சொல்வதில்
எனக்கொன்றும்
ஆச்சரியம் தோன்றவில்லை...!

என்னைப் பற்றி
எனக்கு தெரியாதவைகளையே
மரத்தடி ஜோசியனாய்
சலிப்பே இல்லாமல் சொல்கிறாய்...!

கல்லூரி தோழி முதல்
கணக்கு டீச்சர் வரை,
புதிய சினிமா முதல் - உன்
புது ஆடை வரை,
மழையில் நனைந்தது முதல்
மதிய உணவு வரை
எதைப்பற்றியும்
என்னிடம் நீ
சொல்லத் தவறியதில்லை...!

உன்
எண்ணப்பறவைகள்
எங்கோ
சிறகடித்து பறப்பதை
என் வானத்தில் உணர்கிறேன்...!


நட்பின் எல்லைகளை
சில்லுசில்லாய் உடைத்துவிட்டு,
சொல்லாத வார்த்தையும்,
பொல்லாத காதலுமாய்
யாருமற்ற தனிமையில்
எனக்காய் - நீ
காத்துக்கொண்டிருக்கிறாய்...!

இங்கே...
அதே யாருமற்ற தனிமையில்
என் இதய அறைகளில்
நான் தேடிக்கொண்டிருக்கிறேன்...!
என்றாவது ஒருநாள்
என்னிடம் நீ
கேட்கப்போகும்
கேள்விக்கான விடையை...

----அனீஷ் ஜெ...

16 Jul 2011

ஏமாற்றியவள் !

ஏமாற்றியவள் !

 

பூமியெங்கும் நிசப்தம்...!
பூகோளத்தின் எல்லையெங்கும்,
பூத்திருந்தது நட்சத்திர பூக்கள்...!!

இன்று ஏனோ
இன்னும் அதிகமாய்,
இரவு இருண்டிருந்தது...!

அந்த மொட்டை மாடியில்,
கொட்டும் பனியில்,
காத்திருந்தேன் நான்...!
அவளுக்காய்...

காத்திருந்து
கால் வலித்தது...!

அவள் இல்லாத
அந்த தனிமையின் நிசப்தத்தை,
என் மனம் ஏனோ விரும்பவில்லை...!

வழக்கமாய் என்னை காண
வந்து போகிறவளை,
இன்று மட்டும்
இன்னும் காணவில்லை...!

கண்கள் பார்த்து,
கவிதை பேசி
என் இரவுகளில்
துணையிருப்பவள்,
இன்னும் வரவில்லை இன்று...

பாதி உடல் மறைத்து
நேற்று என்னை
பரிதவைக்க வைத்தவள்,
மீதி உடலையும் இன்று
மறைத்தது ஏனோ...?

எதிர்பார்த்து காத்து நின்ற என்னை
ஏமாற்றப்பார்க்கிறாள் அவள்...!
நினைத்தபோதே
நிலைதடுமாறியது மனது...!!

அவள் மேல் எனக்கு
கோபம் வர,
கொஞ்சம் கொஞ்சமாய்
என் விழிமேல்
எனக்கு தூக்கமும் வந்தது...!

அவள் என்னை
ஏமாற்றியதாய் எண்ணி
தூங்கச் சென்றேன் நான்...!
இன்று,
அமாவாசை என்பதை
அறியாமல்...

----அனீஷ் ஜெ...
 

11 Jul 2011

சிறு மழை ! ஒரு குடை !!

சிறு மழை ! ஒரு குடை !!


அது ஒரு
மழைக்கால
மாலை நேரம்...!

முருகன் கோயிலுக்கும்,
மூன்றாவது தெருவிலிருக்கும்
என் வீட்டிற்கும் இடையேயான
குறுகலான சாலையில் நான்...!

இல்லம் செல்ல - எனக்கு
இன்னும் ஒரு
இருபது நிமிடங்கள்
நடக்க வேண்டியிருக்கும்...!

இடியோ இம்சை கொடுக்க,
மின்னல் கண்கள் திறக்க,
மேகம் மெதுவாய்
மழையாய் அழ ஆரம்பித்தது...!

மழையில் நனைய - என்
மனது விரும்பவில்லை...!

ஆங்காங்கே தேடினேன்...!
ஒதுங்குவதற்கு
ஒற்றை இடம் கூட
கண்ணில் படவில்லை...!

சாலையில் மனிதர்களெல்லாம்
நனைந்துகொண்டே
நடந்து கொண்டிருக்க,
அவள் மட்டும்
கையில் குடையுடன்...

அவள் அருகில் சென்ற நான்
குடையில் கொஞ்சம்
இடம் கேட்டேன்...!

தயங்கியபடியே
தஞ்சம் தந்தாள் அவள்...!

நன்றி சொல்லியபடியே,
மழையிலிருந்து
தலையை மட்டும்
தற்காத்துக்கொள்ள முயற்சித்தேன்...!

சிறிய குடை...!
பெரிய இடைவெளி...!
இப்பொழுது இருவரும்
குடையின் இருபுறமுமாய்
நனைந்துகொண்டிருந்தோம்...!

அவளை அதற்குமுன்
எங்கேயும் நான்
கண்டதாய் ஞாபகமில்லை...!
அறிமுகமின்மை அவளுக்கு
அசவுகரியமாயிருக்கலாம்...!

நீங்கள் என்னால்
நனைய வேண்டாம் என சொல்லி,
நழுவி செல்ல முயன்ற என்னை
பரவாயில்லை என கூறி - குடையிலே
பத்திரப்படுத்திக் கொண்டாள் அவள்...!

இடைவெளி இப்பொழுது
குறைவது போல் இருந்தது...!

ஐந்து நிமிடம்
நடந்திருப்போம்...!
அந்த ஒற்றை சாலை
இப்பொழுது
இரண்டாய் பிரிந்தது...!

அவள் அந்தபக்கம்,
நான் இந்த பக்கம் என
இருவரும் பிரிய,
அவளுக்கு இன்னொருமுறை
நன்றி சொல்லிக்கொண்டு
மறுபடியும் மழையில்
நடக்கத்தொடங்கினேன் நான்...!

வீடு வந்து சேர்ந்தேன் நான்...!

மழை நின்றுவிட்டது...!
மாதங்கள் உருண்டோடிவிட்டது...!
அந்த சாலையில் - நான்
அவ்வப்போது நடக்கும்போதெல்லாம்,
அவளை தேட,
என் கண்கள் மறப்பதில்லை...!

அதன்பிறகு
அவளை நான்
எங்கேயும் பார்க்கவில்லை...!
எங்கிருக்கிறாள் என்பதுகூட
தெரியவில்லை...!

ஆனாலும்,
மழைக்காலங்களில் - எனக்கு
ஞாபக்கப்படுத்துகிறாள் அவள்...!
மறக்காமல் நான் 
குடையெடுத்து
செல்ல வேண்டுமென்பதை...

----அனீஷ் ஜெ...

5 Jul 2011

ஒற்றை உயிராய்...

ஒற்றை உயிராய்...


உன் தீண்டல் பார்வையில்
நான் பலியாகி,
உன் கூந்தல் போர்வையில்
நான் துயில் கொள்ள வேண்டும்...!

உன் முத்த சூட்டில்
நான் தீயாகி,
உன் நெஞ்சுக்கூட்டில்
நான் குளிர்காய வேண்டும்...!

சத்தமில்லாத முத்தத்தில்,
கத்தியில்லாத இந்த யுத்தத்தில்
நாம் இருவரும்
நமக்குள் தோற்க வேண்டும்...!

தொட்டு தழுவும்
என் கைகளுடன்,
விட்டு விலகாத
உன் வெட்கங்கள்
முட்டி மோத வேண்டும்..!

என் விரல்களுக்கு
வீரம் முளைக்க,
உன் விழியோரம்
வியர்வை துளிர்க்க,
உன் ஆணவ நெஞ்சு
என் ஐந்து விரல்களுக்குள்
அடங்கி போக வேண்டும்...!

உதடுகள் நான்கும்
ஊமை ரகசியம் பேச,
உன் இமை கதவுகளை - நீ
இழுத்து மூட,
எழுத்தில்லா கவிதையையொன்றை
உதடுகளால் - நான்
உன்னில் எழுத வேண்டும்...

சூடான மூச்சு
மோகம் பாய்ச்ச - உன்
மேடான பாகங்கள் - என்னை
அப்படியே சாய்க்க,
ஒற்றை திரியாய் - நாம்
பற்றி எரிய வேண்டும்...!

உன் உயிருக்குள்
நான் உருக,
என் உயிரோடு
நீ உறைய,
நம் உயிர்கள் இன்றே
ஒன்றாய் கலக்க வேண்டும்...!

----அனீஷ் ஜெ...