22 Jan 2012

ஓர் இரவு !

ஓர் இரவு !


நிலவைப்போல்
நீ தனித்திருக்க,
இரவைப்போல்
விடியும்வரை
உன்னருகில் நான்...

அசைந்தாடும் - உன்
விழிகளில்
விழுந்து எழுகின்றது
என் மோகங்கள்...!

வளைந்தாடும் - உன்
இடையோடு
விளையாடும் - என்
விரல்கள் பத்து...!

தொட்டவுடன் நீ
பிரசவிக்கிறாய்
வெட்கங்களை...

கட்டியணைத்து - நான்
வள்ளலாகிறேன்
முத்தங்களால்...

எரிமலை வெப்பமாய்
உள்ளுக்குள் குமுற
விடுதலை வேண்டி
தவம் கிடக்கின்றன...!
பனிமலை பிரதேசங்கள்...

தொட்டவுடன் சிணுங்கும்,
அர்த்தமில்லாமல் முணுங்கும்
மலர் என் கைகளில்...

பெய்து தீராத
அடைமழையில்,
நனைந்து விரிகின்ற
குடையாகிறாய் நீ...!!

உணர்வுகள் கட்டிக்கொள்ள
இரவு தொடர்கிறது...!

இரவு முடிந்து
பகல் பிறந்ததும்,
எனக்குள் பிறந்தது
ஒரு கவிதை...!
“ஓர் இரவு”

----அனீஷ் ஜெ...

17 Jan 2012

புன்னகையே கவிதையாய்...

புன்னகையே கவிதையாய்...


உலகிலே
மிகச்சிறிய கவிதை
எது என
என்னிடம் கேட்டாய் நீ...!

ஒரே வார்த்தையில் முடியும்
உன் பெயர்தான்
உலகின் மிகச்சிறிய
அழகான கவிதையென்றேன் நான்...!

அப்போது வெட்கத்துடன்
அழகாய் புன்னகைத்தாய் நீ...!
வார்த்தைகளே இல்லாத
கவிதையாய்...

----அனீஷ் ஜெ...

10 Jan 2012

கசங்கிய இதயம் !

கசங்கிய இதயம் !


உறக்கத்தை கெடுத்த
உன் முகமும் - என்
உயிருக்குள் கேட்ட
உன் குரலும்.
இப்பொழுதெல்லாம் எனக்கு
நினைவுக்கு வருவதில்லை...!

உன்னை நினைத்து
கவிதை எழுதிய
என் பேனாவும்,
உன்னை நினைப்பதிலே
நான் செலவிட்ட
என் நேரங்களும்,
மரணித்துப்போய்
மாதங்கள் பலவாகிவிட்டன...!

உன்னை முழுவதும் - நான்
மறந்துவிட்டதாய் சொல்லி
என் உதடுகள்
பேசிக்கொள்கிறது...!

ஆனாலும்...
எங்கேயாவது
உன் பெயர் கேட்டால்
ஒரு நொடி நின்று துடிக்கும்
என் இதயமும்,
நீ பிரிந்து சென்றதாய்
சிறு கனவு வந்தாலும்
பாதி தூக்கத்தில் - நான்
பதறியடித்து எழுந்தபின்
எனக்கே தெரியாமல்
என் இமை விளிம்புகளில்
ஒட்டியிருக்கும்
ஒருதுளி கண்ணீரும்,
மறக்காமல் சொல்லிவிடுகின்றன...!

என் கசங்கிய இதயத்தின்
எங்கோ ஓர் மூலையில்
வாழ்ந்துகொண்டிருக்கும்,
உனக்காகத்தான்
நான் இன்னும்
சுவாசித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை...

----அனீஷ் ஜெ...

7 Jan 2012

மெளனம் (என் முதல் “காதல்” கவிதை)

மெளனம் (என் முதல் “காதல்” கவிதை)


இறுகிக்கிடந்த - என்
இதயத்தை
இதழ்களின் புன்னகையால்
ஈரமாக்கியவளே...

சுற்ற வைக்கும் - உன்
புருவ நெருப்பில்
என்னை நீ
பற்ற வைத்தாய்...!

என் கற்பனை கருவறையில்
கவிதைக்கரு வளர்த்தாய்...!

என் இதயக்கருவூலத்தில்
சேமித்து வைக்கிறேன்...!
உன் புன்னகையை...

மனதை பறித்துவிட்டு
மெளனத்தை மட்டும்
எனக்கு பரிசளிக்கிறாய்...!

உனக்குள் நானும்,
எனக்குள் நீயும் இருக்க
நமக்குள் ஏன் இந்த விளையாட்டு...?

என்னைக் கொல்லும்
உன் மெளனங்களுக்கு
இனியாவது விடைகொடு...!

அழியாத காதலுக்கு - நாம்
அடுத்த அத்தியாயம் எழுதுவோம்...!

----அனீஷ் ஜெ...

5 Jan 2012

குட்டி கவிதைகள் - நினைவுகள் !

குட்டி கவிதைகள் - நினைவுகள் !


எத்தனையோமுறை
கண்ணீரால் கழுவியும்,
இன்னும் நீங்கவில்லை...!
என் இதயத்தில் ஒட்டியிருக்கும்
உன் நினைவுகள்...

***********************************************************************************


நீ இல்லாமல்
பாலைவனமாகிப்போனது
என் வாழ்க்கை மட்டுமல்ல...!
உன் இதழ்களின் ஈரம்படாத
என் இரு கன்னங்களும்தான்...
 

***********************************************************************************


உன் நினைவுகளை
சுமந்துகொண்டு,
தினம் தினம்
வலிகளை மட்டுமே 

பிரசவிக்கிறது...!
என் இதயம்...

----அனீஷ் ஜெ...

2 Jan 2012

காற்றோடு காதல்...

காற்றோடு காதல்...


காற்றோடு
காதல் செய்த கருமேகம்,
கண்ணிமைக்கும் நேரத்தில்
கற்பை இழந்து கருத்தரித்தது...!
விளைவு...?
மழை...

----அனீஷ் ஜெ...