31 Dec 2012

விடைபெறுகிறேன் நான்....

விடைபெறுகிறேன் நான்....


கைகுலுக்கி
உங்களோடு கலந்துவிட்டு - நான்
உங்கள் கண்களை
கலங்க வைத்திருக்கலாம்...!

எதிர்பாராமல்
எப்பொழுதாவது உங்களை
மகிழ்ச்சியின் மழையில்
நனையவும் வைத்திருக்கலாம்...!

வெற்றிகளையும்,
பலநேரங்களில்
தோல்விகளையும்
உங்களுக்கு நான்
பரிசளித்திருக்கலாம்...!

சிலருக்கு
வலிகளை மட்டுமே
வாரி வழங்கியிருக்கலாம்...!
இன்னும் சிலருக்கோ
இனிமையான தருணங்களை
இதயத்தில் பதித்திருக்கலாம்...!!

உங்களிடமிருந்து சிலவற்றை
பறித்திருக்கலாம்....!
உங்களை சிலசமயம்
பயமுறுத்தியிருக்கலாம்...!!

நான் தந்த வலிகளுக்காய்
என்னை மன்னித்துவிடுங்கள்...!
நான் தந்த மகிழ்சிகளுக்காய்
என்னை மனதில் நினைவுகளாக்குங்கள்...!!

இன்னொருமுறை - நாம்
சந்தித்துக்கொள்ள
இனி வாய்ப்பே இல்லை...!

விடைபெறுகிறேன் நான்....

இப்படிக்கு
இரண்டாயிரத்து பனிரெண்டு...

----அனீஷ் ஜெ...


12 Dec 2012

புதுக்கவிதை !

புதுக்கவிதை !


உன் வீட்டு
பூந்தோட்டத்தில்
உதிர்ந்து கிடந்த
பூவை எடுத்து,
உன் தலையில்
சூடிக்கொண்டாய் நீ...!
உன் கூந்தலில்
சிக்கிக்கொண்ட பூவோ
உயிர்த்தெழுந்தது...!

***********************************************************************************


உன்னை மறக்கச்சொல்லி
என்னை மறந்து சென்றாய் நீ...!
நான் மறந்த பின்பும்,
நீ மறந்து போனதை
மறக்காமல் எனக்கு
ஞாபகப்படுத்துகின்றன...!
உன் ஞாபகங்கள்...

----அனீஷ் ஜெ...


 

4 Dec 2012

காதல் கதைகள் !

காதல் கதைகள் !


பேருந்து இருக்கைகளின்
பின்புறத்தில்
கிறுக்கி வைக்கப்பட்டிருக்கும்
இதய வரைபடத்தின்
இடையில் திண்டாடும்
இரண்டு பெயர்கள்...!

கல்லூரி நாட்களில்
காலை முதல்
மாலை வரை - தன்
காதலியை பற்றி
உளறியே - என்
உயிரெடுக்கும் நண்பன்...!

காதலுக்காக
உயிர்விடவும் துணியும்
சினிமாவின்
கதாநாயக கதாபாத்திரங்கள்...!

பெற்றோரை துறந்துவிட்டு,
எல்லாவற்றையும் மறந்துவிட்டு,
எவருக்கும் தெரியாமல்
மாலை மாற்றிக்கொள்ளும்
ரகசிய காதல் திருமணங்கள்...!

இந்த நிகழ்வுகள் அத்தனையும்
முட்டாள்களின் கதைகளாகவே
தெரிந்தன எனக்கு...!
அவளை நான்
சந்திக்கும் வரையில்...

----அனீஷ் ஜெ...