31 Dec 2015

தேவதையின் முகமூடி !

தேவதையின் முகமூடி !


வாய்கிழிய சொன்ன - உன்
வார்த்தை சத்தியங்கள்
கிழிந்து தொங்குகிறது...!

என் எச்சில்பட்ட
உன் உதடுகளை,
இன்னொருவனுக்காய்
இறுக்கிப்பிடிக்கிறாய்...!

மரணத்தால் மட்டுமே நம்மை
பிரிக்கமுடியுமென நீ சொன்னது
மரணித்தே போய்விட்டது...!

பிரிவுகளை மட்டுமல்ல,
உன் வார்த்தைகளால்
வலிகளையும் சேர்த்தே தந்தாய்...!

நீ தந்த காயங்களை விட
என் கோபங்கள்தான் பெரிதாகிறது...!

எல்லைகளே இல்லாமல்
உன்னை வெறுக்கிறேன் நான்...!
ஏனென்றால்
தேவதையின் முகமூடியணிந்த
சாத்தான் நீ...

----அனீஷ் ஜெ...



28 Dec 2015

அரக்கி !

அரக்கி !


இரவு பகலாய்
இதயம் கொன்றாய்...!
அரக்கி போலவே
அதையும் தின்றாய்...!!

பாதி உயிரின்
மீதியை கேட்டேன்...!
விதி இதுவென்று
மிதித்தே சென்றாய்...!!

பாதை நடுவில்

பள்ளங்கள் தைத்தாய்...!
போதையானவன் போல
தள்ளாட வைத்தாய்...!!

நெஞ்சின் நடுவில்
ஊசி துளைத்தாய்...!
கெஞ்சிய என்னை
வீசியெறிந்தாய்...!!

சிரித்தால் அதையும்
அழுத்தி பறித்தாய்...!
மரிக்க சொல்லி
கழுத்தை நெரித்தாய்...!!

தவறி விழுந்தேன்
கைதட்டி சென்றாய்...!
கதறி அழுதேன்
கைகட்டி நின்றாய்...!!

வரங்கள் எதுவும் - நீ
தர வேண்டாம்...!
தரும் வலிகள் எதையும்
பின்வலிக்கவும் வேண்டாம்...!!

உயிருடன் என்னை கொஞ்சம்
உலகத்தில் வாழவிடு...!
வாழ்க்கை எனும் அரக்கியே...

----அனீஷ் ஜெ...


17 Dec 2015

புன்னகை மரணம் !

புன்னகை மரணம் !


புன்னகைத்துக்கொண்டே
மரணங்கள் நிகழ்வது
உங்களில் யாரேனும் கண்டதுண்டா...?

இதோ... இந்த நொடி...
உதடு நிறைய புன்னகையை ஏந்திக்கொண்டு,
இதயம் வெடிப்பதுபோல துடிக்க,
இறந்துகொண்டிருக்கிறேன் நான்...!
அவளின் ஓரப்பார்வைகளில்...

----அனீஷ் ஜெ...



14 Dec 2015

பயமறியாதவள் !

பயமறியாதவள் !


அது ஒரு
அமாவாசை இரவு...!

ஒளி தின்னும்
இருள் மிருகம்
நடமாடிக்கொண்டிருக்கிறது...!

காற்றே இல்லை...!
ஆனாலும்
தெருமுனையில்
ஒரேயொரு மரம் மட்டும்
பெரும் சத்தத்தோடு
அசைந்துகொண்டிருக்கிறது...!

மின்னல்களே இல்லா
இடிச்சத்தங்கள்
இரு காதுகளையும் பிளக்கிறது...!

நாய்களெல்லாம்
நரிகளைப்போல
ஊளையிடுகிறது...!

இரும்பு சங்கிலிகளை யாரோ
இழுத்துக்கொண்டு நடப்பதுபோல்,
இடையிடையே
இன்னுமொரு சத்தம்...!

ஆந்தைகள் இரண்டு
அலறிக்கொண்டிருக்க,
வவ்வால் கூட்டமொன்று
சிறகு விரித்து பறக்கிறது...!

சருகுகளில் சலனம்...!

வெள்ளை ஆடைகட்டி
வெளிச்சமில்லா விளக்கொன்றுடன்
தூரத்தில் யாரோ...

கரும்பூனையொன்று
வீட்டு சுவரை
நகங்களால் கிழிக்கிறது...!

இரவு கொடூரமாய் நீள்கிறது...!

ஆனால்
அவள் மட்டும்
பயமில்லாமல்
நடமாடிக்கொண்டிருக்கிறாள்...!
உறங்கிக்கிடக்கும்
என் கனவுகளில்...

----அனீஷ் ஜெ...

8 Dec 2015

சிறு மழை - பெரும் வெள்ளம்

சிறு மழை - பெரும் வெள்ளம்


சிறு துளியாய்
வெறும் தரையில் விழுந்தது...!
முதல் மழைத்துளி...

சிறுதுளிகளெல்லாம்
சங்கீதாமாய் பொழிய
தூறல் மழை சாரலானது...!

அடைமழை அழகாய் விழ
குடை பிடிக்கவும் பிடிக்கவில்லை...!

நிலவின் குளிரும்
நீல வானின் அழகும் போல - என்
மேலே விழுந்தது மழை...!

சுகமாய் நனந்தேன் நான்...!

மேக கூட்டங்கள் - அதன்
தேகம் கரையும் வரை
கொட்டித்தீர்த்தது மழை...!

பாதத்தை தொட்டிருந்த மழையோ
என்னி
ல்  பாதியை
எட்டியிருந்தது இப்போது...!

கால்கள் இரண்டும்
கடும் வெள்ளத்தில் சிக்கிக்கொள்ள
நீந்து முயற்சிகளில்
மீண்டும் மீண்டும் தோற்கிறேன் நான்...!

மழையோ நின்றபாடில்லை...!

முகம் நோக்கி
முன்னேறும் வெள்ளம் - என்னை
மூழ்கடிக்கும் முன்
மூச்சை இழக்காமல் தப்பிக்கவேண்டும்...!

முயற்சிகள் ஏனோ பலனளிக்கவில்லை...!

கடைசியில்
தோற்றே போகிறேன்...!
மூழ்கியே மூச்சை இழ்ந்துவிட்டேன் நான்...!

சில மழைகளுக்கு
மனசாட்
சியே இருப்பதில்லை...!
சுகமாய் விழ ஆரம்பித்து - பின்பு
சுக்குநூறாக்கி,
கடைசியில்
கண்மூடித்தனாய் கொன்றே விடுகிறது...!
சில காதல்களை போல...

----அனீஷ் ஜெ...