24 Feb 2016

யாரோ ஒருவள் !

யாரோ ஒருவள் !


உன் காலடி மண்ணை
உள்ளங்கையில் பிடித்து - என்
உயிருக்குள் தூவுமளக்கு
உன் மேல் காதலில்லை எனக்கு...!

பேருந்து நிறுத்தம்,
கடைத்தெரு என - நீ
போகும் இடங்களில்
காத்திருக்கவும் விருப்பமில்லை எனக்கு...!

எதிர்படும் உன்னை
என் விழிகளாலே வீழ்த்தும்
எண்ணமில்லை எனக்கு...!

பக்கத்தில் நீ வந்தால்
படபடக்கவும் இல்லை...!
தூரத்தில் நீ போனால் - நான்
துயரம் கொள்ளவும் இல்லை...!!

கனவுகளில் நீ வருவதில்லை...!
காலையின் முதல் நினைவும் நீயில்லை...!!

என்றாவது நீ
என் கண்ணில்பட்டு மறையும்போது,
இன்னொருமுறை பார்க்க - என்
இருவிழிகள் தேடும்
யாரோ ஒருவள் நீ...!

----அனீஷ் ஜெ...


22 Feb 2016

பட்டாம்பூச்சி !

பட்டாம்பூச்சி !


பட்டாம்பூச்சிகள் பறப்பதை நான்
பார்த்திருக்கிறேன்...!
இன்று
பட்டாம்பூச்சியொன்று
துப்பட்டா சிறகுகளை
காற்றிலசைத்து
நடந்து செல்கிறது...!

தேன்களையும் பூக்களையும்
தேடியலைய
தேவையில்லை உனக்கு...!
தேன் தடவிய - உன்
பூமுக இதழ்கள் இருக்கும் வரை...

புழுக்கள்தான்
பட்டாம்பூச்சியாக மாறுமென்பதை
புத்தகமொன்றில் படித்திருக்கிறேன்...!
பூவொன்று
பட்டாம்பூச்சியாகுமென்பது
புரிந்தது எனக்கு உன்னால்...

அருகில் அமர்கிறாய்...!
தொட நினைத்தால்
தொலைவில் செல்கிறாய்...!!
பட்டாம்பூச்சிக்கு நீ
சற்றும் சளைத்தவளில்லை...!!!

இதயகிளைகள் உனக்காய்
இன்னொருமுறை முளைக்கிறது...!
வந்து அமர்ந்துவிடு
பட்டாம்பூச்சி பெண்ணே...

----அனீஷ் ஜெ...



12 Feb 2016

ஆடை !

ஆடை !


உடையணிந்து
உலாவரும் நிலா நீ...!

நீ அணியும் வரை
நிர்வாணமாகவே கிடந்தது
நீ அணிந்திருக்கும் ஆடை...!

உலகத்தின் அழகனைத்தையும்,
ஐந்தடி ஆடையொன்றில்
அடைத்து வைக்க முடியுமா என்றொரு
ஐயம் எனக்கின்று
உன்னை பார்த்ததும் நீங்கியது...!

நீ அணிந்தால்,
காற்றில் பறக்க கூட
முந்தானைகள் விரும்புவதில்லை...!

இறுக்கமான ஆடைகளை - நீ
அணியும் போதெல்லாம்
மூச்சு முட்டுகிறது...!
ஆடைகளுக்கு...

உன் உடையாக பிறக்காதது
எனது துரதிர்ஷ்டம்...!
உன் உடை தடவி செல்லும்

தென்றலாககூட பிறக்காதது
எனது மிகப்பெரிய துரதிர்ஷ்டம்...!!

----அனீஷ் ஜெ...

10 Feb 2016

வாழ்க்கை புத்தகம் !

வாழ்க்கை புத்தகம் !


வாசித்து முடிக்கும்முன்
சலித்துப்போன புத்தகம்..!

சுவாரசியம் தொலைந்தபின்
பத்திரப்படுத்தி வைப்பதில்
பலனேதும் இல்லை...!

கிழித்தெறிந்து,
அழித்துவிடலாமென
அடிக்கடி கைக்குள் மடிக்கிறேன்...!

மனசாட்சியில்லாமல் கொல்ல - ஏனோ
மனம் கொள்ளவில்லை...!

தனிமையில் உட்கார்ந்து
திரட்டிய பக்கங்களையெல்லாம்
புரட்டிப்பார்க்கிறேன்...!

படித்து முடித்த
எந்த பக்கத்திலும்,
என்னை மகிழ்ச்சிப்படுத்துமளவுக்கு
எந்த காரணமும் இல்லை...!

இன்று படித்த பக்கதிலும்
இதேதான் தொடர்கிறது...!

நம்பிக்கையுடன்
நாளை எனும் பக்கததை
நான் திருப்பிதான் ஆகவேண்டும்...!

அடுத்த பக்கத்தில்
அதிசயங்கள் காத்திருக்கலாம்...!
அழவைப்பதற்கான காரணங்களும் இருக்கலாம்...!!

அதுவாகமே முடியும்வரை - நான்
வாசித்துக்கொண்டிருக்கவேண்டும்...!
வாழ்க்கை எனும் புத்தகத்தை...

----அனீஷ் ஜெ...


5 Feb 2016

பிடிக்காத முத்தம்...

பிடிக்காத முத்தம்...


அவள் கன்னத்தில் முத்தமிட்டபின்,
முத்தங்கள் பிடித்திருக்கிறதா என்றேன்...!

பிடிக்கவில்லை என்றாள்...!

பிடிக்காத முத்தத்தை
அப்படியே திருப்பி தந்துவிடு என
என் கன்னத்தை காட்டினேன்...!

முடியாது என புன்னகைத்தாள்...!

ஏன் என்றேன் நான்...!

திருப்பிக்கொடுப்பதில் இப்போது
விருப்பமில்லை,
வேண்டுமென்றாய் நீயே எடுத்துக்கொள் என
மீண்டும் காட்டினாள் கன்னத்தை...!

----அனீஷ் ஜெ...


2 Feb 2016

மனச்சித்திரம் !

மனச்சித்திரம் !


இதயம் கொய்து - உன்
இரு கைகளில் வைத்தேன்...!
இதுவா காதலென்றாய் நீ...

கால் வலிக்க காத்து நின்றதும்,
கண் வலிக்க பார்த்து நின்றதும்
காதலில்லாமலா என் காதலியே...

சின்ன வார்த்தையிலும் - உன்
சிறு புன்னகையிலும் கூட
சிலிர்த்துப்போகிறான் நான்...!
சிறிதேனும் யோசித்துப்பார்...

வரங்களை மட்டுமே தர வந்த,
வானத்து தேவதையாய் - என்
வழிகளிலெல்லாம் தென்படுகிறாய் நீ...
வரவில்லையா உனக்கு காதல்...

குருவிக்கூட்டமொன்று,
கூடொன்று கட்டிய சலசலப்போடு
குடியேறிவிட்டாய் நீ என் நெஞ்சுக்கூட்டில்...!
குழப்பமா இன்னும் உனக்கு...

உன் காதல் வேண்டியே,
கரைந்து போகிறேன் நான்...!

அன்பிருந்தால் - என்னை
அள்ளியெடுத்து,
சித்திரமாய் மனதில் வரைந்துவிடு...!
இல்லையென்றால்,
பத்திரமாய் மண்ணில் புதைத்துவிடு...!

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Fayed.

1 Feb 2016

காதல் விதை !

காதல் விதை !


விதையொன்றில்
உனை புதைத்து
உயிரில் விதைத்தேன் நான்...!
இதயம் பிளந்து,
இலை விட்டு முளைத்தது...!1
காதல்...

                                                                     *****



கண்ணீர் விட்டேன்
முளைக்கவில்லை...!
உயிரை உரமாக்கி தூவினேன்
துளிர்க்கவில்லை....!
உன் கல்நெஞ்சில் நான் வீசிய
காதல் விதை...

----அனீஷ் ஜெ...