25 Apr 2017

சில காலைகள் !

சில காலைகள் !


ஐந்து மணிக்கே
வெளிச்சம் பிரசவிக்கும்
சில காலைகள்...!

ஏழு மணிக்கும்
இருளின் மிச்சம் சுமக்கும்
சில காலைகள்...!

அண்டார்டிக்கா குளிரை
தேகத்தில் போர்த்தும்
சில காலைகள்...!

சூரியனின் அக்னியை
சூடாய் தெளிக்கும்
சில காலைகள்...!

அதிகாலை நேரத்தில்
அம்மாவின் குரல் கேட்கும்
சில காலைகள்...!

அசந்து தூக்கும் வேளை
அலாரம் கத்தும்
சில காலைகள்...!

எல்லா காலைகளும்
ஏதோ ஒரு விதத்தில்
மாறுபட்டே விடிகிறது...!

நான் மட்டும்
மாற்றமேதுமில்லாமல் எழுகிறேன்...!
உன் நினைவுகளோடு...

----அனீஷ் ஜெ...

5 Apr 2017

மது !

மது !


கண் பட்டவை
கை தொட்டவையென
பார்த்தவை அனைத்தையும்
பறித்துக்கொண்டேன்...!

நிராகரிக்க மனமில்லாமல்
நிரம்பி வழியும்வரை
சேர்த்து மெல்ல
சேகரித்தேன்...!

அவையனைத்தையும்
அள்ளியெடுத்து நான்
கசக்கி பிழிந்து
கலந்தெடுத்தேன்...!

பெரும் மதிப்பு கொண்ட
பெட்டியொன்றில்
உருவாகிய கலவையை
ஊற்றி வைத்தேன்...!

அப்பெட்டியை நான்
அப்படியே தூக்கி
எவருக்கும் தெரியாத
ஏதோ ஓரிடத்தில் புதைத்தேன்...!

தினமும் நான் அதை
திறந்து பார்த்தே
கலவையின் நிலமையை
கண்காணிகத்தேன்...!

ஆண்டுகள் பல கடக்கிறது....!

அழிந்து போகுமென நான்
அவதானித்தது இங்கே
தவறாய் போவதற்கான
தடம் தெரிகிறது....!

கெட்டுப்போகவும்
கரைந்து தீரவும் செய்யாமல்
விடியும் நாளொன்றுக்கும்
வீரியமே கூடுகிறது...!

இன்னும் நான்
இதயப்பெட்டிக்குள் ஊற்றி
உயிரில் புதைத்திருக்கிறேன்...!
உன் நினைவென்னும் மதுவை...

----அனீஷ் ஜெ...

22 Mar 2017

அவள்தானா நீ...

அவள்தானா நீ...


ஹாய்...!

நிமிடங்கள் சிலதாய்
நீ வரவேண்டி காத்திருந்து
எதிரில் வந்த உன்னிடம்
ஏதேதோ பேசுவதற்காய் மன்னிக்கவும்...!

ஒரேயொரு கேள்வியின்
ஒருவார்த்தை பதிலொன்றை
ஒருமுறை சொல்லிவிடு நீ...!

அழகான பெண்ணொருத்தியின்
ஐந்து விரல்களையும்,
இறுக்கி பிடித்துக்கொண்டு
இரவில் நடப்பதாய் கனவொன்று கண்டேன்...!

நல்ல பொண்ணாதான்
நாங்க உனக்கு கட்டிவைப்போமென
அம்மா ஒருமுறை சொன்னதாய் ஞாபகம்...!

உனக்காக பிறந்தவள்
எங்க இருக்காளோ இப்ப என
தோழியும் சிரித்தாள்...!

உன்னை கல்யாணம் செய்து
காலம்பூரா கஷ்டப்படபோறவ யாரோவென
நண்பர்களின் கூட்டமும் கிண்டலடித்தது...!

இந்த வருடம் காதல் கைகூடுமென
கலாண்டரின் ஆண்டு பலனும்
சத்தியம் செய்யாத குறையாய் சொல்கிறது....!

பதில் சொல்லிவிட்டு போ...!

அத்தனைபேரும் இப்படி சொல்லும்
அவள்தானா நீ...

----அனீஷ் ஜெ...

24 Feb 2017

அவளும்... அந்த மலரும்...

அவளும்... அந்த மலரும்...


பெரும் இரவில் பெய்த
பனித்துளி மழையில்
பாதி நனைந்திருந்தது
அதிகாலை பூத்த
அழகான அந்த மலர்...!

நீண்ட இரவு விடிந்ததும்,
நீ வந்து தொட்டுச்சென்றாய்
முற்றத்தின் ஓரத்தில்
முளைத்து நின்ற அந்த மலரை...

உன் விரல் பட்டுச்சென்றபின்
மலரிதழ்களில் மிச்சமிருந்த
பனிநீர் துளிகளெல்லாம்
வண்டுகள் வந்துண்ணும்
தேன்துளிகளாயிருந்தது...!

----அனீஷ் ஜெ...

30 Jan 2017

கலவர பூமி !

கலவர பூமி !


வரைமுறை இல்லா
வன்முறை தொடங்குகிறது...!

அமிலங்களை
அள்ளி வீசியே
சிறு துளியொன்று
சிதறி வழிகிறது...!

கண்ணாடியெல்லாம்
கல்லெறிபட்டு
பல துகள்களாய்
பாதையில் உடைகிறது...!

எரிகின்ற தீயில்
எறிகின்ற நீரும்
ஆவியாகாமல்
அக்னியாய் படர்கிறது...!

துப்பாக்கிகளெல்லாம்
துப்பும் குண்டுகளில்
கனத்த புகையும்
கடும் சத்தமும் தெறிக்கிறது...!

என் மனம்
எப்போதும்போல் இப்படி
கலவர பூமியாகிறது...!
என் தெருவில்
நீ நடந்து செல்லும்போது...

----அனீஷ் ஜெ...

25 Jan 2017

எதிர்காலம் !

எதிர்காலம் !


ஜோசியக்காரனால்
ராசி நட்சத்திரம் சேர்த்து,
கட்டம் போட்டு பார்த்தும்
கணிக்க முடியவில்லை...!

இருகைகளையும் விரித்து
இதய ரேகை தொடங்கி,
இறுதி ரேகை வரை
கூர்ந்து ஆராய்ந்தும்
கூற முடியவில்லை...!

பிறந்த தேதியும்,
பின்பிட்ட பெயரும்
கழித்து கூட்டி
கணக்கு செய்தும்
கண்டுபிடிக்க இயவில்லை...!

இத்தனை செய்தும்
தெரிந்துகொள்ள முடியாத
என் எதிர்காலம்,
இப்போதென் கண்முன்னே
விரிகிறது...!
நான் உன்னை
பார்க்கும் பொழுது...

----அனீஷ் ஜெ...

16 Jan 2017

கடல் !

கடல் !


கடற்கரை மணல்பரப்பில்
கால்கள் பதித்து சென்றாய் நீ...!
கையொப்பமிட்டதாய் நினைத்து - அதை
கட்டியணைத்தது கடல் அலை...!

ஆழமில்லா கடல் நீரில் நான் கால் வைத்தேன்...!
அலை அடித்தது....!!
அதே நீரில் நீ கால் வைத்தாய்...!
அலை ஆரத்தழுவியது...!!

கடல் நடுவில் உருவான
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வன்புயலாக மாறலாமென
வானொலிபெட்டி சொல்கிறது...!
கடற்கரை பக்கம் வந்து செல்...!!
கடும்புயல் தென்றலாகும்
காட்சிகள் நிகழட்டும்...!!!

நீண்டநேரம் கடற்கரையில்
நின்றுவிடாதே நீ...!
மணற்பரப்பின் மீது
மலரொன்று முளைத்ததாய்
காண்பவரெல்லாம்
கருதப்போகிறார்கள்...!

உன் காலடி மணலை
அள்ளிச்சென்ற அலைகள்
ஆழ்கடலில் எங்கோ
அவைகளை சேகரித்து வைத்தன...!
அவையெல்லாம் இப்போது
ஆழ்கடல் முத்தானது...!!

----அனீஷ் ஜெ...