2 Mar 2013

ரகசிய காதலன்...

ரகசிய காதலன்...


உனக்கே தெரியாமல்
நான் பெய்யும்
என் ஓரப்பார்வையின்
சாரல் மழையில் - நீ
நனைந்துவிட மாட்டாயா?

எனக்கே தெரியாமல் - நான்
உனக்குள் தொலைகின்றேன்,
என்னை நீ கண்டுகொண்டு
உனக்குள் ஒருநாள்
கண்டெடுக்க மாட்டாயா?

உனக்காக நான்
மண்ணில் வந்தேன்...!
உன் முன்னே
பெண்ணாய் நின்றேன்...!!
உன் கண்ணில் விழுந்து - நான்
உன்னில் எழுவது எப்போது..?

தலைகால் புரியாமல்
தனியே சிரித்தேன்...!
உறக்கத்திலும் கனவாக
உனையே நான் ரசித்தேன்...!!
உன் கையை பிடித்து - என்
முடியாத பயணங்கள் எப்போது?

உன்னை பொத்தி வைத்த
என் நெஞ்சத்தை
கொத்தி கொத்தி கொல்கின்றாய்...!
மிச்ச உயிரும் சாகிறது - என்னை
பத்திரமாய் மீட்பாயா?

கடிகார முள்ளாய்
நொடிநேரம் நிற்காமல் - என்
அடிநெஞ்சில் அலைகின்றாய்...!
உன் மடிமீது நான் மடியும்
வரமொன்று தருவாயா...?

உனக்கே தெரியாமல்
என் இதயம் முழுவதும்
உனையே சுமக்கின்றேன்...!
உனக்குள் தத்தளிக்கும்
என்னை நீ
காதல் தந்து
கரை சேர்த்துவிடு...!!
எனது இனிய
என் ரகசிய காதலனே...

----அனீஷ் ஜெ...