29 Oct 2010

தொலைக்கப்போவது அவள்தான்...

தொலைக்கப்போவது அவள்தான்...


என்னை கொஞ்சி பேசுபவள்
இப்போதெல்லாம் - என்னை
எதிர்த்து நிற்க்கிறாள்...!

அன்புக்கு பதிலாய்
அவமானங்களை தருகிறாள்...!

நல்லது கெட்டதை
நான் புரியவைக்கும்போது
அவளுக்கோ எரிச்சல் வருகிறது...!

என் வார்த்தைகளை
மதிக்காவிட்டாலும் பரவாயில்லை...!
அவளோ
மிதிக்கிறாள்...!!

இதயத்தை
இன்னொருமுறை
இரண்டாய் உடைக்கப்பார்க்கிறாள்...!

எனக்குதான்
வலிக்கிறது என்றாலும்,
என்னை
தொலைக்கப்போவது அவள்தான்...

-----அனீஷ்...

27 Oct 2010

என் இதயம்

என் இதயம்


ரத்தம் ஓடும் என் இதயம்
சத்தமாய்
கத்திக் கேட்கிறது....!
மொத்தமாய்
அவள் வேண்டும் என்று...

ஆரிக்கிள்களும் வெண்ட்ரிக்கிள்களும்
அவளை நினைத்தே
ஆயுளை நீட்டுகிறது...!

இப்போதெல்லாம் - என்
இதயாமோ
லப்-டப்பை மறந்து
அவள் பெயரைதான் சொல்கிறது...!

அவளுக்காய் துடிக்கிறது என் இதயம்...!
அவள் என்
அருகில் இல்லையென்றால்
கொஞ்சம் கொஞ்சமாய் வெடிக்கிறது...!

அவள் கிட்ட வந்தால் - என்
இதயம் சின்னதாய் சிரிக்கிறது...!
அவள் எட்ட நின்றால்
ஏனோ இதயம் வலிக்கிறது...!!

அவளை பைத்தியமாய் காதலிப்பது
நான் மட்டுமல்ல...!
எனக்காய் துடிப்பதாய்
நடித்துக்கொண்டு,
அவளுக்காய் மட்டும் துடிக்கும்
என் இதயமும்தான்...

-----அனீஷ்...

22 Oct 2010

அவள் ரசித்த கவிதை

அவள் ரசித்த கவிதை


காற்றோ மரங்களோடு
கைகலப்பு செய்துகொண்டிருந்தது...!

சிட்டுக்குருவிகளின்
சிணுங்கல் சத்தம்...!

சூரிய ஒளியோ
சுருங்கிப்போய்
நிலவு வர
வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்தது... !

மாலைநேரம் மங்கிப்போய்
மெல்லமாய்,
இரவு தொடங்கும் தருணம் அது...!

அந்த பூங்காவில்
அவனும் அவளும்...!

ஒட்டிப் பிறந்த
இரட்டை குழந்தைகள் போல்
தொட்டுக்கொண்டிருந்தனர்.. .!

இருவரும் காதலிக்க தொடங்கி
இரண்டோ மூன்றோ வருடங்கள்
ஆகியிருக்கலாம்...!

சின்ன கொஞ்சல்கள்...!
செல்ல கோபங்கள்...!!
மெல்லிய வருடல்கள்...!!!
இவைகளுக்கிடையில்
அவர்களின் பேச்சு
மூச்சு வாங்காமல்
நீண்டுகொண்டிருந்தது...!

சட்டைப் பையிலிருந்து
சட்டென்று ஒரு
காகிதத்தை எடுத்தான் அவன்...!

மூன்றாய் மடிக்கப்பட்டு
முழுவதும் கசங்கிப்போயிருந்தது...!
அந்த காகிதம்...

ஒருவேளை அது
கண்ணே மணியே என்ற
காதல் கடிதமாய் இருக்குமோ...?
யோசித்தாள் அவள்...!

அவன் பிரித்துப் படித்தான்...!
அவளோ மெல்லமாய் சிரித்தாள்...!

கடிதம் அல்ல அது...!
கவிதை...!!

வழக்கமான கவிஞர்களின் பல்லவி...!
நிலவு நீ..
நீலநிற வானம் நீ...

அவளுக்கு சலிக்கவில்லை...!
அதையும் ரசித்தாள்...!!

அங்கங்கே மெல்லமாய்
அங்கமெல்லாம் சிவக்க வெட்க்கப்பட்டாள்...!

கடைசியில்
கவிதை வாசித்து முடித்தான் அவன்...!
அவளோ புன்னகைத்தாள்...!!

கவிதை எப்படியிருக்கு
என்றான் அவன்...!

மறுநொடியோ
மனதார பாரட்டினாள் அவள்...!

கவிதை எழுதிய - இந்த
கைகளுக்கு
ஆயிரம் முத்தங்கள் கொடுக்கலாம்
என்றாள் அவள்...!

அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை...!
என்
நண்பனின் காதலியின் முத்தங்களை
என் கைகள்
என்றுமே
ஏற்றுக்கொள்ளாது என்று...

-----அனீஷ்...

21 Oct 2010

கவிதைகள் மரித்துவிடும்...

கவிதைகள் மரித்துவிடும்...


சுவாசமில்லாமல் கிடந்த - என்
கவிதைகளின்
மூச்சுப்பைக்குள் - உன்
காதலால்
காற்றை நிரப்பியவள் நீ...!

உடைந்துகிடந்த - என்
பேனா முனைகளுக்கு
உன் வார்த்தைகளால்
உயிர் கொடுத்தவள் நீ...!

எப்போதும் என்னை நீ
விட்டுவிலகி போய்விடாதே...!

என்னைவிட்டு - நீ
தூரம் போனால்
மறுபடியும் மரித்துபோவது
என் கவிதைகள் மட்டுமல்ல...!
என் உயிரும் தான்...
இன்னொருமுறை உடைந்து சிதறுவது
என் பேனாமுனை மட்டுமல்ல...!!
என் இதயமும் தான்...

-----அனீஷ்...

17 Oct 2010

நிசப்தத்தின் நடுவில்...

நிசப்தத்தின் நடுவில்...


இருட்டான இரவு...!

மெலிதான மழை தூறலும்,
மேகமூட்டமும்
மேலே தெரிந்த நிலவை
மெல்லமாய் மறைத்தது...!

காற்றோ
கறுப்பு இருட்டை
கட்டியனைத்து
காதல் செய்துகொண்டிருந்தது...!

எங்கும் நிசப்தம்...!

எல்லாரும் உணர்ச்சியற்று
உறங்கிக்கொண்டிருந்தனர்.. .!
உன்னையும், என்னையும்,
உன் செல்போனையும்,
என் செல்போனையும் தவிர...

-----அனீஷ்...
நான் இங்கு நலமில்லை

நான் இங்கு நலமில்லை


வலி கொள்ளும் நெஞ்சமோ
கொஞ்சம் கொஞ்சமாய்
பாலியாகிப் போகிறது...!

மனமோ
மரத்துப்போய்
மரணவலியில் துடிக்கிறது...!

திரும்பும் இடமெல்லாம்
தீயாய் சுடுகிறது வாழ்க்கை...!

உண்ணும் உணவை கூட
தொண்டைக்கு கீழே
அண்ட விடாமல்
தொந்தரவு செய்கிறது கவலைகள்...!

நரம்புகளிலெல்லாம்
குருதி கூட
ஓடாமல் அடம்பிடிக்க,
கண்ணீர் துளிகளோ
கன்னங்களில்
கங்கை நதிபோல்...

உச்சகட்டமாய்,
உயிரோ
உள்ளுக்குள் வெடிக்கிறது...!

எல்லாமே என்னை
கொல்ல நினைத்தாலும்,
எனக்குள்ளே எழுகிறது...!
ஏதேதோ கேள்விகள்...

எங்கிருக்கிறா
ய் நீ...?
எப்படி இருக்கி
றாய் நீ...??

விடை தெரியாமல்
விட்டு விட்டு
பைத்தியமாகிப்போகிறேன் நான்...!

எதுவுமே செய்ய முடியாமல்
ஏங்கி தேம்புகிறேன் நான்...!

கவலையோடு காத்திருக்கும்
நிமிடங்கள் தோறும்
கல்லறை எழுகிறது...!
என்னை சுற்றி...

சுவாசமாய் வந்தவள் நீ - என்
சுவாசம் பறித்து செல்லாதே...!
என் இதயமாய் துடிப்பவள் நீ - என்
இதயம் உடைத்து கொல்லதே...!!

நீ இல்லாத
சொர்க்கம் கூட
எனக்கு நரகம்தான்...!
நீ மறந்தால்
மறுகணமே எனக்கு
மரணம்தான்...!!

எங்கிருந்தாலும்
என்னருகில் வா நீ...!

என்னருகில் நீ இல்லாமல்,
நீ எப்படி இருக்கிறாய்
என்பதை கூட தெரியாமல்,
உன் நினைவுகளோடு சாகும்
நான் இங்கு நலமில்லை...

-----அனீஷ்...

16 Oct 2010

தொலைத்துவிடாதீர்கள்....

தொலைத்துவிடாதீர்கள்....


நிலவை தொலைத்த வானம்
அமாவாசையானது...!

வாசம் தொலைத்த பூவோ
சருகானது...!

நிஜங்களை தொலைத்த நிகழ்வுகள்
கதைகளானது...!

மழையை தொலைத்த மேகங்கள்
மறைந்தேபோனது...!

தொலைத்தவைகளை
கண்டெடுக்கலாம்...!
ஆனால்,
கண்டெடுத்தவைகளை ஒருபோதும்
தொலைத்துவிடாதீர்கள்....

-----அனீஷ்...

 

13 Oct 2010

ஏனோ நான்....

ஏனோ நான்....


கனவுகள்
கலைந்துவிடுமோ
என்ற பயம்...!

பார்ப்பதை விட,
அழுவதையே
அதிகம் விரும்பும்
என் கண்கள்...!

என் பேனாவுக்கு
கவிதை எழுதும் சக்தியை
கொடுத்து விட்டு,
என் இதயத்திற்கு
தாங்கும் சக்தியை
தர மறந்த கடவுள்...!

வழி தெரியாத வாழ்க்கையில்
அடிக்கடி
தனியாகி போகும் நான்...!

எதற்க்கும் பயன்படாமல்
வீணாகிபோகும் என் ஜென்மம்...!

எவற்றிற்கெல்லாமோ
காத்திருந்து
களைத்துப்போய்
கடைசியாய்
மரணத்திற்க்காய்
காத்திருக்கும் மனம்...!

எல்லாமே எனக்கு
எதிராய் இருந்தாலும்,
என்னை யாரும்
ஜெயித்துவிடுவதில்லை...!
ஏனோ நான் தான்
தோற்றுப்போகிறேன்...!!


-----அனீஷ்...

10 Oct 2010

கானல் ஆகும் கனவுகள்

கானல் ஆகும் கனவுகள்


சகதியாய் கிடக்கும் சாலை...!
அழுக்கடைந்த தெருக்கள்...!!
இவைகள் தான் -என்
விளையாட்டு மைதானம்...

பனிரெண்டு வயதாகிறது...!
பசியை தவிர எதையும்
அதிகமாய் ருசித்ததில்லை...!

கடந்த ஆண்டு
கவர்மென்ட் பள்ளிக்கூடத்தில் தந்த
காக்கி கலர்
கால்சட்டை
இப்போதும்
இடுப்பில் நிற்க்கவில்லை...!

ஓடாமல் கிடந்த சைக்கிளின்
ஒற்றை டயர் ஒன்று
நான் ஊர் சுத்தும்
பென்ஸ் கார் ஆகிறது...!

பழைய கஞ்சியும்
பச்சை மிளகாயும் தான்
எப்போதாவது
என் பசியை போக்குகிறது...!

ஐந்துமணி வரை பள்ளிக்கூடம்...!
அதற்கு மேல் கபடி ஆட்டம்...!!
சின்ன சின்னதாய் இப்படி
சில சந்தோஷங்கள்...!!!

கடந்த மாதம்
காசுக்கு வழியில்லை என்று
கல் உடைக்க போகச் சொல்லி
கட்டளையிட்டாள் அம்மா...

மறுத்த போதும்
மனமிரங்கவில்லை அம்மா...!
கனவுகளெல்லாம் இப்போது
கானல் ஆனது...!!

படித்த
பள்ளிக்கூடத்தை
கடந்து செல்லும்போதெல்லாம்
கனமாகிறது மனது...

உச்சி வெயிலில் நின்று
கல் உடைக்கும் போது
மனசும் சேர்ந்து உடைகிறது...!
நான் பணக்காரனாய்
பிறந்திருக்க கூடாதா....

-----அனீஷ்...

1 Oct 2010

மத கத்திகள்

மத கத்திகள்காற்றிலே மிதப்பவன் நீ...!
கல்லிலே இருப்பவன் நீ...!!
கல்லாகவே ஆனதென்ன...?
சூரியனாக ஒளிர்பவன் நீ...!
சுவாசமாக வருபவன் நீ...!!
சுவடே இல்லாமல் நடப்பதென்ன...?

இங்கே பகைமை தலையை கொய்ய,
இரத்தமோ மழையாய் பெய்ய,
இன்னும் அங்கே நீ செய்வதென்ன...?
உன் பெயரை சொல்லி ஊர் எரிய,
உயிர்கள் உயிருக்காய் போர் புரிய,
ஊமையாய் நீ சிரிப்பதென்ன...?

மனிதனை படைத்து நீ
கடவுளானாய்...!
மதங்களை படைத்து
மனிதர்கள் இப்போது
கடவுளானார்கள்...!!
பாவம் நீ...

மதங்கள் மதிக்கப்பட - அதற்காய்
மனங்கள் மிதிக்கப்பட
எல்லாமே இங்கு
தவறானதென்ன...?

உயிர்களை பறிப்பதும்
இதயங்களை உடைப்பதும்
அன்பை அறுப்பதும்தான்
மதங்களின் கடமையா...?

கிறிஸ்தவன்
கீதை படிக்கலாம்...!
அப்துல்லா
ஆலயத்திற்கு செல்லலாம்...!!
குருவாயூரப்பனின் பக்தன்
குல்லாவும் அணியலாம்...!!
தவறேதும் இல்லையே...
எல்லோருக்கும் இதை நீ
எப்போது சொல்லப்போகிறாய் கடவுளே...?

கடவுளே...!
மறைந்திருப்பதை விட்டுவிட்டு
இப்போதாவது நீ பேசு...!!
இல்லையென்றால்,
மனித ரத்தம் சொட்டும்
மனிதர்களின் மத கத்திக்கு
என்றாவது ஒருநாள்
நீயும் பலியாகவேண்டியிருக்கும்...

-----அனீஷ்...