25 May 2011

எல்லாம் நிறைவேறிற்று...

எல்லாம் நிறைவேறிற்று...


விஷங்களை சுமந்த
புன்னைகையோடு
எதிர்படும்
மனித முகங்கள்...!

சுயநலங்களோடு
சுயம்வரம் நடத்திவிட்டு,
காதலிப்பவரையே
கல்லறைக்கு அனுப்பும்
காதல் கொலையாளிகள்...!

பிணம் தின்னும்
கழுகுகளைவிட,
கொடூர முகங்களொடு
சில பணம் தின்னும்
மனிதர்கள்...!
கரன்சி நோட்டுக்கு
கைகால் முளைத்திருந்தால்
கட்டிலில் கூட அதையே
கட்டியணைத்திருப்பார்கள் இவர்கள்..!!

தூக்கிப்போடுவதும்,
துரோகம் செய்வதும்,
ஏளனம் செய்வதும்,
ஏமாற்றி கொல்வதும்,
சாதாரணமாய் செய்யும்
அசாதாரண பிறவிகள்...!
நரகம் கூட
நாளை இவர்களை கண்டு
கதவடைக்கலாம்...!!
ஆச்சரியமில்லை...!!!

காயம்பட்ட இதயத்திற்குள்ளும்
கத்தியால்
கல்லறை நெய்கிறார்கள்...!
என்
கண்ணிர்துளிகளை
கங்கை நதியாக்கி - அதில்
மூழ்கி எழுந்து
முகம் சிரிக்கிறார்கள்...!

பொய்கள் கோர்த்த
வார்த்தை வலையில்
மாட்டிக்கொண்டே மரணிக்கிறது...!
மனது...

சோகங்களை சுமந்தே
சோர்ந்து போய் கிடக்கிறது...!
எனது உயிர்...

கருவறைக்கும்
கல்லறைக்குமான
எனது தூரம்
சின்னதாய்
சுருங்கிப்போகிறது...!

கடைசி வாக்குமூலங்கள்
கவிதைகளாய்
கையொப்பமிடுகின்றன...!

கண்ணுக்கெட்டாத தூரத்தில்,
யாரும் இல்லாத தனிமையில்
நான் மறைந்து போக வேண்டும்...!

உடைந்த கனவுகளும்,
அதிக வெறுமைகளும்,
நிறைய ஏமாற்றங்களும்தான்
கடைசியாய் என்னிடம்
மிச்சமிருக்கின்றன...!

எல்லாவற்றையும்
அள்ளிக் கட்டிக்கொண்டு
இப்போதே நான்
பயணமாக வேண்டும்...!
ஏனெனில்
எல்லாம் நிறைவேறிற்று...

----அனீஷ் ஜெ...

23 May 2011

குட்டி கவிதைகள் - வாழ்க்கை

குட்டி கவிதைகள் - வாழ்க்கை


திரும்பும் இடமெங்கும்
திருப்பங்கள்...!
எங்கு நோக்கினும்
எதிர்பாராத பதில்கள்...!!
ஆனாலும் இன்னும்
கேள்விக்குறிகளாய்தான்
நீள்கிறது...!
இந்த வாழ்க்கை...


*****


இன்னும் காத்துக்கொண்டிருக்கின்றன...!
நீ நடந்த பாதைகள்...
என்னையும்,
உன் சுவடுகளையும்
சுமந்துகொண்டு...


*****


உன் காதலோடு - நான்
உயிர் வாழ்வதும்,
நீயின்றி நான் இந்த
மண் சேர்வதும்
உன் வார்த்தையில்தான்
உள்ளதடி பெண்ணே...!
உன் கைக்குள் நானொரு
உயிருள்ள பட்டாம்பூச்சியாய்...

----அனீஷ் ஜெ...

19 May 2011

காதல் உணராதவன் !

காதல் உணராதவன் !


நிலாத்துண்டை
வெட்டியெடுத்து
ஒட்டிவைத்ததுபோல்
அவள் முகம்...!

ஐந்தடி அதிசயமாய்,
நடமாடும் மலர்வனமாய்
அவள் அழகாகவே இருந்தாள்...!

அழகின் எல்லையே
அவளாக கூட இருக்கலாம்...!
அவ்வளவு அழகு அவள்...

சுருண்ட கேசம்...!
உருண்ட கண்கள்...!!
ஆறடி உயர்ந்த தேகம்..!!!

அவளைவிட அவன்
அழகில்லையென்றாலும்,
அவனும் அழகுதான்...!

காதலுக்குள்
இருவரும் சிக்கிக்கொண்டு
காலங்கள் பல
கரைதோடியிருந்தன...!

தனிமையில் இருவருக்கும்
நினைவுகளும்,
சந்தித்தால் குரல்களோடு
முத்த சத்தங்களுமே சாப்பாடு...!

அவர்களுக்கிடையில்
விவாதங்கள் கூட
சண்டைகளாய் நீண்டு
கொஞ்சல்களாய்தான் முடியும்...!

கோப வார்த்தைகளில் கூட,
இரு மனசின் இடைவெளிகளில்
இவர்கள்
பிரிவு நுழைய அனுமதித்ததில்லை...!

அவன் கை வலிக்க,
பேனாவின் கால் வலிக்க
அவன் எழுதும் கவிதைகளுக்கு
அவள் அடிமை...!
அவளின் அன்புக்கு
அவனோ கொத்தடிமை...!

இவர்கள் இருவரும் - என்னை
நல்ல நண்பனாக
அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்...!
அவர்களும் எனக்கு
நல்ல நண்பர்களாக...

காலமெனும் பெரும்புயலில்
சிக்கி சின்னாபின்னமாகி
திசைமாறி போன வாழ்க்கை...!

வருடங்கள் பல தாண்டியும்
இப்பொழுதும் - நான்
அவர்கள் இருவரையும்
ஆங்காங்கே சந்திப்பதுண்டு...!

அவனுக்கு அழகுசேர்த்த
சுருண்ட கேசம்
முற்றிலும் காணாமல்போய்
வெற்றிடமாயிருந்தது...!

ஆறடி தேகமும்,
அவனது காலும்
ஓரடி எடுத்துவைக்கவே
படபடவென தடுமாறியது...!

இப்பொழுது அவன்
கவிதைகளை கிறுக்கியே
காலந்தள்ளுகிறான்...!
வரிகள் ஒவ்வொன்றிலும்
அவளே உயிர்வாழ்கிறாள்...!

அவளின் நிலா முகத்தில்
முதுமையென்னும்
அமாவாசையின்
அடையாளங்கள் தெரிந்தது...!

மூக்கு கண்ணாடியும்
சுருங்கிய முகமுமாய்,
அவளின் அழகு
அடியோடு மறைந்துபோயிருந்தது...!

என்னை கண்டதும்
அவளின் நலம் விசாரிப்புகள்
ஆரம்பமானது...!
அவனின் நலமறியவே
அவள் காத்திருந்ததுபோல்
அவள் வார்த்தைகள் எல்லாம்
அவனையே உதிர்த்தன...!

நான் என்
வீடு வந்து சேர்ந்தபின்பும்
என் மனசு
கனத்துக்கொண்டே இருந்தது...!

தூக்கம் வராத,
அந்த இரவில் - எனக்கு
அவர்கள் இருவரின்
பிம்பங்களே தெரிந்தது...!

உயிருக்குயிராய்
காதலித்து திரிந்தவர்கள்,
பிரிந்துபோய் இன்று
வெவ்வேறு திசைகளில்...

அழகுடன் சேர்த்து
காதலையும்
தொலைத்துவிட்டு
இவர்களின்
வாழ்க்கை தொடர்கிறது...!

இதுதான் காதலா என
காதல்மேல் எனக்கு
கோபமே வந்தது...!

காதலிக்காததாலென்னவோ,
முதுமையானபின்பும்
காதலின் அர்த்தம்
எனக்கு புரியவில்லை...!

உருண்டுபுரண்டு படுத்தும்
தூக்கம் வரவில்லை...!

தூக்கத்தை தொலைக்கும்
எததனை இரவுகள் வந்தாலும்
காதலிக்காத நான்
உணரப்போவதில்லை...!
அவளை பற்றிய
அவன் கவிதைகளிலும்,
அவனை பற்றிய
அவள் விசாரிப்புகளிலும்,
அவர்களது அழகான காதல்
இன்னும் உயிர்வாழ்கிறது என்பதை...

----அனீஷ் ஜெ...

16 May 2011

அடையாளமற்ற கைகள் !

அடையாளமற்ற கைகள் !


கொஞ்சம் கனவுகளையும்,
நிறைய கவலைகளையும்
சுமந்துகொண்டு
இன்னும் உயிரோடிருக்கிறது...!
என் இதயம்...

லப் டப் என்னும்
ஒலியையும் தாண்டி,
சில நேரங்களில்
மரண வலியின்
அதிர்வுகளையும் - என்
இதயம் பிரதிபலிக்கிறது...!

உடைந்து
உருத்தெரியாமல்
போன பின்பும்,
உடைந்த இதயத் துண்டுகளில்
மகிழ்ச்சியின் துளிகளை
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...!

ஏமாற்றங்களை தாங்க
ஏறத்தாழ பழகிவிட்டாலும்,
சில சமயங்களில்
சில்லென்று
உடைந்தேபோகிறது...!
என் இதயம்...

பொய் மனிதர்கள்...!
நம்பிக்கை துரோகிகள்...!
நல்ல வேளை - என்
இதயத்திற்கு கண்கள் இல்லை...!
இல்லையென்றால்
இவர்களை பார்த்தே - என்
இதயக்கண்கள் குருடாகியிருக்கும்...!

உள்ளத்திலிருந்து வரும்
உண்மையான அன்பு...!
உதடுகளிலிருந்து தோன்றும்
ஊமையான போலி அன்பு...!!
இரண்டுக்கும்
இடையேயான வித்தியாசம்
எதுவென்பது
ஏனோ என் இதயத்திற்கு
இன்னும் புரியவில்லை...!

இரத்தக்கண்ணீர்
வழிந்துகொண்டிருந்தாலும்,
மற்றவர்களுக்காக
பாச துளிகளையும்
கவிதை வரிகளையும் பிரசவிக்க
என் இதயம் ஏனோ
இன்னும் மறக்கவில்லை...!

சில மனிதர்கள் - என்
இதயத்தை உடைத்தாலும்,
எங்கிருந்தோ நீளும்
அடையாளமற்ற கைகள்
என் இதயதுண்டுகளை
பத்திரமாய் சேர்த்து
என் இதயத்தை இன்னும்
உயிர்பித்துக் கொண்டிருக்கின்றன...!

ஆயிரம் முறை
தடுக்கிவிழுந்தாலும்,
கோடி முறை
உடைந்து விழுந்தாலும்,
அன்பை சுமக்கும் - அந்த
அடியாளமற்ற கைகள்
என்னை நோக்கி நீள்வதால்தான்
இன்னும்  துடித்துக்கொண்டிருக்கிறது...!
என் இதயம்...

----அனீஷ் ஜெ...
,

14 May 2011

நிலாப்பெண் நீ...

நிலாப்பெண் நீ...


இரவின்
இருட்டு வெளிச்சத்தை
மொத்தமாய்
குத்தகைக்கு எடுத்து,
ஒட்டி வைத்ததுபோல்
உன் கூந்தல்...

சின்ன சின்னதாய்
வானத்தில்
சிதறிக்கிடக்கும்
நட்சத்திரங்களை விட
அழகாய் ஜொலிக்கிறது...!
உன் கண்கள்...

இரவு ஒளியின்
இறுதித் துளியையும்,
முழுவதும் மறைக்கும்
மேகக் கூட்டங்களைபோல்
உன் தாவணி வளைவுகள்...

இரவின் வெற்றிடத்தை
சத்தமில்லாமல்
வருடிச்செல்லும்,
காற்றை போல சுகமாய்,
உன் விரல்கள்...

மழைக்கால இரவில்,
வானத்தின் மூலையில்
வந்து செல்லும்
மின்னலை விட
சக்தி கொண்டது...!
உன் முத்தம்...

நடு இரவில்
இருட்டில் பரவிக்கிடக்கும்
நிசப்தத்தை விட
இனிமையானது...!
உன் பேச்சு...

இரவு முடிந்து
விடியும் வரை
இருட்டு தழுவிக்கிடக்கும்
வானமாய்,
உன் மேனி...
இருட்டாய் - என்
இரு கைகள்...

அத்தனை அழகையும்
மொத்தமாய் சுமந்து,
இரவிலும் - என்
இதயம் முழுவதும்
வெளிச்சம் பாய்ச்சும்
நிலாப்பெண் நீ...

----அனீஷ் ஜெ...

9 May 2011

மழைக்காதல் !

மழைக்காதல் !


வானம் கறுத்துக்கொண்டிருந்த
அந்த தருணம்...!

ஒரு மின்னல் போல்
என் முன்னே தோன்றினாய் நீ...

மழைக்காலத்தில் - அந்த
மாலை நேரத்தில் பூத்த,
வானவில்லை போல
அவ்வளவு அழகு நீ...!

உன் பார்வை மேகம்
என்னை மோதியதில்
என் மனசுக்குள் இப்பொழுது
அடைமழை...!

மண்ணிலே குதித்தாடும்
மழைத்துள்ளிகளை போல
ஆனந்தமாய் குதிக்கிறது...!
என் மனசு...

மழைக்கால மண் பிரசவிக்கும்
காளான்களை போல,
உன் முகமோ - மெலிதான
வெட்கத்தை பிரசவித்தது...!
நான் உன் அருகில் வந்தபோது...

ஒற்றை குடையில்
ஒரே பயணம்...

குடையே இல்லாமல்
மழையில் நனைவதுபோல்
சுகமாயிருந்தது...!
உன் குறும்பு பேச்சு...

என் கைவிரல்கள்
உன் கன்னம் தொட,
கன்னக்குழியில் நான்
நீர்துளியை போல்
சிக்கித் தவிப்பதுபோல் உணர்வு...!

உன் ஈரடி இதழ் கண்டு
என் ஆறடி தேகமும்
அமிலமாய் உருகிப் பாய,
அந்த இதழ்கள் இரண்டும்
இன்றிரவே - எனக்கு
இரவுணவு ஆகியிருக்கலாம்...!

மின்னலுக்கும் இடிக்குமான
இடையில் வரும் - அந்த
ஒற்றை நொடியை போல்
சிலிர்ப்பாய் உணர்கிறேன்...!
உன்னோடு நான் செலவிடும்
ஒவ்வொரு நொடியையும்...

மனசுக்குள் இன்பம் கொட்டும்
இதயத்தில் ஈரம் சொட்டும்,
உன் காதல் மழையில்
நான் முழுதாய் நனைகிறேன்...!

இரு குடை விரித்து - நாம்
விடை பெறும் முன்
உன்னிடம்
ஒன்றே ஒன்று கேட்கிறேன்...!

மேகம் கரைந்து தீர்ந்தாலும்,
பூமி ஒழுகி பாய்ந்தாலும்,
மழை மட்டும்
நின்றுவிடக் கூடாது...!
என்னை நனைத்துக்கொண்டிருக்கும்
உன் காதல் மழை மட்டும்...

----அனீஷ் ஜெ...

6 May 2011

உயிர் இரண்டும் ஒன்றாக...

உயிர் இரண்டும் ஒன்றாக...


உன் கன்னத்தோடு உரசி,
உன் கால் கொலுசோடு பேசி
நான் வாழ்ந்து முடிக்க வேண்டும்...!

காற்றுக்கே உயிர் தரும் உன் மூச்சினில்,
காற்றில் இசையாகும் உன் பேச்சினில்
நான் என் ஆயுள் வளர்க்க வேண்டும்...!

உன் பார்வை என் உயிர் குடிக்க,
என் மனசு மெல்ல சிறகடிக்க
நான் உனக்குள் பறக்க வேண்டும்...!

என்னை கண்டதும் நீ சிரிக்க,
வார்த்தையாய் அதை நான் கிறுக்க - அந்த
வரிகளில் நீயே கவிதையாக வேண்டும்...!

உன் நெஞ்சோடு சாய்ந்து,
உன் உடலோடு தேய்ந்து
நான் உனக்குள் உருக வேண்டும்...!

முல்லை தாங்கும் உன் கூந்தலில்,
எல்லை தாண்டும் என் தீண்டலில்
நம் இரவுகள் விடிய வேண்டும்...!

புள்ளியாய் நீ போடும் கோலத்தில்,
ஈர குடையாய் மழைக்காலத்தில்
நான் உன் வாசலில் முளைக்க வேண்டும்...!

இரவு வந்தால் கனவாக,
இதயம் முழுதும் நினைவாக
நீ எனக்குள் வாழ வேண்டும்...!

என் விரல் தொடும் தூரத்தில்,
நான் நினைத்திடும் நேரத்தில்
என் அருகில் நீ வேண்டும்...!

நான் என்பவன் உனக்காக,
நீ இங்கு எனக்காக என - நம்
உயிரிரண்டும் ஒன்றாய் கலக்க வேண்டும்...!

----அனீஷ் ஜெ...

1 May 2011

பயணம் தொடர்கிறது...

பயணம் தொடர்கிறது...


நீண்ட தூரம் நோக்கி,
இது ஒரு நெடும்பயணம்...!

முடிவுகளோ
கண்ணுக்கு தெரிவதில்லை...!
லட்சியம் எதுவென்றும்,
புரியவில்லை...!!

வேகம் கூட்டவும்,
திரும்பி நடக்கவும்
அனுமதியில்லை இங்கு...!

பாதை மாறுவதும்,
தவறி விழுவதும்
சகஜமாகிறது
இந்த பயணத்தில்...!

இருட்டும் வெளிச்சமும்
மாறி மாறி வந்தாலும்,
எப்பொழுதும்
இருட்டிலே நடப்பதுபோல்
உணர்வு...!

கண்ணுக்கெட்டிய தூரம் வரை
மனிதர்கள் தெரிகிறார்கள்...!
கண்ணாடி பிம்பங்களாய்...

ஆயிரம் பேர்
சுற்றி நின்றாலும்,
தனிமையில் இருப்பதுபோல் - ஒரு
தவிப்பான உணர்வு...!

எனக்கு வழிகாட்டவும்,
இருட்டிலே நடந்தால்
ஒளிகாட்டவும்,
யாருக்கும் இங்கு நேரமில்லை...!
எல்லாரும்
அவரவர் பயணங்களில்
பரபரப்பாய்...

சுமைகளும்,
வலிகளுமாய்
என் இதயம் இன்னும்
மூச்சு விட்டுக்கொண்டிருப்பதே
ஆச்சரியம்...!

போகும் பாதை
கரடுமுரடாய் இருந்தாலும்,
வாழ்க்கைப் பயணம்
சுகமாய்தான் தொடர்கிறது...!
என் துணையாய்,
என் நிழலாய்,
என்னோடு
நீ வருவதால்...

----அனீஷ் ஜெ...