30 Jan 2017

கலவர பூமி !

கலவர பூமி !


வரைமுறை இல்லா
வன்முறை தொடங்குகிறது...!

அமிலங்களை
அள்ளி வீசியே
சிறு துளியொன்று
சிதறி வழிகிறது...!

கண்ணாடியெல்லாம்
கல்லெறிபட்டு
பல துகள்களாய்
பாதையில் உடைகிறது...!

எரிகின்ற தீயில்
எறிகின்ற நீரும்
ஆவியாகாமல்
அக்னியாய் படர்கிறது...!

துப்பாக்கிகளெல்லாம்
துப்பும் குண்டுகளில்
கனத்த புகையும்
கடும் சத்தமும் தெறிக்கிறது...!

என் மனம்
எப்போதும்போல் இப்படி
கலவர பூமியாகிறது...!
என் தெருவில்
நீ நடந்து செல்லும்போது...

----அனீஷ் ஜெ...

25 Jan 2017

எதிர்காலம் !

எதிர்காலம் !


ஜோசியக்காரனால்
ராசி நட்சத்திரம் சேர்த்து,
கட்டம் போட்டு பார்த்தும்
கணிக்க முடியவில்லை...!

இருகைகளையும் விரித்து
இதய ரேகை தொடங்கி,
இறுதி ரேகை வரை
கூர்ந்து ஆராய்ந்தும்
கூற முடியவில்லை...!

பிறந்த தேதியும்,
பின்பிட்ட பெயரும்
கழித்து கூட்டி
கணக்கு செய்தும்
கண்டுபிடிக்க இயவில்லை...!

இத்தனை செய்தும்
தெரிந்துகொள்ள முடியாத
என் எதிர்காலம்,
இப்போதென் கண்முன்னே
விரிகிறது...!
நான் உன்னை
பார்க்கும் பொழுது...

----அனீஷ் ஜெ...

16 Jan 2017

கடல் !

கடல் !


கடற்கரை மணல்பரப்பில்
கால்கள் பதித்து சென்றாய் நீ...!
கையொப்பமிட்டதாய் நினைத்து - அதை
கட்டியணைத்தது கடல் அலை...!

ஆழமில்லா கடல் நீரில் நான் கால் வைத்தேன்...!
அலை அடித்தது....!!
அதே நீரில் நீ கால் வைத்தாய்...!
அலை ஆரத்தழுவியது...!!

கடல் நடுவில் உருவான
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வன்புயலாக மாறலாமென
வானொலிபெட்டி சொல்கிறது...!
கடற்கரை பக்கம் வந்து செல்...!!
கடும்புயல் தென்றலாகும்
காட்சிகள் நிகழட்டும்...!!!

நீண்டநேரம் கடற்கரையில்
நின்றுவிடாதே நீ...!
மணற்பரப்பின் மீது
மலரொன்று முளைத்ததாய்
காண்பவரெல்லாம்
கருதப்போகிறார்கள்...!

உன் காலடி மணலை
அள்ளிச்சென்ற அலைகள்
ஆழ்கடலில் எங்கோ
அவைகளை சேகரித்து வைத்தன...!
அவையெல்லாம் இப்போது
ஆழ்கடல் முத்தானது...!!

----அனீஷ் ஜெ...