வாய்கிழிய சொன்ன - உன் வார்த்தை சத்தியங்கள் கிழிந்து தொங்குகிறது...! என் எச்சில்பட்ட உன் உதடுகளை, இன்னொருவனுக்காய் இறுக்கிப்பிடிக்கிறாய்...! மரணத்தால் மட்டுமே நம்மை பிரிக்கமுடியுமென நீ சொன்னது மரணித்தே போய்விட்டது...! பிரிவுகளை மட்டுமல்ல, உன் வார்த்தைகளால் வலிகளையும் சேர்த்தே தந்தாய்...! நீ தந்த காயங்களை விட என் கோபங்கள்தான் பெரிதாகிறது...! எல்லைகளே இல்லாமல் உன்னை வெறுக்கிறேன் நான்...! ஏனென்றால் தேவதையின் முகமூடியணிந்த சாத்தான் நீ... ----அனீஷ் ஜெ...
இரவு பகலாய் இதயம் கொன்றாய்...! அரக்கி போலவே அதையும் தின்றாய்...!! பாதி உயிரின் மீதியை கேட்டேன்...! விதி இதுவென்று மிதித்தே சென்றாய்...!! பாதை நடுவில்
பள்ளங்கள் தைத்தாய்...! போதையானவன் போல தள்ளாட வைத்தாய்...!! நெஞ்சின் நடுவில் ஊசி துளைத்தாய்...! கெஞ்சிய என்னை வீசியெறிந்தாய்...!! சிரித்தால் அதையும் அழுத்தி பறித்தாய்...! மரிக்க சொல்லி கழுத்தை நெரித்தாய்...!! தவறி விழுந்தேன் கைதட்டி சென்றாய்...! கதறி அழுதேன் கைகட்டி நின்றாய்...!! வரங்கள் எதுவும் - நீ தர வேண்டாம்...! தரும் வலிகள் எதையும் பின்வலிக்கவும் வேண்டாம்...!! உயிருடன் என்னை கொஞ்சம் உலகத்தில் வாழவிடு...! வாழ்க்கை எனும் அரக்கியே... ----அனீஷ் ஜெ...
புன்னகைத்துக்கொண்டே மரணங்கள் நிகழ்வது உங்களில் யாரேனும் கண்டதுண்டா...? இதோ... இந்த நொடி... உதடு நிறைய புன்னகையை ஏந்திக்கொண்டு, இதயம் வெடிப்பதுபோல துடிக்க, இறந்துகொண்டிருக்கிறேன் நான்...! அவளின் ஓரப்பார்வைகளில்... ----அனீஷ் ஜெ...
அது ஒரு அமாவாசை இரவு...! ஒளி தின்னும் இருள் மிருகம் நடமாடிக்கொண்டிருக்கிறது...! காற்றே இல்லை...! ஆனாலும் தெருமுனையில் ஒரேயொரு மரம் மட்டும் பெரும் சத்தத்தோடு அசைந்துகொண்டிருக்கிறது...! மின்னல்களே இல்லா இடிச்சத்தங்கள் இரு காதுகளையும் பிளக்கிறது...! நாய்களெல்லாம் நரிகளைப்போல ஊளையிடுகிறது...! இரும்பு சங்கிலிகளை யாரோ இழுத்துக்கொண்டு நடப்பதுபோல், இடையிடையே இன்னுமொரு சத்தம்...! ஆந்தைகள் இரண்டு அலறிக்கொண்டிருக்க, வவ்வால் கூட்டமொன்று சிறகு விரித்து பறக்கிறது...! சருகுகளில் சலனம்...! வெள்ளை ஆடைகட்டி வெளிச்சமில்லா விளக்கொன்றுடன் தூரத்தில் யாரோ... கரும்பூனையொன்று வீட்டு சுவரை நகங்களால் கிழிக்கிறது...! இரவு கொடூரமாய் நீள்கிறது...! ஆனால் அவள் மட்டும் பயமில்லாமல் நடமாடிக்கொண்டிருக்கிறாள்...! உறங்கிக்கிடக்கும் என் கனவுகளில்... ----அனீஷ் ஜெ...
சிறு துளியாய் வெறும் தரையில் விழுந்தது...! முதல் மழைத்துளி... சிறுதுளிகளெல்லாம் சங்கீதாமாய் பொழிய தூறல் மழை சாரலானது...! அடைமழை அழகாய் விழ குடை பிடிக்கவும் பிடிக்கவில்லை...! நிலவின் குளிரும் நீல வானின் அழகும் போல - என் மேலே விழுந்தது மழை...! சுகமாய் நனந்தேன் நான்...! மேக கூட்டங்கள் - அதன் தேகம் கரையும் வரை கொட்டித்தீர்த்தது மழை...! பாதத்தை தொட்டிருந்த மழையோ என்னி ல் பாதியை எட்டியிருந்தது இப்போது...! கால்கள் இரண்டும் கடும் வெள்ளத்தில் சிக்கிக்கொள்ள நீந்து முயற்சிகளில் மீண்டும் மீண்டும் தோற்கிறேன் நான்...! மழையோ நின்றபாடில்லை...! முகம் நோக்கி முன்னேறும் வெள்ளம் - என்னை மூழ்கடிக்கும் முன் மூச்சை இழக்காமல் தப்பிக்கவேண்டும்...! முயற்சிகள் ஏனோ பலனளிக்கவில்லை...! கடைசியில் தோற்றே போகிறேன்...! மூழ்கியே மூச்சை இழ்ந்துவிட்டேன் நான்...! சில மழைகளுக்கு மனசாட்சி யே இருப்பதில்லை...! சுகமாய் விழ ஆரம்பித்து - பின்பு சுக்குநூறாக்கி, கடைசியில் கண்மூடித்தனாய் கொன்றே விடுகிறது...! சில காதல்களை போல... ----அனீஷ் ஜெ...
சிறகில்லா தேவதையாய் அவள்...! எனறோ ஒருநாள் பேசி மறந்து, சந்தித்து பிரிந்ததுபோல் ஞாபகம்...! பலநாள் பழக்கமென அருகில் வந்து நலமா என்றாள்...! கைகால் உதறி, வாய் உளறி நலமென்றேன் நான்...! என் விசாரிப்பை எதிர்பார்க்காதவளாய் தொடர்ந்தாள் அவள்...! அன்று ஏதோ கொஞ்சம் பேசினோம்...! சில நாள் சந்திப்புக்குபின் ஏதேதோ பேசினோம்...! இதயங்கள் இடைவெளி குறைத்து, காதலாய் கட்டியணைத்தது...! காதல் பகிர்ந்து, கவலை மறந்து, கதை சொல்லி, இடை கிள்ளி, இதழ் சுவைத்து, இதயம் மகிழ்ந்தோம்...! காரணங்கள் தெரியவில்லை...! ஏதோ ஒரு நொடியில் எதற்காகவோ பிரிந்தோம்..! பின்பு இதுவரை சந்திக்கவேயில்லை...! மனம் மட்டும் அவள் நினைவில் கனத்துக்கொண்டிருந்தது...! எதிர் வீட்டு சேவல், என்னருகில் அலாரம் எல்லாமே ஒருசேர கத்த கண்விழித்துக்கொண்டேன் நான்...! விழித்த பின்புதான் விளங்கியது...! கனவு எனக்கொரு கதை சொல்லிக்கொண்டிருந்தது...! எனக்குள் சிரித்துக்கொண்டே எழுந்தேன் நான்...! ஆனால்... நிஜமென்றாலும் கனவென்றாலும் பிரிவின் வலி பெரியது என இன்னொரு கதை சொல்லியது...! எனக்கே தெரியாமல் என் இமைகளில் ஒட்டியிருந்த ஒரு துளி கண்ணீர்... ----அனீஷ் ஜெ...
உலர்ந்தே கிடக்கிறது அந்த காகிதத்துண்டு...! எடுத்து எழுதுவதற்கு எத்தனை முறை எத்தனித்தாலும் ஏதோ ஒன்று தடுக்கிறது...! இதயமும், இந்த பேனாவும் இன்னமும் மூடியே கிடக்கிறது...! என் மனம் பிரசவிக்கும் எண்ணங்களுக்கும் எழுத்துகளுக்கும் பேனா நுனியை அடைவதற்குள்ளேயே ஆயுள் முடிகிறது...! எழுதியாகவேண்டுமென்ற எண்ணத்துடன் புழுதி படிந்து கிடந்த - அந்த வெற்றுக் காகிதத்தை - இன்று கையிலெடுத்தேன்...! மனதையும் பேனாவையும் ஒருசேர திறந்தேன்...! எதையெதையோ நினைத்து எதையெதையோ கிறுக்க நினைத்தேன்...! காகிதத்தை கண்களும் - என் கண்களை காகிதமும் முறைந்துப்பார்த்து கொண்டிருந்தன...! ஒரே அமைதி...! நீண்ட நேர நிசப்தத்திற்குபின் காகித்தத்தின்மேல் கொட்டித்தீர்த்துவிட்டன என் கண்கள்...! கண்ணீர்துளிகளை... இன்றும் என் கவிதைகள் கருவறையிலே கல்லறையாகிவிட்டன...! இன்றும் இங்கு மாற்றமேதுமில்லை...! ஈரமாய் போன அந்த காகிதத்துண்டை தவிர... ----அனீஷ் ஜெ...
இமை மூடி, இதழ் சேர்த்து, கன்னம் உரசி, கைகள் கோர்த்து காதல் செய்தோம் நாம் அன்று...! இதயம் மூடி, இரவுகள் சேர்த்து, கவலைகள் உரசி, கண்ணீர் கோர்த்து தனிமை நெய்கிறேன் நான் இன்று...! ----அனீஷெ ஜெ...
மரணப்புழுக்கள் மனமெங்கும் நெளிகிறது ! வீசியெறிந்த வார்த்தைகள் - மனதை விறகாக்கி உடைக்கிறது ! கரும்சோகங்கள் கழுத்துக்குள் அடைக்குறது ! வலிகளெல்லாம் - இதயத்தின் வாசற்படியிலே காத்திருக்கிறது ! பகலுக்கும் இரவுக்கும் இரவுக்கும் பகலுக்குமான இடைவெளிகள் மட்டுமே நீள்கிறது ! வாழ்ந்து முடிக்கையில் வலிகளை மட்டுமே
மிச்சம் வைத்து செல்கிறது வாழ்க்கை...! வலிகளை மட்டுமே... ----அனீஷ் ஜெ...
புயலென மூச்சு...! மழையென வியர்வை...!! பூகம்ப நடுக்கம்...! எரிமலை வெப்பம்...!! என் ஒரு விரல் வருடலில், உனக்குள் இத்தனை இயற்கை மாற்றங்கள்... ----அனீஷ் ஜெ...
ஆரம்பம் நான் அடையாளம் காணவில்லை ! மெதுமெதுவாய் வளர்ந்தபோதும் மனம் உணரவில்லை...! மாற்றங்களும் இல்லை...! நேற்றுவரை வலி தரவில்லை...!! இன்றோ என்னை ஒன்றுமில்லாமல் செய்து மண்ணோடு சாய்த்துவிட்டது...! உண்மைதான்... புற்றுநோயை விட பத்துமடங்கு கொடியதுதான்...! இந்த துரோகம்... ----அனீஷ் ஜெ...
நனைந்த பின்னும் பற்றி எரிகிறது...! நீ எச்சிலால் நனைத்த
என் கன்னங்கள்... ----அனீஷ் ஜெ...
முறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...! இறுக்கி அணைத்தபடி இரு கைகளால் - அவள் இடைதேடினேன் நான்...! இமை மூடியபடி முனகினாள்...! இதுதான் சரியான விடையென்று... ----அனீஷ் ஜெ...
கவிதை எழுத தெரியாதென்கிறாய்...!
அப்படியென்றால்
உன் கன்னத்தில் விழும் குழிகளுக்கு
என்ன பெயர்...?
***********************************************************************************
கவிதை எழுதுவது எப்படியெனக்கேட்டு கவலைகொள்கிறாய் நீ...! நீ பேசும் வார்த்தைகளை ஒரு காகிதத்தில் சேகரித்துவை...! கவிதை எழுத தெரியாதென்கிற - உன் கவலையும் நீங்கட்டும்...! ----அனீஷ் ஜெ...
என் இருமலின் இரைச்சல்களுக்கிடையில் நடு இரவின் நிசப்தங்களின் சத்தங்கள்...! சட்டென விட்டுச்சென்ற தூக்கத்தினால் கட்டிலின்மேல் விழித்துக்கொள்கிறேன்...! முதுமையும் தனிமையும் - என் முதுகை இழுத்து நகரமுடியாமல் செய்கிறது...! இதயத்தில் வழியே மெதுவாய் வலியொன்று பரவுகிறது...! இதயத்துடிப்புகளின் இடைவெளி குறைய, மூச்சுக்கும் மூச்சுக்குமிடையே மிகப்பெரியதோர் இடைவெளி...! என் கட்டளைகளுக்கு கட்டுப்படாமல் இமைகளோ இறுக மூடிக்கொள்ள முயல்கிறது...! மரணத்தின் கதவுகள் திறப்பதுபோல உணர்வு...! விரைவிலே நான் மண்ணாடு மண்ணாகிவிடலாம்...! ஆனாலும் எனக்கு அச்சமில்லை...! எழுபது ஆண்டுகள் வழ்ந்து முடித்துவிட்ட நான், இந்த மரணத்தின் நொடிக்காகதான் இரண்டாண்டுகளாய் காத்திருக்கிறேன்...! என்னை விட்டு விண்ணில் சென்ற, அவளோடு அடுத்த ஜென்மத்திலும் வாழ... ----அனீஷ் ஜெ...
உனக்காக உருகி உருகி காதல் கவிதைகளை எழுதுகிறேன் நான்...! வாசிக்கும் உனக்கோ கவிதைகளில் என் காதலை விட, எழுத்துப்பிழைகளே கண்ணில் தெரிகிறது ! ----அனீஷ் ஜெ...
அந்தச் சாலையில் தலை நிமிர்த்திக்கொண்டு என்னை கடந்து போனவர்களின் எந்த முகமும் எனக்கு தெரியவில்லை...! தலை குனிந்தவாறே என்னை கடந்து சென்ற அவளின் முகம் தவிர... ----அனீஷ் ஜெ...
அவளை மறக்க சொல்கிறேன் நான்...! முடியாதென்கிறது என் மனது...!! எனக்கும் என் மனதிற்குமான போட்டியில், சில சமயம் நான் தோற்றுவிடுகிறேன்...! பல சமயங்களில் என் மனது ஜெயித்துவிடுகிறது...!! ----அனீஷ் ஜெ...