30 Dec 2011

நிரந்தர காதலி !

நிரந்தர காதலி !


அப்பா அடிக்கடி
அன்பாய் சொல்லியும் - உன்னை
விட்டுவிலகவில்லை நான்...!

தினமும்
ஆயிரம் முறை
அம்மா திட்டியும்,
உன்னை இழக்க
உடன்படவில்லை மனது...!

ஆனால் அவள்
பலமுறை சொன்னதும்
படுபாவி நான்,
உன்னை என்னிலிருந்து
தூக்கிப்போட்டேன்...!

இன்று அவளோ
என்னை தூக்கிப்போட்டுவிட்டு
தொலைதூரத்தில் எங்கோ
தொலைந்து போய்விட்டாள்...!

மறுபடியும் மனது
உன்னையே தேடுகிறது...!

இன்னொருமுறை உன்னிடம் நான்
என் இதயம் தொலைத்தால்,
என்னை பழிவாங்க எண்ணி,
என் நுரையீரல் சுவர்களில்
உன் கறுப்பு எச்சில்களை
காரி உமிழ்ந்துவிடாதே....!

என் விரல்களை கோர்த்தபடி,
என் உதடுகளில் உரசியபடி
என் உயிர் மூச்சோடு மட்டும்
கலந்துவிடு ...!

சிகரெட் என்னும்
என் நிரந்தர காதலியே...

----அனீஷ் ஜெ...

28 Dec 2011

புரியாத பதில் !

புரியாத பதில் !


கோயில், தெருவென
கூட்ட நெரிசலிலும்
எனைத்தேடி அலையும்
உன் கண்கள்...!

நம் கண்கள்
சந்தித்துக்கொண்டால் - உன்
கன்னங்கள் இடும்
வெட்கக்கோலங்கள்...!

எனை கண்டதும்
உன் உதடுகளில்
முட்டி முளைக்கும்
புன்னகை பூக்கள்...!

எதுவும் எனக்கு
புரியவில்லை பெண்ணே...

நீ என்னை
காதலிக்கிறாயா...? - இல்லை
நான் உன்னை
காதலிக்க சொல்கிறாயா...?

----அனீஷ் ஜெ...

25 Dec 2011

நான் உன்னை காதலிக்கிறேன்...

நான் உன்னை காதலிக்கிறேன்...


எத்தனையோமுறை
என் வழிகளில்
எதிர்பட்டிருக்கிறாய் நீ...!
ஆனால் இப்பொழுதுதான்
அதிசயமாய் அடிக்கடி என்
விழிகளில் விழுகிறாய்...!!

உன்
பார்வை மழைக்காகவே
பாலைவனமாகிறது மனது...!

உன்
புன்னகையை பிடித்து
பூக்கள் செய்ய - நான்
புதிதாய் கற்றுக்கொள்கிறேன்...!

கண்கள் திறந்தே
கனவு காண்பதும்,
உறக்கத்திலும்
உன்னை நினைப்பதும்,
எனது புதிய அனுபவங்கள்...!

எந்த பார்வை
என்னை சாகடிக்கிறதோ,
உந்தன் அதே பார்வைதான் - என்
உயிரையும் வளர்க்கிறது...!

உனக்காய் காத்திருக்கும்
என் கால்கள்,
ஒவ்வொருமுறையும்
உன்னை நோக்கி
பயணிக்கும்போதும்,
என் இதயம்
சத்தமில்லாமல்
உரக்க கத்துகிறது...!
நான் உன்னை காதலிக்கிறேன்...

----அனீஷ் ஜெ...

22 Dec 2011

இனி எப்பொழுது?

இனி எப்பொழுது?


உன் குரலை
காற்று இன்னும் என்
காதில் சொல்லவில்லை...!

உன் நிறமென்ன என்று
வானவில் என்னிடம்
வந்து சொல்லவில்லை...!

அழகாய் இருப்பாயா..?
அதிகம் பேசுவாயா...???
தென்றலாய் சிரிப்பாயா..?
தேவதை போல் இருப்பாயா...??

எனக்கு உன்னை பற்றி
எதுவும் தெரியாது...!
எழுத்தில் நீ சொன்னால் கூட
எனக்கு எதுவும் புரியாது...!!

கற்பனையில் மட்டுமே
நான் உன்னை காண்கிறேன்...!
கனவில் மட்டுமே
உன் குரல் கேட்கிறேன்...!!

உன் கோபங்கள்...!
உன் சிரிப்புகள்...!
அத்தனையும்
வெறும் எழுத்துகளாக,
அதையே நான் ரசிக்கிறேன்...!

கணினி திறந்து,
கண்கள் வெறித்து
காத்துக்கொண்டிருக்கிறேன் நான்...!
இனியெப்பொழுது - நீ
இதிலே தெரிவாய்...?

என் இணையத் தோழியே...

----அனீஷ் ஜெ...

19 Dec 2011

சின்ன கவிதைகள் - இரவு பயணம்

சின்ன கவிதைகள் - இரவு பயணம்


மேடு பள்ளங்கள்...!
வளைவு நெளிவுகள்...!!
இருந்தாலும் நான்
இரவு முழுவதும் பயணிக்கிறேன்...!
உன் தேக பாதைகளில்...


***********************************************************************************
உதடுகள் உரசிக்கொள்ள
உயிருக்குள் தீப்பிடித்தது...!
பற்றி எரிந்ததோ நாம்...!!
முத்தம்...

***********************************************************************************தெரிந்தே தினம்தினம்
மோதிக்கொள்கின்றன
என் பார்வைகள்...!
உன் துப்பட்டா கோபுரங்களில்...

----அனீஷ் ஜெ...


15 Dec 2011

வழித்துணையாய்...

வழித்துணையாய்...


அழுகையிலே இது
ஆரம்பிக்கும்...!
அழுகையோடு இதன்
ஆட்டமும் நிற்கும்...!!

தொலைக்காமலே ஒரு
தேடல் நடக்கும்...!
தொடும்தூரமும் சிலசமயம்
தொலைவில் கிடக்கும்...!!

தோல்விகளில்
தோளும் கிடைக்கும்...!
சிலசமயம் சில கால்கள்
எட்டி உதைக்கும்...!

கனவுகள் சிலநேரம்
நிஜமாக மாறும்...!
நிஜங்களும் பலநேரம்
நினைவாகி போகும்...!!

இழப்புகளும்,
இமைபொழியும் கண்ணீரும்
இங்கு ஏராளம்...!
பிழைகளும்,
பிழைப்புக்கான மோதல்களும்
இங்கு தாராளம்...!!

அடுத்தவனின் அழுகையில் பலர்
ஆரவாரமாய் சிரிக்கலாம்...!
சிரிப்பை கண்டாலோ
சிலர் கண்ணீரும் சிந்தலாம்...!!

அடுத்தது என்ன இதில்
அறிய முடியவில்லை...!
கடந்து போனதை மறுமுறை
காண வழியுமில்லை...!

முரண்பாடுகளை 

முதுகில் சுமந்துகொண்டு,
முழுநீள வழித்துணையாய்,
நம்மோடு பயணிக்கிறது...!
நமது வாழ்க்கை...

----அனீஷ் ஜெ...


13 Dec 2011

பொய்த்துப்போனவைகள்...

பொய்த்துப்போனவைகள்...


உன் மடியில்தான்
உயிர் விடுவேன் என சொன்ன
உன்னை நான்
கட்டியணைத்து
கண்ணீர் துடைத்தது - எனக்கு
இன்னும் ஞாபகமிருக்கிறது...!

காதலித்தவனை
கழற்றிவிட்டு செல்லும்
மற்ற பெண்களை போல்
என்றுமே நீ இருப்பதில்லை என
அன்று நீ சொன்னதையும்
நான் ரசித்து நின்றேன்...!

என்ன வந்தாலும்,
வானமே இடிந்தாலும்
வாழ்வது உன்னோடுதான் என
நீ பேசிய வார்த்தைகள்
நீண்ட நாட்கள் தாண்டியும்
இன்றும் என் காதில் ஒலிக்கிறது...!

உன் வார்த்தைகள் அனைத்தையும்
நம்பிக்கொண்டிருந்த என்னால்
இன்னும் நம்பமுடியவில்லை...!
உன் காதலோடு சேர்த்து
உன் வார்த்தைகளும்,
உன் வாக்குறுதிகளும் - இன்று
பொய்த்துப்போய்விட்டது என்பதை...

----அனீஷ் ஜெ...9 Dec 2011

அவனும்... அவளும்...

அவனும்... அவளும்...


ஒல்லியான தேகம்...!
மெல்லிய இடை...!!
நிலா முகம்...!
புன்னகைக்குள்ளே
மறைந்துகிடக்கும்
உதடுகள்...!!
அவள் அழகாகவே இருந்தாள்...

முழுமையான உயரம்...!
முகமெல்லாம் குறுந்தாடி...!!
கலவரம் கலக்காத
பார்வைகள்...!
அவனும் அவளுக்கு
பொருத்தமாகவே இருந்தான்...!!

அவளுக்காக அவன்
காத்திருக்கிறான்...!
அவள் பெயரையே
கவிதை என்கிறான்...!!
அவன் அவளை
காதலிப்பதென்னவோ
உண்மைதான்...

அவள் அவனை
கண்டுகொள்ளாமல் சென்றாலும்,
காலை முதல் மாலை வரை
பின்தொடர்கிறான்...!

அன்று...
நகரப்பேருந்தில்
நகர முடியாத நெருக்கத்தில்,
படிக்கட்டில் அவன்...!
பேருந்தினுள் அவள்...!!

ஆசை காதலோ
அவள் அருகில்
அவனை போக சொன்னது...!

அடித்துப்பிடித்து
அவளருகில் சென்றான்
அவன்...!

இப்போது அவன்
இதயத்தில் பூட்டிவைத்திருந்ததை,
உதடுகளால் திற்ந்தான்...!

உன்னை நான்
உயிராய் காதலிக்கிறேன் என்றவன்,
என்னை நீ காதலிக்கிறாயா என
திருப்பி கேட்டான் அவளிடம்...!

இல்லை என்று
இதயம் தர மறுத்தாள் அவள்...!

இன்னொருமுறை கேட்டான்...!

முறைத்துப்பார்த்த அவளிடம்
தயங்கியபடியே கேட்டான்...!
வேறுயாரையாவது
விரும்புகிறாயா என்று...

அவள்
கைநீட்டி காண்பித்தாள்...
அடுத்த பேருந்து நிறுத்தத்தில்
அவளுக்காய் காத்துநின்ற
என்னை...

----அனீஷ் ஜெ...

5 Dec 2011

உன்னை சந்தித்த பொழுதில்...

உன்னை சந்தித்த பொழுதில்...


எத்தனையோ நாளுக்குப்பின்,
எதிர்பாராத விதமாய்
நான் உன்னை இன்று
கடைத்தெருவில் சந்தித்தேன்...!

திடீரென பார்த்தாலென்னவோ
அடிநெஞ்சில் எனக்கு
அதிர்ச்சியின் அலைகள்...!
உனக்கும்தான்...

என் முகத்தையே பார்த்து நின்ற
உன் முகம் கண்டதும்
நான் முகம் திருப்பினேன்...!

உன் பார்வையில்
என்மேல் ஏதோ
பரிதாபம் தெரிந்தது...!

உனக்கு எதிர்திசையில்
வேகமாய் விலகி நடந்தேன்...!

பாதி தூரம் சென்றபின் - என்
பாதி மனது சொன்னது
உனது அருகில் வந்து
நலம் விசாரித்திருக்கலாம் என்று...

ஆனாலும் ஏதோ ஒன்று தடுக்க
அப்படியே வெகுதூரம் நடந்து
உன்னை விட்டு மறைந்தேன்...!

உன்னிடம் நான் ஓடி வந்து
நலமா என கேட்பேன் என
நீ எதிர்பார்த்திருக்கலாம்...!

ஆனால்...
உன்னருகில் நான் வந்து
நலமா என கேட்டால்,
நீ யாருக்கோ பயந்து
நீ யார் என திருப்பி கேட்டால்,
உன்னிடமும்,
உன்னருகில் நிற்கும்
உன் கணவனிடமும்,
நான் எப்படி சொல்வது?

என்றோ ஒரு நாள் - நீ
ஏமாற்றிவிட்டு சென்ற - உன்
முன்னாள் காதலன்தான்
நான் என்று...

----அனீஷ் ஜெ...