28 Apr 2017

வெயில் காலம் !

வெயில் காலம் !


வெயிலுக்கும் நீ
குடைபிடித்தே நடக்கிறாய்...!
இல்லையென்றால்
வெளியில் நீ வரும்போதெல்லாம்
உன் முகம் கண்டே
உருகி சூரியன் மழையாகியிருக்கும்...!!

வெட்டவெளியில் விழும்
வெயில் நேர உன் நிழலில்தான்,
சூரியன் சிலசமயம் வந்தமர்ந்து
சூட்டை தணித்துச்செல்கிறது...!

வெயிலில் நீ நடக்கையில் - உன்
நெற்றியில் உருண்டு
வெறும் பூமியில் விழுகிறது
வியர்வை துளியொன்று...!
பெருமழை பெய்ததைப்போல்
குதூகலிக்கிறது பூமி...!!

வெயிலில் கொடுஞ்சூட்டை - நீ
விசிறியால் வீசி தணிக்கிறாய்...!
உருவாகும் காற்றோ
உன் தேகம் தொடும்போதெல்லாம்
சூடாகிப்போகிறது...!

உச்சி வெயில் சூரியனை
உன் வெறும் கண்களால்
அன்றொருநாள் பார்த்தாய்...!
தாங்கமுடியாதா ஒளியால்
தன் விழி மூடிக்கொண்டது...!!
சூரியன்...

----அனீஷ் ஜெ...

25 Apr 2017

சில காலைகள் !

சில காலைகள் !


ஐந்து மணிக்கே
வெளிச்சம் பிரசவிக்கும்
சில காலைகள்...!

ஏழு மணிக்கும்
இருளின் மிச்சம் சுமக்கும்
சில காலைகள்...!

அண்டார்டிக்கா குளிரை
தேகத்தில் போர்த்தும்
சில காலைகள்...!

சூரியனின் அக்னியை
சூடாய் தெளிக்கும்
சில காலைகள்...!

அதிகாலை நேரத்தில்
அம்மாவின் குரல் கேட்கும்
சில காலைகள்...!

அசந்து தூக்கும் வேளை
அலாரம் கத்தும்
சில காலைகள்...!

எல்லா காலைகளும்
ஏதோ ஒரு விதத்தில்
மாறுபட்டே விடிகிறது...!

நான் மட்டும்
மாற்றமேதுமில்லாமல் எழுகிறேன்...!
உன் நினைவுகளோடு...

----அனீஷ் ஜெ...

5 Apr 2017

மது !

மது !


கண் பட்டவை
கை தொட்டவையென
பார்த்தவை அனைத்தையும்
பறித்துக்கொண்டேன்...!

நிராகரிக்க மனமில்லாமல்
நிரம்பி வழியும்வரை
சேர்த்து மெல்ல
சேகரித்தேன்...!

அவையனைத்தையும்
அள்ளியெடுத்து நான்
கசக்கி பிழிந்து
கலந்தெடுத்தேன்...!

பெரும் மதிப்பு கொண்ட
பெட்டியொன்றில்
உருவாகிய கலவையை
ஊற்றி வைத்தேன்...!

அப்பெட்டியை நான்
அப்படியே தூக்கி
எவருக்கும் தெரியாத
ஏதோ ஓரிடத்தில் புதைத்தேன்...!

தினமும் நான் அதை
திறந்து பார்த்தே
கலவையின் நிலமையை
கண்காணிகத்தேன்...!

ஆண்டுகள் பல கடக்கிறது....!

அழிந்து போகுமென நான்
அவதானித்தது இங்கே
தவறாய் போவதற்கான
தடம் தெரிகிறது....!

கெட்டுப்போகவும்
கரைந்து தீரவும் செய்யாமல்
விடியும் நாளொன்றுக்கும்
வீரியமே கூடுகிறது...!

இன்னும் நான்
இதயப்பெட்டிக்குள் ஊற்றி
உயிரில் புதைத்திருக்கிறேன்...!
உன் நினைவென்னும் மதுவை...

----அனீஷ் ஜெ...