10 Dec 2014

வரவு செலவு !

வரவு செலவு !


வரவாக வந்தது
ஆக மொத்தம் ஆறு...!
செலவு செய்தது
எண்ணிக்கையில் எட்டு...!!

எப்படி கூட்டிக் கழித்தாலும்
தினம் தினம்
வரவை விட செலவே
அதிகமாகிறது...!
அவளுக்கும் எனக்குமான
முத்தக்கணக்கில்...

----அனீஷ் ஜெ

25 Nov 2014

இரவல் !

இரவல் !


திருப்பித் தந்துவிட்டாய்...!
இரவலாகவா வாங்கிச்சென்றாய்...?
நீ என் இதயத்தை...

---- அனீஷ் ஜெ...

20 Nov 2014

அவள் என் தேவதை !

அவள் என் தேவதை !


பால் வண்ணமோ,
பசும்பொன்னின் நிறமோ
துளிகூட இல்லை
அவளிடத்தில்...!

சந்திரனின் ஒளியோ,
சூரியனின் விழியோ
இல்லை அவள் முகத்தில்...!

கட்டி இழுக்கும் காந்தமோ,
சுண்டி இழுக்கும் பார்வையோ
சிறிதும் இல்லை அவள் கண்களில்...!

மொட்டு விரிந்ததுபோல்
சட்டென வீழ்த்தும்
இதழ்களும் இல்லை...!

பஞ்சு கன்னங்களோ,
கொஞ்சும் குரலும்
கொஞ்சம் கூட
இல்லவே இல்லை அவளிடம்...!

சல்லடையில்
சலித்தெடுத்ததுபோல
மெல்லிடையுமில்லை அவளுக்கு...!

ஆனாலும் மனமோ
அவள் மட்டுமே
வேண்டும் என்கிறது...!
ஏனென்றால்,
அவள் என் தேவதை...

----அனீஷ் ஜெ...


22 Oct 2014

15 Sept 2014

கோபம் முதல் முத்தம் வரை...

கோபம் முதல் முத்தம் வரை...


ஊருக்கே கேட்குமளவுக்கு
உரக்க கத்துகிறான் அவன்...!

முறைக்கும் அவன் விழிகளுக்கு
முதன்முதலாய் பயப்படுகிறேன் நான்...!!

கவிதை சொன்ன அவன் விழியும்,
காதல் பேசிய குரலும் - என்னை
கடித்து குதற
காலம் பார்க்கின்றன...!

முகம் முழுதும் பயத்தையும்,
அகமெங்கும் அன்பையும் சுமந்துகொண்டு
அதையும் நான்
அவனுக்கு தெரியாமல் ரசிக்கின்றேன்...!

அவனுக்கு நான்
அடங்கி போவதில்
ஆணவம் அவனுக்கு...!
எனக்கும்தான்...

எதிர்த்து பேச
எத்தனிக்கும் என் மனதை
உள்ளுக்குள்ளே
ஊமையாக்குகிறேன்...!

அமைதியாய் - நான்
அமர்ந்திருப்பதாலென்னவோ
ஒரு நிமிடத்திலே - அவன்
ஒருவழியாய் ஓய்ந்துவிடுகிறான்...!!

இறுகிய அவன் முகமும்
இருண்டொரு மணி நேரத்தில்
இதழ் முத்தமொன்றில்
இயல்பாகிவிடுகிறது...!!

ஒருவரின் கோபத்தை குறைக்க
இன்னொருவரின் மவுனத்தை தவிர
இங்கு எளிய வழியொன்றுமில்லை...!

பின்பொருநாள்...
உரக்க கத்துதலில் ஆரம்பித்த
என் கோபமும்,
அவன் மவுனங்களின் முடிவில்
அவன் எனக்களித்த
உதட்டுக்காயத்திலே முடிந்தது...

---- அனீஷ் ஜெ...

31 Aug 2014

கனவு

கனவு


கண் திறந்து கண்ட
கனவுகளை,
காதல் வண்ணத்தால்
காகிதத்தில் வரைந்து
உன் முன்னே வந்தேன் நான்...!

வண்ணங்களை - நீ
வார்த்தைகளால் சிதைத்தாய்...!


நீ சிதைத்த
காகித கனவுகள் இப்போது
வெறும் கனவாகவே போனது...!
கூடவே என் காதல் கனவும்...

----அனீஷ் ஜெ...


31 Jul 2014

காதல் கொஞ்சம் கவிதை கொஞ்சம்...

காதல் கொஞ்சம் கவிதை கொஞ்சம்...


வெட்கங்கள் போர்த்திய
உன் தேகம்...!
மழை வந்து ஊற்றியதுபோல
அதன் மேல் ஈரம்...!!

தீ பட்ட சருகாய்
நீ விடும் மூச்சு...!
நீர் சொட்டு போல
விட்டு விட்டு முனகல் பேச்சு...!!

முத்தங்கள் கிறுக்கிய - உன்
முக காகிதம்...!
விரலால் நான் வரையும்
விந்தை ஓவியம்...!!

கவிதையாய் நான் சொன்னது
காதலில் கொஞ்சம்...!
காதலில் மீதி
கவிதையாய் கொஞ்சம்...!!

----அனீஷ் ஜெ...

30 Jun 2014

மழைக்காலம் !

மழைக்காலம் !

anishj kavithai

கடும் வெயிலில் - உன்
கழுத்தோரம்
விழுந்தோடும்
வியர்வை துளிகளாய்,
உனக்குள் உருண்டோடி - உன்
உயிரை தொட்டு
உலர்ந்து போகிறது என் நினைவுகள்...!

துடைத்தெறியப்பட்ட
துளி திரவத்தின் ஈரமாய்,
இன்னும் இருக்குறேன் நானுன்
இதயத்தின் ஓரம்...!

வெயில் விட்டு
மழை கொட்டும் காலங்களில்
மறைந்து போகும்
வியர்வை துளிகளாய் - என்
நினைவுகளை
நீ மறந்துபோய்விடாதே...

மழை காலங்களுக்காய்,
வெயிலை கொஞ்சம்
பத்திரப்படுத்திக்கொள்...!
என் நினைவுகளுக்காய்
என் காதலையும்...

---- அனீஷ் ஜெ...

31 May 2014

மழை வேண்டி...

மழை வேண்டி...


கொட்டும் மழையில்,
சொட்டும் துளியில்,
பட்டுக் குடையோடு
பயணிக்கிறாய் நீ...

குடையின் நுனிவழியே,
நுழைந்து உள்ளே வரும்
மழைத்துளியோ - உன்
கன்னத்தை தொட்டு
காதல் செய்கிறது...!

குறுகுறுவென பார்க்கும்
குடையோ - உன்
கைவிரலின் தொடுதலோடு
இறைவனோடு
வேண்டிக்கொண்டிருந்தது...!
இவள் பயணங்களிலெல்லாம்
மழை வேண்டுமென...

----அனீஷ் ஜெ...

30 Apr 2014

ஒரு கவிதை எழுதினேன் !

ஒரு கவிதை எழுதினேன் !அடைக்கப்பட்ட கதவாய்
அவளின் இதயம்...!

திறக்கப்பட வேண்டி
திரிகின்றேன் நான்...!

மறைக்கப்பட்ட அவளின் மனதின்
அறையொன்றிற்கு அப்பால்
புறக்கணிக்கபடுவதற்கான ஏற்பாடுகள்...!

மறுக்கப்பட்ட காதலும்
மரத்துப்போன மனதோடும்
மறப்பதற்கான வழிகள் தேடி நான்...!

மறக்க நினைக்கும்
மரண நொடிகளில்
பிறப்பெடுக்கும்
வலிகளை வரிகளாக்கி
ஒரு கவிதை எழுதினேன் நான்...!
கவிதையின் வரிகளுக்கிடையில்
காதலொன்று மரித்துக்கொண்டிருந்தது...!

----அனீஷ் ஜெ...

31 Mar 2014

அக்னி பார்வைகள் !

அக்னி பார்வைகள் !


வெதுவெதுப்பாய்
அடி நெஞ்சில் வழியும் காதல்,
என் இதயத்தை
இரக்கமில்லாமல் வதைக்கிறது...!

அதை கொஞ்சம்
அணைத்து விடலாமென எண்ணி,
அழகான உன் விழிகளெதிரே
அடைக்கலமானேன் நான்...!

நீ உன் பார்வையை ஊற்ற
இன்னும் கொஞ்சம்
பற்றி எரிகிறது என் மனது...!

நானோ சாம்பலாகாமல்
காதலாகிக்கொண்டிருக்கிறேன்...!
உன் அக்னி பார்வைகளில்...

----அனீஷ் ஜெ...
28 Feb 2014

நீர் பூ...

நீர் பூ...


உன்
நினைவுகளில்
நீந்திக்கொண்டிருந்த
நான் என்னும்
நீர் பூவை
நீயெடுத்து - உன்
நீண்ட கூந்தலில்
சூடிக்கொண்டாய்...!

கூந்தலின் சூட்டில்
குளிர்காய்ந்த நானோ,
உன் மனதோடு
உருகிப்பாய்ந்தேன்...!
காதலாய்...

----அனீஷ் ஜெ...

31 Jan 2014

உரசிய பாதங்கள்...

உரசிய பாதங்கள்...


உரசிச் சென்ற
உன் பாதங்களால்,
தேகமெங்கும்
மூச்சுப்பை முளைத்து,
காற்றை தேட
கண் விழித்தது...!
சாலையோர
சருகுத் துண்டுகள்...

----அனீஷ் ஜெ...