31 Dec 2017

உணவு !

உணவு !


சிறு குழந்தைபோல‌
சிறிதும் விருப்பமின்றி
அலறி கதறி அழுது
அடம்பிடிக்கிறேன் நான்...!

கருணையேதும் இல்லாமல்
கனவெனும் இலையில் பரிமாறி - என்
உயிர்வாய் திறந்து
உள்ளே திணித்துக்கொண்டிருக்கிறது...!

உதறிச்செல்லவோ,
உமிழ்ந்துதள்ளவோ வழியேதுமில்லை...!
இமைகளை இறுக்கி அடைத்தே
உயிருக்குள் விழுங்குகிறேன்...!!
இரவுக‌ள் எனக்கூட்டும்
உன் நினைவுகளை...

‍‍‍‍---- அனீஷ் ஜெ...

30 Nov 2017

தொலைக்க மறந்தவன் !

தொலைக்க மறந்தவன் !


வெகுநேரமாய்
அதே சாலையோரம்
நின்றுகொண்டிருக்கிறேன்...!

சிறிதாய் படபடக்கிறது கைகள்...!
சிகரெட்டொன்றை 
பற்றவைக்கவேண்டும் போலிருக்கிறது...!

நெற்றியின் வெற்றிடத்தை
இருகை விரல்களும்
இறுக தடவிக்கொண்டிருக்கிறது...!

தலையை கோதியபடியே
தனியே பேச முயற்சிக்கிறேன்...!

இன்றிரவு தூக்கம் வரப்போவதில்லை...!
இன்னும் இரண்டு நாட்களுக்கு நான்
இயல்பாய் இருக்க போவதில்லை...!!

இன்றோடு போகட்டும்
இன்னொரு நாள் 
என் கண்ணில்பட்டுவிடாதே...!

ஏனென்றால்
என்றோ நீ என்னை
மறந்து தொலைதிருக்கலாம்...!
நான் உன்னை
தொலைக்க மறந்துவிட்டேன்...!!

----அனீஷ் ஜெ...

17 Oct 2017

தனிமையும்... நானும்...

தனிமையும்... நானும்...


கனவுகளை புதைத்துவிட்ட
கல்லறை தோட்டம் வழியே
நடைபிணத்தின் சிறு உருவாய்
நடமாடுகிறேன் நான்...!

நிறைவேறாத ஆசைகளின்
நீண்டதொரு பட்டியல்
கவலை சேகரிக்கும் இதயத்தில்
கசங்கி கிடக்கிறது...!

நடக்கும் பாதைகளில்
நாளை பூக்கள் கிடக்குமென
இன்று கிழிக்கும் முட்களின் மேல்
இரத்தம் சொட்ட நடக்கின்றேன்...!

தாலாட்டும் சோகமும்
தலைகோதும் தனிமையும்
இமைகளின் வாசல்வழியே
இரவெல்லாம் வழிகிறது...!

எதிர்பார்த்து கிடைக்காத அன்பும்
ஏமாறி உடைந்த நெஞ்சும்
வலிதரும் பெரும் சுமையாய்
வாழ்வோடு நீள்கிறது...!

முடித்து விடலாமென நினைக்கும்
முடிவுறா என் வாழ்க்கையை
மீண்டும் வாழச்சொல்லி - என்னை
மீட்டுச் செல்கிறது....!
என் ஏதோ ஒரு நம்பிக்கை...
இல்லை
யாரோ ஒருவரின் வேண்டுதல்...

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Ra.Priyanka.

16 Oct 2017

சொல்லாத கதை !

சொல்லாத கதை !


உன் சிறு குறுஞ்செய்தியுடன்
என் அலைபேசி உதிர்க்கும்
ஒரு நொடி வெளிச்சத்திற்காய்
இருட்டிலே காத்திருந்த நேரங்கள்...!

எதிர்படும் உன்னை
நிமிர்ந்துபார்க்க மறுத்து
தரைநோக்கி கடந்து சென்று
திரும்பிபார்த்து தவித்த தருணங்கள்...!

கனவுகளா, மனதின் கற்பனையா
நினைவுகளா இல்லை
நீ வந்ததா என குழம்பியே
நான் தொலைத்த தூக்கங்கள்...!

உன்னோடு பேச முயலும்
முறைகள் ஒவ்வொன்றும்
ஓசையில்லாமல் உள்ளே
உதடுகளில் மடியும் வார்த்தைகள்...!

தினம் கொல்லும் காதலுடன்
உன்னிடம் சொல்ல எனக்கு
சொல்லாத கதைகள் பல இருக்கிறது...!
நீ மட்டும் என்னோடு இல்லை...

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Keerthana.

5 Oct 2017

நண்பன்

நண்பன்


சில சிரிப்புகளின் முடிவில்,
பல சோகங்களின் வடிவில்,
சில பாடல்களின் வரியில்,
பல பயணங்களின் வழியில்,
நிறமில்லா நீர்த்துளிகள்
விழிகளில் வந்து நிறைகிறது...!
என்றோ நான் தொலைத்த
என் நண்பனின் நினைவுகளாய்...

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Azii.

28 Sept 2017

குறுஞ்செய்தி !

குறுஞ்செய்தி !


மழை இரவின்
பெரும்தூக்கமும் தராத சுகம்...!

வெயில் நாளில்
மரநிழலும் கொடுக்காத ஆனந்தம்...!

கடும் தாகத்தில்
குட நீரும் தீர்க்காத தாகம்...!

தென்றல் தொட்ட பொழுதில்
தேகமும் உணராத புத்துணர்சி...!

நகைச்சுவை நிரம்பிய
திரைப்படமொன்று வழங்காத புன்னகை...!

இவையெல்லாம் எனக்கும்
நொடிப்பொழுதில் கிடைக்கிறது...!
நீ எனக்கனுப்பும்
“ஹாய்” என்ற குறுஞ்செய்தியில்...

----அனீஷ் ஜெ...

15 Sept 2017

இரவின் கதைகள் !

இரவின் கதைகள் !


நிசப்த இரவு...!

நிலா வெளிச்சம்...!

நிற்காத தென்றல்...!

நின்று தீர்ந்த மழை...!

நீயில்லாத நான்...!

என் இரவுக்குத்தான்
எத்தனை கதைகள்...!!

----அனீஷ் ஜெ...


31 Aug 2017

தனிமைகளின் நண்பன் !

தனிமைகளின் நண்பன் !


கண்ணாடி பார்த்தே
புன்னகைக்க பழகு...!

உன் விரல் நுனிகளை
நீயே முத்தமிடு...!

உன் தோள்களில் சாய்ந்துகொள்ள
உன் முகத்திற்க்கு கற்றுக்கொடு...!

கைகளிரண்டால் உன்
கன்னம் தடவு...!

உன் தேகத்தை
நீயே கட்டியணை...!

ஆறுதல் தேடினால்
அவமானங்களே மிஞ்சும்...!
உன் தனிமைகளின்
உண்மையான நண்பன்
நீ மட்டுமே...

----அனீஷ் ஜெ...

31 Jul 2017

ஒரு காதலும்... இரு நாமும்...

ஒரு காதலும்... இரு நாமும்...


படபடக்கும் எந்தன் நெஞ்சில்
நீ தொடுக்கும் பார்வை அம்பு
உயிரில் குத்தி கிழியுதே...!
காதல் மெல்ல வழியுதே...!!

பருகும் தேனீர் கோப்பைக்குள்ளே
தெரியும் உந்தன் முகம்
காலை தென்றலாய் வருடுதே...!
கனவின் மீதியாய் தொடருதே...!!

நகராத மேகக்கூட்டம்
மழை கொட்ட நேரம் தேடி
சிறு மின்னனாய் வெடிக்குதே...!
உன்னை காண என்னைபோல் துடிக்குதே...!!

காற்றின் வழியே காதில் நுழையும்
இசையில் வழியும் கவிதை வரிகள்
நீயும் நானும் ஒன்று என்று சொல்லுதே...!
நீயில்லாத தனிமைகளை கொல்லுதே...!!

போர்வை மறைத்த தேகக்கூடும்
விளக்கணைத்த இரவு காடும்
உன் நினைவுகளில் முடியுதே...!
உனை காணவேண்டி விடியுதே...!!

----அனீஷ் ஜெ...

30 Jun 2017

ஆயிரம் முகங்கள் !

ஆயிரம் முகங்கள் !


முதல் சந்திப்பே
முகம் பார்க்காமல்
செல்பேசிகளின்
செவிவழியேதான்...!

நீண்ட நாட்களின்
நீண்டதொரு தயக்கத்திற்க்குபின்
உன் முகம் பார்க்கும் ஆசையில்
உன்னிடம் புகைப்படமொன்று கேட்டேன்...!

புன்னகையில் மெல்லிசை கலந்து
புரியாதா சிரிப்பொன்று சிரித்தாய்...!
அந்த சிரிப்பில் எனக்கு தெரிந்தது...!!
அழகாய் உன் ஆயிரம் முகங்கள்...

----அனீஷ் ஜெ...

18 May 2017

கொஞ்சம் நட்பு... நிறைய காதல்...

கொஞ்சம் நட்பு... நிறைய காதல்...


காதலெனும்
கதவுகளை திறந்து
காத்துக்கிடக்கிறேன் நான்...!

நட்பெனும்
நம்பிக்கையை சுமந்தே
நீ நுழைகிறாய் என்னுள்...!

வெறும் நட்பெனும் - உன்
வெள்ளை உடையில் - என்
வன்காதல் துளிகளை
வண்ணமாய் அள்ளி வீசுவது - உன்
விழிகளில் விழவில்லை...!

என் பெரும் மவுனத்திற்கும்,
ஏமாந்த முகத்திற்கும்
காரணம் காதலென்பதை
கண்டிபிடிக்க தவறுகிறாய் நீ...!

உன்னிடம் சண்டையிடுவது
பிடிக்குமென்கிறாய்...!
எனக்கோ உன்னை முத்தமிட
பிடித்திருக்கிறது...!!
என் மனமோ உனக்கின்னும்
பிடிபடவில்லை...!!!

என் மீதான உன் நட்பில்
என் காதலை கொஞ்சம் கலக்க
என்ன வழியென்பது
எனக்கின்னும் தெரியவில்லை...!

சொல்லாத என் பொல்லாத காதல்
சொர்க்கத்திலும் சேராதென்கிறார்கள்...!
நான் சொல்லாமலிருப்பதே
நட்பு நரகத்தில்கூட பிரியாமலிருக்கத்தான்...

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Thiruvasugi.

16 May 2017

சுவை !

சுவை !


மண்ணாய் உலர்ந்த மனதில்
விதையாய் விழுகிறது...!
உன் நினவுகள்...!

நீர் விடாமலே
வேர் விட்டு  மெல்ல
முளைக்க முயற்சிக்கிறது...!

களையெனெ நினைத்து
களைய நினைத்தாலும்,
இரும்பில் பட்ட காந்தமாய்
இறுகி பற்றியே இழுக்கிறது...!

முளை கிள்ளியே
முறிக்க முயற்சித்தாலும்,
கிளை தள்ளி மீண்டும்
கிடுகிடுவென தளிர்க்கிறது...!

அரும்பாக ஆரம்பித்து
மொட்டாக இதழ் விட்டு
மலராக மலர்கிறது அது...!

உணர்ச்சியென்னும் பட்டாம்பூச்சிகள்
உட்கார்ந்து மலரில் கொஞ்சம்
இதழ்களை பிரித்து
இரைதேன் தேடுகிறது...!

பட்டாம்பூச்சிகளே...!
பறந்துசென்றுவிடுங்கள்...!!

இந்த மலர்களில் சுரக்கும் தேன்களில்
இனிப்பு சுவையில்லை...!
கடலின் உப்பு சுவைக்கும்
கண்ணீரின் சுவை மட்டுமே...!!

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Meethu.

9 May 2017

சுதந்திரமானவைகள் !

சுதந்திரமானவைகள் !


வெள்ளை மேகங்களை
வெறுங்கையால் பிளந்தேன்...!

வீட்டு முற்றத்தின் நிலத்தடியில்
விலை மதிப்பில்லா புதையல் எடுத்தேன்...!

தொலைபேசியில் கோபமூட்டியவனை
தொலைவில் இருந்தே அடித்தேன்...!

இன்று கண்ட அழகி ஒருத்தியை
இரவில் ஒருமுறை புணர்ந்தேன்...!

இரு நிமிட நேரத்தில்
இருபது தேசங்கள் பறந்தேன்...!

சச்சினின் சாதனைகளனைத்தையும்
சத்தமில்லாமல் உடைத்தேன்...!

தவறுகளுக்கு இங்கு
தண்டனைகளில்லை...!
கைகட்டி நிற்கும்
கட்டுப்பாடுகளில்லை...!

எத்தனை சுதந்திரமானவைகள்...!
எல்லாவற்றையும் சாத்தியமாக்கும்
என் கற்பனைகள்...

----அனீஷ் ஜெ...

28 Apr 2017

வெயில் காலம் !

வெயில் காலம் !


வெயிலுக்கும் நீ
குடைபிடித்தே நடக்கிறாய்...!
இல்லையென்றால்
வெளியில் நீ வரும்போதெல்லாம்
உன் முகம் கண்டே
உருகி சூரியன் மழையாகியிருக்கும்...!!

வெட்டவெளியில் விழும்
வெயில் நேர உன் நிழலில்தான்,
சூரியன் சிலசமயம் வந்தமர்ந்து
சூட்டை தணித்துச்செல்கிறது...!

வெயிலில் நீ நடக்கையில் - உன்
நெற்றியில் உருண்டு
வெறும் பூமியில் விழுகிறது
வியர்வை துளியொன்று...!
பெருமழை பெய்ததைப்போல்
குதூகலிக்கிறது பூமி...!!

வெயிலில் கொடுஞ்சூட்டை - நீ
விசிறியால் வீசி தணிக்கிறாய்...!
உருவாகும் காற்றோ
உன் தேகம் தொடும்போதெல்லாம்
சூடாகிப்போகிறது...!

உச்சி வெயில் சூரியனை
உன் வெறும் கண்களால்
அன்றொருநாள் பார்த்தாய்...!
தாங்கமுடியாதா ஒளியால்
தன் விழி மூடிக்கொண்டது...!!
சூரியன்...

----அனீஷ் ஜெ...

25 Apr 2017

சில காலைகள் !

சில காலைகள் !


ஐந்து மணிக்கே
வெளிச்சம் பிரசவிக்கும்
சில காலைகள்...!

ஏழு மணிக்கும்
இருளின் மிச்சம் சுமக்கும்
சில காலைகள்...!

அண்டார்டிக்கா குளிரை
தேகத்தில் போர்த்தும்
சில காலைகள்...!

சூரியனின் அக்னியை
சூடாய் தெளிக்கும்
சில காலைகள்...!

அதிகாலை நேரத்தில்
அம்மாவின் குரல் கேட்கும்
சில காலைகள்...!

அசந்து தூக்கும் வேளை
அலாரம் கத்தும்
சில காலைகள்...!

எல்லா காலைகளும்
ஏதோ ஒரு விதத்தில்
மாறுபட்டே விடிகிறது...!

நான் மட்டும்
மாற்றமேதுமில்லாமல் எழுகிறேன்...!
உன் நினைவுகளோடு...

----அனீஷ் ஜெ...

5 Apr 2017

மது !

மது !


கண் பட்டவை
கை தொட்டவையென
பார்த்தவை அனைத்தையும்
பறித்துக்கொண்டேன்...!

நிராகரிக்க மனமில்லாமல்
நிரம்பி வழியும்வரை
சேர்த்து மெல்ல
சேகரித்தேன்...!

அவையனைத்தையும்
அள்ளியெடுத்து நான்
கசக்கி பிழிந்து
கலந்தெடுத்தேன்...!

பெரும் மதிப்பு கொண்ட
பெட்டியொன்றில்
உருவாகிய கலவையை
ஊற்றி வைத்தேன்...!

அப்பெட்டியை நான்
அப்படியே தூக்கி
எவருக்கும் தெரியாத
ஏதோ ஓரிடத்தில் புதைத்தேன்...!

தினமும் நான் அதை
திறந்து பார்த்தே
கலவையின் நிலமையை
கண்காணிகத்தேன்...!

ஆண்டுகள் பல கடக்கிறது....!

அழிந்து போகுமென நான்
அவதானித்தது இங்கே
தவறாய் போவதற்கான
தடம் தெரிகிறது....!

கெட்டுப்போகவும்
கரைந்து தீரவும் செய்யாமல்
விடியும் நாளொன்றுக்கும்
வீரியமே கூடுகிறது...!

இன்னும் நான்
இதயப்பெட்டிக்குள் ஊற்றி
உயிரில் புதைத்திருக்கிறேன்...!
உன் நினைவென்னும் மதுவை...

----அனீஷ் ஜெ...

22 Mar 2017

அவள்தானா நீ...

அவள்தானா நீ...


ஹாய்...!

நிமிடங்கள் சிலதாய்
நீ வரவேண்டி காத்திருந்து
எதிரில் வந்த உன்னிடம்
ஏதேதோ பேசுவதற்காய் மன்னிக்கவும்...!

ஒரேயொரு கேள்வியின்
ஒருவார்த்தை பதிலொன்றை
ஒருமுறை சொல்லிவிடு நீ...!

அழகான பெண்ணொருத்தியின்
ஐந்து விரல்களையும்,
இறுக்கி பிடித்துக்கொண்டு
இரவில் நடப்பதாய் கனவொன்று கண்டேன்...!

நல்ல பொண்ணாதான்
நாங்க உனக்கு கட்டிவைப்போமென
அம்மா ஒருமுறை சொன்னதாய் ஞாபகம்...!

உனக்காக பிறந்தவள்
எங்க இருக்காளோ இப்ப என
தோழியும் சிரித்தாள்...!

உன்னை கல்யாணம் செய்து
காலம்பூரா கஷ்டப்படபோறவ யாரோவென
நண்பர்களின் கூட்டமும் கிண்டலடித்தது...!

இந்த வருடம் காதல் கைகூடுமென
கலாண்டரின் ஆண்டு பலனும்
சத்தியம் செய்யாத குறையாய் சொல்கிறது....!

பதில் சொல்லிவிட்டு போ...!

அத்தனைபேரும் இப்படி சொல்லும்
அவள்தானா நீ...

----அனீஷ் ஜெ...

24 Feb 2017

அவளும்... அந்த மலரும்...

அவளும்... அந்த மலரும்...


பெரும் இரவில் பெய்த
பனித்துளி மழையில்
பாதி நனைந்திருந்தது
அதிகாலை பூத்த
அழகான அந்த மலர்...!

நீண்ட இரவு விடிந்ததும்,
நீ வந்து தொட்டுச்சென்றாய்
முற்றத்தின் ஓரத்தில்
முளைத்து நின்ற அந்த மலரை...

உன் விரல் பட்டுச்சென்றபின்
மலரிதழ்களில் மிச்சமிருந்த
பனிநீர் துளிகளெல்லாம்
வண்டுகள் வந்துண்ணும்
தேன்துளிகளாயிருந்தது...!

----அனீஷ் ஜெ...

30 Jan 2017

கலவர பூமி !

கலவர பூமி !


வரைமுறை இல்லா
வன்முறை தொடங்குகிறது...!

அமிலங்களை
அள்ளி வீசியே
சிறு துளியொன்று
சிதறி வழிகிறது...!

கண்ணாடியெல்லாம்
கல்லெறிபட்டு
பல துகள்களாய்
பாதையில் உடைகிறது...!

எரிகின்ற தீயில்
எறிகின்ற நீரும்
ஆவியாகாமல்
அக்னியாய் படர்கிறது...!

துப்பாக்கிகளெல்லாம்
துப்பும் குண்டுகளில்
கனத்த புகையும்
கடும் சத்தமும் தெறிக்கிறது...!

என் மனம்
எப்போதும்போல் இப்படி
கலவர பூமியாகிறது...!
என் தெருவில்
நீ நடந்து செல்லும்போது...

----அனீஷ் ஜெ...

25 Jan 2017

எதிர்காலம் !

எதிர்காலம் !


ஜோசியக்காரனால்
ராசி நட்சத்திரம் சேர்த்து,
கட்டம் போட்டு பார்த்தும்
கணிக்க முடியவில்லை...!

இருகைகளையும் விரித்து
இதய ரேகை தொடங்கி,
இறுதி ரேகை வரை
கூர்ந்து ஆராய்ந்தும்
கூற முடியவில்லை...!

பிறந்த தேதியும்,
பின்பிட்ட பெயரும்
கழித்து கூட்டி
கணக்கு செய்தும்
கண்டுபிடிக்க இயவில்லை...!

இத்தனை செய்தும்
தெரிந்துகொள்ள முடியாத
என் எதிர்காலம்,
இப்போதென் கண்முன்னே
விரிகிறது...!
நான் உன்னை
பார்க்கும் பொழுது...

----அனீஷ் ஜெ...

16 Jan 2017

கடல் !

கடல் !


கடற்கரை மணல்பரப்பில்
கால்கள் பதித்து சென்றாய் நீ...!
கையொப்பமிட்டதாய் நினைத்து - அதை
கட்டியணைத்தது கடல் அலை...!

ஆழமில்லா கடல் நீரில் நான் கால் வைத்தேன்...!
அலை அடித்தது....!!
அதே நீரில் நீ கால் வைத்தாய்...!
அலை ஆரத்தழுவியது...!!

கடல் நடுவில் உருவான
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வன்புயலாக மாறலாமென
வானொலிபெட்டி சொல்கிறது...!
கடற்கரை பக்கம் வந்து செல்...!!
கடும்புயல் தென்றலாகும்
காட்சிகள் நிகழட்டும்...!!!

நீண்டநேரம் கடற்கரையில்
நின்றுவிடாதே நீ...!
மணற்பரப்பின் மீது
மலரொன்று முளைத்ததாய்
காண்பவரெல்லாம்
கருதப்போகிறார்கள்...!

உன் காலடி மணலை
அள்ளிச்சென்ற அலைகள்
ஆழ்கடலில் எங்கோ
அவைகளை சேகரித்து வைத்தன...!
அவையெல்லாம் இப்போது
ஆழ்கடல் முத்தானது...!!

----அனீஷ் ஜெ...