என்னை சுமந்துகொண்டிருந்த
ஒரு நாற்காலியின் மேல்
நான் காத்திருந்தேன்...!
என் பேருந்திற்காய்...
கைக்கடிகாரத்தில்
மணியும்,
காணும் இடமெல்லாம்
மனிதர்களும்,
வேகமாய் பயணித்துக்கொண்டிருந்தனர்...!
என் எதிரே - ஒரு
ஒற்றை நாற்காலியில்
ஒரு தாயும் குழந்தையும்...!
கையில் ஒரு கறுப்பு பை...!
முகமெல்லாம்
கவலையின் ரேகைகள்...!
சோகத்தின் துளிகளை
மனதில் எங்கோ
மறைத்து வைத்திருப்பதன்
அடையாளங்கள்
அந்த தாயின் முகத்தில்...
கவலையே இல்லாத முகம்...!
குறும்பு செயல்கள்...!
இரண்டு பற்களுக்கிடையில்,
இரண்டு பற்கள் இல்லாததன்
இடைவெளி...!
அந்த பெண் குழந்தைக்கு,
ஐந்து வயதிருக்கும்...
அம்மாவை சுற்றியே
அவள் ஓடியாடிக்கொண்டிருந்தாள்...!
அவள் குறும்புகளை
ரசித்தபடியே நான்...!!
அவளை பார்த்துக்கொண்டிருந்த
என்னைப்பார்த்து - அவளோ
அடிக்கடி சிரிக்கவும் செய்தாள்...!
அம்மாவை இழுப்பதும்,
ஆகாயத்தை பார்த்து சிரிப்பதும்,
அடிக்கடி குதிப்பதும்,
அம்மா முறைத்ததும்
அமைதியானதுபோல் நடிப்பதும்,
அத்தனையும் என்னை
அவளை ரசிக்க வைத்தது...!
பையிலிருந்து எதையோ எடுத்து
தூரத்திலிருந்த என்னிடம் நீட்டினாள்...!
தூரத்திலிருந்தே நான் கைநீட்ட,
சிரிப்புடன் கையை
பின்னால் இழுத்துக்கொண்டாள்...!!
அங்கிருந்து அவள்
என்னிடம் ஏதோ பேசுவது போலிருந்தது...!
பேருந்து வருவதற்கு முன்
ஒருமுறை அவளது
குறும்பு பேச்சை கேட்டே ஆக வேண்டும்...!
தெரியாத என் குரல் கேட்டு,
புரியாமல் பயப்படுவாளா
யோசித்துக்கொண்டே அவளருகில் சென்றேன்...!!
நான் அருகில் சென்றதும்
அமைதியான அவளிடம்,
உன் பெயரென்ன என கேட்டேன்...!
கைகளை பிசைந்துகொண்டே
அவள் அம்மா முகத்தையும்
என் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்தாள்...!!
பதில் இல்லை...!
இன்னொருமுறை கேட்பதற்கு முன்
அவள் அம்மா என்னிடம் ஏதோ சொன்னாள்...!
என் பேருந்து வந்து விடவே
நான் டாடா சொல்லிவிட்டு பயணமானேன்...!
ஆனாலும் எனக்கும்
இன்னும் நம்ப முடியவில்லை...!!
அந்த குட்டி பெண்ணுக்கு
காதும் கேட்காது,
பேசவும் வராது என்று
அவள் அம்மா சொன்னதை...
கவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal
இத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.