28 Nov 2011

கல்லூரியில் இன்று...

கல்லூரியில் இன்று...


கல்லூரிக்கே இன்று
வராமலிருந்திருக்கலாம் என
கவலையோடு
நினைத்துக்கொள்கிறேன்...!

கலகலவென கதைபேசி,
அருகிலே இருக்கும்
அன்பு நண்பர்கள் கூட - இன்று
அன்னியமாய் தெரிகிறார்கள்..!

அறுசுவையில் உண்டாலும்,
மதிய உணவில்
ஏதோ ஒன்று குறைவதாய்
என் மனசு பிதற்றுகிறது...!

தூக்கம் வந்தாலும்
வகுப்பறையில் தூங்காதவன்,
தூக்கம் வராமலே - இன்று
தூங்க முயற்சிக்கிறேன்...!

எனக்கு பிடித்த
கணக்கு வாத்தியார் முதல்,
என்னை பிடிக்காத
கம்ப்யூட்டர் ஆசிரியை வரை
அனைவரும் இன்று
எதிரியாய் தெரிகிறார்கள்...!

இன்றைய பகல்பொழுது
வழக்கத்தை விட
நீண்டது போல்
ஒரு உணர்வு...!

இப்போதாவது நீ
புரிந்துகொண்டாயா?

நீ கல்லூரிக்கு வராத நாட்களில்
வெற்றிடம் விழுவது,
நீ அமரும்
கடைசி பெஞ்சில் மட்டுமல்ல...!
என் இதயத்திலும்தான் என்று...

----அனீஷ் ஜெ...

25 Nov 2011

காதல் எதிரி !

காதல் எதிரி !


கல்லூரியில்தான்
இவர்களின் காதல்
ஆரம்பமாயிருக்கலாம்...!

இரவு முழுவதும்
இவள் அவனுடன்
செல்போன் வழியே
காதல் வளர்த்திருக்கலாம்...!

சினிமா...!
சிலசமயம் கடற்கரை..!!
இங்கெல்லாம் இவர்கள்
ரகசியமாய்
சுற்றி திரிந்திருக்கலாம்...!

காதல் சத்தியங்கள்...!
திருமண வாக்குறுதிகள் என
இவர்களில் காதல்
இன்னும் வலிமையாகியிருக்கலாம்...!!

அன்று...
சமையலறையில்
சமைத்துக்கொண்டிருந்த
அம்மாவிடம்
அவள் சத்தமில்லாமல் சொன்னாள்...!
அம்மா நான் ஒருவனை
காதலிக்கிறேன் என்று...

அன்று மாலை...
காதலனோ
காதலியுடன் சேர நடத்தும்,
கடைசிகட்ட போராட்டத்தை
தொலைக்காட்சி சினிமாவில்
கவலையோடு
பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் - என்
காதல் மனைவி சோகத்துடன் சொன்னாள்...!
உங்க பொண்ணு
யாரையோ காதலிக்கிறாளாம் என...

அடுத்த நொடியே
கோபத்துடன் கத்தினேன் நான்...

என்றோ ஒருநாள்
என் காதல் மனைவியை
கைப்பிடிக்க
காதலை புனிதம் என்றவன்,
இப்பொழுது
இந்த கோப நொடிகளில்,
என் மகளின் காதல் உடைக்கும்
காதல் எதிரியாய்
மாறிக்கொண்டிருந்தேன்...

----அனீஷ் ஜெ...

23 Nov 2011

ஆறாம் விரல்...

ஆறாம் விரல்...


தீண்டிப்பார்க்கும் மனது...!
தூண்டில்போடும் வயது...!!

தொட்டுவிட்டதாலென்னவோ
விட்டுவிட மனமில்லை...!

உணர்ச்சிகளுக்கு
உணவு கொடுக்க,
விரல்களுக்கிடயில்
இருப்பிடம் கொடுத்தேன்...!

இன்பத்தின் இருப்பிடத்தை
பற்ற வைத்ததும்,
இரத்தம் சூடேறியது...!

உயிர் மூச்சு
உள்ளே வர,
வெள்ளை மழை
வெளியேறியது...!

ஏதோ சுகத்திற்குள்
சுருண்டுகொண்டேன்...!

ஆறாம் விரலாய் இது
அடிக்கடி முளைக்க,
அதற்கு நானும்
அடிமையாகி போனேன்...!

விளைவுகளை அறிய
விருப்பமில்லாமல்,
இன்றும்
பற்ற வைத்துக்கொண்டிருக்கிறேன்...!
என் ஆயுளை அபகரிக்கும்
இந்த சிகரெட்டை...

----அனீஷ் ஜெ...

21 Nov 2011

இருட்டு முகம் !

இருட்டு முகம் !


என் சிறுவயது முதலே
நான் கேட்கத்தொடங்கிய
அந்த எதிர்வீட்டு குரல்...!

ஒரே பள்ளிக்கூடம்..!!
எதிரெதிர் வீடு...!!
என் தங்கையின் தோழி...!
அத்தனையும் இருந்தும்,
அந்த சிறு வயதில்
அந்த குரலுக்கு சொந்தக்காரி
என்னிடம் பேசியதே இல்லை...!

அவள் என்னிடம்
பேசவே பயப்பட்டிருக்கலாம்...!

வருடங்கள் பல தாண்டின...!

எதிர்வீட்டிலிருந்து
எப்போதும் கேட்கும்
அந்த குரல்
அடிக்கடி காணாமல்போய்கொண்டிருந்தது...!

தங்கையிடம் கேட்டபோது,
அவள் கல்லூரி போவதாகவும்,
விடுதியில் தங்கி விட்டு
விடுமுறை நாட்களில் மட்டும்
வீடு வருவாதாகவும் சொன்னாள்...!

காதுகளை சுற்றிவரும்
துருதுருவென்ற அந்த குரலை
கேட்க வேண்டும் போலிருந்தது...!

அன்றொருநாள்...
அவள் விடுமுறைக்கு
வீடு வந்திருந்தாள்...!

சட்டென
என் முன்னே வந்த அவள்
என் பெயரை அழைத்து
எப்படியிருக்கிறாய் என கேட்டாள்...!

இத்தனை ஆண்டுகளில்
இதுவரை அவள்
இப்படி என்னிடம் கேட்டதில்லை...!

அன்று என்னிடம்
அவள் நிறையவே பேசினாள்...!

இப்பொழுதெல்லாம்
விடுமுறைக்கு வரும்போது
நீண்ட நேரம் என்னிடம் பேசுகிறாள்...!

சில சமயங்கள் - என்
விரல் கோர்த்தபடி
வீதியில் நடக்கிறாள்...!

மனதிற்குள் மகிழ்ச்சி...!

தட்டுத்தடுமாறி விழுந்த
தடுமாற்றத்தின் வலிகள்...!
அம்மா அப்பா முதல்
அத்தனை பேரையும்
இருட்டோவியமாய்
உயிருக்குள் வரைந்த
உணர்வின் வலிகள்...!!

இந்த வலிகள் அனைத்தையும்
தாங்க பழகிக்கொண்ட என் மனது,
இப்பொழுது முதன்முதலாய்
இவள் முகம் காண ஏங்குகிறது...!

என் மனதிற்கு
எப்படி நான் புரியவைப்பது...?
குருட்டு மனிதன் எனக்கு
இவள் முகமும்
இருட்டாய்தான் தெரியும் என்பதை...

----அனீஷ் ஜெ...

18 Nov 2011

அவள் அழகி !

அவள் அழகி !


அவளை யாரும்
அழகியென்று சொல்லமாட்டார்கள்...!

முகத்தில் முகப்பருக்களின்
முதிர்ச்சி புள்ளிகள்...!

கவர்ச்சி இல்லாத - சின்ன
கண்கள் இரண்டு...!

களைத்து போனது போன்று
கறுப்பு நிற தேகம்...!

ஆர்ப்பாட்டமில்லாத
அப்பாவித்தனமான தோற்றம்...!

ஆனாலும்,
அவளை எனக்கு பிடித்திருந்தது...!

உங்களுக்கு என்னை
உண்மையிலே பிடித்திருக்கிறதா என
அவள் என்னிடம்
ஆயிரம் முறை கேட்டிருப்பாள்...!

பலமுறை பாசத்துடன்
பதில் சொல்லி விடுகிறேன்...!
சிலசமயம் கோபத்துடன்...

அன்று...
புதிதாய் வாங்கிய
புத்தாடையை கட்டிக்கொண்டு
என்னிடம் கேட்டாள்
எப்படியிருக்கிறது என்று...

நீ எப்போதும் அழகுதான்...!
இன்று
இன்னும் கொஞ்சம் அழகு என்றேன்...!!
அவளை திருப்திபடுத்த...

மெல்லிய வெட்கத்துடன் - அவள்
சின்னதாய் சிரித்தாள்...!

அவளின் அந்த
சந்தோஷ புன்னகையில்,
எனக்கு மட்டும் - அவள்
அழகியாக தெரிந்தாள்...

----அனீஷ் ஜெ...

16 Nov 2011

நான் உன்னை நம்புகிறேன்...

நான் உன்னை நம்புகிறேன்...


இமை மூடினாலும்,
கனவில் தேடினாலும்
காண்பது உன் முகமே என்கிறாள்...!

உனை பிரிந்தால்
உயிர் பிரியுமென
ஏதேதோ உளறுகிறாள்...!

யார் எதிர்த்தாலும்,
காதலை எதிர்த்து
போர் தொடுத்தாலும்,
உன்னிடமே கைதியாவேன் என
வசனம் பேசுகிறாள்...!

ஆயுள் முடியும் வரை கூட
அன்பே உனக்காய் காத்திருப்பேன் என
அடிக்கடி சொல்கிறாள்...!

தூக்கத்தை
தொலைத்தேன் என்கிறாள்...!
தூரத்திலிருந்தாலும்
நினைப்பேன் என்கிறாள்...!!

அவள் என்னிடம் சொல்லும்
அத்தனையும்
பொய்யென தெரிந்தும்,
அவளிடம் நான்
ஒற்றை பொய் மட்டுமே சொல்கிறேன்...!

“நான் உன்னை நம்புகிறேன்...”

----அனீஷ் ஜெ...

13 Nov 2011

இதயம் விற்பனைக்கு...

இதயம் விற்பனைக்கு...


ஆங்காங்கே
வலியின் உணர்வுகள்...!

சில இடங்களில்
ஏமாற்றத்தின்
அடையாளங்கள்...!

துடிப்பதற்கு மட்டுமல்ல...!
அழுவதற்கு கூட
இதற்கு தெரியும்...!

எல்லாவற்றையும்
எளிதில் நம்பிவிடும்...!
ஏமாற்றங்களை கூட
தாங்கிவிடும்...!!

நேசிக்கவும்,
நேசிப்பவர்களுக்கும் சேர்த்து
சுவாசிக்கவும் தெரியும்...!

நீங்கள் தரும்
அன்பு மட்டுமே - இதன்
அதிகபட்ச விலை...!

திருப்பி தரமாட்டோம் என்ற
உத்திரவாதத்துடன்,
யார் வேண்டுமானாலும்
உரிமையாக்கி கொள்ளலாம்...!

என் இதயம் விற்பனைக்கு...

----அனீஷ் ஜெ...

11 Nov 2011

இன்று ஒன்று 11/11/11

இன்று ஒன்று 11/11/11


உன்
ஒற்றை சிரிப்பில்
ஓராயிரம் முறை
செத்துப்பிழைக்கிறது...!
என் ஒற்றை இதயம்...

ஒருகோடி பூக்களை
ஒன்றாய் தூவும் - உன்
இதழ் புன்னகையை - நான்
ஒன்றாய் சேர்த்து
என் நெஞ்சினோரம்
ஒரு மலர்வனமாய்
கோர்த்து வைக்கிறேன்...!

ஒற்றையடி பாதையில்
ஒரே குடையின் கீழ் - நாம்
ஒன்றாய் நனையும் போது நமக்குள்
ஒருகோடி சூரியனின் வெப்பம்...!

உன் ஒரு முத்தத்திற்காக
ஒருவருக்கும் தெரியாமல்
ஒருகோடி யுத்தம் செய்கிறது...!
என் ஒற்றை மனது...

ஒரு சின்ன கவிதை சொல்லி,
ஒரு கையால் உன் கன்னம் கிள்ளி,
ஒவ்வொரு நிமிடமும்
உனக்குள் நிறைகிறேன் நான்...!

ஓராயிரம் ஜென்மம்
நான் கொண்டாலும்,
உலகமே ஒருநாள்
உடைந்து துண்டானாலும்,
என் ஒற்றை உயிரும்
ஒரே காதலும் - எனது
ஒற்றை ஜீவன் உனக்கே...

----அனீஷ் ஜெ...

9 Nov 2011

மறந்துவிட சொன்னவளுக்கு...

மறந்துவிட சொன்னவளுக்கு...


நீ மறந்துவிட சொன்ன நொடியின்,
மரண வலியின் நினைவுகளுடன்
இன்னும் நான்...!

உன் ஞாபகங்களை
உதறித்தள்ள நினைக்கும்
ஒவ்வொரு நொடியிலும் - நான் தான்
ஒரேயடியாய் தோற்றுப்போகிறேன்...!

உன்னை மறப்பதற்காக - நான் உன்னை
நினைக்க மறுக்கும் நிமிடங்களில்,
ஆக்ஸிஜனில் கூட
அமிலத்தை உணர்கிறேன்...!

இமைகளை
இறுக்கி அடைத்தாலும்,
இதயத்தை
இரண்டு துண்டாய் உடைத்தாலும்
நீ தான் தெரிகிறாய்...!

மறந்துவிட சொன்னவளே - என்னை
மன்னித்துவிடு...!
கடைசியாய் நீ என்னிடம்
விரும்பிக்கேட்டதை - நான்
விரும்பினால் கூட - என்னால்
நிறைவேற்ற முடியாது...!

ஏனென்றால்...
உன்னை நான்
மறப்பதென்பது - நான்
இறக்கும்வரை சாத்தியமில்லை...!

----அனீஷ் ஜெ...

7 Nov 2011

உணர்ச்சிப்பிழை !

உணர்ச்சிப்பிழை !


தவிர்க்க முடியாத உணர்ச்சிகள்...!
தடுமாறிப்போன நிதானம்...!!

பாதங்கள் பயணிக்க தொடங்கின...!
அவளின் வாசல் தேடி...

முதுகுப்பரப்பில் முத்தமிட்டு
உடலோடு உடல் உரசி
சூடேற்றிக்கொண்டேன் என்னை...!

எல்லை மீறியபோதும்
எதிர்க்கவில்லை அவள்...!
புரிந்துகொண்டேன் அவளை...!!
தொழிலுக்கு
துரோகம் செய்யாதவள் அவள்...

மோக மழை
மேகமாய் பெய்ய,
தாகம் தணித்தது...!
என் தேகம்...

காசுகொடுத்து
கை கழுவிவிட்டு
புறப்பட்டேன் அங்கிருந்து...!
என்னுடன் வந்தது
எய்ட்ஸ்...

----அனீஷ் ஜெ...

5 Nov 2011

கனத்த மனதும்... கண்ணீர் துளியும்...

கனத்த மனதும்... கண்ணீர் துளியும்...


நீ என் பெயர் சொல்லி
அழைப்பதுபோல் ஒரு உணர்வு...!
பாதி தூக்கத்திலும்
பதறியடித்து எழுகிறேன்...!

காலையில் கண்விழித்ததும்
நெஞ்சோரம் ஒட்டிக்கொள்ளும்
உன் நினைவு துளிகள்
கசக்கி பிழிகின்றன...!
என் உயிரை...

நம் காதல் கணங்களும்,
நம் கைகோர்த்த பயணங்களும்,
அழியாத சுவடுகளாய்
அடிநெஞ்சில் பதிந்துகிடக்கின்றன...!

கங்கையாய் ஊற்றெடுக்கும்
கண்ணீர்துளிகள் - என்
கன்னம் தொடும்போது - நான்
கனத்த மனதோடு நினைத்துக்கொள்கிறேன்...!

நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்...!
என் கண்ணீர்துளிகளாவது
மிஞ்சியிருக்கும்...!!

----அனீஷ் ஜெ...