மாலை நேரம்...!
மணி ஐந்து...!!
கரை மீது கொண்ட
காதலால்
கடற்க்கரையை
கட்டியணைத்துக் கொண்டிருந்தது...!
கடல் அலை...
அந்த கடற்க்கரையோரம்
அவளுக்காய் காத்திருந்தேன்...!
நான்...
எப்போதும்
எனக்கு முன்னே வந்து
எனக்காக காத்திருப்பவளை
இன்று ஏனோ -நான் வந்து
இருபது நிமிடமாகியும் காணவில்லை...!
யோசித்துக்கொண்டிருந்த
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்
அவள் வந்தாள்...!
முழுநிலவாய் மின்னும் -அவள்
முகத்தில் இன்று
பிறை நிலவாய் ஏதோ
குறை தெரிந்தது...!
என்
பக்கத்தில் அமர்ந்து
பல கதைகள் சொல்பவள்
இன்று ஏனோ
இடைவெளி விட்டு நின்றாள்...!
எல்லாமே
எனக்கு புதிதாயிருந்தது...!
அவள் முகத்தையே
பார்த்து நின்றேன்...!
அவள் கண்களுக்குள்
கண்ணீர் துளி...!
என் இதயம் இப்போது
மவுனமாய் அழுதது...!!
கண்ணீர் துளிகளுக்கு
காரணம் கேட்டேன்...!
மவுனமே பதிலாய் கிடைத்தது...!!
இன்னொருமுறை கேட்டேன்...!
இப்போதும் மவுனமே பதிலானது...!!
அரைமணி நேரம்
அதே மவுனம்...!
அதற்க்குள்
ஆயிரம் முறை செத்துப்பிழைத்தது....!!
என் இதயம்...
அரைமணி நேரம் கழிந்து
அவள் வாய் திறந்தாள்...!
என்னை நீ
மறந்துவிடு என்றாள்...!
மறுத்தேன் நான்...!!
நீதான் என் உயிர் என்றவள் -இப்போது
நீங்கிப்போக சொல்கிறாள்...!
மரணம் உன் மடியில் என்றவள் -இப்போது
மறந்து போக சொல்கிறாள்...!!
இதயத்திற்க்குள்
இடி தாக்கியது போல்
இப்போது எனக்கு உணர்வு...!!
என்
உதடுகளோ பேசத்தெரியாமல்
ஊமையாகி நின்றது...!
கண்கள்
கண்ணீர் துளிகளாய் பேசியது..!!
விளக்கம் சொல்ல
விரும்பவில்லை அவள்...!
விலகி நடக்க தொடங்கினாள்...!!
தூரத்தில் அவள்
புள்ளியாய் மறையும் வரை
அவளை பார்த்து நின்றேன் நான்...!
என் கால்களோ
எனக்கே தெரியாமல்
ஆழ்கடலை நோக்கி
பயணமானது...!
அன்றிலிருந்து இரண்டாவது நாள்...
அவள் வீடு...
அன்றைய நாளிதளை
அவள் புரட்டிக்கொண்டிருந்தாள். ..!
அதன் ஆறாவது பக்கம்...
கடற்கரையோரம்
அடையாளம் தெரியாத
ஆண் பிணம்...!
அருகில் என் புகைப்படம்...!!
அலறினாள் அவள்...!!!
பார்த்தவள்
பதறியடித்துக்கொண்டு ஓடினாள்...!
ஊரே கூடியிருக்க
உயிரில்லாமல் கிடந்தேன் நான்...!
மூச்சு நின்று
மூன்று நாட்க்களாயிருந்தது...!!
அரைமணி நேரத்தில்
அங்கு வந்தாள் அவள்...!
உயிரில்லாத என்னை கண்டு -அவள்
உடலே நடுங்கியது...!
கட்டிப்பிடித்து
கதறினாள் அவள்...!!
ஆசையிருந்தும்
ஆறுதல் சொல்ல முடியாமல் நான்...!
மரித்துக்கிடந்த என்னிடம்
மறந்துவிட சொன்னதற்க்காய்
மன்னிப்பு கேட்டாள்..!
என்னை கட்டி அணைத்தப்படி
விட்டுப்போகாதே என அழுதாள்...!
எனக்கே தெரியாத
ஏதோ ஓரிடத்திலிருந்து
நடப்பதையெல்லாம்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான்
எனக்குள் நினைத்துக்கொண்டேன்....!
ஓ... கடவுளே...!
இந்த ஜென்மம் முழுவதும்
இவளோடு வாழ
நான்
உயிரோடிருந்திருக்க கூடாதா....
----அனீஷ் ஜெ...