29 Aug 2011

சொர்க்கம் கண்முன்னே...

சொர்க்கம் கண்முன்னே...


வானத்தின் வாசற்கதவுகள்
என்னை வரவேற்க
திறந்திருந்தன...!

கடவுள்
கண்ணயராமல்
கடமை செய்துகொண்டிருந்தான்...!

கோடி மின்னல்
கூடியதுபோல் ஒளி...!

ஆக்ஸிஜனோ
அத்தராய் கமகமத்தது...!

எமனை தேடிப்பார்த்தேன்...!
எங்கேயும் காணவில்லை...!!
எங்கேயோ கேட்ட கதை பொய்யானது...!!!

தண்ணீரில் முகம் பார்த்தேன்...!
தங்கத்தில் கால் பதித்தேன்...!!

வான தேவதைகளோ
அழகிகளாய்
அணிவகுத்து நின்றனர்...!!

பூமி எங்கோ நின்று
சுழன்று கொண்டிருந்தது...!

சொர்க்கத்தின் அழகு
உண்மையிலே என்னை
சொக்க வைத்தது...!

வானத்தை விட்டு
வீடு திரும்ப
விருப்பமில்லை...!

திடீரென
ஏதோ ஒரு சத்தம்...!
சொர்க்கத்தின் கோயில் மணியா?

யோசித்துக் கொண்டிருக்கும்போதே
ஐந்துமணி அலாரம்
அலறியடித்துக்கொண்டிருந்தது...!

நான் அலறியடித்து எழுந்தேன்...!
தூக்கத்தைவிட்டு...

----அனீஷ் ஜெ...

24 Aug 2011

ஆச்சரியமானவன் நீ...

ஆச்சரியமானவன் நீ...


அன்று நான் பிறந்து
கண் திறந்தது முதல்,
இன்று வரை
என்னை உன் நெஞ்சுக்குள்
புதைத்து வைத்திருப்பவன் நீ...!

உன் கைவிரல் பிடித்துதான்
நான் நடக்க கற்றுக்கொண்டேன்...!
இன்று வரை
அப்படியே தொடர்கிறது...!
அந்த பயணம்...

எல்லாம் தெரிந்த
அற்புத மனிதனாய்,
என் கண்களுக்கு தெரிந்த
முதல் மனிதன் நீ...

என் மீது நீ வைத்திருக்கும்
அன்புக்கும் அக்கறைக்கும்
அடையாளமாகிவிடுகின்றன...!
உன் கண்டிப்புகளும்
சில தண்டிப்புகளும்...

உன் வார்த்தைகளை விட
உன் மவுனத்திற்கே
நான் அதிகம் பயப்படுகிறேன்...!

இருட்டிலே நடந்தால்
ஒளிகாட்டவும்,
இதுதான் சரியென்று
வழிகாட்டவும்,
உனக்கு நிகராய்
இங்கு எவருமில்லை...!

நீ எனக்கு
கற்றுகொடுத்தவைகளும்,
நீ எனக்காய்
விட்டுக்கொடுத்தவைகளும் ஏராளம்...!

அம்மா என்பவள்
பத்துமாதம் கருவில் சுமக்க,
மிச்ச காலம் முழுவதும்
இதயத்திலும்
தோள்களிலுமாய் சுமக்கும்,
அப்பா என்னும்
ஆச்சரியமானவன் நீ...

----அனீஷ் ஜெ...

20 Aug 2011

சின்ன கவிதைகள் - வருங்கால காதலி

சின்ன கவிதைகள் - வருங்கால காதலி

 

சிரிக்கிறாள்...!
ரசிக்கிறேன்...!!
முறைக்கிறாள்...!
எதிர்க்கிறேன்...!!
நான் வலைவிரித்து காத்திருக்கும்,
என் வருங்கால காதலி...


***********************************************************************************



ஒளியிலே தேடினேன்...!
ஒளிந்து கொண்டது...!!
இருட்டிலே தேடினேன்...!
இங்கே கிடக்கிறது...!!
நிலா...

***********************************************************************************



வயதாகிவிட்டதா
வானவில்...!
முதுகுக்குப்பின்னால்
முழுதாய் ஒரு கூனல்...

----அனீஷ் ஜெ...



16 Aug 2011

புரியாத புதிர் இது !

புரியாத புதிர் இது !


உயிருக்கும்
உணர்வுகளுக்கும் இடையேயான
உலகப்போர் இது...!

இரவில் சூரியன் சுடுவதும்,
பகலில் நிலா தெரிவதும்
இதில் மட்டுமே சாத்தியம்...!

பூமியில்
சொர்க்கம் தந்து செல்லவும்,
வாழ்க்கையை
நரகமாக்கி கொல்லவும்
இதற்கு மட்டுமே தெரியும்...!

உறக்கத்தை தொலைத்துவிட்டு
கனவுக்குள் தொலைவதும்,
இதயத்தை தொலைத்துவிட்டு
நினைவுகளோடு அலைவதும்,
சுகமான உணர்வாவது
இதில் மட்டுமே...

உளறல்களில் கூட
இசை சொட்டும் - இதில்
கிறுக்கல்கள் கூட
கவிதையாகி கத்தும்...!

மவுனங்களும் இங்கே
பேசிக்கொள்ளும்...!
வார்த்தைகள் சிலநேரம்
மவுனமாகி கொல்லும்...!!

சண்டைகள் கூட
முத்தத்தில் முடியும்...!
மோதிக்கொள்ளாமலே
இதயங்களும் உடையும்...!!

நெஞ்சோடு கொஞ்சம்
சிறகுகள் முளைக்கும்...!
பார்வைகளில் இதயம்
செத்து செத்து பிழைக்கும்...!!

தன்னந்தனியே சிரிக்கவும்,
தனிமையில் அழவும்,
இது மட்டுமே
கற்றுக்கொடுக்கும்...!

வானுக்கு கீழே,
பூமிக்கு மேலே - இந்த
பூகோள வெற்றிடத்தில்,
இதைபோன்ற
துன்பமுமில்லை..!
இதைப்போன்றதொரு
இன்பமுமில்லை...!

இந்த புரியாத புதிர்தான்,
காதல்...

----அனீஷ் ஜெ...

12 Aug 2011

மழைத்தூறல்கள் !

மழைத்தூறல்கள் !


சின்னதாய் மழைத்தூறல்...!
சிந்தி விழும் மழைத்துளியோ
சிரிப்பதுபோல் இருந்தது...!!
சிறு இரைச்சல்களுக்கிடையில்
சிட்டுக்குருவியின் குரல்...!!!

வடக்கு வானத்தில்
வானவில் மெதுவாய்
வளர்ந்திருந்தது...!

காற்று மோதியதாய்
கதை பேசியது மரங்கள்...!

குடையில்லை எனக்கு...!
சட்டைக்கு மேலே
பொட்டு வைத்தது மழைத்துளி...!!

தூறல் மழை இப்பொழுது
வானத்திலிருந்து வந்திறங்கிய
ஆறாய் உருமாறியது...!

மழையில் நனைந்தேன் நான்...!

ஏதோ நினைவுகள்
என் அடிநெஞ்சை நனைத்தது...!

இதயத்தின் ஓசை
இப்பொழுது
இடியையும் மிஞ்சியது...!

ரசிக்க தெரிந்த கண்கள்
ரகசியமாய் அழுதன...!
மழை துளிகளுக்கிடயில் மோதி,
மரித்துப்போனது கண்ணீர்துளிகள்...!!

முதுகுக்குப்பின்னால்
மெதுவாய் ஒரு
காலடி சத்தம்...!

கண்களை திருப்பினேன் நான்...!

யாரும் என்னை
பின்தொடரவில்லை...!
ஒற்றைகுடையில் - என்னோடு
ஒன்றாய் நடந்த,
அவளின்
நினைவுகளை தவிர...

----அனீஷ் ஜெ...

6 Aug 2011

குட்டி கவிதைகள் - நிலா நீ...

குட்டி கவிதைகள் - நிலா நீ...


தொலைதூர நிலவையும்,
தொடுவான அழகையும் - என்
தோள்கள் சுமக்கிறது...!
என் தோள்களில்
சாய்ந்திருக்கிறாள் அவள்...

***********************************************************************************


தொலைத்த பின்பும்,
தேட மனமில்லை...!
உன்னிடம் தொலைத்த
என் இதயத்தை...

***********************************************************************************


நிலவாய் நீ...!
உன் நினைவுகளால்
தினம் தினம்
தேய்வதோ நான்...

----அனீஷ் ஜெ...

2 Aug 2011

கருவறையிலிருந்து ஒரு கடிதம்...

கருவறையிலிருந்து ஒரு கடிதம்...

 

சுற்றும் முற்றும் பார்க்க,
இங்கே
சுதந்திரமில்லை...!

முதுகை திருப்பவோ,
முகம் நிமிரவோ
முடியவில்லை எனக்கு...!

நிசப்தமான - இந்த
நிகழ்காலத்தில்
நிழல் கூட
எனக்கு சொந்தமில்லை...!

என் உறுப்புகளெல்லாம்
சுறுசுறுப்பாய்
இயங்கதொடங்கிவிட்டது இப்போது...!

இன்னும் சிலகாலம்தான்,
இந்த இருட்டறையிலிருந்து
இடம் மாறிவிடுவேன் நான்...!

நினைத்தபோதே - என்னை
நனைத்து சென்றது
மகிழ்ச்சியின் அலை...!

மகிழ்ச்சியில் ஒருமுறை
உரக்க சிரித்தேன்...!
ஐயோ...!!
நான் சிரித்தது,
எனக்கே கேட்கவில்லை...!!

பல்லில்லாத வாயிலிருந்து,
சொல்லொன்றும் வரவில்லை...!

இமைகளை ஒருமுறை
இருக்கி அடைத்தேன்...!
இருட்டறையில் இதிலொன்றும்
வித்தியாசம் தெரியவில்லை எனக்கு...!!

கரங்களை மெதுவாய்
தட்டிக்கொண்டேன்...!
நான் எட்டி உதைப்பதாய்
வெளியே யாரோ பேசிக்கொண்டனர்...!!

கண்கள் முழுக்க கனவையும்,
இதயம் முழுக்க அன்பையும்
சுமந்துகொண்டு - நான்
காத்திருக்கிறேன்...!
என்னை சுமக்கும்
என் தாயின் முகம் காண...

----அனீஷ் ஜெ...