திரும்பிப்பார்த்தேன்...! திரும்பிக்கொண்டாள்...!! புன்னகைத்தேன்...! முகம் மறைத்தாள்...!! காத்திருந்தேன்...! விலகி நடந்தாள்...!! தொடர்ந்து சென்றேன்...! வேகமாய் மறைந்தாள்...!! பேசி நின்றேன்...! முறைத்து சென்றாள்...! பெயரை கேட்டேன்...! மவுனம் தந்தாள்...!! நலமா என்றேன்...! சாத்தானே போ என்றாள்...!! என் காதல் சொன்னேன்...! நான் யார் தெரியுமா என்றாள்...!! தெரியும் என்றேன்...! விழிகள் விரித்தாள்...!! நான் சொன்னேன்...! நீ என்பவள் நான் என்னும் சாத்தானின் தேவதை... ----அனீஷ் ஜெ...
அமைதியில்லாத இரவுகளில் அருகில் துணையாக நிலா...! நடுஇரவு தாண்டினாலும் நாங்கள் இருவரும் சலிக்காமல் பேசிக்கொள்கிறோம்...! பகலில் பார்த்த சூரியன், பக்கத்தில் பார்த்த நட்சத்திரம், பவுர்ணமியின் ரகசியம் என எதையும் விட்டுவைக்காமல் என்னிடம் கூறியது நிலா...! எதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்த என்னிடம், எதாவது பேசச்சொல்லி கேட்டுக்கொண்டது நிலா...! நானோ அவளைப்பற்றி பேசினேன்...! நீண்ட நேரம் பேசியபின் மீண்டும் சந்திக்கலாமென சொல்லி விடைபெற்றுக்கொண்டோம் நாங்கள்...! காலையில் கண்விழித்ததும் கண்ணெதிரே நின்ற அம்மா கேட்டாள்...! உறக்கத்தில் ஏன் உளறுகிறாய் என்று... ----அனீஷ் ஜெ...
பார்த்து பார்த்து
கவனம் ஈர்த்து, பின்தொடர்ந்து,
பின்பொருநாள் காதலை சொல்ல அன்றிலிருந்து இதயத்தில் ஒற்றிக்கொண்டேன் நான் உன்னை...! குறுகுறு பேச்சும், சிறுசிறு முத்தமும், மிகப்பெரும் சண்டையும், அதில்பெரிய அன்புமாய் காதலை வளார்த்தோம் நாம்...! அம்மா அழுதது, அப்பா திட்டியது, அண்ணன் அடித்தது என ஏதோ ஒரு காரணத்திற்காய் உனை விட்டு பிரிந்தேன் நான்...! துரோகி என்ற ஒரே வார்த்தை சொல்லி தூரம் சென்றுவிட்டாய் நீயும்....! உனக்காய் நான் அழுத என் இரவுகளின் சத்தங்களை - நீ கேட்டிருக்க வாய்ப்பில்லை...! நீயும் அழுதிருப்பாய்...! உன் புதுமனைவியுடன் உன்னை என் தோழி, கடைத்தெருவில் கண்டதாய் கண்டுவந்து சொன்னாள் இன்று...! நீ நலமாகத்தான் இருக்கிறாயாம்...! உன்னை தவறவிட்டதாய் கதறி அழ தோன்றியது எனக்கு...! உயிர்கொல்லும் வலிகளுமாய் உயிர்வாழ பழகிவிட்டாலும் சிலசமயம் மனதில் நினைத்துக்கொள்கிறேன்...!
என்னை பார்த்த அந்த முதல் பார்வையை நீ தவிர்த்திருக்கலாம்... ----அனீஷ் ஜெ... Written By : Anish J. Requested By : Varshini.
வழியில் எதிர்பட்ட வழிந்தோடும் நதியொன்றில் சடலங்கள் மிதந்துகொண்டிருந்தது...! கையில் அணிந்திருந்த கைக்கடிகார முட்களோ பின்னோக்கி நகரதொடங்கியது...! வானத்தில் பறந்த கானகத்தின் கழுகள் கண்களை கொத்த முயற்சித்தது...! அணையாத அக்னியும், ஆணிபோன்ற முட்களும் பாதையெங்கும் பரவிக்கிடந்தன...! நெளிந்து ஓடும் பாம்பும், ஒளிந்து தாக்கும் சிங்கமும் பின்தொடர்ந்தன...! கண்களில்லா முகமும் காலில்லா உடலும் கொண்ட மனிதர்கள் சிலர் துரத்திவந்தார்கள்...! ஆயிரம் டெசிபெல்லில் கத்தினாலும் நிசப்தத்தின் சத்தமே உதடுகள் வெளியேற்றியது...! சொர்க்கத்தை அடைந்த மனிதனொருவன் சொல்லிக்கொண்டிருந்தான் இவைகளை...! 'எப்படியிருந்தது பயணம்' எனக்கேட்ட கடவுளிடம்... ----அனீஷ் ஜெ...
காகிதத்தில் - உங்கள் காதலின் கண்ணீர்களால் ஈரம் செய்வேன்...! ஆணியே அறைந்தாலும் அதை சிறுமுள்ளின் வலியென ஆறுதல் சொல்வேன்...! சருகுகளை சிலசமயம் பூக்களென்பேன்...! தேனென்று நீங்கள் சொல்வதை விஷமென்றும் வாதிப்பேன்...! கனவுகளின் கதைகளை கவிதையாக்குவேன்...! இமையென்னும் ஜன்னல் திறந்தால் எனக்கு பிரபஞ்சமே தெரிவதாய் எண்ணிக்கொள்வேன்...! சோகங்களையும் நினைவுகளையும் சேகரித்து வைப்பேன்...! நீங்கள் சிரிப்பீர்களோ, சிந்திப்பீர்களோ, கண்ணீர் வடிப்பீர்களோ, கசக்கி எறிவீர்களோ - இதில் ஏதாவது ஒன்றை என் பேனாவாலேயே சாதிப்பேன்...! ஏனென்றால் நான் கவிஞன்... ----அனீஷ் ஜெ...
நீண்டதொரு சண்டை...! நானா அவளா எங்களில் யார் பேசுவதென எங்களுக்கே தெரியாமல் எங்களுக்குள் போட்டி...! எதிர்படும் நேரத்தில் ஒரு அலட்சியப் பார்வைகளுடன் கடந்துவிடுகிறோம் நாங்கள்...! சமையலறையில் அவள் தனியாய் உளறும் சத்தம் சரியாக என் காதில் விழவில்லை...! ஆனால் பாத்திரங்களின் உரசல்சத்தம் அதிகமாய் இன்று...!! சமைத்த உணவை சலிப்போடு என் முன்னே வைத்து சட்டென முகம்திருப்பி செல்கிறாள்...! இன்றும் எப்போதும்போல இந்த சமையலில் குறையேதும் இல்லை...! ஆனாலும் அது இது சரியில்லையென அவள் காதில்விழ கத்துகிறேன்...! முகம் திருப்பல்களும், முறைக்கும் விழிகளுமாய் சண்டை தொடர்கிறது....! இரவு முடிந்து, இனிய காலை விடிந்த இன்னொரு புதிய நாள்...! நேற்றைய சண்டையில் தோற்றுத்தர விருப்பமில்லாதவளாய் தொடர்கிறாள் அவள்... நானும் விட்டுக்கொடுப்பதாய் இல்லை...! எங்கள் இருவருக்குமான சண்டை இன்றும் தொடர்கிறது...!
துடைத்தெறியப்படாத நேற்றை இரவின் முத்தங்களின் ஈரங்களுடன்... ----அனீஷ் ஜெ...