18 May 2017

கொஞ்சம் நட்பு... நிறைய காதல்...

கொஞ்சம் நட்பு... நிறைய காதல்...


காதலெனும்
கதவுகளை திறந்து
காத்துக்கிடக்கிறேன் நான்...!

நட்பெனும்
நம்பிக்கையை சுமந்தே
நீ நுழைகிறாய் என்னுள்...!

வெறும் நட்பெனும் - உன்
வெள்ளை உடையில் - என்
வன்காதல் துளிகளை
வண்ணமாய் அள்ளி வீசுவது - உன்
விழிகளில் விழவில்லை...!

என் பெரும் மவுனத்திற்கும்,
ஏமாந்த முகத்திற்கும்
காரணம் காதலென்பதை
கண்டிபிடிக்க தவறுகிறாய் நீ...!

உன்னிடம் சண்டையிடுவது
பிடிக்குமென்கிறாய்...!
எனக்கோ உன்னை முத்தமிட
பிடித்திருக்கிறது...!!
என் மனமோ உனக்கின்னும்
பிடிபடவில்லை...!!!

என் மீதான உன் நட்பில்
என் காதலை கொஞ்சம் கலக்க
என்ன வழியென்பது
எனக்கின்னும் தெரியவில்லை...!

சொல்லாத என் பொல்லாத காதல்
சொர்க்கத்திலும் சேராதென்கிறார்கள்...!
நான் சொல்லாமலிருப்பதே
நட்பு நரகத்தில்கூட பிரியாமலிருக்கத்தான்...

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Thiruvasugi.

16 May 2017

சுவை !

சுவை !


மண்ணாய் உலர்ந்த மனதில்
விதையாய் விழுகிறது...!
உன் நினவுகள்...!

நீர் விடாமலே
வேர் விட்டு  மெல்ல
முளைக்க முயற்சிக்கிறது...!

களையெனெ நினைத்து
களைய நினைத்தாலும்,
இரும்பில் பட்ட காந்தமாய்
இறுகி பற்றியே இழுக்கிறது...!

முளை கிள்ளியே
முறிக்க முயற்சித்தாலும்,
கிளை தள்ளி மீண்டும்
கிடுகிடுவென தளிர்க்கிறது...!

அரும்பாக ஆரம்பித்து
மொட்டாக இதழ் விட்டு
மலராக மலர்கிறது அது...!

உணர்ச்சியென்னும் பட்டாம்பூச்சிகள்
உட்கார்ந்து மலரில் கொஞ்சம்
இதழ்களை பிரித்து
இரைதேன் தேடுகிறது...!

பட்டாம்பூச்சிகளே...!
பறந்துசென்றுவிடுங்கள்...!!

இந்த மலர்களில் சுரக்கும் தேன்களில்
இனிப்பு சுவையில்லை...!
கடலின் உப்பு சுவைக்கும்
கண்ணீரின் சுவை மட்டுமே...!!

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Meethu.

9 May 2017

சுதந்திரமானவைகள் !

சுதந்திரமானவைகள் !


வெள்ளை மேகங்களை
வெறுங்கையால் பிளந்தேன்...!

வீட்டு முற்றத்தின் நிலத்தடியில்
விலை மதிப்பில்லா புதையல் எடுத்தேன்...!

தொலைபேசியில் கோபமூட்டியவனை
தொலைவில் இருந்தே அடித்தேன்...!

இன்று கண்ட அழகி ஒருத்தியை
இரவில் ஒருமுறை புணர்ந்தேன்...!

இரு நிமிட நேரத்தில்
இருபது தேசங்கள் பறந்தேன்...!

சச்சினின் சாதனைகளனைத்தையும்
சத்தமில்லாமல் உடைத்தேன்...!

தவறுகளுக்கு இங்கு
தண்டனைகளில்லை...!
கைகட்டி நிற்கும்
கட்டுப்பாடுகளில்லை...!

எத்தனை சுதந்திரமானவைகள்...!
எல்லாவற்றையும் சாத்தியமாக்கும்
என் கற்பனைகள்...

----அனீஷ் ஜெ...