31 May 2016

பசி !

பசி !


என் மனத்தட்டில் மிச்சமிருக்கும்
உன் நினைவு பருக்கைகளை
மென்று தின்கிறது என் உயிர்...!

இடையில் எங்கோ சிக்கி,
இறங்காமல் நிற்கும் நினைவுகளை
கண்ணீர் குடித்தே
கரைத்துவிடுகிறது இதயம்....!

ஆனால் பசி மட்டும்
நின்றபாடில்லை இன்னும்...!
எனை விட்டுச்சென்ற
உனை மட்டும் தேடும்
என் காதல் பசி...

----அனீஷ் ஜெ...

25 May 2016

ஞாபகமிருக்கிறதா?

ஞாபகமிருக்கிறதா?


சிரிப்பை நான் மறந்து
சிலநாட்களாகிவிட்டது...!

குழிவிழுந்த கண்களில்
கண்ணீரின் ஈரம் கசிகிறது...!

விடாது பேசிக்கொண்டிருப்பதை
விட்டுவிட்டேன் நான்...!

எவர் திட்டினாலும்
ஏனென்றுகூட கேட்பதில்லை...!

ஒட்டிய கன்னங்களை
ஒத்துக்கொள்ளவில்லை முகம்...!

நட்பு உறவு என்று எதையுமே
நம்பதோன்றவில்லை இப்போது...!

ஓ...
கேட்கவே மறந்துவிட்டேன்...

ஞாபகமிருக்கிறதா என்னை...?
அடையாளமாவது தெரிகிறதா...??

சிலகாலம் முன்பு 
உனக்கு நான் உலகமாயிருந்தேன்...!

---அனீஷ் ஜெ...

13 May 2016

இறந்துவிடலாம் இதயம் !

இறந்துவிடலாம் இதயம் !


நிலம் பார்த்து நட...!
இமையை சிறிது மூடு...!

உதடுகள் புன்னகையை மறக்கட்டும்...!
கொலுசின் சத்தம் கொஞ்சம் குறையட்டும்...!

உன் எதிரில் வரும் என்னை
இன்னொருமுறை
இந்த புன்னகையோடு நீ பார்க்காதே...!
இறந்துவிடலாம் என் இதயம்...

----அனீஷ் ஜெ...

12 May 2016

ஒரு முறையேனும்...

ஒரு முறையேனும்...


பசியின் கொடூரம் உணருங்கள்...!

தோல்வியை தழுவிக்கொள்ளுங்கள்...!

துரோகங்களை கடந்து செல்லுங்கள்...!

எதற்காகவாவது கதறி அழுங்கள்...!

எவரையாவது கைதூக்கி விடுங்கள்...!

விரும்புபவர்களுக்கு விட்டுக்கொடுங்கள்...!

உயிர் உருக காதலியுங்கள்...!

இழப்பின் வலியுணருங்கள்...!


இவையனைத்தையும் செய்யுங்கள்...!
இவ்வாழ்வில் ஒருமுறையேனும்....

----அனீஷ் ஜெ...


4 May 2016

தீரா காதல் !

தீரா காதல் !


எல்லா பகல்களும்,
என் செல்பேசியில்
உன் குறுந்தகவல்களை
எதிர்பார்த்தே விடிகிறது...!

தினம் உன் முகம் காணும்
என் ஆவலோ
வாரமொருமுறையின்
வீடியோ காலில் முடிகிறது...!

உன் ஈர முத்தங்கள் கூட
கன்னத்திற்கு பதிலாய் - என்
கண்களையே நனைக்கிறது...!

தனிமையில் படுத்து
உன் நினைவுகளை அணைத்தே
உறங்குகிறேன்...!

கட்டிச்சென்ற தாலியும்
கொட்டிச்சென்ற அன்புமே
எனக்கு துணையாய்...!

கடல்கடந்து சென்ற உனக்காய்
காத்திருக்கிறேன் நான்...!
தீரா காதலுடன்...

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Akila.

3 May 2016

நிலா மேகம் !

நிலா மேகம் !


கரும் இரவில்,
சிறு இருட்டில்
நிலவொன்றை
மேகமொன்று
தின்றுகொண்டிருந்தது...!

அன்றிரவு மட்டும்
அவளுக்கு நிலவென்றும்
எனக்கு மேகமென்றும் பெயர்...!!

----அனீஷ் ஜெ....