31 Aug 2016

மனிதர்கள் ஜாக்கிரதை !

மனிதர்கள் ஜாக்கிரதை !


கடவுள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான்...!

பூமியிலிருந்து வந்து - கடவுளின்
செவிகளின் நுழைந்தது...!
பல அலறல்களின் சத்தம்...

எட்டிநின்றே பூமியை
எட்டிப்பார்த்தான் கடவுள்...!

கூட்டமாய் சிலர்
குட்டிச் சாலையொன்றில்  - ஒருவனை
வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தனர்...!

இன்னொரிடத்தில்
இளம்பெண்ணொருவள்
இருகால் மிருகத்திற்கு
இரையாகிக்கொண்டிருந்தாள்...!

மற்றொரிடத்தில்
மனசாட்சியில்லாத
மனித வெடிகுண்டொருவன்
மரணங்கள் நிகழ்த்திக்கொண்டிருந்தான்...!

கடவுளின் மனம் படபடத்தது...!

அத்தனைபேரையும் காப்பாற்றவேண்டும்...!
அவசரமாய் பூமியை நோக்கி ஓடினான்...!

பூமியின் வாசலில் வந்தவனுக்கு
எச்சரிக்கை பலகையொன்று தென்பட்டது...!
அதை வாசித்த கடவுளோ
அடுத்த நொடியே திரும்பிப்போனான்...!

எச்சரிக்கை பலகையில்
எழுதப்பட்டிருந்தது...!
“மனிதர்கள் ஜாக்கிரதை”...

----அனீஷ் ஜெ...

29 Aug 2016

புதுவிதமாய்...

புதுவிதமாய்...


அதிகாலையில் சூரியன் மறைந்து
அந்திமாலையில் உதிக்கிறது...!

பட்டாம்பூச்சியின் வண்ணத்தை
பூவொன்று உறிஞ்சுகிறது...!

வாட்டும் வெயிலுக்கு நடுவே
வானவில்லொன்று முளைக்கிறது...!

நீண்டு பரந்த கடலோ
நதியில் பாய்ந்து கலக்கிறது...!

சீறிய புயலில் சாய்ந்த மரமொன்று
சிறு தென்றல் பட்டு நிமிர்கிறது...!

கண்மூடிய தூக்கமெல்லாம்
கனவுகள் மோதி கலைகிறது...!

வாசலில் கிடக்கும் எறும்புகளை
வண்ண கோலமொன்று மொய்க்கிறது...!

மழைநீர் விழுந்ததும்
மண் தரையும் சுடுகிறது...!

கொழுந்துவிட்டு எரியும் தீயோ
கொஞ்சம் பஞ்சு பட்டதும் அணைகிறது...!

இசையின் சப்தமொன்று
இமைகள் வழியே நுழைகிறது...!

எல்லாமே புதுவிதமாய் இருக்கின்றது...!
என்னருகில் நீ இருக்கின்றபோது...

---அனீஷ் ஜெ...

26 Aug 2016

கடவுளே காப்பாற்று !

கடவுளே காப்பாற்று !


வளர்ந்து உதிர்ந்த பூவொன்று - அவள்
வரும் வழியின்
வாசற்படிக்கு கீழே
விழுந்துகிடக்கிறது...!

மில்லிமீட்டர் கல் நுனியின்
மெல்லிய உரசலைகூட
தாங்கிக்கொள்ளும் சக்தியில்லை
தரையில் கிடக்குமந்த பூவுக்கு...!
அத்தனை மென்மை...

வாசற்படியை நோக்கி
வந்துகொண்டிருக்கிறாள் அவள்...!
இப்பூவை அவள் மிதித்துவிட்டால் என்னாவது...?
இடவலமென படபடக்கிறது என் மனது...!

கவனிக்காமலே வந்தவளின்
கால்களில் ஒன்று,
அப்பூவை பார்த்தே நகர்கிறது...!

அரைநொடி நேரத்திற்குள்
அந்த பூவின் தேகத்தை
அவள் மிதித்துவிடப்போகிறாள்...!

கடவுளே...!
காயமேதுமின்றி காப்பாற்று...!!
அவள் பாதங்களை...

----அனீஷ் ஜெ...

22 Aug 2016

அவள் பெயரும்... அந்த குரலும்...

அவள் பெயரும்... அந்த குரலும்...


கூட்டநெரிசலொன்றில்
நடந்துகொண்டிருக்கிறேன் நான்...!

அவள் பெயரைச்சொல்லி - யாரோ
அழைக்கும் சத்தம்
இரைச்சலை பிளந்துகொண்டு
இருகாதுகளில் நுழைகிறது...!

அப்படியே நின்றுவிட்டு
சுற்றும்முற்றும் பார்க்கிறேன்...!

அவளோ,
அழைத்தவரோ
அங்கிருப்பதற்கான
அடையாளமேதுமில்லை...!

மறுபடியும் பார்த்துவிட
மனம் சொல்கிறது...!

தேடும் கண்களுக்கு
தென்படவில்லை அவள்...!

எங்கிருந்து வந்ததந்த குரல்...?
ஒரு நொடியில் மறைந்தெங்கோ
சென்றுவிட்டாளா அவள்...??
யோசித்தகொண்டே மீண்டும்
நடக்கத்துவங்கினேன் நான்...!
 

ஆனால் அந்த கூட்டநெரிசலில்
அவளைத்தேடிக்கொண்டு
அங்கேயே நின்றுகொண்டிருந்தது...!

என் மனது...

----அனீஷ் ஜெ...

19 Aug 2016

பகல் பிறக்கட்டும் !

பகல் பிறக்கட்டும் !


புல்வெளி  கொஞ்சம்
பனித்துளி பருகட்டும்...!

கிளிகளின் தொண்டைக்குள்
சங்கீதம் உண்டாகட்டும்...!

சேவல்கள் மெல்ல
சிறகடித்து கூவட்டும்...!

பருகும் காலை தேநீருக்காய்
பசுக்களின் மடிசுரக்கட்டும்...!

மறைந்திருக்கும் சூரியன்
மேகம் பிளந்து பிறக்கட்டும்...!

அதிகாலை ஐந்து மணியாகிவிட்டது...!

இரவு முடியாமல்
இப்படியே தொடரப்போகிறது...!
பகல் விடியட்டும்...!!
நீ கொஞ்சம் வீட்டிற்க்கு வெளியே வா...

----அனீஷ் ஜெ...

16 Aug 2016

நீ தரும் காதல் !

நீ தரும் காதல் !


மனதை நான்
மடித்தெங்கோ வைத்துவிட்டேன்...!

இடப்பக்க இதயம்
இயங்குவதின் அசைவில்லை...!

மூளைய தூக்கியெறிந்துவிட்டு
முட்டாள்போல் அலைகின்றேன்...!

பசி மறக்க
பழக தொடங்கிவிட்டேன்...!

பக்கத்திலிருந்து பேசினாலும்
பதியவில்லை செவிகளில்...!

தனியே பேசவும் சிரிக்கவும்
தயக்கமில்லை இப்போது...!

மனிதத்தை களைந்துவிட்டு
மற்றெதுவாகவோ மாறுவதாய் உணர்வு...!

இத்தனை சக்தியா...?
நீ தரும் காதலுக்கு...

----அனீஷ் ஜெ...

10 Aug 2016

அவனுக்கு இதயமில்லை !

அவனுக்கு இதயமில்லை !


அவனை அன்புசெய்தார்கள் சிலர்....!
அவனோ அதை திருப்பிகொடுக்கவில்லை...!

நண்பனைகூட நம்புவதில்லை அவன்...!
நகைத்தார்கள்...!

அறிவுரைகளையும் அவன்
அலட்சியமே செய்கிறான்...!

கண்ணீரும்
கதறி அழுவதும் கூட
அசைத்துப்பார்க்காது அவனை...!

முகத்துக்கு நேராய் புகழ்பவர்களையும்
முறைத்த கண்களுடனே கடக்கிறான்...!

அவனுக்கு இதயமே இல்லையென
அனைவரும் பேசிக்கொண்டார்கள்...!

ஆனால் அவனுக்கோ
அப்படியிருப்பதே பிடித்திருந்தது...!

ஏனென்றால்
உடைந்த இதயங்களைவிட
இதயமில்லாததே சிறந்தது...!

----அனீஷ் ஜெ...

5 Aug 2016

முகம் தழுவி...

முகம் தழுவி...


வண்ணத்து பூச்சியின் நிறத்தை
வாரியெடுத்து சேர்த்திருக்கலாம்...!

தென்றலின் வேகத்தை
தேர்ந்தெடுத்து தைத்திருக்கலாம்...!

பஞ்சின் மென்மையெல்லாம்
பத்திரமாய் புதைத்திருக்கலாம்...!

பூந்தோட்டத்தின் வாசத்தை
பூட்டியே வைத்திருக்கலாம்...!

உரசியே சென்றாலும்
உன்மேல் காதல் கூட்டிச்செல்கிறது...!
என் முகம் தழுவிச்செல்லும்
உன் முந்தானை...

----அனீஷ் ஜெ...

2 Aug 2016

அவன் பார்த்த பார்வை !

அவன் பார்த்த பார்வை !


ஒரு பார்வைதான் பார்த்தான்...!
உயிரில் தீயின் துளி
கொழுந்துவிட்டு எரிகிறது...!

கூடலில்லை...!
கூடிக்களிக்கவில்லை...!!
ஆனாலும் அவன்
விழிகளால் பிரசவிக்கிறேன்...!!!
வெட்கங்களை...

அதிகாரமோ இல்லை
அடங்கிப்போவதோ
என்னை கட்டுப்படுத்த - அவன்
பார்வைகளூக்கே சாத்தியப்படுகிறது...!

அவன் கண்பார்த்து பேச
ஆசையிருந்தாலும்
மண்பார்க்கவே - என்
மனம் சொல்கிறது...!
விழிகளுக்கும் சூரியனுக்கும்
வித்தியாசமில்லை...!

கடும்பாறை என் நெஞ்சில்
பெரும் மழையாய் வழிகிறது...!
அவன் பார்த்த பார்வை...

----அனீஷ் ஜெ

Written By : Anish J.
Requested By : Havisha.