28 Jan 2016

சில நிழல்கள் அசைவதில்லை !

சில நிழல்கள் அசைவதில்லை !


நடு இரவு அது...!

திடீரென யாரோ
தூக்கியடித்ததுபோல
விழித்துக்கொண்டேன் நான்...!

என் எதிரில்,
வெள்ளை சுவரில்,
என்னையே கவனித்தபடி
ஒரு நிழல்...!

அந்த நிமிடம் பயந்தாலும்,
அடுத்த நிமிடத்தில் - என்னை
ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்...!
அது என் நிழலென...

கைகளை அசைத்தேன்...!
கழுத்தை திருப்பினேன்...!
ஆனாலும் நிழலில் ஏதும் மாற்றமில்லை...!

படபடத்தது மனது...!

நிழலின் உருவத்தை உற்று நோக்கினேன்...!

ஆம்....
அது அவள்தான்...!

நீள்வடிவ முகம்...!
நீண்ட தேகம்...!!
சிறு இடை...!
சின்னதாய் முடியும் பாதங்கள்...!

பார்த்து பலவருடமாகியும் - அவள்
உருவம் மட்டும்
உள்ளுக்குள்ளே என்னை உருக்கியது...!

காதலித்த என்னை
கண்ணீர்சிந்த வைத்து,
இன்னொருவனை அவள்
கைப்பிடித்தது - என்
நினைவுகளில் வந்துபோனது...!

போர்வைக்கடியில்
புதைந்துகொண்டேன் நான்...!

நினைவுகளும்,
கனவுகளுமாய்
கண்மூடி தூங்கிவிட்டேன் நான்...!

காலை கண்விழித்ததும்
எதிரில் சுவரில் பார்த்தேன்...!

அசையாமல் நின்றிருந்த நிழல்,
அங்கு இல்லை...!

அன்றிலிருந்து இதுவரை
அந்த நிழலை எந்த இரவிலும்
அங்கே நான் பார்க்கவில்லை...!

ஆனால்
அன்றிலிருந்து,
எனக்கே தெரியாமல்
எல்லா இரவுகளிலும் - அவள்

எனக்குள் அசைந்துகொண்டிருந்தாள்...!
நினைவுகளாக...

----அனீஷ் ஜெ...



22 Jan 2016

குடை மறந்த நாள் !

குடை மறந்த நாள் !


அவளின் அழகிய தேகம் தொட,
காத்திருந்து பெய்கிறது
இந்த பொல்லாத மழை...!
அவள் குடை மறந்த
நாட்களில் மட்டும்...

----அனீஷ் ஜெ...

19 Jan 2016

அவள் வீட்டு பூக்கள் !

அவள் வீட்டு பூக்கள் !


பறிக்கப்பட்டபின்தான்
பூக்களெல்லாம் வாடும்...!
அவள் வீட்டுச்செடியில் மட்டும்
பறிக்கப்படாதா பூக்கள் வாடுகிறது...!
செடியில் வாழ்வதைவிட,
அவள் கூந்தலில் சாவதே
அவைகளுக்கு பிடித்திருக்கலாம்...!

----அனீஷ் ஜெ...


13 Jan 2016

தென்றல் வீசியது !

தென்றல் வீசியது !


தென்றலாய் வீசிச்சென்றாய்,
நீ உன் பார்வையை...!
உனை சுற்றியே பறக்கிறேன் நான்...!
சிறு சருகாய்...


*********************************************************************************


தென்றலென்றேன் நான் உன்னை...!
அதற்காக ஏன் வீசிச்செல்கிறாய்...?
வீதியில் என் இதயத்தை...


----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Sikkandar Babu.


11 Jan 2016

பாதை !

பாதை !


என் கைகளை பிடித்தே
நடந்துகொண்டிருந்தாய் நீ...!

உன் பாதைகள்தான்
எனக்கும் பாதைகளானது...!
உன் பயணங்கள்தான்
என்னுடைய பயணமும்...

இன்று...
என் கைகளை
எனக்கே தெரியாமல்
உதறிவிட்டு
உனக்கான பாதைகளில்
பயணிக்கிறாய் நீ...!

நீ விட்டுச்சென்ற
அதே இடத்தில்
அழுதுகொண்டே நிற்கிறேன் நான்...!

நீயோ தனியாக
தவறான பாதையில்
தவறி சென்றுகொண்டிருக்கிறாய்...!

தவறான அந்த பாதையில்,
நீ எவ்வளவு பயணித்திருந்தாலும்
பரவாயில்லை எனக்கு...!
திரும்பி மட்டும் வந்துவிடு...!

ஏனென்றால்...
எனக்கான பாதையும்,
பயணமும் நீயே...

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Santhiya.


9 Jan 2016

காதலித்துவிடாதே...

காதலித்துவிடாதே...


ஆயிரம் சிலுவைகளில்
ஆணிகளால் அறையப்படும்
வலி அறிந்ததுண்டா...?

நரம்புகளில் கூட
கண்ணீர் துளிகள் வழிந்து
கண்டதுண்டா...?

மாலைக்கும்,
காலைக்குமிடையேயான தூரத்தில்
கோடி முறை மரித்ததுண்டா...?

பேச்சும் மூச்சும்
தொண்டையில் சிக்கியே
தொல்லை தந்ததுண்டா...?

உச்சி வெயிலில்
இருள் தெரிந்ததுண்டா...?
இசையில்
இரைச்சல் கேட்டதுண்டா...?

பெரும் சாலையிலோ,
சிறு தெருவிலோ நின்று
கதறி அழ நினைத்ததுண்டா...?

பிடித்த உணவில் கூட
கொடிய நஞ்சின்
சுவை உணர்ந்ததுண்டா...?

வானம் உடைந்து
பூமியே பிளந்து
உலகமே அழிந்து போக
வேண்டியதுண்டா..?

மரணத்திற்காய் கடவுளிடம்
மன்றாடியதுண்டா...?

கோடி மரணங்களைவிட
கொடியது இந்த காதல்...!
ஆதலால்
காதலித்துவிடாதே...

----அனீஷ் ஜெ...



7 Jan 2016

மறுப்பதும்... மறப்பதும்...

மறுப்பதும்... மறப்பதும்...


மவுனம்
மனம் உடைத்தாள் அவள்...!

ஒரு யுக காதலை
ஒரு சிறு வார்த்தையால்
தகர்த்தாள்...!

தீரா காதலென்றவள் இன்று
நேர விரயமென்று -  என்
ஈர விழி செய்கிறாள்...!

பாதி கிறுக்கி,
மீதி நொறுக்கி இதயத்தை
வீதியில் வீசி எறிகிறாள்...!

தந்தைக்காய்
எந்தன் காதலின்
நெஞ்சில் உதைத்தாள்...!

காதலென்று என்னை
காயப்படுத்தி மறப்பதற்கு - அன்றே
காதலென்று நான் வந்தபோது
கண்டுகொள்ளாமல்
மறுத்திருக்கலாம்...!

காரணம்...
மறுக்கப்படும் வலியை விட
மறக்கப்படும் வலியே பெரியது...!

----அனீஷ் ஜெ

Written By : Anish J.
Requested By : Pavithran.


4 Jan 2016

என் பெயர்...

என் பெயர்...


பால்நிலா ஒளியில்
பாதியே தெரிந்தது
பரிதாபமான அந்த முகம்...!

அருகில் அழைத்தேன்...!

எனக்காகவே காத்துநின்றவன்போல
அருகில் வந்தான் அவன்...!

வந்தவன் வரலாறை உளறினான்...!
வந்தவிதம் பிதற்றினான்...!!

கூடுதல் காரணம் கேட்காமல்
கூடவே கூட்டிச்சென்றான் நான்...!

நிழலைபோல பின்தொடர்ந்தான் அவன்...!

கவலைகளையும்,
உணவுகளையும் பகிர்ந்துகொண்டோம்...!

நல்லவன் என்ற அடையாளத்துடன் - என்
நம்பிக்கையானவனுமானான் அவன்...!

ஒருநாள்...
மழைவிட்ட மாலைநேரம் அது...
என் பின்னே வந்துகொண்டிருந்நான் அவன்...!

எதிர்பார்க்கவேயில்லை...!
எட்டியென் முகத்தில் பிடித்தான்...!
கத்திய என் மூச்சை தடுத்து,
கத்தியொன்றால் என் கழுத்தை அறுத்தான்...!

பாதி உயிருடன்
வீதியில் விழுந்தேன் நான்...!

கட்டுப்படாத நாக்கை அசைத்து
காரணம் கேட்டேன் அவனிடம்...!
சிரித்தான்...!!

"உன் பெயரென்ன..?"
இது என் இரண்டாவது கேள்வி...!

முகத்தில் அணிந்திருந்த
நல்லவன் என்ற முகமூடியை
கொஞ்சம் விலக்கிக்கொண்டு,
பதில் சொன்னான் அவன்...!
“என் பெயர் துரோகம்...”

----அனீஷ் ஜெ...