31 Aug 2012

மலராதே மலரே...

மலராதே மலரே...


அவள் பார்வை பட்டு
மொட்டொன்று எனக்குள்
முட்டி விரிவதை உணர்கிறேன்...!

வாழ்க்கையை வாசம் வீச வைப்பதாய்
வாக்குறுதி அளித்துவிட்டு
வளரப் பார்க்கிறது அந்த மொட்டு...!

ஏய் என் மனச்செடியே
விடியும் முன் - மொட்டு
விரியும் முன் - அதை
முளையிலே கிள்ளியெறிந்துவிடு...!

ஏனென்றால்
முழுதாய் விரிந்தபின்
வாடி உதிர்ந்துபோய் - உனக்குள்
காயம் ஏற்படுத்திவிடலாம்...!
காதலென்னும் அந்த மலர்...

----அனீஷ் ஜெ...





27 Aug 2012

திருக்குறள் !

திருக்குறள் !


ஏழு வார்த்தை வண்ணங்களால்
வானவில் எழுதிய வரிகள் நீ...!

முப்பாலில் மூன்றாம்பால்
உன் தேகமெங்கும் தஞ்சமிருக்க,
முதலிரண்டு பாலும்
உன் நெஞ்சோடு மிச்சமிருக்கிறது...!

அகிலத்தின் அத்தனை
அழகான அம்சங்களும்
உனக்குள் அடங்கிப்போக,
அதனுடன் சேர்ந்து நானும்...

வாசிக்கவும் தெரியவில்லை...!
நேசித்தும் உன்னை புரியவில்லை...!

பெண்ணே...!
ஐந்தரை அடியில்
பிரம்மன் எழுதிய
அழகான திருக்குறள் தான் நீ...

----அனீஷ் ஜெ...




20 Aug 2012

பிறந்தநாள் பரிசு !

பிறந்தநாள் பரிசு !


என்னவாயிருக்கும்
என எண்ணுகிறேன் நான்...!

எதுவென்றாலும்
அவள் காதலை விட
பெரிதில்லை என்கிறது
என் மனது...!

திறந்து பார்த்தவாறே
என் இதயத்தோடு மூடி
பத்திரப்படுத்திக்கொள்கிறேன் நான்...!
அவள் எனக்களித்த
பிறந்தநாள் பரிசை...

----அனீஷ் ஜெ...



17 Aug 2012

மறப்பதென்றால் மறுத்திருக்கலாம் !

மறப்பதென்றால் மறுத்திருக்கலாம் !


இதயம் கேட்டேன் நான்...!
இல்லையென மறுக்காமல்
இதயத்தை என்னோடு
இடம் மாற்றினாய் நீ...!

இன்றோ என்னிடம்
மறந்துபோக சொல்கிறாய்...!
இதற்கு நீ
அன்றே என்னிடம்
இதயம் தர மறுத்திருக்கலாம்...!
எனக்காய் துடிக்க
என் இதயமாவது
என்னிடம் மிச்சமிருந்திருக்கும்...

----அனீஷ் ஜெ...