17 Jul 2009

பயணம்

பயணம்

அப்போது மாலை மணி ஐந்து...!
அதிக மக்கள் நெரிசலான
அந்த ரயில் நிலையம்...!!

அரைமணி நேர
என் காத்திருப்புக்கு பின்
அலறியடித்துக்கொண்டு வந்தது...!
அனந்தபுரி எக்ஸ்பிரஸ்...

எனக்குப் பிடித்த
ஜன்னலோர சீட்...!
ஏறி அமர்ந்து கொண்டேன்...

பெரிய சத்தத்தோடு
புகையையும் கக்கிக்கொண்டு
பயணமானது ரயில்...

ஆடி அசையும் மரம்...!
ஆகாய பறவைகள்...!!
ஆற்று வெள்ளம்...!
ஆட்டு மந்தை கூட்டம்...!!

அனைத்தையும்
அழகாய் காட்டியது...!
அந்த ஜன்னலோர சீட்...

அரைமணி நேரத்தில்
அலுப்பு தட்டியது எனக்கு...

அன்று காலை வாங்கிய
ஆனந்த விகடனை
அப்போது கையில் எடுத்தேன்...!

பக்கங்களை திருப்பி
படிக்க ஆரம்பித்தேன்...!

அதிகம் சிரிப்பை தராத ஜோக்ஸ்...!
ஆர்ப்பாட்டமான சினிமா செய்திகள்...!!
அப்போது ஏனோ
அதிலும் மனம் ஒட்டவில்லை...

மீண்டும் ஜன்னல் வழி பார்வை...

மனமோ இப்போது
மலையாய் கனத்தது...!
மறுபடியும்
அவள் நினைவுகள்...

மேகம்,
மேலே தெரிந்த வானம்,
வெற்றிடம்,
வெளியே தெரிந்த மரங்கள்
எல்லாவற்றிலும்
எனக்கு அவளே தெரிந்தாள்...

இதயத்தில் அவள்
இதழசைத்து பேசும் சத்தம்...
இமை மூடி ரசித்தேன்...!

உயிருக்குள் அவள்
உரக்க சிரிக்கும் சத்தம்...
உயிரோடு உணர்ந்தேன்...!

இரவு நேரம்...
இப்போது மணி பதினொன்று...

எதிர்பாராமல்
என் நோக்கியா அலறியது...!
எடுத்து பார்த்தேன்...!!
எனக்கு தெரியாத எண்...

அவளாய் இருக்கக்கூடாத என
அடிநெஞ்சு ஏங்கியது...!

பட்டனை அமுக்கியதும்
பாடுவதை நிறுத்தியது...!
என் செல்போன்...

எதிர் முனையில் அவள்...

ரயிலை விட்டு இறங்கி
நிலவை தொட்டு வந்ததாய்
எனக்கு உணர்வு...

என் காதோடு
ஏதேதோ பேசினாள்...!
அதை என் இதயமோ
அமைதியாய் ரசித்தது...!!

"பை" சொல்லி செல்போனை
வைத்தாள் அவள்...

மெதுவாய் நான்
எனக்குள்ளே புன்னகைத்தேன்...!
அவளும் ஒருவேளை
என்னைப்போல் புன்னகைத்திருப்பாள்...!!

இரவு மணி ஒன்றாகி
இப்போது இரண்டானது...!
இன்னும் தூக்கம் வரவில்லை...!!

ரயிலோ தண்டவாளத்தோடு
ரகசியம் பேசிக்கொண்டு
ராத்திரி பயணித்துக்கொண்டிருந்தது...!

நீண்ட நேரத்திற்குப் பின்
நிம்மதியில்லாத ஒரு தூக்கம்...!
கனவிலும் என்னோடு வந்து
காதல் செய்தாள் அவள்...!!

அவள் எனக்குரியவள் அல்ல...!
ஆயிரம் முறை சொன்னேன்...!!
என் மனதோடு...

மனமோ அதை
மறுத்தது...!
காரணம் சொன்னேன்...!!
கண்டுகொள்ளவில்லை மனது...

எனக்கு தெரிந்தது
என் மனதிற்கு
ஏனோ புரியவில்லை...!

என் பயணம் முழுவதும்
என்னோடு பயணம் செய்தது...!
அவள் நினைவுகள்...

இறங்க வேண்டிய இடம்...

இறங்கி விட்டு,
இரயிலை பார்த்து
என் கண்கள் நனைய
எனக்குள்ளே நான்
நினைத்துக்கொண்டேன்..

எந்த பயணமும்,
எந்த ரயிலும்
என்னை
அவளிடம் கொண்டுபோய் சேர்க்காது...!
ஏனென்றால்
அவள் எனக்குரியவள் அல்ல....


-----அனீஷ்...

13 Jul 2009

ஒருதலைக் காதல்

ஒருதலைக் காதல்

ஒருதலைக் காதல்
*********************************************************

1952...
வயல்கள்
பச்சை வண்ணத்தில்
நனைந்திருந்தன...!
விண்ணைத் தொட
மண்ணின் மரங்கள்
மல்லுக்கட்டி நின்றன...!!

அந்த
அழகான கிராமத்தில் நான்...

இருபது வயதைத் தொட
இன்னும்
இரண்டு வருடங்கள்
மீதியிருந்தது எனக்கு...

கனவுகளையும்
கற்பனைகளையும்
நிஜங்களாக்க
நினைக்கும் வயது...

அரும்பு மீசை...!
ஆறடி உயரம்...!!
கருப்பு வெள்ளை சினிமாவின்
கதாநாயகர்களை விட
அழகாகவே இருந்தேன் நான்...

பறவைகளின் சலசலப்பில்
மவுனத்தை தொலைத்த -ஒரு
மாலை நேரம்...

அப்போதுதான்
அவளை
முதல் முதலாய் பார்த்தேன்...!

பதினாறு வயது இருக்கும்...!
பார்ப்பதற்க்கு
அவள் அழகாகவே இருந்தாள்...!!

மஞ்சள் தேகம்...!
மவுனமாய் பேசும் கண்கள்...!!
சிவந்த உதடுகள்...!
சிரிக்கும்போது குழி விழும் கன்னங்கள்...!!

அவளைப் போல் அழகியை
அதற்கு முன் -நான்
அகிலத்தில் எங்கும் கண்டதில்லை...

முதல் பார்வையிலே
முழுதாய் -என்
மூச்சோடு கலந்தாள் அவள்...

அவள் பார்வைகளில்
அடி நெஞ்சில் எனக்கு
அனல் அடித்தது...!

அப்படியொரு உணர்வு
அதற்கு முன் எனக்கு வந்ததில்லை...!

தூக்கத்தை
தூரத்திவிட்டு
என் நினைவோடு குடியேறினாள்...

பார்வைகளிலே
பாதி வருடம் போனது...

ஆறு மாதம் கழிந்து
அன்றொரு நாள்...

அவளின் முன் நான்...

காதலை சொன்னேன்...
மவுனத்தோடு
மறுத்தாள் அவள்...

அடி நெஞ்சில் எனக்கு
இடி விழுந்தது...!
கன்னங்களோ
கண்ணீரில் நனைந்தது...!!

நினைவாய் இருந்தவள் என்னை
நிராகரிப்பதை கண்டு
நிசப்தமாகி நின்றேன்...

1953...
ஒரு வருடம் கழித்து...

அன்றுதான்
அவளுக்கு திருமணம்...

அடுத்த வீட்டு நண்பன்
அதை என்னிடம் சொன்னதும்
கட்டுப்படுத்த முடியாமல் -என்
கண்ணுக்குள் கண்ணீர் துளிகள்...

நாட்கள் வாராங்களாகி
வாரங்கள் மாதாங்களாகி
மாதங்கள் வருடங்களாகின...

இப்போதும்
மறக்க முடியவில்லை அவளை...

இதயத்தில் நினைவுகளாகி
இரவுகளில் கனவுகளானாள் அவள்...

1958...
ஐந்து வருடங்கள் கழிந்து
அவளை அன்று பார்த்தேன்...!
இடுப்பில்
இரண்டு வயது குழந்தையோடு...

அவளை பார்த்து நின்றேன் நான்...!
அவள் என்னை கண்டுகொள்ளவில்லை...!!

இதயம் இப்போது
மவுனமாய் அழுதது...

நாட்கள் ஒவ்வொன்றும் எனக்கு
நரகங்களாய்
நகர்ந்து போனது...!

மனதோ அவளை
மறப்பதற்க்கு மறுத்தது...!

கடை வீதி...!
கோயில் திருவிழா...!!
இங்கெல்லாம் அவளை
எப்போதாவது பார்ப்பதுண்டு...


கண்களோடு சேர்த்து -என்
கண்ணீர் துளியும் அவளை
எட்டிப்பார்க்கும்...

அவள் என்
நினைவுகளில் வாழ்ந்ததால்,
நானோ -என்
வாழ்க்கையை வாழ மறந்துவிட்டேன்...

2008...
ஆண்டுகள்
ஐம்பதை தாண்டின...

சுருங்கிப்போன தோல்...!
மங்கிப்போன பார்வை...!!
கூனல் விழுந்த முதுகு...!
முதுமையால் முளைத்த வழுக்கை...!!

முழுதாய் முதுமையான
எழுபத்து ஐந்து வயது எனக்கு...

இப்போதும் அவளின்
அதே நினைவுகள்...

இதயத்தில் இப்போது
இன்னும் அதிகமாய் பதிந்திருந்தது...!
மூன்று மாதங்களுக்கு முன்
மூக்குக் கண்ணாடியோடு பார்த்த
அவள் முகம்...

2009...
முதுமை என்
மூச்சை நிறுத்த பார்க்கிறது...!

உயிர் போகும்
இந்த நொடி கூட
எனக்கு துணையாய்
அவள் நினைவுகள் மட்டும்...

எனக்கு தெரிகிறது...!
இன்னும் சில நொடிகளில் -என்
இதயம் துடிப்பதை நிறுத்தும்...!

கடைசியாய்
கடவுளிடம் ஒரு வேண்டுகோள்...!!
கடவுளே...
அடுத்த ஜென்மத்திலாவது
அவளோடு நான் வாழவேண்டும்...


-----அனீஷ்...