31 Oct 2011

மழை நனைகிறது...

மழை நனைகிறது...


ஒற்றைகுடையில்
கொட்டும் மழையில்
நம் நடை பயணம்...!

உன் தேகம் உரசலில்,
மழைக் குளிரிலும் - என்
மனசு சூடாகிக்கொண்டிருந்தது...!

உன்னிடம்
முத்தமொன்று கேட்கச்சொல்லி,
மனசு என்னிடம்
யுத்தம் செய்ய தொடங்கியது...!

கேட்டால் நீ மறுக்கலாம்...!
ஒருவேளை,
முறைக்கவும் செய்யலாம்...!

உன்னிடம் நான்
ஒரு முத்தம் தா என்றதும்,
சத்தமில்லாத வெட்கப்புன்னகை
உன் முகத்தில்பட்டு தெறித்தது...!

இதழ் விரித்து,
குடை மறைத்து
ஒரு முத்தம் தந்தாய் நீ...!

நம் காதல் மழை கொட்ட,
உன் முத்தத்தின் ஈரம் சொட்ட,
குடையில்லாமல்
மழை நனைந்துகொண்டிருந்தது...!

----அனீஷ் ஜெ...

30 Oct 2011

என் காதல் உனக்கு...

என் காதல் உனக்கு...

 முன்குறிப்பு: இந்த வலைத்தளத்தில் இது என் நூறாவது (100-வது) கவிதை பதிவு.


காற்றை பறித்து - அதில்
காதல் விதைத்து - அதை
உன் மூச்சில் நான் சேர்ப்பேன்...!
நிலவை எடுத்து - அதில்
வண்ணம் தொடுத்து
உன் நெற்றிப்பொட்டாய் கோர்ப்பேன்...!!

உன் வழியில் கிடந்து,
சிறு பூவாய் மலர்ந்து,
உன் பாதம் நான் சுமப்பேன்...!
உன் விழியில் விழுந்து,
சின்ன இதயம் நுழைந்து,
உன் உயிரிலே கலப்பேன்...!!

உன் மவுனம் திறந்து,
அழகிய வார்த்தை எடுத்து,
கவிதை நான் நெய்வேன்...!
உன் அழகை பிடித்து
அதில் வண்ணம் குழைத்து
ஒரு வானவில் செய்வேன்...!!

உன் மார்பில் புதைந்து,
நான் என்னையே மறந்து - உனக்குள்
இரவும் முழுதும் நான் தொலைவேன்...!
உன் கன்னத்தில் தவழ்ந்து,
உன் கூந்தலில் சிதைந்து - உன்னில்
என்னை தேடி அலைவேன்...!

உன்னை நெஞ்சோடு அணைத்து,
உன் சோகங்கள் துடைத்து,
உன்னோடு நான் வருவேன்...!
என் இதயம் பிளந்து - அதில்
உன் உயிரை சுமந்து - நான்
என் காதல் உனக்கு தருவேன்...!

----அனீஷ் ஜெ...

26 Oct 2011

அவள் வீட்டு தீபாவளி !

அவள் வீட்டு தீபாவளி !


கையிலே
எரியும் மத்தாப்பும்,
இதழ்களில்
முல்லைப்பூ சிரிப்புமாய்
அவள் வீட்டுமுன் அவள்...!

பச்சை நிற
புதுப்புடவையில்
அவள் அழகாகவே தெரிந்தாள்...!

இன்றாவது அவளிடம் நான்
காதலை சொல்லிவிட வேண்டும்...!

அவளை தாண்டிச்சென்ற என்னை
அவள் கவனித்திருக்கலாம்...!
ஆனாலும்,
வழக்கம்போல் என்னை
கண்டுகொள்ளாதவள் போல் அவள்...!

அவளருகில் சென்று
காதல் சொன்னேன்...!
மவுனத்தை அள்ளி வீசிவிட்டு
விலகி சென்றாள்...!

மறுபடியும் சொன்னதும்
யோசிக்கவில்லை அவள்...!
சட்டென மறுத்தாள்...!

என் பதிலுக்கு காத்திராமல்
ஓடிச்சென்று
பட்டாசை
பற்ற வைத்தாள்...!

பட்டாசுடன் சேர்ந்து
படபடவென
வெடித்துக்கொண்டிருந்தது...!
அவள் காதல் பற்ற வைத்த
என் இதயமும்...

----அனீஷ் ஜெ...

23 Oct 2011

மனைவி !

மனைவி !


நீ தந்த கடிதங்களை
நிலவொளியில் இருந்து
விடியும்வரை
படித்துப்பார்க்கிறேன்...!

கொட்டும் அருவியின்
அருகில் அமர்ந்து,
நீ சிரிப்பதாய் நினைத்து
நானும் சிரித்துக்கொள்கிறேன்...!

உயிருள்ளவரை - என்
உயிர்துடிப்பு நீ என
கவிதை எழுதியே
காலந்தள்ளுகிறேன்...!

வருடந்தோறும் வந்துபோகும்
காதலர் தினத்தில்,
நீ தந்துபோன பரிசுகளை
தினம் தினம்
விரல்களால் உரசிப்பார்க்கிறேன்...!

நம் காலடிப்பட்டு
கடற்கரை மணல் கருத்தரித்த
காலடிச்சுவடுகளை
தேடிப்போகிறேன்...!

இருவரும் இணைந்துநின்று,
இதழ்களால் புன்னைகைத்து,
புகைப்படமாய் என்
பழைய புத்தகத்திலிருக்கும்
நம்மை உற்றுநோக்குகிறேன்...!

என்னில் நீ
இதழ்பதித்த இடங்களின்
ஈரங்களை தேடிப்பார்க்கிறேன்...!

பெண்ணே...!
இனியென்ன நான் செய்ய...?
இன்னொருவனுக்கு நீ
மனைவியான பின்பு...

----அனீஷ் ஜெ...

21 Oct 2011

இரட்டை துண்டு இதயம் !

இரட்டை துண்டு இதயம் !


உன்னை நானும்,
என்னை நீயும் சுமக்கும்
ஒற்றை இதயத்துடன்
ஒரே பாதையில் பயணித்தது...!
நம் காதல்...

சிரிப்பதற்கு காரணங்களையும்,
அழுவதற்கு தோள்களையும்
பங்கிட்டுக்கொண்டோம் நாம்...!

எல்லையில்லா சந்தோஷங்களே
நமது எல்லையானது...!

எதோ ஒரு நொடியில்
நமக்குள் ஒரு பிளவு...!

வழிமாறியது பயணம்...!

இன்றோ உடைந்துபோன
இரண்டை துண்டு இதயத்துடன்,
ஒரே பாதையின்
இரு பக்கங்களிலுமாய் நாம்...!
ஆனால் பாதையோ
பிரிந்துகிடக்கிறது...!
என்றுமே ஒன்றுசேர முடியாத
தண்டவாளம் போல...

----அனீஷ் ஜெ...

14 Oct 2011

காதல் முத்தம் !

காதல் முத்தம் !


உதடுகள் பேசிக்கொள்ளும்
ஊமை மொழி இது...!

”இச்” என்ற
இதன் சத்தத்தில்,
“நச்” என்று
நசுங்கி சிரிக்கும் மனது...!

எச்சில்கள் கூட
தீர்த்தமாவது இதில் மட்டுமே...!

இதை பரிமாறினால்தான்
காதல் கூட வயதுக்குவரும்...!

இதன் ஈரம் பட்டால்
சகாரா இதயத்திலும்
சட்டென மழை பெய்யும்...!

எல்லை மீறல்களுக்கு
ஆரம்ப புள்ளியும்,
செல்ல சண்டைகளுக்கு
முற்றுப்புள்ளியும் இதுதான்...!

உதடுகள் போடும்
கோலம் இது...!
உயிர்வரை தொடும்
ஜாலம் இது...!

காதலின் முகவரியாய்,
காமத்தின் முதல் வரியாய்,
எததனையோ உதடுகளில்
சத்தமில்லாமல்
பேசிக்கொண்டிருக்கிறது...!
இந்த காதல் முத்தம்...

----அனீஷ் ஜெ...

11 Oct 2011

முழுநிலா வானம் !

முழுநிலா வானம் !


ஒரு மழைக்கால
பவுர்ணமி இரவு...!

என் பழைய டையரியில்
முதுமையாகிக் கொண்டிருக்கும்
என்றோ எழுதிய
என் கவிதைகளை
புரட்டிபார்த்தவாறே நான்...!

கவிதை காகிதம் முழுக்க
அவள் மட்டுமே
வார்த்தைகளாகியிருந்தாள்...!

அவளை நிலவெனச்சொல்லி,
அவளுக்காய் நான் எழுதிய
முதல் கவிதை...!
முதல் வரியை படித்தபோதே
மூச்சு முட்டியது எனக்கு...!

அவளை சுமக்கும் மனது
மரண வலியில் துடிப்பதாய் உணர்வு...!
கண்ணீர்துளி விழுந்து
காகித எழுத்துக்கள்
கரைந்துவிடும் போலிருந்தது...!

டயரியை மடித்துவைத்துவிட்டு
திண்ணைக்கு வந்தேன்...!

மழை சொட்டுசொட்டாய்
பூமியை தொட்டுக்கொண்டிருந்தது...!

வானத்தை பார்த்தேன்...!

நிலைவை சுமந்த வானமோ,
மின்னல் பட்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
உடைந்துகொண்டிருந்தது...!
அவள் என்னும்
நிலவை சுமக்கும்
என் மனசை போல...

----அனீஷ் ஜெ...

9 Oct 2011

முதல் நண்பன் !

முதல் நண்பன் !


நம் ஒன்றாம் வகுப்பில்,
உன் ஒற்றை பென்சிலை
இரண்டாக உடைத்து
ஒரு பாதியை
எனக்கு தந்தபோதுதான்
நாம் முதன் முதலில்
நட்பை பரிமாறினோம்...!

என் ஆறு வயதில்
என் வாழ்க்கையில் வந்த
முதல் நண்பன் நீயானாய்...!

நாம் இருவரும்
நண்பர்களானதாலென்னவோ,
நாம் எப்பொழுதும் கடைசிதான்...!
வகுப்பு பெஞ்சிலும்...
படிப்பிலும்...

பள்ளிக்கூட மதியவேளைகளில்
நட்போடு நாம் பகிர்ந்துகொண்ட
உணவின் ருசியை
எந்த உணவும் அதன்பிறகு
எனக்கு தந்ததில்லை...!

ஐந்தாவது வகுப்பில்,
இரண்டாவது பெஞ்சில் அமரும்
இனியாவை - நாம்
இருவரும் சேர்ந்து சைட் அடித்தது
இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது எனக்கு...!
ஒருவேளை நாம்
பிஞ்சிலே பழுத்திருக்கலாம்...!!

கவலைகளே இல்லாமல்
சந்தோசங்களை சுமந்த நமக்கு,
புத்தகபைகள் கூட
சுமைகளாக தெரியவில்லை...!

பள்ளிக்கூடம்...!
விடுமுறை நாட்கள்...!
விளையாட்டு மைதானம்...!!
கோயில் திருவிழா...!
கோடை விடுமுறை...!!
இப்படி எல்லாவற்றையும் - நாம்
ஒன்றாகவே கழித்திருக்கிறோம்...!

ஆறாவது வகுப்பு பாதியில்,
உன் அப்பாவுக்கு
அலுவலக இடமாறுதல் என சொல்லி
வெளியூருக்கு புறப்பட்டாய் நீ...!
உன் பெற்றோருடன்...

நீ சென்ற பேருந்து
கடைசியில் ஒரு
புள்ளியாய் மறையும் வரை,
கண்கள் முழுக்க கண்ணீர்துளிகளுடன்
கைகாட்டி மறைந்த
உன் முகம் - இப்பொழுதும்
ஞாபகம் இருக்கிறது எனக்கு...!

ஆண்டுகள் பலவாகிவிட்டன...!
ஆனாலும் இப்பொழுது நீ
எங்கிருக்கிறாய் என
எனக்கு தெரியவில்லை...!!

எப்பொழுதாவது - உன்
முகத்தோற்றம் கொண்ட மனிதர்கள்,
என் எதிரில் வந்தால் - அவர்கள்
என்னைத்தாண்டி சென்றபின்பும்
ஒருமுறை திரும்பிபார்க்கிறேன் நான்...!

என்றாவது ஒருநாள்
என் கண்ணில் பட்டு,
நான் திரும்பிபார்க்கும் மனிதன்
நீயாக இருந்து,
நீயும் என்னை திரும்பிப்பார்க்கலாம்
என்ற நம்பிக்கையோடு...

----அனீஷ் ஜெ...

7 Oct 2011

திருடிய பொழுதுகள் !

திருடிய பொழுதுகள் !


ஒற்றையடி பாதையில்
உனக்காய் நான் காத்துநின்ற
ஓராயிரம் நிமிடங்கள்...!

உன்னிடம் நான்
காதல் தேடிய காலங்களில்
நான் தொலைத்த,
காதல் காலங்கள்...!

நீ கிடைப்பாய் என்பதற்காக
உன்னுடன் நான் செலவிட்ட
என் நாட்கள்...!

சின்ன சண்டைகளின் முடிவில்
உன் மவுனத்தை உடைப்பதற்கு
நான் போராடிய தருணங்கள்...!

உன் குரல் கேட்பதற்காகவே
தூக்கத்தை இழந்த
பல நூறு இரவுகள்...!

உன்னை நினைப்பதிலே
நான் தொலைத்துக்கொண்டிருக்கும்
என் ஆயுளின் நொடிகள்...!

என்னிடம் திருடிய
இதயத்தை நீ
கசக்கி பிழிந்து
திருப்பித் தந்துவிட்டாய்...!
எப்பொழுது நீ
திருப்பிதர போகிறாய்...?

நீ என்னிடம் திருடிய
என் பொழுதுகளை...

----அனீஷ் ஜெ...

6 Oct 2011

காதல் கடிதம் !

காதல் கடிதம் !


உன்னை கண்டதும் - என்
உதடுகளுக்குள்
உயிர்விடும் வார்த்தைகளை - நான்
கைகளால் கிறுக்க நினைத்து,
கடைசியில் மிஞ்சியது - இந்த
கடிதம் மட்டுமே...!

இப்பொழுதெல்லாம்
நீ என்
எதிரில் வரும்போதெல்லாம்,
ஏதேதோ ஆகிறது...!
என் இதயம்...

ஒவ்வொரு இரவும்
ஓராயிரம் வருடங்களாய்
நீள்வது போல்
ஒரு உணர்வு...!

என் கனவுகளின்
கடைசி நுனிவரை நுழைந்து,
தினவும் உன்னைத்தான்
தேடி அலைகிறேன் நான்...!

உனக்காகவே வாழலாம் என்றும்,
உனக்காகவே சாகலாம் என்று
உரக்க கத்துகிறது...!
என் மனது...

உனக்காய் காத்திருப்பது,
காற்றில் பறப்பதை விட
சுகமாய் இருக்கிறது...!

உன்னை காதலித்தே
காலந்தள்ளிக்கொண்டிருக்கிறேன் நான்...!

நீயும் என்னை
காதலிக்கிறாயென்றால்,
உன் இதயம் கொடு...!
இல்லையென்றால்
எனக்கொரு பதில் போடு...!!
இன்னொரு கடிதம்
எழுத வேண்டும் நான்...!
உன் இதயம் வேண்டி...

----அனீஷ் ஜெ...

5 Oct 2011

விடியல்கள் தொடரும்...

விடியல்கள் தொடரும்...


நிலா மறைந்தது...!
கூடவே அந்த முகமும்...

தூக்கம் தொலைந்து,
கனவும் கலைந்தது...!
அதனுடன் கலைந்து தொலைந்தது...!!
நெஞ்சுக்குள் மிச்சமிருந்த
சில நினைவுகள்...

பறவைகளின் சிறகசைவு,
சிட்டுக்குருவியின் சிணுங்கல் என
மவுனம் கலைத்தது வான்வெளி...!
அப்படியே என் இதயமும்...

புல்வெளிகளை நனைத்தது
அதிகாலை பனித்துளி...!
எனக்குள் நனைந்து கரைந்தது,
என்றோ முளைத்த காதல்...

தெளிவானது வானம்...!
கூடவே என் மனதும்...

இருட்டை தொலைத்த
இனிமையான விடியல்கள்
இனி தொடரும்...
பூமிக்கும்...
புதியவனாகிவிட்ட எனக்கும்...

----அனீஷ் ஜெ...