31 Mar 2018

புரிதல்!

புரிதல்!


கத்தியே சொன்னாலும்
கால் பகுதி மட்டுமே
கபாலம் கடந்து நுழைகிறது...!

அரைகுறையாய் கேட்டு
அதில்பாதி காற்றோடு விட்டு 
அரை அரக்கனாய் மாறுகிறோம்...!

பிடிக்காத ஒன்றை நீ 
செய்து தொலைக்கிறாய்...!
பிடித்ததை கூட நான் 
மறந்து முழிக்கிறேன்...!!

நேரம் ஒதுக்கவில்லை
நேரம் கிடைக்கவில்லையென
ஒதுக்கி கிடைக்கும் நேரங்களில்
ஒரு உலகப்போரே வெடிக்கிறது...!

திட்டியும் கொட்டியும்
திகட்டி சலிக்கிறோம் நாம்...!

போதும் இந்த
பொல்லாத காதலென்று
வாரம் ஒருமுறையேனும்
வசனம் பேசுகிறோம்...!

ஆனாலும் நம்மை
ஆயுளெல்லாம் காதலிக்கச்செய்கிறது...!
சண்டைகளை முடித்துவைக்க - உன்
ஒரு புன்னகையோ,
ஒருதுளி கண்ணீரோ,
சில அணைத்தல்களோ,
சிறு முகம் திருப்பலோ என
இதிலொன்று போதுமென்கிற
உன் புரிதல்...

----அனீஷ் ஜெ...

28 Feb 2018

உலகம் ஆனாய் !

உலகம் ஆனாய் !


சாயம் போன மேகம் போலே
சாயங்கால வானம் போலே
உளிபடாத கல்லை போலே
எழுதிடாத சொல்லை போலே
வெறுமை தீயில்
வெந்து கிடந்தேனே...!

நடு இரவில் நிலவை போலே
சுடும் வெயிலில் குளிரை போலே 
வெறும் நிலத்தில் பூவை போலே
பெரும் கடலில் தீவை போலே
நீங்கா நிழலாய்
நீயும் வந்தாயே...!

கொட்டி தீர்க்கும் 
காதல் கொண்டாய்...!
தொட்டு தூங்க
தோள்கள் தந்தாய்...!
முட்டிமோதும் முத்தத்தாலே
முழுதாய் கொன்றாயே...

விழிகள் பார்த்து 
உருகி நின்றேன்...!
மொழிகள் சேர்த்து
பருகி தின்றேன்...!
உன் வழிகள் தோறும்
உடன் வந்து செல்வேனே...

காதல் தந்தாய்...!
காத்திருந்தாய்...!!
ஒற்றை இதயமாய்
ஒட்டி கலந்தாய்...!!!
உயிரில் நுழைந்து - என்
உலகம் ஆனாயே...

----அனீஷ் ஜெ...

31 Jan 2018

வீடொன்று இருக்கிறது!

வீடொன்று இருக்கிறது!


வீடொன்று இருக்கிறது...!

வருபவர்களில் சிலருக்கே 
வாசல்கடந்தும் அனுமதி...!

உள்ளிருப்பவர்களோடு 
பாகுபாடுமில்லை 
பகையுமில்லை...!

வீட்டை நேசிக்கும் சிலரோ 
கூட்டி பெருக்கி
வண்ணம் தீட்டுகிறார்கள்...!

வந்தவர்களில் பலரோ
தரையை உடைத்து
சுவரை முறித்து
ஆனந்தமாகிறார்கள்...!

நேசித்துக்கொண்டிருந்தவர்களும்
பலகாலம் செல்ல
பராமரிப்பதை விட்டுவிட்டு
பாழாக்க தொடங்குகிறார்கள்...!

கடுங்கோபம் கொண்ட
வீட்டின் சொந்தக்காரனோ
அத்தனைபேரையும்
அங்கிருந்தே துரத்துகிறான்...!

பாழடைந்துபோன அந்த வீடு 
இப்போதும் அங்கேயே இருக்கிறது...!

என் நெஞ்ச்சு கூட்டிற்குள்
வீடொன்று இருக்கிறது...!

----அனீஷ் ஜெ...