கத்தியே சொன்னாலும்
கால் பகுதி மட்டுமே
கபாலம் கடந்து நுழைகிறது...!
அரைகுறையாய் கேட்டு
அதில்பாதி காற்றோடு விட்டு
அரை அரக்கனாய் மாறுகிறோம்...!
பிடிக்காத ஒன்றை நீ
செய்து தொலைக்கிறாய்...!
பிடித்ததை கூட நான்
மறந்து முழிக்கிறேன்...!!
நேரம் ஒதுக்கவில்லை
நேரம் கிடைக்கவில்லையென
ஒதுக்கி கிடைக்கும் நேரங்களில்
ஒரு உலகப்போரே வெடிக்கிறது...!
திட்டியும் கொட்டியும்
திகட்டி சலிக்கிறோம் நாம்...!
போதும் இந்த
பொல்லாத காதலென்று
வாரம் ஒருமுறையேனும்
வசனம் பேசுகிறோம்...!
ஆனாலும் நம்மை
ஆயுளெல்லாம் காதலிக்கச்செய்கிறது...!
சண்டைகளை முடித்துவைக்க - உன்
ஒரு புன்னகையோ,
ஒருதுளி கண்ணீரோ,
சில அணைத்தல்களோ,
சிறு முகம் திருப்பலோ என
இதிலொன்று போதுமென்கிற
உன் புரிதல்...
----அனீஷ் ஜெ...