28 Apr 2011

நிலா வீடு !

நிலா வீடு !


அன்றும் நீ
வழக்கம்போல்
என்னுடன்
சிரித்துப்பேசிக்கொண்டிருந்தாய்...!

அமாவாசையா
இல்லை பவுர்ணமியா,
வளர்பிறை நாளா
இல்லை தேய்பிறை நாளா,
அன்று எந்த நாள் என்றுகூட
எனக்கு இப்போது ஞாபகமில்லை...!

திடீரென அன்று உனக்கு,
தினமும் இரவில் - உன்
மொட்டைமாடிக்கு மேல் உதிக்கும்
நிலவின் ஞாபகம் வந்தது...!

இருட்டு வானத்தில்
தனியே தத்தளிக்கும் நிலவில்,
நாம் மட்டும்
தனியே வசித்தால்
எப்ப்டியிருக்கும் என கேட்டாய் நீ...

சிரித்தேன் நான்...!
நீல் ஆம்ஸ்டாங்குக்கு முன்னே
நீயும் நானும் பிறந்திருக்கவேண்டும்...

என் பதிலுக்கு காத்திராமல்
நீயே பேசத்தொடங்கினாய்...!

எவரும் இல்லாத நிலவு..!
எதிர்ப்புகளே இல்லாத காதல்..!!
மவுனம் உடைக்கும் பேச்சுக்கள்...!
வெட்கத்தை மறந்த தீண்டல்கள்...!!
ஏதேதோ சொன்னாய் நீ...

உன் மடிமேலே
என் தலைசாய வைத்து
நீ என்
தலைகோதி விடவேண்டும்...!
வெட்கம் சிவக்கும்
உன் கன்னங்களில்
நான் என் உதடுகளால்
கவிதை எழுத வேண்டும்...!!
நானும் என்
ஆசைகளை அடுக்கினேன்...!

வெட்கப் புன்னகை
பூத்தாய் நீ...

நாள் முழுவதும்
உன் அருகில்
நான் வேண்டும்...!
நிலவு உடைந்து
நம் உயிர் பிரியும் வரை
நீயும் நானும்
காதல் செய்ய வேண்டும்...!!
நீயும் உன் ஆசைகளை
என்னிடம் சொல்ல மறக்கவில்லை...!

உன் மடியிலே
என் மரணம் வேண்டுமென
நான் சொல்ல,
அதை நீ ஏற்றுக்கொள்ளாமல்
நான் சொன்னதையே
நீயும் திருப்பிசொல்ல,
காதலுக்கிடையிலும்
நாம் இருவரும்
கண்ணீர்விட்டது அன்றுதான்...!

ஈர முத்தத்தால்
இருவரும் மாற்றிமாற்றி
விழிகளை துடைத்துக்கொள்ள,
உன் எண்ணம் எல்லாம்
இன்னும் நிலவிலே இருந்தது...!

மீண்டும்
உன் ஆசைகளுடன்
கற்பனைகள் கலக்க,
அன்று இரவில்
நம் பேச்சில் முழுவது
நிலாவீடே
நம் வசிப்பிடமானது...!

அந்த நிலவுப்பயணத்தை
அழகாய் நான் கவிதையாக்கி
அன்று எழுதிய வரிகளில் சில
இன்றும் எனக்கு ஞாபகமிருக்கிறது...!

ஒற்றை நிலவை
ஒரே இரவில்
நாம் சுற்றிவந்தோம்..!
இரவு விடிந்ததும்,
நாம் கற்பனையிலே
நிலவில் நாம் ஒரு
வாழ்க்கையை
வாழ்ந்து முடித்திருந்தோம்...!!

அந்த தருணங்களின்
ஒவ்வொரு நொடியும்,
இன்னும் எனக்கு
ஞாபகமிருக்கிறது...!

இப்பொழுதும்
மொட்டைமாடிக்கு மேல்
நிலவு உதிக்கிறது...!

நிலவை சுமந்துகொண்டே
பல இரவுகள் நீள்கிறது...!

நினைவுகளை சுமந்துகொண்டு
இன்னும் நான் மிச்சமிருக்கிறேன்...!

நான்...!!
நிலவு...!!
இரவு...!!!
எல்லாமே இருக்கிறது இங்கு...!
தனியாக...

ஆனால்
இன்னொரு நிலாப்பயணம் போக,
நீ மட்டும் இல்லை...!
என்னிடம்...

----அனீஷ் ஜெ...

25 Apr 2011

சிறகொடிந்த பறவை நான்...

சிறகொடிந்த பறவை நான்...

 

வலிகளால்
வரையப்பட்ட
சித்திரங்களால்
சிக்கிமுக்காடுகிறது...!
என் இதயம்...

காயத்திற்கு தடவிய
மருந்தே,
என் உயிரை சமைத்து
விருந்து வைக்கிறது...!

எண்ணங்களுக்குள்
ஏதோ ஆக்கிரமித்துகொள்ள,
கவிதைகள் கூட
கண்ணீரையே பிரசவிக்கிறது...!

தொட்டதெல்லாம்
தோல்வியில் முடிய,
ஆசைகளெல்லாம்
ஆகாயத்திற்கு மேல்...!
எட்டாத தூரத்தில்...

ஏமாறி ஏமாறி
பழக்கப்பட்டதாலென்னவோ
என் மனதே - என்னை
ஏளனமாய் பார்க்கிறது...!

நம்பிக்கை துரோகமும்,
நயவஞ்சக பேச்சும் - என்
இதயத்தை வளைத்து
இன்னும் கொஞ்சம் முடமாக்குகிறது...!

நிறமற்ற
இரத்த துளிகளை
நிறுத்தாமல் உற்பத்திசெய்கிறது...!
கண்கள்...

பூமிக்கு மேலே
நரகத்தை சுமந்துகொண்டு
ஒரு வாழ்க்கை...

பூமியின் சாபமாய்
இன்னும் நீள்கிறது
என் ஆயுள்...

வாசலில் மிதிபடும்
அதிகாலை கோலமாகவும்,
நீர் தேடி உயிர் விடும்
ஒரு பாலைவனமாகவும்,
கொஞ்சம் கொஞ்சமாய்
பலியாகிபோகிறேன் நான்...!

மழையிலே கரைந்திடும்
வானத்து முகிலாகவும்,
இரவு வந்தால் சிதைந்திடும்
ஆயுளற்ற பகலாகவும்,
எனக்கே தெரியாமல்
என்னமோ ஆகிறேன் நான்...!

சுவாசிப்பதை கூட
சுமையாக உணர்கிறேன் இன்று...!
அந்த ஆக்ஸிஜன் மேலும் இப்போது
அவ்வளவாய் நம்பிக்கையில்லை...!

முடிவை தேடி
ஒரு காத்திருப்பு...!
சுமைகளை சுமந்துகொண்டு...

பறப்பது கூட
வெறும் கனவாகிப்போய்,
இன்று மெல்ல மெல்ல
உயிர்விட துடிக்கும் - ஒரு
சிறகொடிந்த பறவை நான்...

----அனீஷ் ஜெ...

22 Apr 2011

இருட்டில் ஒரு இதயத்திருடன் !

இருட்டில் ஒரு இதயத்திருடன் !


இரவின் அடையாளமாய்
மெல்லிய நிசப்தம்...!

பெரிய வானத்தின்
நட்ச்சத்திர பொக்கிஷங்களை
தன்னந்தனியாக
காவல்காத்துக்கொண்டிருந்தது..!
நிலவு...

அவளின் இதயத்தை
திருட நினைத்து
பல நாட்களாகிவிட்டது...!
பலநாட்கள்
பகலிலும் முயற்சித்துவிட்டேன்...!

இன்று இரவுக்குள்
எப்படியாவது
திருடிவிட வேண்டும்..!!
முடிவோடு நான்...

அவளின்
வீட்டின்முன் நான்...!
அக்கம் பக்கம் பார்த்தேன்...!
அடர்ந்த இருட்டில்
யாரும் இருப்பதாய் தெரியவில்லை...!

தெரு விளக்கு மட்டும்
விட்டு விட்டு
எரிந்து கொண்டு
என்னை பார்த்துகொண்டிருந்தது...!
என் திருட்டுக்கு சாட்சியாய்...

மேல்மாடியில்
மெலிதாய் தெரிந்த இருட்டு
அவள் தூங்கிவிட்டாள் என்பதை
எனக்கு சொல்லியது...!

மதில் சுவரில் குதித்து,
வீட்டு சுவரை மிதித்து
மேல் மாடியை அடையவே
பெரும்பாடாகிவிட்டது எனக்கு...

ஜன்னல் கதவுகளை
உடைக்கும் சத்தம்
இமைகளை அடைத்த
அவளின்
அயர்ந்த தூக்கத்தை
கலைக்கவில்லை...!

இப்போது
அவளின் அறைக்குள் நான்...!

தூங்கும் போது
அவள் இன்னும் கொஞ்சம்
அழகாய் தெரிந்தாள்...!

அவள் உதடுகள் பேசும்
புன்னகையோ,
தூக்கத்திலும்
அவள் முகம் முழுவதும்
பரவிக்கிடந்தது...!

இதயத்தை
திருடுவதுதான் எப்படி?
புதிய திருடன் - என்
புத்திக்கு இன்னும்
புரியவில்லை...!

அந்த மெல்லிய இருட்டில்
எதிரில் படுத்திருந்த
அவளை தவிர
எதுவும் எனக்கு தெரியவில்லை..!

மெதுவாய்
அவள் அருகில் சென்றேன்...!

என் கைப்பட்டு
ஏதோ கண்ணாடிபொருள்
கீழே விழுந்து
உடைந்து சிதறியது...!

படபடவென
விழித்துக்கொண்டாள் அவள்..!
இருட்டில் மெதுவாய்
பதுங்கிக்கொண்டேன் நான்...!

அவளின் அறைக்கு வெளியே
அனைத்து விளக்குகளும்
எரியத்தொடங்கியது தெரிந்தது...!

நான் பயந்தது போலவே
வீட்டில் அனைவருக்கும்
சத்தம் கேட்டிருக்கலாம்....!

அவளின் அறைக்கதவு
தட்டும் சத்தம்,
படபடவென கேட்டது...!
கூடவே
அவளின் பெயரை சொல்லி
அவள் அம்மா
அழைக்கும் சத்தமும்...

முதல் திருட்டிலேயே
மாட்டிக்கொள்ள போகிறேனா,
பயத்தால் வியர்த்துகொட்டியது எனக்கு...!

அவள் கதவைத்திறக்க தயாரானாள்...!

அவள் வாசல் கதவை
திறப்பதற்கு முன் - நான்
ஜன்னல் கதவை திறந்து
வெளியேறிவிட வேண்டும்..!

தட்டுதல் பலமாகவே - நான்
மெதுவாய் திறந்தேன்...!
என் இமைகளை...!

மணி எட்டாகுது..!
காலேஜ் போகலையா?
இன்னும் என்ன தூக்கம்?
என கேட்டுக்கொண்டு,
என் எதிரில
கையில் கரண்டியோடு
நின்றுகொண்டிருந்தாள்...!
என் அம்மா...

----அனீஷ் ஜெ...

19 Apr 2011

அன்புள்ள காதலிக்கு...

அன்புள்ள காதலிக்கு...


அன்புள்ள காதலிக்கு...
உன்னை மனதிலும்,
உயிரிலுமாய் சுமப்பவன்
எழுதும் கடிதம்...!

உன் நினைவுகளை சுமந்து
கனத்துப்போன மனதுடன்
நான் இங்கு நலமில்லை...!
நீயோ அங்கு நலமென
நான் நம்புகிறேன்...!

உனக்காக
கவிதை எழுதியே
பழக்கப்பட்டவன் நான்...!
முதன் முதாலாய்
கடிதம் எழுத
முயற்சிக்கிறேன்...!

கீறல் விழுந்த - என்
இதய கண்ணாடியின்
பிம்பங்களில்,
உன்னையே
ஒட்டி வைத்தவள் நீ..!

எப்போதோ
எனக்குள் நீ
எரியவிட்ட காதல் தீ
இப்போதுதான்
பற்றி எரிகிறது...!

அணைப்பதற்காய்
நான் ஊற்றும்
கண்ணீர் துளிகள் ஏனோ
பலனளிக்கவில்லை...!

உன் முத்தத்தின் ஈரம் பட்ட
என் கன்னத்தில் இன்று
கண்ணீரின் ஈரங்கள்...!
கவலையில்லை உனக்கு...!!

என் இதயத்தை
தனியே பறித்தெடுத்து,
அதன் மேல்
ஆணியை அடித்து,
என்னை நீ
சிலுவையில் அறைவதுபோல்
வலி உணர்கிறேன் நான்...

எந்த மனிதனும்
என்னை இவ்வளவு கொடூரமாய்
காயப்படுத்தியதில்லை...!

உன்னை சுமந்து கொண்டிருக்கும்
என் இதயத்தை
நீ காயப்படுத்தும்போது - அதன்
உள்ளுக்குள் இருக்கும் உனக்கு
கொஞ்சமும் வலிக்கவில்லை என்பது
ஆச்சரியம் தான்...!

கரடுமுரடான வாழ்க்கையில்
கடினமான என் பயணம்...!
நீ தூவும்
காதல் மலர்களின் மேல்
நடப்பது மட்டுமே
எனக்கான ஒரே சந்தோஷம்...!
அந்த சந்தோசத்தையும் - நீ
அபகரித்து சென்றுவிட்டாய்...!

காரணமில்லாத புறக்கணிப்புகள்...!
புதிதாய் முளைத்த முகசுளிப்புகள்...!!

எதுவுமே புரியாமல் - இப்போதும்
குழம்பி தவிக்கிறேன் நான்...!

சிரிக்கும் போது
சேர்ந்தே சிரித்திருக்கிறோம்...!
அழும்போதும் சேர்ந்தே
அழுதிருக்கிறோம்...!

ஆனால் இப்போது
அழவும் முடியாமல்,
சிரிக்கவும் தெரியாமல்
நான் மட்டும் தனியாக...!

என் உயிரோ
மரணிப்பது போல் வலிக்கிறது...!
உனக்கு அது
புரிகிறதா தெரியவில்லை...!

ஏமாற்றம் எனக்கு புதிதல்ல...!
நான் ஏமாளியாய் போனது
என் தவறுமல்ல...!!

என் ஏமாற்றங்கள் தான்
பொய் காதலையும்,
வேஷமிடும் அன்பையும்,
மோசமான
முகமூடி மனிதர்களையும்
எனக்கு
அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறது...!

ஒன்றை நீ
இப்போதாவது புரிந்துகொள்...!
என் கண்டிப்புகளும்
என் கோபங்களும்
வெறுப்பை உமிழும்
எந்திரங்களென்று நினைத்துவிடாதே...!
அவை அன்பின்
அடையாளமாக கூட இருக்கலாம்...!

இந்த காகித கடிதத்தில்
ஆங்காங்கே
காய்ந்து போன
கண்ணீர் துளியின் அடையாளங்களை - நீ
காணக்கூடும்...!

உலர்ந்த துளிகளை
காகிதத்தில் துடைக்க முயற்சிக்காதே...!
துடைக்கப்படாத என் கண்கள்
இன்னும் ஈரமாகத்தான் இருக்கிறது...!

ஒரு வேண்டுகோள்...!

உன் வாழ்க்கை புத்தகத்தில்
என் காதல் பக்கங்களை
நீ கிழித்தெறிய நினைத்தால்
கிழித்தெடுத்து விடு...!
ஆனால்
கிழித்தபின் எறிந்துவிடாதே...!

என்னை நீ
முழுவதும் தொலைத்த பின்பு
என்றாவது ஒருநாள்
என்னை நீ தேடினால்
அப்போது உடையும் - உன்
இதயத்தை ஒட்ட வைக்க
அந்த பக்கங்கள் பயன்படலாம்...!

என்னிடம் சொல்வதற்கு வேறெதுமில்லை...!

என்னை நீ வெறுக்க நினைத்தால்
இந்த கடிதத்தோடு,
என் ஞாபகங்களையும் சேர்த்து
குப்பைத்தொட்டியில் போட்டுவிடு...!

இன்னும் உன்னிடம்
காதல் கொஞ்சம் மிச்சமிருந்தால்
கடிதத்தோடு அன்பையும் இணைத்து
பத்திரப்படுத்திக்கொள்...!

தயவுசெய்து
பதில் மட்டும் போட்டுவிடாதே...!
உன்னை விட்டு
முகவரியில்லாத
தொலைவுக்கு சென்ற என்னை,
உன் கடிதம் கூட இனி
கண்டடைய முடியாது...!

இப்படிக்கு...
காற்றை சுவாசிப்பதை விட,
உன்னை நேசிப்பதையே விரும்பும்
நான்...

----அனீஷ் ஜெ...

16 Apr 2011

ஒரு துளி புன்னகை - சிறு துளி மவுனம்

ஒரு துளி புன்னகை - சிறு துளி மவுனம்


அருகில்தான்
அமர்ந்திருக்கிறாய் நீ...!

ஆனாலும் நமக்குள்
நிசப்தத்தின் இடைவளிகள்...!

என் பார்வைகளுக்கு
புன்னைகையை பதிலாக்கி
இன்னும் மவுனத்தாலேயே
புதிர் போடுகிறாய்...!

உன் வெட்க பார்வைகளும்
நம் இடைவெளிகளால்
விடை தெரியாத
கேள்விகளாகிறது...!

உன் வெட்கங்களுக்கு
வேலியிட்டு,
உன் மவுனத்தை - நீ
துடைத்தெறிவது எப்போது...?

உன் மவுனத்தை உடைக்கும்
முயற்சிகளில் நான்...!

பதிலை எதிர்பார்க்கும்
என் கேள்விகள்...!
விமர்சனங்களை எதிர்பார்த்து
ஒரு குட்டி கவிதை...!
எல்லாவற்றிற்கும்
பதிலாய் - உன்
வெட்க புன்னைகை மட்டுமே...

உன்
மவுனம் கலைக்கும் முயற்சியில்
தோற்றுப்போகிறேன் நான்...

குட்டி நிலவுகளை
ஒட்டி வைத்ததுபோல்
இரு கண்கள்...!

களவெடுத்து வானவில்லில்
கறுப்பு வண்ணமிட்டதுபோல்
இரு புருவங்கள்...!

தங்க கிண்ணங்கள் இரண்டு,
உன் அங்கத்தில்
இரு கன்னங்களாய்...

தேன் கூட்டில்
மவுன பூட்டுகளாய்
உன் உதடுகள்...!

உன் மவுனம் கலைக்கும்
முயற்சிகளில்
உன்னை நான்
ரசிக்கவும் தவறவில்லை...!

என் பார்வைகள்
உன்னை உரச,
உன் தாவணி கோபுரத்தில்
தடுக்கி விழுந்த
என் கண்களை - நீ
தண்டிப்பது எப்போது...?

இன்னும்
மவுனத்தாலே
பேசிக்கொண்டிருக்கிறாய் நீ...

உயிர் மெய்கள்
உன் உள் நாக்கிலே
உயிர்விட
நானோ
செத்துப்பிழைக்கிறேன்...!

உன் சிறு துளி மவுனம்
என்னை
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்ல துடிக்க,
இன்னும் எனக்கு
மெல்ல மெல்ல
உயிர் தந்துகொண்டிருக்கிறது...!
உன் ஒரு துளி புன்னகை...

----அனீஷ் ஜெ...

11 Apr 2011

ஒரு மழைப்பொழுதில்...

ஒரு மழைப்பொழுதில்...


ஒரு மழைப்பொழுதில்,
ஒற்றைக்குடையில்
நீயும் நானும்...

குடையில் மோதியதில்
மழைத்துளிகள்
உடைந்து சிதறிக்கொண்டிருந்தது...!

மீதி மழைத்துளிகள்
உடலின் பாதியை
நனைத்துக்கொண்டிருந்தாலும்,
குடை இன்னும் கொஞ்சம்
சிறியதாய் இருந்திருக்கலாம் என்றே
நான் நினைத்துக்கொண்டேன்...!

இத்தனை அருகில்
இதற்கு முன் உன்னை நான்
இப்படி ரசித்ததில்லை...!

உன்னை தோளோடு
அணைத்துக்கொண்டேன்...!

மழைத்துளிகள்
நீர் தெளிக்க
உன் முகம்
வெட்கக்கோலம்
போட்டுக்கொண்டிருந்தது...!

மழையும்
நமது இந்த பயணமும்
இப்படியே தொடராதா என்றேன் நான்...!

மழை இப்படியே தொடர்ந்தால்
மழையில் அப்படியே மூழ்கிவிடுவோம்
எனச்சொல்லி சிரித்தாய் நீ...!

அந்த சிரிப்பில்
இன்னொருமுறை
காதலில் மூழ்கி எழுந்தேன் நான்...

இடி மின்னைலை கண்டு
உனக்குள் வந்த பயம்,
நமக்கிடையில் இருந்த
இடைவெளியை
இன்னும் குறைத்தது...!

இடியை இன்றுதான்
எனக்கு பிடித்திருக்கிறது...!

காற்று மழையிலும் - உன்
காதல் மழையிலும்
நனைந்தபடியே ஒரு பயணம்...!

வீட்டிற்கு வந்ததும்,
ஈரம் காய்வதற்காய்
குடையை
விரித்து வைக்கும்வரை
மனசு
சிறகை விரித்து
பறந்துகொண்டிருந்தது..!

என் அறையில் இருக்கும்
அந்த குடை
ஆண்டுகள் பலவானாலும் - இப்போதும்
அடிக்கடி
என் கண்ணில் படுவதுண்டு...!

தூசி படிந்திருக்கும்
அந்த குடையை
அடிக்கடி
துடைத்து வைக்க - நான்
என் கையில் எடுக்கிறேன்...!

அன்று உலர்த்தி வைக்கப்பட்ட
அந்த குடை
நான் கையில் எடுக்குபோதெல்லாம்
ஈரமாகிவிடுகிறது...!
என் கண்ணீர் துளிபட்டு...

----அனீஷ் ஜெ...