30 Dec 2016

அடுத்த ஆண்டிற்காய்...

அடுத்த ஆண்டிற்காய்...


இந்த இரவும்,
இந்த பொழுதும்,
இந்த ஆண்டும்
இப்படியே முடியப்போகிறது...!

நடு இரவுகளின்
நட்சத்திர கொண்டாட்டங்களில்
தொலைந்து போய்விடக்கூடாது...!

அடுத்த ஆண்டிற்காய்,
பத்திரமாய் நான்
மனதின் ஓரம்
மடித்து வைத்துக்கொள்கிறேன்...!

நீ என்னும் நினைவுகளை...

----அனீஷ் ஜெ...

27 Dec 2016

நான் என்பவன் அவள் அல்ல...

நான் என்பவன் அவள் அல்ல...


நீண்டவொரு இடவெளிக்குபின்
நீண்டகால நண்பனொருவனை
மீண்டும் சந்தித்தேன் நான்...!

அரைகோப்பை தேநீருடன்
உரையாடல்கள் ஆரம்பித்தது...!

அலுவலக நேரம்...!
ஆண்டு வருமானம்...!!
அன்பான மனைவி...!
ஆண் குழந்தையொன்று....!!
அவனின் அனைத்தை பற்றியும்
அவன் பேசிக்கொண்டிருந்தான்...!

”சரிடா நீ சொல்லு” என்றவனிடம்,
”அப்படியேதான் இருக்கிறேன்” என்று
அங்கயே முற்றுப்புள்ளி வைத்தேன் நான்...!

விடவில்லை அவன்...!

மனம் எழுதிவைத்திருந்த
மர்மக்கதைகளை - என்
முகம்வழியே வாசித்திருக்கலாம் அவன்...!

இயல்பாய் இருப்பதாய் காட்ட
இதழ் சிரித்தேன் நான்....!

ஒரு நொடி எதையோ
யோசித்தான் அவன்...!

“சென்ற வாரம் அவளை
சென்னையில் பார்த்தேன் நான்”
என்றான் என்னிடம்...!

கண்கள் இறுகிய என்னை
கண்டுகொள்ளாமலே தொடர்ந்தான்...!

“அவளே புருசன் குழந்தைனு
அமர்களமா வாழ்றா,
நீ ஏன் இப்படி இருக்க?” என்றவனிடம்
புன்னகைத்தே முகம் கவிழ்த்தேன்...!

காலியான தேநீர் கோப்பையை
கீழே வைத்துவிட்டு
புறப்படத் தயாரானான்...!

வாசல்வரை வழியனுப்பவந்த என்னிடம்
“அவளை மறந்திட்டு சீக்கிரம்
கல்யாணம் பண்ணிக்கோ” என
அழுத்தமாகவே சொன்னான்.

நான் சொன்னேன்...!

“சீக்கிரம் காதலை மறந்து
சீக்கிரம் மற்றொருவரோடு வாழ
என் காதல் அவள் காதலில்லை...!”

”அவளே மறந்திட்டா” என ஆரம்பித்தவனிடம்
நான் மீண்டும் ஒருமுறை சொன்னேன்...!

“நான் என்பவன் அவள் அல்ல...”

----அனீஷ் ஜெ....

21 Dec 2016

எளிதானதா...?

எளிதானதா...?


இருகைகளையும் நாம்
இறுக்கி கோர்த்தபடியே
நீண்டதூரம் நடந்திருக்கிறோம்...!

இருக்கைகளின் எதிரெதிரில்
இருவிழியோடு விழி உரசி
முகம் நோக்கி அமர்ந்திருக்கிறோம்...!

ஊட்டிவிடப்பட்டால்
உணவில் சுவை அதிகரிக்குமென
மனதிற்குள் நம்பியிருக்கிறோம்...!

இருளை போர்த்திக்கொண்டு
இரவு முழுவது நாம்
அலைபேசியில் ஆரத்தழுவியிருக்கிறோம்...!

இமைகளை இறுக்கி மூடியே
இரு உதடுகளால் - நம்
எச்சிலின் ருசி அறிந்திருக்கிறோம்...!

குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது
குடும்பத்துடன் எங்கு வசிப்பது வரை
முடிவெடுத்து முடித்திருக்கிறோம்...!

இப்போது சொல்...!
என்னை மறப்பதென்பது உனக்கு
அவ்வளவு எளிதானதா...?

----அனீஷ் ஜெ...

12 Dec 2016

தீர்வு !

தீர்வு !


விடைதெரியாத கேள்விகளுடன் - உன்
கடைக்கண் பார்வைக்காய்
காத்துநின்றேன் நான்...!

கண்களில் வழிந்த - என்
கண்ணீரை அலட்சியபடித்தி - உன்
வழிகளில் மறைந்தாய் நீ...!

உன் பெயர் சொல்லியே
உரக்ககத்தும் நினைவுகளை
உறங்கவைக்கும் தாலட்டை
உயிருக்குள் தேடி உருகுகிறேன்...!

உன் எச்சில் பட்ட
என் உதடுகள்...!
உன் விரல்கள் தொட்ட
என் கன்னங்கள்...!
இவையனைத்தும் நினைவாலயாமாய்
கண்ணாடிமுன் தெரிகிறது....!

மறக்கும் முயற்சிகளில்
சிறிதும் முன்னேற்றமில்லை...!
ஆதலால் நான்
அம்முயற்சியை விட்டுவிட்டேன்...!

தீவிரமான தேடல்களில்தான்
தீர்வுகள் கிடைக்கிறது...!
மறப்பதென்பது இங்கு
மரணிப்பதைபோல எளிதானதல்ல...

----அனீஷ் ஜெ...


16 Nov 2016

உள்ளங்கால் !

உள்ளங்கால் !


நெற்றியில் ஒன்று...!
கன்னத்துக் குழியில் இன்னொன்று...!!
கழுத்தை சுற்றி மற்றொன்று...!
இதழ்களில் வேறொன்று...!!

இப்படி நானிட்ட
இத்தனை முத்தங்களிலும்
இல்லாத என் காதல்
உன் பாதம்பற்றி நானிட்ட
உள்ளங்கால் முத்தத்தில் இருக்கிறது...!

----அனீஷ் ஜெ...

7 Nov 2016

ஒரு கவிதை !

ஒரு கவிதை !


வெறும் தரை மீனா
துடிதுடிக்கிறேன் நானே...!
கடும்குளிர் தீ போல்
கதகதப்பாக்க வா நீ...!!

தறிகெட்டோடும் - என்
தறுதலை மனசு...!
ஒரு சொட்டு பார்த்து
உன்
காதலை ஊத்து...!!

அக்கினி நீராய்
அணையுது நெஞ்சம்...!
பார்த்து நீ சென்றால்
படர்வேன் இன்னும் கொஞ்சம்...!!

கனவுக்குள் நுழைய
ஒரு வழி காட்டு...!
உன் இதயத்தை திறந்து
என் இதயத்தை ஊட்டு...!

காதலில் மூழ்கி
சாகிறேன் நானே...!
கைதந்து என்னை
கரைசேர் மானே...!!

----அனீஷ் ஜெ...

21 Oct 2016

குழந்தையாகிறேன் !

குழந்தையாகிறேன் !


விரல்களின் ஸ்பரிசம் கொடு...!
விழிமேல் முத்தமிடு....!!

கதைகள் எதாவது சொல்...!
கன்னம் மெல்ல கிள்...!!

தாலாட்டொன்று பாடு...!
தலையணையாய் மாறு...!!

குறும்புகள் செய்யவிடு...!
குற்றங்களை மறந்து விடு...!!

தோளோடு சாய வை...!
தொட்டு தூங்க வை...!!

இப்போதே நான்
குழந்தையாகிறேன்...

----அனீஷ் ஜெ...


5 Oct 2016

இரவின் பாதைகள் !

இரவின் பாதைகள் !


இரவு மெல்ல
இமை திறக்கிறது...!

பாய் விரித்த
பாலைவன தேசத்தில்
பயணமொன்று செல்கிறோம் நாம்...!

மார்பு பள்ளத்தாக்கில் - நான்
தடுக்கி விழும்போதெல்லாம்
இடையொன்றை
இறுக்கிபிடித்தே நகருகின்றேன்...!

உதடுகளை உரசி
அக்கினி வெளிச்சத்தை
உருவாக்கும் முயற்சியில்
தோற்றுப்போகிறோம் நாம்...!

பெருமூச்சில்
பெரும்சூடு வீச,
குருதிக்குள்
குளிர்காற்று பாய்கிறது...!

மேடு பள்ளங்கள்,
சுவாச வெப்பங்கள்,
முனகல் சத்தங்களாய்
இந்த இருளை போல - நமக்கு
இரவின் பாதைகளும் நீள்கிறது...!

----அனீஷ் ஜெ...

29 Sept 2016

அவளைவிட அழகில்லை !

அவளைவிட அழகில்லை !


அழகான மாலையில்
அடிவானம் வரைந்த
அரைவட்ட வானவில்..!

நதிநீரின் அசைவுகளிலும்
நகராமல் கிடக்கும்
நிலவின் நிழல்...!

முகமெங்கும் இதழ்களால்
முனகலோடு உதிரும்
மழலையின் புன்னகை...!

அடை மழையின் சத்தமும்,
அதன் குளிரின் வெப்பமும் கலந்த
அதிகாலை தூக்கம்...!

பனித்துளி பஞ்சை
பூக்களாய் சுமக்கும்
புல்நுனி கிளைகள்...!

இத்தனை அழகையும்

மொத்தமாய் சேர்த்தேன்...!
ஆனாலும் அவைகள்

அவளைவிட அழகில்லை...!!

----அனீஷ் ஜெ...

24 Sept 2016

ஒரு தேவதை பறப்பதில்லை !

ஒரு தேவதை பறப்பதில்லை !


தேவதைகளெல்லாம்
சிறகு விரித்து பறக்குமென
என்றோ நான் கேட்ட கதை
பொய்த்துப்போனது...!
நீ நடந்தே வருகிறாய்...

வீட்டிற்கு வெளியே
வந்துவிடாதே...!
பூமியிலும் தேவதையாயென
வானம் கீழிறங்கி
வந்துவிடப்போகிறது...!!

உலர்ந்துகிடக்கும் பூவை
உன் விரல்களால் மெல்ல தொடு...!
கடவுள்களை போலவே
தேவதைகளுக்கும்
உயிர்கொடுக்கும்
சக்தியிருக்கலாம்...!

தேவதையைபோல ஏதோவொன்று
வனத்தில் தெரிந்ததென
நாளிதழொன்றில் படித்தேன்...!
மொட்டைமாடிக்கு நீ
சென்று வந்தாயா...?

உன்னைக் கண்ட
வானத்து தேவதைகள்
கடவுளிடம் சண்டையிடுகின்றன...!
வெள்ளை நிற உடை வேண்டாம்,
நீ அணிந்திருக்கும் நீலநிற சுடிதாரை
சீருடையாக்கவேண்டுமாம்...!

----அனீஷ் ஜெ...

20 Sept 2016

காதல் தருகின்றேன் !

காதல் தருகின்றேன் !


விழியால் நீ பார்த்தால்
பனியாக நான் உருகி
பாய்ந்தோடி வருகின்றேன்...!

மொழிபேசும்  உன் உதட்டில்
வெட்கங்கள் தேடி - நான்
வெகுதூரம் செல்கின்றேன்...!

கொலம்பஸாய் மாறி - உன்
தேகத்தில் மிதந்து - புதிய
தேசங்கள் தேடுகின்றேன்...!

ஆக்டோபஸ் போல - உன்
உடல்மேலே பற்றி - உன்னை
உணவாக்கி தின்கின்றேன்...!

நிலவை நகலெடுத்த - உன்
முக இதழ்களில்
முத்தங்கள் கொய்கின்றேன்...!

உலகை பகல்படுத்தும்
சூரியனின் பேரொளிபோல் - உனை
சுற்றியே ஒளிர்கின்றேன்...!

பறவை சிறகடிக்கும்
காற்றிடையிலும் மெல்லிய
கவிதைபோல் தொடுகின்றேன்...!

இரவை கடைந்தெடுத்த
கனவுகளின் வெளிச்சமாய்
காதல் தந்து செல்கின்றேன்...!

----அனீஷ் ஜெ...

15 Sept 2016

இன்று பிறந்தது !

இன்று பிறந்தது !


பெரும் பதற்றத்தோடு
வாசலில் காத்திருக்கும்
மனிதர்களில்லை...!

வலிகளையெல்லாம்
வாய் வழியே வெளியேற்றும்
அழுகை சத்தமுமில்லை...!

மருந்து பெட்டிகளோடு அலையும்
மருத்துவர்களுமில்லை...!

நலமாயிருக்க வேண்டுமென்ற
பிரார்த்தனைகள் இல்லை...!

இனிப்பு பெட்டியோடு நிற்கும்
நண்பர்களுமில்லை...!

ஆனாலும் இன்று பிறந்தது...!
காதலொன்று...

----அனீஷ் ஜெ...

7 Sept 2016

தற்கொலை !

தற்கொலை !


எதிரில் நீ வந்தால்
என் மனமோ - உன்
விழிக்குளத்தில்
விழ குதிக்கிறது....!

உன் புன்னகை கண்டால்
உயிருக்குள் எங்கோ
நஞ்சு பரவுவதுபோல
நடுக்கம் தெரிகிறது....!

கடைக்கண் பார்வை வீசி - நீ
கடந்து செல்லும் போது - என்
குட்டி இதயமோ கத்தியால்
குத்தி கிழிகிறது...!

கனவுகள் எனது
கழுத்தை இறுக்கும்போது - என்
மூச்சுக்காற்றோ - உன்
முகம் தேடுகிறது...!

நான் உயிர்வாழச்செய்கிறது...!
உன்னால் நான் தினம் செய்யும்
இந்த தற்கொலைகள்...!

----அனீஷ் ஜெ...

31 Aug 2016

மனிதர்கள் ஜாக்கிரதை !

மனிதர்கள் ஜாக்கிரதை !


கடவுள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான்...!

பூமியிலிருந்து வந்து - கடவுளின்
செவிகளின் நுழைந்தது...!
பல அலறல்களின் சத்தம்...

எட்டிநின்றே பூமியை
எட்டிப்பார்த்தான் கடவுள்...!

கூட்டமாய் சிலர்
குட்டிச் சாலையொன்றில்  - ஒருவனை
வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தனர்...!

இன்னொரிடத்தில்
இளம்பெண்ணொருவள்
இருகால் மிருகத்திற்கு
இரையாகிக்கொண்டிருந்தாள்...!

மற்றொரிடத்தில்
மனசாட்சியில்லாத
மனித வெடிகுண்டொருவன்
மரணங்கள் நிகழ்த்திக்கொண்டிருந்தான்...!

கடவுளின் மனம் படபடத்தது...!

அத்தனைபேரையும் காப்பாற்றவேண்டும்...!
அவசரமாய் பூமியை நோக்கி ஓடினான்...!

பூமியின் வாசலில் வந்தவனுக்கு
எச்சரிக்கை பலகையொன்று தென்பட்டது...!
அதை வாசித்த கடவுளோ
அடுத்த நொடியே திரும்பிப்போனான்...!

எச்சரிக்கை பலகையில்
எழுதப்பட்டிருந்தது...!
“மனிதர்கள் ஜாக்கிரதை”...

----அனீஷ் ஜெ...

29 Aug 2016

புதுவிதமாய்...

புதுவிதமாய்...


அதிகாலையில் சூரியன் மறைந்து
அந்திமாலையில் உதிக்கிறது...!

பட்டாம்பூச்சியின் வண்ணத்தை
பூவொன்று உறிஞ்சுகிறது...!

வாட்டும் வெயிலுக்கு நடுவே
வானவில்லொன்று முளைக்கிறது...!

நீண்டு பரந்த கடலோ
நதியில் பாய்ந்து கலக்கிறது...!

சீறிய புயலில் சாய்ந்த மரமொன்று
சிறு தென்றல் பட்டு நிமிர்கிறது...!

கண்மூடிய தூக்கமெல்லாம்
கனவுகள் மோதி கலைகிறது...!

வாசலில் கிடக்கும் எறும்புகளை
வண்ண கோலமொன்று மொய்க்கிறது...!

மழைநீர் விழுந்ததும்
மண் தரையும் சுடுகிறது...!

கொழுந்துவிட்டு எரியும் தீயோ
கொஞ்சம் பஞ்சு பட்டதும் அணைகிறது...!

இசையின் சப்தமொன்று
இமைகள் வழியே நுழைகிறது...!

எல்லாமே புதுவிதமாய் இருக்கின்றது...!
என்னருகில் நீ இருக்கின்றபோது...

---அனீஷ் ஜெ...

26 Aug 2016

கடவுளே காப்பாற்று !

கடவுளே காப்பாற்று !


வளர்ந்து உதிர்ந்த பூவொன்று - அவள்
வரும் வழியின்
வாசற்படிக்கு கீழே
விழுந்துகிடக்கிறது...!

மில்லிமீட்டர் கல் நுனியின்
மெல்லிய உரசலைகூட
தாங்கிக்கொள்ளும் சக்தியில்லை
தரையில் கிடக்குமந்த பூவுக்கு...!
அத்தனை மென்மை...

வாசற்படியை நோக்கி
வந்துகொண்டிருக்கிறாள் அவள்...!
இப்பூவை அவள் மிதித்துவிட்டால் என்னாவது...?
இடவலமென படபடக்கிறது என் மனது...!

கவனிக்காமலே வந்தவளின்
கால்களில் ஒன்று,
அப்பூவை பார்த்தே நகர்கிறது...!

அரைநொடி நேரத்திற்குள்
அந்த பூவின் தேகத்தை
அவள் மிதித்துவிடப்போகிறாள்...!

கடவுளே...!
காயமேதுமின்றி காப்பாற்று...!!
அவள் பாதங்களை...

----அனீஷ் ஜெ...

22 Aug 2016

அவள் பெயரும்... அந்த குரலும்...

அவள் பெயரும்... அந்த குரலும்...


கூட்டநெரிசலொன்றில்
நடந்துகொண்டிருக்கிறேன் நான்...!

அவள் பெயரைச்சொல்லி - யாரோ
அழைக்கும் சத்தம்
இரைச்சலை பிளந்துகொண்டு
இருகாதுகளில் நுழைகிறது...!

அப்படியே நின்றுவிட்டு
சுற்றும்முற்றும் பார்க்கிறேன்...!

அவளோ,
அழைத்தவரோ
அங்கிருப்பதற்கான
அடையாளமேதுமில்லை...!

மறுபடியும் பார்த்துவிட
மனம் சொல்கிறது...!

தேடும் கண்களுக்கு
தென்படவில்லை அவள்...!

எங்கிருந்து வந்ததந்த குரல்...?
ஒரு நொடியில் மறைந்தெங்கோ
சென்றுவிட்டாளா அவள்...??
யோசித்தகொண்டே மீண்டும்
நடக்கத்துவங்கினேன் நான்...!
 

ஆனால் அந்த கூட்டநெரிசலில்
அவளைத்தேடிக்கொண்டு
அங்கேயே நின்றுகொண்டிருந்தது...!

என் மனது...

----அனீஷ் ஜெ...

19 Aug 2016

பகல் பிறக்கட்டும் !

பகல் பிறக்கட்டும் !


புல்வெளி  கொஞ்சம்
பனித்துளி பருகட்டும்...!

கிளிகளின் தொண்டைக்குள்
சங்கீதம் உண்டாகட்டும்...!

சேவல்கள் மெல்ல
சிறகடித்து கூவட்டும்...!

பருகும் காலை தேநீருக்காய்
பசுக்களின் மடிசுரக்கட்டும்...!

மறைந்திருக்கும் சூரியன்
மேகம் பிளந்து பிறக்கட்டும்...!

அதிகாலை ஐந்து மணியாகிவிட்டது...!

இரவு முடியாமல்
இப்படியே தொடரப்போகிறது...!
பகல் விடியட்டும்...!!
நீ கொஞ்சம் வீட்டிற்க்கு வெளியே வா...

----அனீஷ் ஜெ...

16 Aug 2016

நீ தரும் காதல் !

நீ தரும் காதல் !


மனதை நான்
மடித்தெங்கோ வைத்துவிட்டேன்...!

இடப்பக்க இதயம்
இயங்குவதின் அசைவில்லை...!

மூளைய தூக்கியெறிந்துவிட்டு
முட்டாள்போல் அலைகின்றேன்...!

பசி மறக்க
பழக தொடங்கிவிட்டேன்...!

பக்கத்திலிருந்து பேசினாலும்
பதியவில்லை செவிகளில்...!

தனியே பேசவும் சிரிக்கவும்
தயக்கமில்லை இப்போது...!

மனிதத்தை களைந்துவிட்டு
மற்றெதுவாகவோ மாறுவதாய் உணர்வு...!

இத்தனை சக்தியா...?
நீ தரும் காதலுக்கு...

----அனீஷ் ஜெ...

10 Aug 2016

அவனுக்கு இதயமில்லை !

அவனுக்கு இதயமில்லை !


அவனை அன்புசெய்தார்கள் சிலர்....!
அவனோ அதை திருப்பிகொடுக்கவில்லை...!

நண்பனைகூட நம்புவதில்லை அவன்...!
நகைத்தார்கள்...!

அறிவுரைகளையும் அவன்
அலட்சியமே செய்கிறான்...!

கண்ணீரும்
கதறி அழுவதும் கூட
அசைத்துப்பார்க்காது அவனை...!

முகத்துக்கு நேராய் புகழ்பவர்களையும்
முறைத்த கண்களுடனே கடக்கிறான்...!

அவனுக்கு இதயமே இல்லையென
அனைவரும் பேசிக்கொண்டார்கள்...!

ஆனால் அவனுக்கோ
அப்படியிருப்பதே பிடித்திருந்தது...!

ஏனென்றால்
உடைந்த இதயங்களைவிட
இதயமில்லாததே சிறந்தது...!

----அனீஷ் ஜெ...

5 Aug 2016

முகம் தழுவி...

முகம் தழுவி...


வண்ணத்து பூச்சியின் நிறத்தை
வாரியெடுத்து சேர்த்திருக்கலாம்...!

தென்றலின் வேகத்தை
தேர்ந்தெடுத்து தைத்திருக்கலாம்...!

பஞ்சின் மென்மையெல்லாம்
பத்திரமாய் புதைத்திருக்கலாம்...!

பூந்தோட்டத்தின் வாசத்தை
பூட்டியே வைத்திருக்கலாம்...!

உரசியே சென்றாலும்
உன்மேல் காதல் கூட்டிச்செல்கிறது...!
என் முகம் தழுவிச்செல்லும்
உன் முந்தானை...

----அனீஷ் ஜெ...

2 Aug 2016

அவன் பார்த்த பார்வை !

அவன் பார்த்த பார்வை !


ஒரு பார்வைதான் பார்த்தான்...!
உயிரில் தீயின் துளி
கொழுந்துவிட்டு எரிகிறது...!

கூடலில்லை...!
கூடிக்களிக்கவில்லை...!!
ஆனாலும் அவன்
விழிகளால் பிரசவிக்கிறேன்...!!!
வெட்கங்களை...

அதிகாரமோ இல்லை
அடங்கிப்போவதோ
என்னை கட்டுப்படுத்த - அவன்
பார்வைகளூக்கே சாத்தியப்படுகிறது...!

அவன் கண்பார்த்து பேச
ஆசையிருந்தாலும்
மண்பார்க்கவே - என்
மனம் சொல்கிறது...!
விழிகளுக்கும் சூரியனுக்கும்
வித்தியாசமில்லை...!

கடும்பாறை என் நெஞ்சில்
பெரும் மழையாய் வழிகிறது...!
அவன் பார்த்த பார்வை...

----அனீஷ் ஜெ

Written By : Anish J.
Requested By : Havisha.

28 Jul 2016

கனவு முத்தம் !

கனவு முத்தம் !


கனவுகளின் நீட்சியை
கண்களில் சுமந்துகொண்டு
கண்மூடி தூங்கினேன் நான்...!

விடிந்து எழுந்தேன் நான்...!

கண்ட கனவுகளெல்லாம்
நிஜமாகியிருந்த்தது...!

இரவில் நுழைந்து - என்
கனவில் புகுந்து - என்னை
முத்தமிட்டு சென்றாயா நீ...?

----அனீஷ் ஜெ...

21 Jul 2016

அவள்... கோலம்...

அவள்... கோலம்...


அன்றிரவு மட்டும்
அதிசயமாய் நீ
கோலம்போட வெளியே வந்தாய்...!
விடிந்துவிட்டதென நினத்து
சூரியனே உதித்துவிட்டது...!

உப்புதூளில் நிறம் சேர்ந்து
நீ கோலமொன்று போட்டாய்...!
எறும்புகள் அதை மொய்க்கிறது...

நீ வெட்கம் தெளித்த
உன் முக முற்றத்தில்
கோலமொன்று - நான்
போட வேண்டும்...!
முத்தங்களால்...

----அனீஷ் ஜெ...

14 Jul 2016

அதே பொய் !

அதே பொய் !


நாம் இன்று
மீண்டும் ஒருமுறை 
சந்தித்துக்கொண்டோம்...!

தூரத்தில் உனை பார்த்ததும்
விலகி நடந்த என்னை
கையசைத்து அருகில் அழைத்தாய்...!

பக்கத்தில் நின்றிருந்த உன் கணவரிடம்
பலகாலம் பழகிய நண்பனென்றே என்னை
பரிட்சயப்படுத்தினாய் நீ...!

உன்னில் மாற்றமேதுமில்லை...!
அதே பேச்சு...!
அதே கேள்விகள்...!

கடந்தமுறை சந்தித்தபோது 
நீ கேட்ட அதே கேள்விதான் 
இன்றும் கேட்டாய்...!

நலமாய் இருக்கிறாயா...?

நானும் கடந்தமுறை சொன்ன
அதே பொய்யைத்தான் சொல்கிறேன்...!

நான் நலம்...!

----அனீஷ் ஜெ...

12 Jul 2016

எல்லை !

எல்லை !


ஆண் என்பதாலென்னவோ
அழுகையை
அடக்கியே பழகிவிட்டேன்...!

பெரும் சோகங்களில் கூட
கண்ணீர்துளி கசிந்ததாய்
ஞாபகமில்லை...!

தோல்விகளையும்,
ஏமாற்றங்களையும் கூட
புன்னகையுடனே கடந்திருக்கிறேன்...!

ஆனால் இன்று...
உனக்காய்,
உன்னால்,
உன் முன்னே
கதறி அழுகிறேன் நான்...!

புரிந்துகொள்...!

என் இதயத்தின்
வலிதாங்கும் வல்லைமையின்
எல்லை இதுதான்...

----அனீஷ் ஜெ...

8 Jul 2016

உன் துணை !

உன் துணை !


ஒரே சாலையில்
எதிரெதிர் திசையில்
கண்டுகொள்ளாமல்
கடந்து செல்கிறோம்....!

படமொன்றை திரையரங்கின்
இருவேறு வரிசைகளிலமர்ந்து
நாம் ரசிக்கிறோம்...!

ஒரே பேருந்தின்
இரு முனைகளிலுமாய் இருவரும்
பயணமொன்று செல்கிறோம்...!

உன்ன்னை உற்றுநோக்கி நிற்கும் என்னை
யாரென்று தெரியாத அலட்சியத்துடன்
கடந்துவிடாதே...!

ஒரு புன்னகை கொடு...!

ஒருவேளை
உன் துணையென்று
கடவுள் எழுதி வைத்திருப்பது
என் பெயராக கூட இருக்கலாம்...!

----அனீஷ் ஜெ...


30 Jun 2016

சில பயணங்கள் கொடுமையானது !

சில பயணங்கள் கொடுமையானது !


விழுந்து கிடக்கிறேன் நான்...!

எதையாவது பிடித்து
எழுந்து நிற்க முயற்சிக்கும்போதெல்லாம்,
கைகளுக்குள் அகப்படுவது
குத்தி கிழிக்கும் முள் சுவரே...!

வழியும் குருதியை
விழிநீரால் துடைத்துவிட்டு
பெரும்பாறைகள் கொண்ட
வெறும்தரையில் நடக்கிறேன்...!

கல்களின் கூர்மைகளில்,
தோல் தொலைத்த
கால்கள் இரண்டும்
மெல்லமாய் அழுகின்றன...!

இடையிடையே
இடி மின்னலுக்கும்
கடும் மழைக்கும் பஞ்சமில்லை...!

இலைகள் நிறைந்த
மரமொன்று
தூரத்தில் தெரிகிறது...!

இளைப்பாறும் ஆசையுடன்
வேகமாய் நான் நடக்கவே,
பெரும்புயலொன்று அதை - என்
கண்முன்னே சாய்க்கிறது...!

கதறி அழுதுகொண்டே
தரையில் சாய்கிறேன் நான்...!

நான் மறுபடியும் எழுந்து
நடந்தாக வேண்டும்...!

இந்த பயணத்தைபோலவே
கொடுமையாக நகர்கிறது...!
வாழ்க்கையும்....

----அனீஷ் ஜெ...

24 Jun 2016

நிலவும் நீயும்...

நிலவும் நீயும்...


அமாவாசை நிலவை
அண்ணாந்து பார்த்தாய் நீ...!
வானமெங்கும் பவுர்ணமி பரவியது...!!

நிலா ஒருநாள் கண்ணாடி பார்த்தது...!
உன் முகம் தெரிந்தது...!!

நிலவுக்கும் செவ்வாய்க்கும்
நாற்பதுகோடி கிலோமீட்டராம்...!
உனைபார்க்கும்போது மட்டும்தான்
நிலவினுள் செவ்”வாய்” தெரிகிறது...!

அன்றொரு நாள்
ஆம்ஸ்ட்ராங் நிலவின்மேல்
கால் பதித்தான்...!
ஆனால் நானோ
அதைவிட அழகான நிலவில்
அடிக்கடி இதழ் பதிக்கிறேன்...!!

இன்றிரவு என்னருகில்
இரு நிலவுகள் வேண்டாம்...!
வான் நிலவே...
வந்த வழியே திரும்பிப்போ...

----அனீஷ் ஜெ...

15 Jun 2016

தனிமையில் நான் !

தனிமையில் நான் !


தனிமையில் நிற்கிறேன் நான்...!

கடந்து செல்வோர் பலர்
காரணம் கேட்டு நகர்கின்றனர்...!

துரோகமெனும் வெயிலும்
ஏமாற்ற மழையும் - என்
உயிர் எரித்து நனைக்கிறது...!

கதறி அழ நினைத்தாலும்
கண்ணீர் துளிகளை
இமைகளுக்கிடையில்
இறுக்கி பதுக்கிக்கொள்கிறேன்...!

காலங்கள் கடந்து சென்றாலும் - என்
கால்கள் கடக்க வழி தெரியவில்லை...!

மனம் கனக்கும் - உன்
நினைவு பொதியுடன்
தனிமையிலே நிற்கிறேன் நான்...!
நீ விட்டுச்சென்ற
அதே இடத்தில்...

----அனீஷ் ஜெ...

6 Jun 2016

இத்தனையும் செய் !

இத்தனையும் செய் !


கட்டியணை !
காதலின் ஆழம் சொல்...!!

முத்தமிடு...!
முகத்தை முகத்தோடு புதை...!!

தோள் சாய்...!
தேகம் தழுவு...!!

இத்தனையும் செய்...!
இப்போதே சாகிறேன்...!!

----அனீஷ் ஜெ...

31 May 2016

பசி !

பசி !


என் மனத்தட்டில் மிச்சமிருக்கும்
உன் நினைவு பருக்கைகளை
மென்று தின்கிறது என் உயிர்...!

இடையில் எங்கோ சிக்கி,
இறங்காமல் நிற்கும் நினைவுகளை
கண்ணீர் குடித்தே
கரைத்துவிடுகிறது இதயம்....!

ஆனால் பசி மட்டும்
நின்றபாடில்லை இன்னும்...!
எனை விட்டுச்சென்ற
உனை மட்டும் தேடும்
என் காதல் பசி...

----அனீஷ் ஜெ...

25 May 2016

ஞாபகமிருக்கிறதா?

ஞாபகமிருக்கிறதா?


சிரிப்பை நான் மறந்து
சிலநாட்களாகிவிட்டது...!

குழிவிழுந்த கண்களில்
கண்ணீரின் ஈரம் கசிகிறது...!

விடாது பேசிக்கொண்டிருப்பதை
விட்டுவிட்டேன் நான்...!

எவர் திட்டினாலும்
ஏனென்றுகூட கேட்பதில்லை...!

ஒட்டிய கன்னங்களை
ஒத்துக்கொள்ளவில்லை முகம்...!

நட்பு உறவு என்று எதையுமே
நம்பதோன்றவில்லை இப்போது...!

ஓ...
கேட்கவே மறந்துவிட்டேன்...

ஞாபகமிருக்கிறதா என்னை...?
அடையாளமாவது தெரிகிறதா...??

சிலகாலம் முன்பு 
உனக்கு நான் உலகமாயிருந்தேன்...!

---அனீஷ் ஜெ...

13 May 2016

இறந்துவிடலாம் இதயம் !

இறந்துவிடலாம் இதயம் !


நிலம் பார்த்து நட...!
இமையை சிறிது மூடு...!

உதடுகள் புன்னகையை மறக்கட்டும்...!
கொலுசின் சத்தம் கொஞ்சம் குறையட்டும்...!

உன் எதிரில் வரும் என்னை
இன்னொருமுறை
இந்த புன்னகையோடு நீ பார்க்காதே...!
இறந்துவிடலாம் என் இதயம்...

----அனீஷ் ஜெ...

12 May 2016

ஒரு முறையேனும்...

ஒரு முறையேனும்...


பசியின் கொடூரம் உணருங்கள்...!

தோல்வியை தழுவிக்கொள்ளுங்கள்...!

துரோகங்களை கடந்து செல்லுங்கள்...!

எதற்காகவாவது கதறி அழுங்கள்...!

எவரையாவது கைதூக்கி விடுங்கள்...!

விரும்புபவர்களுக்கு விட்டுக்கொடுங்கள்...!

உயிர் உருக காதலியுங்கள்...!

இழப்பின் வலியுணருங்கள்...!


இவையனைத்தையும் செய்யுங்கள்...!
இவ்வாழ்வில் ஒருமுறையேனும்....

----அனீஷ் ஜெ...


4 May 2016

தீரா காதல் !

தீரா காதல் !


எல்லா பகல்களும்,
என் செல்பேசியில்
உன் குறுந்தகவல்களை
எதிர்பார்த்தே விடிகிறது...!

தினம் உன் முகம் காணும்
என் ஆவலோ
வாரமொருமுறையின்
வீடியோ காலில் முடிகிறது...!

உன் ஈர முத்தங்கள் கூட
கன்னத்திற்கு பதிலாய் - என்
கண்களையே நனைக்கிறது...!

தனிமையில் படுத்து
உன் நினைவுகளை அணைத்தே
உறங்குகிறேன்...!

கட்டிச்சென்ற தாலியும்
கொட்டிச்சென்ற அன்புமே
எனக்கு துணையாய்...!

கடல்கடந்து சென்ற உனக்காய்
காத்திருக்கிறேன் நான்...!
தீரா காதலுடன்...

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Akila.

3 May 2016

நிலா மேகம் !

நிலா மேகம் !


கரும் இரவில்,
சிறு இருட்டில்
நிலவொன்றை
மேகமொன்று
தின்றுகொண்டிருந்தது...!

அன்றிரவு மட்டும்
அவளுக்கு நிலவென்றும்
எனக்கு மேகமென்றும் பெயர்...!!

----அனீஷ் ஜெ....

27 Apr 2016

வேண்டுமோர் மரணம் !

வேண்டுமோர் மரணம் !


அனல்கக்கும் பார்வைகள்...!

வலிதரும் வார்த்தைகள்...!

தொடரும் தோல்விகள்...!

துரத்தும் துரோகங்கள்...!

முதுகில்குத்தும் முகமூடிகள்...!

ஏளனம் செய்யும் ஏமாற்றுக்காரர்கள்...!

அழவைக்கும் அன்புக்குரியவர்கள்...!

வேண்டுமோர் மரணம் எனக்கு...!
நரகபூமியிலிருந்து
நான் தப்பித்து செல்ல...

----அனீஷ் ஜெ...

18 Apr 2016

ஆசிர்வதிக்கப்பட்ட பூ !

ஆசிர்வதிக்கப்பட்ட பூ !


பூந்தோட்டமொன்று
பரந்து விரிந்து கிடக்கிறது...!

அசைகின்ற செடிகள்
ஆயிரக்கணக்கில் அதில்...!

கிளைகளில் அசைபவை,
கீழை விழுந்தவை என
கோடிகளில் பூக்கள்...!

பெரும் கூடைகளில்
தினம் காலையில்
சேகரிக்கின்றனர் சிலர்
அந்த பூக்களை...!

நூற்றுக்கணக்கான கூடைகளில்
நிரம்பி வழிகிறது பூக்கள்...!

பறிக்கப்பட்ட பூக்கள்,
பிரிக்கப்பட்டு பின்னர்
பயணிக்கிறது வாகனங்களில்...!

பெரும் கடைகள் முதல்
சிறு கடைகள் வரை
பகிரப்பட்டது அந்த பூக்கள்...!

பலர் வாங்கிப்போனார்கள்...!

கடவுளின் சிலைக்கோ,
கல்லறைக்கோ,
தலையில் சூடவோ,
தலைவரின் சிலைக்கோ
எங்கு வேண்டுமானாலும்
சென்றிருக்கலாம் அவை...!

அவள் வந்து
அதிலொரு பூவை வாங்கி
அவள் தலையில் சூடிக்கொண்டாள்...!

அந்த பூந்தோட்டத்தில்,
ஆயிரம் செடிகளில் பூத்த கோடி பூக்களில்,
அந்த பூ மட்டும்
ஆசிர்வதிக்கப்பட்ட பூவானது...!

----அனீஷ் ஜெ...

12 Apr 2016

காலம் !

காலம் !


புத்தக இடுக்குகளை
பிரசவ அறைகளாக்கிய
மயில் இறகுகள் இன்று
மறைந்தே போய்விட்டது...!

இருமுனை சீவிய
இரண்டு சென்டிமீட்டர்
பென்சில்துண்டுகளும் இல்லை...!

கோலி பிடித்த கைவிரல்கள்,
அலைபேசியின்
ஆங்கிரிபேர்டை பிடித்து
ஆங்காங்கே எறிகிறது...!

சைக்கிள் சக்கரத்தில்
ஊர் சுற்றும் வயதில்,
இருசக்கர வகனத்தால்
காற்று கிழிகிறது...!

கறுப்பு வெள்ளை
கேப்டன் வியூம்,
கலர் கலரான
சோட்டாபீமானது...!

ஆறு குளங்களின்
ஆழம் தொட மூழ்கியது,
நீச்சல் குளமொன்றில்
நீந்தி பழகுவதிலே முடிகிறது...!

கணக்கிட்டு பார்த்தால்,
உங்களுக்கு தந்தவைகளில் பாதிக்குமேல்,
உங்கள் குழந்தைகளிடமிருந்து பறித்துவிடும்...!
காலம்...

----அனீஷ் ஜெ...

11 Apr 2016

சின்ன இதயம் !

சின்ன இதயம் !


சுவர்கள் நான்கிலும்
சுட்டெரிக்கும் அக்னியின் ஈரம்...!

ஆரிக்கிள்கள்களில்
அமிலம் சுரக்க,
வெண்ரிக்கிள்களை
வெட்டி வீசும் உணர்வு...!

பீச்சி அடிக்கும் குருதியில்
கண்ணீரின் வாசம்...!

இடப்புறத்திலிருந்து வலப்புறமாக
இடம்மாறும் வலி...!

லப்டப் சத்தங்களுக்கிடையில்
அழுகுரலின் பின்னணி...!

இப்போதே இது
இயல்பாய் இல்லை...!
 

இன்னும் எத்தனை 
துரோகங்களைத் தாங்கும்,
என் சின்ன இதயம்...

----அனீஷ் ஜெ...


1 Apr 2016

காதலும் தோற்று மற...

காதலும் தோற்று மற...


உன் பார்வைகளிலே
உயிர் வாழ்ந்துவிடுவேன் என
உன்னிடம் உருகியிருப்பாள்...!

மெல்லப்பேச்சும்,
செல்பேசி முத்தங்களுமாய்
அவள் இரவுகளை உனக்காய்
செலவழித்திருப்பாள்...!

ஏழு ஜென்மம்
சேர்ந்து வாழ்வது,
எந்த பள்ளியில்
குழந்தையை சேர்ப்பது என
எல்லாவற்றையும் பேசியிருப்பாள்...!

உன் விரல்பிடித்து நடப்பது
சுகமென்றும்,
உன் குரல் கேட்டு வாழ்வதே
வரமென்றும் உளறியிருப்பாள்...!

இன்று...
அவள் இல்லாத தனிமையில்,
அவளை சுமக்கும் நினைவுகளுடன் நீ...!

மதுநீர் குடித்து,
விழிநீர் வடிக்க
காதலின் இழப்பு பெரிதில்லை...!
அது இதயம் திருடும் சிறு களவே...!!

ஆதலால்...
காதலும் தோற்று மற...

----அனீஷ் ஜெ...

29 Mar 2016

சாத்தானின் தேவதை !

சாத்தானின் தேவதை !


திரும்பிப்பார்த்தேன்...!
திரும்பிக்கொண்டாள்...!!

புன்னகைத்தேன்...!
முகம் மறைத்தாள்...!!

காத்திருந்தேன்...!
விலகி நடந்தாள்...!!

தொடர்ந்து சென்றேன்...!
வேகமாய் மறைந்தாள்...!!

பேசி நின்றேன்...!
முறைத்து சென்றாள்...!

பெயரை கேட்டேன்...!
மவுனம் தந்தாள்...!!

நலமா என்றேன்...!
சாத்தானே போ என்றாள்...!!

என் காதல் சொன்னேன்...!
நான் யார் தெரியுமா என்றாள்...!!

தெரியும் என்றேன்...!
விழிகள் விரித்தாள்...!!

நான் சொன்னேன்...!
நீ என்பவள் நான் என்னும்
சாத்தானின் தேவதை...

----அனீஷ் ஜெ...

28 Mar 2016

நிலா பேசியது !

நிலா பேசியது !


அமைதியில்லாத இரவுகளில்
அருகில் துணையாக நிலா...!

நடுஇரவு தாண்டினாலும்
நாங்கள் இருவரும்
சலிக்காமல் பேசிக்கொள்கிறோம்...!

பகலில் பார்த்த சூரியன்,
பக்கத்தில் பார்த்த நட்சத்திரம்,
பவுர்ணமியின் ரகசியம் என
எதையும் விட்டுவைக்காமல்
என்னிடம் கூறியது நிலா...!

எதுவும் பேசாமல்
கேட்டுக்கொண்டிருந்த என்னிடம்,
எதாவது பேசச்சொல்லி
கேட்டுக்கொண்டது நிலா...!

நானோ அவளைப்பற்றி பேசினேன்...!

நீண்ட நேரம் பேசியபின்
மீண்டும் சந்திக்கலாமென சொல்லி
விடைபெற்றுக்கொண்டோம் நாங்கள்...!

காலையில் கண்விழித்ததும்
கண்ணெதிரே நின்ற அம்மா கேட்டாள்...!
உறக்கத்தில் ஏன் உளறுகிறாய் என்று...

----அனீஷ் ஜெ...


24 Mar 2016

முதல் பார்வை !

முதல் பார்வை !


பார்த்து பார்த்து
கவனம் ஈர்த்து,
பின்தொடர்ந்து,

பின்பொருநாள் காதலை சொல்ல
அன்றிலிருந்து இதயத்தில்
ஒற்றிக்கொண்டேன் நான் உன்னை...!

குறுகுறு பேச்சும்,
சிறுசிறு முத்தமும்,
மிகப்பெரும் சண்டையும்,
அதில்பெரிய அன்புமாய்
காதலை வளார்த்தோம் நாம்...!

அம்மா அழுதது,
அப்பா திட்டியது,
அண்ணன் அடித்தது என
ஏதோ ஒரு காரணத்திற்காய்
உனை விட்டு பிரிந்தேன் நான்...!

துரோகி என்ற ஒரே வார்த்தை சொல்லி
தூரம் சென்றுவிட்டாய் நீயும்....!

உனக்காய் நான் அழுத
என் இரவுகளின் சத்தங்களை - நீ
கேட்டிருக்க வாய்ப்பில்லை...!

நீயும் அழுதிருப்பாய்...!

உன்  புதுமனைவியுடன்
உன்னை என் தோழி,
கடைத்தெருவில் கண்டதாய்
கண்டுவந்து சொன்னாள் இன்று...!

நீ நலமாகத்தான் இருக்கிறாயாம்...!

உன்னை தவறவிட்டதாய்
கதறி அழ தோன்றியது எனக்கு...!

உயிர்கொல்லும் வலிகளுமாய்
உயிர்வாழ பழகிவிட்டாலும் சிலசமயம்
மனதில் நினைத்துக்கொள்கிறேன்...!

என்னை பார்த்த அந்த
முதல் பார்வையை நீ தவிர்த்திருக்கலாம்...

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Varshini.


22 Mar 2016

சொர்க்கத்திற்கான பாதை !

சொர்க்கத்திற்கான பாதை !


வழியில் எதிர்பட்ட
வழிந்தோடும் நதியொன்றில்
சடலங்கள் மிதந்துகொண்டிருந்தது...!

கையில் அணிந்திருந்த
கைக்கடிகார முட்களோ
பின்னோக்கி நகரதொடங்கியது...!

வானத்தில் பறந்த
கானகத்தின் கழுகள்
கண்களை கொத்த முயற்சித்தது...!

அணையாத அக்னியும்,
ஆணிபோன்ற முட்களும்
பாதையெங்கும் பரவிக்கிடந்தன...!

நெளிந்து ஓடும் பாம்பும்,
ஒளிந்து தாக்கும் சிங்கமும்
பின்தொடர்ந்தன...!

கண்களில்லா முகமும்
காலில்லா உடலும் கொண்ட
மனிதர்கள் சிலர் துரத்திவந்தார்கள்...!

ஆயிரம் டெசிபெல்லில் கத்தினாலும்
நிசப்தத்தின் சத்தமே
உதடுகள் வெளியேற்றியது...!

சொர்க்கத்தை அடைந்த மனிதனொருவன்
சொல்லிக்கொண்டிருந்தான் இவைகளை...!
'எப்படியிருந்தது பயணம்'
எனக்கேட்ட கடவுளிடம்...

----அனீஷ் ஜெ...



17 Mar 2016

நான் கவிஞன் !

நான் கவிஞன் !


காகிதத்தில் - உங்கள்
காதலின் கண்ணீர்களால்
ஈரம் செய்வேன்...!

ஆணியே அறைந்தாலும்
அதை சிறுமுள்ளின் வலியென
ஆறுதல் சொல்வேன்...!

சருகுகளை சிலசமயம்
பூக்களென்பேன்...!
தேனென்று நீங்கள் சொல்வதை
விஷமென்றும் வாதிப்பேன்...!

கனவுகளின் கதைகளை
கவிதையாக்குவேன்...!

இமையென்னும்
ஜன்னல் திறந்தால்
எனக்கு பிரபஞ்சமே தெரிவதாய்
எண்ணிக்கொள்வேன்...!

சோகங்களையும் நினைவுகளையும்
சேகரித்து வைப்பேன்...!

நீங்கள்
சிரிப்பீர்களோ,
சிந்திப்பீர்களோ,
கண்ணீர் வடிப்பீர்களோ,
கசக்கி எறிவீர்களோ - இதில்
ஏதாவது ஒன்றை
என் பேனாவாலேயே சாதிப்பேன்...!
ஏனென்றால்
நான் கவிஞன்...

----அனீஷ் ஜெ...




7 Mar 2016

சண்டை !

சண்டை !


நீண்டதொரு சண்டை...!

நானா அவளா
எங்களில் யார் பேசுவதென
எங்களுக்கே தெரியாமல்
எங்களுக்குள் போட்டி...!

எதிர்படும் நேரத்தில் ஒரு
அலட்சியப் பார்வைகளுடன்
கடந்துவிடுகிறோம் நாங்கள்...!

சமையலறையில் அவள்
தனியாய் உளறும் சத்தம்
சரியாக என் காதில் விழவில்லை...!
ஆனால் பாத்திரங்களின் உரசல்சத்தம்
அதிகமாய் இன்று...!!

சமைத்த உணவை
சலிப்போடு என் முன்னே வைத்து
சட்டென முகம்திருப்பி செல்கிறாள்...!

இன்றும் எப்போதும்போல
இந்த சமையலில் குறையேதும் இல்லை...!
ஆனாலும் அது இது சரியில்லையென
அவள் காதில்விழ கத்துகிறேன்...!

முகம் திருப்பல்களும்,
முறைக்கும் விழிகளுமாய்
சண்டை தொடர்கிறது....!

இரவு முடிந்து,
இனிய காலை விடிந்த
இன்னொரு புதிய நாள்...!

நேற்றைய சண்டையில்
தோற்றுத்தர விருப்பமில்லாதவளாய்
தொடர்கிறாள் அவள்...

நானும் விட்டுக்கொடுப்பதாய் இல்லை...!

எங்கள் இருவருக்குமான சண்டை
இன்றும் தொடர்கிறது...!

துடைத்தெறியப்படாத
நேற்றை இரவின்
முத்தங்களின் ஈரங்களுடன்...

----அனீஷ் ஜெ...


24 Feb 2016

யாரோ ஒருவள் !

யாரோ ஒருவள் !


உன் காலடி மண்ணை
உள்ளங்கையில் பிடித்து - என்
உயிருக்குள் தூவுமளக்கு
உன் மேல் காதலில்லை எனக்கு...!

பேருந்து நிறுத்தம்,
கடைத்தெரு என - நீ
போகும் இடங்களில்
காத்திருக்கவும் விருப்பமில்லை எனக்கு...!

எதிர்படும் உன்னை
என் விழிகளாலே வீழ்த்தும்
எண்ணமில்லை எனக்கு...!

பக்கத்தில் நீ வந்தால்
படபடக்கவும் இல்லை...!
தூரத்தில் நீ போனால் - நான்
துயரம் கொள்ளவும் இல்லை...!!

கனவுகளில் நீ வருவதில்லை...!
காலையின் முதல் நினைவும் நீயில்லை...!!

என்றாவது நீ
என் கண்ணில்பட்டு மறையும்போது,
இன்னொருமுறை பார்க்க - என்
இருவிழிகள் தேடும்
யாரோ ஒருவள் நீ...!

----அனீஷ் ஜெ...


22 Feb 2016

பட்டாம்பூச்சி !

பட்டாம்பூச்சி !


பட்டாம்பூச்சிகள் பறப்பதை நான்
பார்த்திருக்கிறேன்...!
இன்று
பட்டாம்பூச்சியொன்று
துப்பட்டா சிறகுகளை
காற்றிலசைத்து
நடந்து செல்கிறது...!

தேன்களையும் பூக்களையும்
தேடியலைய
தேவையில்லை உனக்கு...!
தேன் தடவிய - உன்
பூமுக இதழ்கள் இருக்கும் வரை...

புழுக்கள்தான்
பட்டாம்பூச்சியாக மாறுமென்பதை
புத்தகமொன்றில் படித்திருக்கிறேன்...!
பூவொன்று
பட்டாம்பூச்சியாகுமென்பது
புரிந்தது எனக்கு உன்னால்...

அருகில் அமர்கிறாய்...!
தொட நினைத்தால்
தொலைவில் செல்கிறாய்...!!
பட்டாம்பூச்சிக்கு நீ
சற்றும் சளைத்தவளில்லை...!!!

இதயகிளைகள் உனக்காய்
இன்னொருமுறை முளைக்கிறது...!
வந்து அமர்ந்துவிடு
பட்டாம்பூச்சி பெண்ணே...

----அனீஷ் ஜெ...