அந்த பக்கம்
முதல் பெஞ்சில் நீ...!
இந்த பக்கம்
கடைசி பெஞ்சில் நான்...!
நமக்குள்
இடைவெளி இருந்தாலும்,
இடையிடையே
நீ வீசும் - அந்த
ஓரப்பார்வையில்
நமக்குள் இருக்கும் - அந்த
தூரம் கூட உடையும்...!
நீ சமைத்த உணவு என்று
நீ சொல்வதாலென்னவோ,
உணவு இடைவேளைகளில்
உன் வீட்டு உணவில்தான்
நான் பசியாறியிருக்கிறேன்...!
என் வீட்டுப்பாட புத்தகத்தில்
எதையும் நான்
எழுதியதில்லை...!
என் வீட்டுப்பாட புத்தகத்திலுள்ள - உன்
அழகிய கையெழுத்தின்
அடையாளங்களை - எந்த
ஆசிரியரும் கண்டுபிடித்ததுமில்லை...!
பள்ளிக்கூடத்திலிருந்து
உன் வீடுவரைக்கும்
பழுதடைந்த சாலை...!
கால்களை பதம்பார்க்கும்
கரடுமுரடான கற்கள்...!
நடப்பதென்னவோ நீதான்...
வலிப்பதோ என் கால்கள்...
விடுமுறை நாட்களில்
விட்டுவிட்டு சாவதுபோல் உணர்வு...!
காதலா நட்பா
கண்டுபிடிக்கமுடியாத
கேள்வியாய் அந்த உணர்வு...
அன்றொருநாள்,
அதிக மதிப்பெண் வாங்கவில்லையென
ஆங்கில ஆசிரியர் - உன்னை
அடித்துவிடவே,
பள்ளிக்கூடம் முடிந்து
போகும் வழியில்,
என் தோளில் சாய்ந்து
அழுதாய் நீ...!
நினைவாய் அந்த நிகழ்வு...!
உன்னை நான் தொலைத்து
வருடங்கள் பலவாகிவிட்டது...!
உன் கண்ணீர் துளிபட்ட
என் சட்டையும்
பழையதாகி கிழிந்துபோய்
பலநாளாகிவிட்டது...!
ஆனால்,
அந்த கண்ணீர் துளியை மட்டும்
அடிக்கடி இப்போதும்
நான் உணர்வதுண்டு...!!
என் கன்னங்களில்...
----அனீஷ் ஜெ...