17 Oct 2017

தனிமையும்... நானும்...

தனிமையும்... நானும்...


கனவுகளை புதைத்துவிட்ட
கல்லறை தோட்டம் வழியே
நடைபிணத்தின் சிறு உருவாய்
நடமாடுகிறேன் நான்...!

நிறைவேறாத ஆசைகளின்
நீண்டதொரு பட்டியல்
கவலை சேகரிக்கும் இதயத்தில்
கசங்கி கிடக்கிறது...!

நடக்கும் பாதைகளில்
நாளை பூக்கள் கிடக்குமென
இன்று கிழிக்கும் முட்களின் மேல்
இரத்தம் சொட்ட நடக்கின்றேன்...!

தாலாட்டும் சோகமும்
தலைகோதும் தனிமையும்
இமைகளின் வாசல்வழியே
இரவெல்லாம் வழிகிறது...!

எதிர்பார்த்து கிடைக்காத அன்பும்
ஏமாறி உடைந்த நெஞ்சும்
வலிதரும் பெரும் சுமையாய்
வாழ்வோடு நீள்கிறது...!

முடித்து விடலாமென நினைக்கும்
முடிவுறா என் வாழ்க்கையை
மீண்டும் வாழச்சொல்லி - என்னை
மீட்டுச் செல்கிறது....!
என் ஏதோ ஒரு நம்பிக்கை...
இல்லை
யாரோ ஒருவரின் வேண்டுதல்...

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Ra.Priyanka.

16 Oct 2017

சொல்லாத கதை !

சொல்லாத கதை !


உன் சிறு குறுஞ்செய்தியுடன்
என் அலைபேசி உதிர்க்கும்
ஒரு நொடி வெளிச்சத்திற்காய்
இருட்டிலே காத்திருந்த நேரங்கள்...!

எதிர்படும் உன்னை
நிமிர்ந்துபார்க்க மறுத்து
தரைநோக்கி கடந்து சென்று
திரும்பிபார்த்து தவித்த தருணங்கள்...!

கனவுகளா, மனதின் கற்பனையா
நினைவுகளா இல்லை
நீ வந்ததா என குழம்பியே
நான் தொலைத்த தூக்கங்கள்...!

உன்னோடு பேச முயலும்
முறைகள் ஒவ்வொன்றும்
ஓசையில்லாமல் உள்ளே
உதடுகளில் மடியும் வார்த்தைகள்...!

தினம் கொல்லும் காதலுடன்
உன்னிடம் சொல்ல எனக்கு
சொல்லாத கதைகள் பல இருக்கிறது...!
நீ மட்டும் என்னோடு இல்லை...

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Keerthana.

5 Oct 2017

நண்பன்

நண்பன்


சில சிரிப்புகளின் முடிவில்,
பல சோகங்களின் வடிவில்,
சில பாடல்களின் வரியில்,
பல பயணங்களின் வழியில்,
நிறமில்லா நீர்த்துளிகள்
விழிகளில் வந்து நிறைகிறது...!
என்றோ நான் தொலைத்த
என் நண்பனின் நினைவுகளாய்...

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Azii.