19 Sept 2011

கோயில் வாசலில்...

கோயில் வாசலில்...


பிறந்ததிலிருந்தே
தேடிப்பார்க்கிறேன்...!
கால்கள் இரண்டையும்
காணவில்லை...!!
கையும் ஒன்றுதான்...!
இன்னொன்றை தேடவில்லை...!

இறைவன் தந்ததோ
இருபது விரல்கள்...!
எனக்கு இருப்பதோ
ஐவிரல்கள்தான் ஆகமொத்தம்...!

இரு கரங்கள் இருந்தும் - எனக்கு
ஆதரவு கரம் தர யாருமில்லை...!
இரக்கமில்லாத இதயங்கள்...!!

உழைக்கவும்,உணவுக்கும்
எனக்கு வழியில்லை...!

குப்பைதொட்டியே
எனக்கு உணவூட்டியது...!
கூரையில்லா குப்பைமேடு
எனக்கு கூடாரமானது...!!

பசியை தவிர,
அதிகமாய் எதையும்
ரசித்ததில்லை நான்...!

அன்றொருநாள்...
என் பார்வையில் பட்டது...!
அந்த வழியருகில் இருந்த
கோயில் வாசல்...

என்னைப்போலவே அங்கு
ஏராளமானோர்...!

சிலருக்கு விழியில் ஒளியில்லை...!
பலருக்கு உடலில் சில உறுப்பில்லை...!!

வருவோர் போவோரெல்லாம்
விட்டெறிந்து போயினர்...!
மதிப்பில்லாமல் மரித்துபோன,
பழைய சில்லறைகளை...!

அவமானமாக தெரியவில்லை...!
அவர்களோடு நானும் உட்கார்ந்தேன்...!

என் முன்னிலும் இப்பொழுது
சிந்ததொடங்கியது...!
சில்லறைகள்...

கூச்சல் போட்டு,
கூவி அழைத்தாலும்
குறைந்த சில்லறைகளே கிடைத்தது...!

கூட்ட நெரிசலான
கோயில் வாசலிலும்,
யாரும் கண்டுகொள்ளவில்லை...!
எங்களை...

பக்தியோடும்,
பணக்கட்டுகளோடும்
காத்திருந்தனர்...!
கடவுளை தரிசிக்க...

எடைக்கு எடை தங்கத்தால்
கடவுளுக்கு கொடை கொடுக்க,
காணிக்கை பெட்டிக்கோ
மூச்சு முட்டியது...!

பாவம் தீர்க்கும் கடவுள்
இப்போது
பணக்காரனாய்
காட்சி தந்தான்...!

காணிக்கையால்
கல்லாய் வீற்றிருந்த
கடவுளை குளிப்பாட்டி,
ஆசி கிடைத்த திருப்தியோடு
திரும்பிக்கொண்டிருந்தது...!
பக்தர் கூட்டம்...

இப்போதும் வழக்கம்போல்
கைநீட்டினேன்...!
முகம் சுழித்துக்கொண்டே
பைக்குள் கைவிட்டு
விட்டெறிந்தனர்...!
வழக்கம்போல் சில்லறையை...

உண்டியலுக்கு
உணவுகொடுக்கும் இவர்கள்,
எங்களுக்கு ஒருவேளை
உணவு கொடுத்தாலென்ன...!

யோசித்தவாறே திரும்பிபார்த்த நான்
அவனை கண்டதும் அதிர்ச்சியடைந்தேன்...!

என்னருகில் உட்கார்ந்து,
முன்னிலொரு துணிவிரித்து,
ஒரு முடவனாய்
கைநீட்டி காசு கேட்டுக்கொண்டிருந்தான்...!
கடவுள்...

----அனீஷ் ஜெ...

13 Sept 2011

அவள் அங்கிருந்து பேசுகிறாள் !

அவள் அங்கிருந்து பேசுகிறாள் !


கூட்டம் அதிகம் இல்லாத
அந்த பேருந்து நிலையம்...!

மனிதர்களை சுமந்து,
மரத்துப்போன
சிமெண்ட் நாற்காலிகள்
ஆங்காங்கே
ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன...!

என்னை சுமந்துகொண்டிருந்த
ஒரு நாற்காலியின் மேல்
நான் காத்திருந்தேன்...!
என் பேருந்திற்காய்...

கைக்கடிகாரத்தில்
மணியும்,
காணும் இடமெல்லாம்
மனிதர்களும்,
வேகமாய் பயணித்துக்கொண்டிருந்தனர்...!

என் எதிரே - ஒரு
ஒற்றை நாற்காலியில்
ஒரு தாயும் குழந்தையும்...!

கையில் ஒரு கறுப்பு பை...!
முகமெல்லாம்
கவலையின் ரேகைகள்...!
சோகத்தின் துளிகளை
மனதில் எங்கோ
மறைத்து வைத்திருப்பதன்
அடையாளங்கள்
அந்த தாயின் முகத்தில்...

கவலையே இல்லாத முகம்...!
குறும்பு செயல்கள்...!
இரண்டு பற்களுக்கிடையில்,
இரண்டு பற்கள் இல்லாததன்
இடைவெளி...!
அந்த பெண் குழந்தைக்கு,
ஐந்து வயதிருக்கும்...

அம்மாவை சுற்றியே
அவள் ஓடியாடிக்கொண்டிருந்தாள்...!
அவள் குறும்புகளை
ரசித்தபடியே நான்...!!

அவளை பார்த்துக்கொண்டிருந்த
என்னைப்பார்த்து - அவளோ
அடிக்கடி சிரிக்கவும் செய்தாள்...!

அம்மாவை இழுப்பதும்,
ஆகாயத்தை பார்த்து சிரிப்பதும்,
அடிக்கடி குதிப்பதும்,
அம்மா முறைத்ததும்
அமைதியானதுபோல் நடிப்பதும்,
அத்தனையும் என்னை
அவளை ரசிக்க வைத்தது...!

பையிலிருந்து எதையோ எடுத்து
தூரத்திலிருந்த என்னிடம் நீட்டினாள்...!
தூரத்திலிருந்தே நான் கைநீட்ட,
சிரிப்புடன் கையை
பின்னால் இழுத்துக்கொண்டாள்...!!

அங்கிருந்து அவள்
என்னிடம் ஏதோ பேசுவது போலிருந்தது...!

பேருந்து வருவதற்கு முன்
ஒருமுறை அவளது
குறும்பு பேச்சை கேட்டே ஆக வேண்டும்...!
தெரியாத என் குரல் கேட்டு,
புரியாமல் பயப்படுவாளா
யோசித்துக்கொண்டே அவளருகில் சென்றேன்...!!

நான் அருகில் சென்றதும்
அமைதியான அவளிடம்,
உன் பெயரென்ன என கேட்டேன்...!
கைகளை பிசைந்துகொண்டே
அவள் அம்மா முகத்தையும்
என் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்தாள்...!!

பதில் இல்லை...!

இன்னொருமுறை கேட்பதற்கு முன்
அவள் அம்மா என்னிடம் ஏதோ சொன்னாள்...!

என் பேருந்து வந்து விடவே
நான் டாடா சொல்லிவிட்டு பயணமானேன்...!
ஆனாலும் எனக்கும்
இன்னும் நம்ப முடியவில்லை...!!
அந்த குட்டி பெண்ணுக்கு
காதும் கேட்காது,
பேசவும் வராது என்று
அவள் அம்மா சொன்னதை...

----அனீஷ் ஜெ...

7 Sept 2011

நீ என்பவள் என் உயிராக...

நீ என்பவள் என் உயிராக...


என்
எண்ண கனவுகளில்
வண்ணங்களை
வாரி இறைத்தவள் நீ...!

என்
மூச்சுப்பையின்
மூலையில் எங்கோ - என்
முதலும் முடிவுமாய்
நிறைந்துகிடப்பவளும் நீதான்...!

உன் மவுனத்தின் குரலையும்,
உன் மனதின் காதலையும்,
கலந்தெடுத்துதான்
கவிதை நெய்கிறேன் நான்...!

உன்னை நிலவென்று
நான் பொய் சொல்வதும்,
நீ என் உயிரென்று
நான் உன்னை கொஞ்சி கொல்வதும்,
நீ ரசித்த நிகழ்வுகளாய்
உன் ரகசிய நினைவுகளில்...

முத்தம் கேட்டால் - நீ
முதலில் மறுப்பதும்,
இன்னொன்று கேட்டால்
இரு கண்களால் முறைப்பதும்,
ஆயிரம் முத்தங்களின்
ஆரம்பமாகிவிடுகின்றன...!

உன் குரல் கேட்கும் தருணங்களும்,
உன் விரல் பிடித்த பயணங்களும்
இன்னும் நீளச் சொல்லி
என்னை கேட்கிறது என் மனது...!

ஆயிரம் ஜென்மங்கள் - நான்
அவதரித்து வந்தாலும்,
நீதான் வேண்டுமென
நியாயம் பேசுகிறது என் இதயம்...!

உன்னை இழந்தால் - நான்
பிழைப்பதற்கு வழியேயில்லை...!
ஏனென்றால்,
என் இதயத்தோடு துடித்து
என்னுள்ளே பரவிக்கிடக்கும்
என் ஒற்றை உயிர் நீ...

----அனீஷ் ஜெ...

2 Sept 2011

அவளின் இரயில் பயணத்தில்...

அவளின் இரயில் பயணத்தில்...


அப்பொழுதுதான்
இரவு மணி
இரண்டை தாண்டியிருக்கும்...!

என் கனவுலகம்
வெற்றிடங்களால்
வெறிச்சோடி கிடக்க,
ஆழ்ந்த தூக்கத்தில் நான்...!

என் செல்போனோ
மெல்ல சிணுங்கும் சத்தம்...!

சத்தம் வந்த
இடத்தை நோக்கி
என் கைகள் தேட,
கண்கள் மூடிய தூக்கத்தில்
இன்னும் நான்...

செல்போனை
காதோடு அணைத்தபடி,
உளறல்களின்
ஊமை பாஷையில்
ஹலோ சொன்னேன் நான்...!

அங்கிருந்தும் அதே ஹலோ...!
அது அவளின் குரல்...!!
அவளென்று தெரிந்த
அடுத்த நொடியே
தூக்கம் கலைந்தது எனக்கு...!

காற்றின்
கதறல் சத்தத்துடன்,
தண்டவாள இரயிலின்
தடதட சத்தம்
பெரிதாய் கேட்டது...!

இரண்டு நாட்களுக்கு முன் - அவள்
இரயில் பயணம் பற்றி சொன்னது
இப்போது எனக்கு ஞாபகம் வந்தது...!

இரயிலின்
இரைச்சல்களுக்கிடையில்
அவளின் குரல்
மெலிதாய் கேட்டது...!

இரயில் நிலையம் முதல்,
இரவு நேர இரயில் பயணம் வரை
எதையும் விடவில்லை அவள்...!
எல்லாவற்றை பற்றியும் பேசினாள்...!!

சற்றும் எதிர்பார்க்கவில்லை நான்...!
செல்போன் வழியே
சட்டென்று ஒரு முத்தம் தந்தாள்...!

என்னாச்சு என்ற எனக்கு - ஒரு
சின்ன சிரிப்பு சத்தம் மட்டுமே
பதிலாய் கிடைத்தது...!

நல்லா தூங்கு என சொல்லி
போன் வைத்தாள் அவள்...!

சத்தம் மொத்தமாய்
நிசப்தமானது இப்போது...!
என் இதயம் மட்டும்
இடி போல் சத்தம் துடித்தது...!!

மொட்டுகளாய் - என்
குட்டி நெஞ்சில் - நான்
நட்டு வைத்திருந்த காதல்,
பூவாய் முட்டி விரிய தொடங்கியது...!

அன்றிரவு - என்
நினைவுகள் முழுவதும்,
அவளையும்,
அவள் பயணித்துக்கொண்டிருக்கும்
இரயிலையும் சுற்றி வந்தது...!

எனக்கும் அவளுடன் சேர்ந்து
பயணிக்க வேண்டும் போலிருந்தது...!
நான் மரணிக்கும் வரை,
அவளின் கைகளை கோர்த்தபடியே
ஒரு காதல் பயணம்...

----அனீஷ் ஜெ...