22 Aug 2016

அவள் பெயரும்... அந்த குரலும்...

அவள் பெயரும்... அந்த குரலும்...


கூட்டநெரிசலொன்றில்
நடந்துகொண்டிருக்கிறேன் நான்...!

அவள் பெயரைச்சொல்லி - யாரோ
அழைக்கும் சத்தம்
இரைச்சலை பிளந்துகொண்டு
இருகாதுகளில் நுழைகிறது...!

அப்படியே நின்றுவிட்டு
சுற்றும்முற்றும் பார்க்கிறேன்...!

அவளோ,
அழைத்தவரோ
அங்கிருப்பதற்கான
அடையாளமேதுமில்லை...!

மறுபடியும் பார்த்துவிட
மனம் சொல்கிறது...!

தேடும் கண்களுக்கு
தென்படவில்லை அவள்...!

எங்கிருந்து வந்ததந்த குரல்...?
ஒரு நொடியில் மறைந்தெங்கோ
சென்றுவிட்டாளா அவள்...??
யோசித்தகொண்டே மீண்டும்
நடக்கத்துவங்கினேன் நான்...!
 

ஆனால் அந்த கூட்டநெரிசலில்
அவளைத்தேடிக்கொண்டு
அங்கேயே நின்றுகொண்டிருந்தது...!

என் மனது...

----அனீஷ் ஜெ...

19 Aug 2016

பகல் பிறக்கட்டும் !

பகல் பிறக்கட்டும் !


புல்வெளி  கொஞ்சம்
பனித்துளி பருகட்டும்...!

கிளிகளின் தொண்டைக்குள்
சங்கீதம் உண்டாகட்டும்...!

சேவல்கள் மெல்ல
சிறகடித்து கூவட்டும்...!

பருகும் காலை தேநீருக்காய்
பசுக்களின் மடிசுரக்கட்டும்...!

மறைந்திருக்கும் சூரியன்
மேகம் பிளந்து பிறக்கட்டும்...!

அதிகாலை ஐந்து மணியாகிவிட்டது...!

இரவு முடியாமல்
இப்படியே தொடரப்போகிறது...!
பகல் விடியட்டும்...!!
நீ கொஞ்சம் வீட்டிற்க்கு வெளியே வா...

----அனீஷ் ஜெ...

16 Aug 2016

நீ தரும் காதல் !

நீ தரும் காதல் !


மனதை நான்
மடித்தெங்கோ வைத்துவிட்டேன்...!

இடப்பக்க இதயம்
இயங்குவதின் அசைவில்லை...!

மூளைய தூக்கியெறிந்துவிட்டு
முட்டாள்போல் அலைகின்றேன்...!

பசி மறக்க
பழக தொடங்கிவிட்டேன்...!

பக்கத்திலிருந்து பேசினாலும்
பதியவில்லை செவிகளில்...!

தனியே பேசவும் சிரிக்கவும்
தயக்கமில்லை இப்போது...!

மனிதத்தை களைந்துவிட்டு
மற்றெதுவாகவோ மாறுவதாய் உணர்வு...!

இத்தனை சக்தியா...?
நீ தரும் காதலுக்கு...

----அனீஷ் ஜெ...

10 Aug 2016

அவனுக்கு இதயமில்லை !

அவனுக்கு இதயமில்லை !


அவனை அன்புசெய்தார்கள் சிலர்....!
அவனோ அதை திருப்பிகொடுக்கவில்லை...!

நண்பனைகூட நம்புவதில்லை அவன்...!
நகைத்தார்கள்...!

அறிவுரைகளையும் அவன்
அலட்சியமே செய்கிறான்...!

கண்ணீரும்
கதறி அழுவதும் கூட
அசைத்துப்பார்க்காது அவனை...!

முகத்துக்கு நேராய் புகழ்பவர்களையும்
முறைத்த கண்களுடனே கடக்கிறான்...!

அவனுக்கு இதயமே இல்லையென
அனைவரும் பேசிக்கொண்டார்கள்...!

ஆனால் அவனுக்கோ
அப்படியிருப்பதே பிடித்திருந்தது...!

ஏனென்றால்
உடைந்த இதயங்களைவிட
இதயமில்லாததே சிறந்தது...!

----அனீஷ் ஜெ...

5 Aug 2016

முகம் தழுவி...

முகம் தழுவி...


வண்ணத்து பூச்சியின் நிறத்தை
வாரியெடுத்து சேர்த்திருக்கலாம்...!

தென்றலின் வேகத்தை
தேர்ந்தெடுத்து தைத்திருக்கலாம்...!

பஞ்சின் மென்மையெல்லாம்
பத்திரமாய் புதைத்திருக்கலாம்...!

பூந்தோட்டத்தின் வாசத்தை
பூட்டியே வைத்திருக்கலாம்...!

உரசியே சென்றாலும்
உன்மேல் காதல் கூட்டிச்செல்கிறது...!
என் முகம் தழுவிச்செல்லும்
உன் முந்தானை...

----அனீஷ் ஜெ...

2 Aug 2016

அவன் பார்த்த பார்வை !

அவன் பார்த்த பார்வை !


ஒரு பார்வைதான் பார்த்தான்...!
உயிரில் தீயின் துளி
கொழுந்துவிட்டு எரிகிறது...!

கூடலில்லை...!
கூடிக்களிக்கவில்லை...!!
ஆனாலும் அவன்
விழிகளால் பிரசவிக்கிறேன்...!!!
வெட்கங்களை...

அதிகாரமோ இல்லை
அடங்கிப்போவதோ
என்னை கட்டுப்படுத்த - அவன்
பார்வைகளூக்கே சாத்தியப்படுகிறது...!

அவன் கண்பார்த்து பேச
ஆசையிருந்தாலும்
மண்பார்க்கவே - என்
மனம் சொல்கிறது...!
விழிகளுக்கும் சூரியனுக்கும்
வித்தியாசமில்லை...!

கடும்பாறை என் நெஞ்சில்
பெரும் மழையாய் வழிகிறது...!
அவன் பார்த்த பார்வை...

----அனீஷ் ஜெ

Written By : Anish J.
Requested By : Havisha.

28 Jul 2016

கனவு முத்தம் !

கனவு முத்தம் !


கனவுகளின் நீட்சியை
கண்களில் சுமந்துகொண்டு
கண்மூடி தூங்கினேன் நான்...!

விடிந்து எழுந்தேன் நான்...!

கண்ட கனவுகளெல்லாம்
நிஜமாகியிருந்த்தது...!

இரவில் நுழைந்து - என்
கனவில் புகுந்து - என்னை
முத்தமிட்டு சென்றாயா நீ...?

----அனீஷ் ஜெ...

21 Jul 2016

அவள்... கோலம்...

அவள்... கோலம்...


அன்றிரவு மட்டும்
அதிசயமாய் நீ
கோலம்போட வெளியே வந்தாய்...!
விடிந்துவிட்டதென நினத்து
சூரியனே உதித்துவிட்டது...!

உப்புதூளில் நிறம் சேர்ந்து
நீ கோலமொன்று போட்டாய்...!
எறும்புகள் அதை மொய்க்கிறது...

நீ வெட்கம் தெளித்த
உன் முக முற்றத்தில்
கோலமொன்று - நான்
போட வேண்டும்...!
முத்தங்களால்...

----அனீஷ் ஜெ...

14 Jul 2016

அதே பொய் !

அதே பொய் !


நாம் இன்று
மீண்டும் ஒருமுறை 
சந்தித்துக்கொண்டோம்...!

தூரத்தில் உனை பார்த்ததும்
விலகி நடந்த என்னை
கையசைத்து அருகில் அழைத்தாய்...!

பக்கத்தில் நின்றிருந்த உன் கணவரிடம்
பலகாலம் பழகிய நண்பனென்றே என்னை
பரிட்சயப்படுத்தினாய் நீ...!

உன்னில் மாற்றமேதுமில்லை...!
அதே பேச்சு...!
அதே கேள்விகள்...!

கடந்தமுறை சந்தித்தபோது 
நீ கேட்ட அதே கேள்விதான் 
இன்றும் கேட்டாய்...!

நலமாய் இருக்கிறாயா...?

நானும் கடந்தமுறை சொன்ன
அதே பொய்யைத்தான் சொல்கிறேன்...!

நான் நலம்...!

----அனீஷ் ஜெ...

12 Jul 2016

எல்லை !

எல்லை !


ஆண் என்பதாலென்னவோ
அழுகையை
அடக்கியே பழகிவிட்டேன்...!

பெரும் சோகங்களில் கூட
கண்ணீர்துளி கசிந்ததாய்
ஞாபகமில்லை...!

தோல்விகளையும்,
ஏமாற்றங்களையும் கூட
புன்னகையுடனே கடந்திருக்கிறேன்...!

ஆனால் இன்று...
உனக்காய்,
உன்னால்,
உன் முன்னே
கதறி அழுகிறேன் நான்...!

புரிந்துகொள்...!

என் இதயத்தின்
வலிதாங்கும் வல்லைமையின்
எல்லை இதுதான்...

----அனீஷ் ஜெ...