27 Apr 2016

வேண்டுமோர் மரணம் !

வேண்டுமோர் மரணம் !


அனல்கக்கும் பார்வைகள்...!

வலிதரும் வார்த்தைகள்...!

தொடரும் தோல்விகள்...!

துரத்தும் துரோகங்கள்...!

முதுகில்குத்தும் முகமூடிகள்...!

ஏளனம் செய்யும் ஏமாற்றுக்காரர்கள்...!

அழவைக்கும் அன்புக்குரியவர்கள்...!

வேண்டுமோர் மரணம் எனக்கு...!
நரகபூமியிலிருந்து
நான் தப்பித்து செல்ல...

----அனீஷ் ஜெ...

18 Apr 2016

ஆசிர்வதிக்கப்பட்ட பூ !

ஆசிர்வதிக்கப்பட்ட பூ !


பூந்தோட்டமொன்று
பரந்து விரிந்து கிடக்கிறது...!

அசைகின்ற செடிகள்
ஆயிரக்கணக்கில் அதில்...!

கிளைகளில் அசைபவை,
கீழை விழுந்தவை என
கோடிகளில் பூக்கள்...!

பெரும் கூடைகளில்
தினம் காலையில்
சேகரிக்கின்றனர் சிலர்
அந்த பூக்களை...!

நூற்றுக்கணக்கான கூடைகளில்
நிரம்பி வழிகிறது பூக்கள்...!

பறிக்கப்பட்ட பூக்கள்,
பிரிக்கப்பட்டு பின்னர்
பயணிக்கிறது வாகனங்களில்...!

பெரும் கடைகள் முதல்
சிறு கடைகள் வரை
பகிரப்பட்டது அந்த பூக்கள்...!

பலர் வாங்கிப்போனார்கள்...!

கடவுளின் சிலைக்கோ,
கல்லறைக்கோ,
தலையில் சூடவோ,
தலைவரின் சிலைக்கோ
எங்கு வேண்டுமானாலும்
சென்றிருக்கலாம் அவை...!

அவள் வந்து
அதிலொரு பூவை வாங்கி
அவள் தலையில் சூடிக்கொண்டாள்...!

அந்த பூந்தோட்டத்தில்,
ஆயிரம் செடிகளில் பூத்த கோடி பூக்களில்,
அந்த பூ மட்டும்
ஆசிர்வதிக்கப்பட்ட பூவானது...!

----அனீஷ் ஜெ...

12 Apr 2016

காலம் !

காலம் !


புத்தக இடுக்குகளை
பிரசவ அறைகளாக்கிய
மயில் இறகுகள் இன்று
மறைந்தே போய்விட்டது...!

இருமுனை சீவிய
இரண்டு சென்டிமீட்டர்
பென்சில்துண்டுகளும் இல்லை...!

கோலி பிடித்த கைவிரல்கள்,
அலைபேசியின்
ஆங்கிரிபேர்டை பிடித்து
ஆங்காங்கே எறிகிறது...!

சைக்கிள் சக்கரத்தில்
ஊர் சுற்றும் வயதில்,
இருசக்கர வகனத்தால்
காற்று கிழிகிறது...!

கறுப்பு வெள்ளை
கேப்டன் வியூம்,
கலர் கலரான
சோட்டாபீமானது...!

ஆறு குளங்களின்
ஆழம் தொட மூழ்கியது,
நீச்சல் குளமொன்றில்
நீந்தி பழகுவதிலே முடிகிறது...!

கணக்கிட்டு பார்த்தால்,
உங்களுக்கு தந்தவைகளில் பாதிக்குமேல்,
உங்கள் குழந்தைகளிடமிருந்து பறித்துவிடும்...!
காலம்...

----அனீஷ் ஜெ...

11 Apr 2016

சின்ன இதயம் !

சின்ன இதயம் !


சுவர்கள் நான்கிலும்
சுட்டெரிக்கும் அக்னியின் ஈரம்...!

ஆரிக்கிள்கள்களில்
அமிலம் சுரக்க,
வெண்ரிக்கிள்களை
வெட்டி வீசும் உணர்வு...!

பீச்சி அடிக்கும் குருதியில்
கண்ணீரின் வாசம்...!

இடப்புறத்திலிருந்து வலப்புறமாக
இடம்மாறும் வலி...!

லப்டப் சத்தங்களுக்கிடையில்
அழுகுரலின் பின்னணி...!

இப்போதே இது
இயல்பாய் இல்லை...!
 

இன்னும் எத்தனை 
துரோகங்களைத் தாங்கும்,
என் சின்ன இதயம்...

----அனீஷ் ஜெ...


1 Apr 2016

காதலும் தோற்று மற...

காதலும் தோற்று மற...


உன் பார்வைகளிலே
உயிர் வாழ்ந்துவிடுவேன் என
உன்னிடம் உருகியிருப்பாள்...!

மெல்லப்பேச்சும்,
செல்பேசி முத்தங்களுமாய்
அவள் இரவுகளை உனக்காய்
செலவழித்திருப்பாள்...!

ஏழு ஜென்மம்
சேர்ந்து வாழ்வது,
எந்த பள்ளியில்
குழந்தையை சேர்ப்பது என
எல்லாவற்றையும் பேசியிருப்பாள்...!

உன் விரல்பிடித்து நடப்பது
சுகமென்றும்,
உன் குரல் கேட்டு வாழ்வதே
வரமென்றும் உளறியிருப்பாள்...!

இன்று...
அவள் இல்லாத தனிமையில்,
அவளை சுமக்கும் நினைவுகளுடன் நீ...!

மதுநீர் குடித்து,
விழிநீர் வடிக்க
காதலின் இழப்பு பெரிதில்லை...!
அது இதயம் திருடும் சிறு களவே...!!

ஆதலால்...
காதலும் தோற்று மற...

----அனீஷ் ஜெ...