22 Oct 2010

அவள் ரசித்த கவிதை


காற்றோ மரங்களோடு
கைகலப்பு செய்துகொண்டிருந்தது...!

சிட்டுக்குருவிகளின்
சிணுங்கல் சத்தம்...!

சூரிய ஒளியோ
சுருங்கிப்போய்
நிலவு வர
வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்தது... !

மாலைநேரம் மங்கிப்போய்
மெல்லமாய்,
இரவு தொடங்கும் தருணம் அது...!

அந்த பூங்காவில்
அவனும் அவளும்...!

ஒட்டிப் பிறந்த
இரட்டை குழந்தைகள் போல்
தொட்டுக்கொண்டிருந்தனர்.. .!

இருவரும் காதலிக்க தொடங்கி
இரண்டோ மூன்றோ வருடங்கள்
ஆகியிருக்கலாம்...!

சின்ன கொஞ்சல்கள்...!
செல்ல கோபங்கள்...!!
மெல்லிய வருடல்கள்...!!!
இவைகளுக்கிடையில்
அவர்களின் பேச்சு
மூச்சு வாங்காமல்
நீண்டுகொண்டிருந்தது...!

சட்டைப் பையிலிருந்து
சட்டென்று ஒரு
காகிதத்தை எடுத்தான் அவன்...!

மூன்றாய் மடிக்கப்பட்டு
முழுவதும் கசங்கிப்போயிருந்தது...!
அந்த காகிதம்...

ஒருவேளை அது
கண்ணே மணியே என்ற
காதல் கடிதமாய் இருக்குமோ...?
யோசித்தாள் அவள்...!

அவன் பிரித்துப் படித்தான்...!
அவளோ மெல்லமாய் சிரித்தாள்...!

கடிதம் அல்ல அது...!
கவிதை...!!

வழக்கமான கவிஞர்களின் பல்லவி...!
நிலவு நீ..
நீலநிற வானம் நீ...

அவளுக்கு சலிக்கவில்லை...!
அதையும் ரசித்தாள்...!!

அங்கங்கே மெல்லமாய்
அங்கமெல்லாம் சிவக்க வெட்க்கப்பட்டாள்...!

கடைசியில்
கவிதை வாசித்து முடித்தான் அவன்...!
அவளோ புன்னகைத்தாள்...!!

கவிதை எப்படியிருக்கு
என்றான் அவன்...!

மறுநொடியோ
மனதார பாரட்டினாள் அவள்...!

கவிதை எழுதிய - இந்த
கைகளுக்கு
ஆயிரம் முத்தங்கள் கொடுக்கலாம்
என்றாள் அவள்...!

அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை...!
என்
நண்பனின் காதலியின் முத்தங்களை
என் கைகள்
என்றுமே
ஏற்றுக்கொள்ளாது என்று...

-----அனீஷ்...
SHARE THIS

3 comments: