19 Apr 2011

அன்புள்ள காதலிக்கு...


அன்புள்ள காதலிக்கு...
உன்னை மனதிலும்,
உயிரிலுமாய் சுமப்பவன்
எழுதும் கடிதம்...!

உன் நினைவுகளை சுமந்து
கனத்துப்போன மனதுடன்
நான் இங்கு நலமில்லை...!
நீயோ அங்கு நலமென
நான் நம்புகிறேன்...!

உனக்காக
கவிதை எழுதியே
பழக்கப்பட்டவன் நான்...!
முதன் முதாலாய்
கடிதம் எழுத
முயற்சிக்கிறேன்...!

கீறல் விழுந்த - என்
இதய கண்ணாடியின்
பிம்பங்களில்,
உன்னையே
ஒட்டி வைத்தவள் நீ..!

எப்போதோ
எனக்குள் நீ
எரியவிட்ட காதல் தீ
இப்போதுதான்
பற்றி எரிகிறது...!

அணைப்பதற்காய்
நான் ஊற்றும்
கண்ணீர் துளிகள் ஏனோ
பலனளிக்கவில்லை...!

உன் முத்தத்தின் ஈரம் பட்ட
என் கன்னத்தில் இன்று
கண்ணீரின் ஈரங்கள்...!
கவலையில்லை உனக்கு...!!

என் இதயத்தை
தனியே பறித்தெடுத்து,
அதன் மேல்
ஆணியை அடித்து,
என்னை நீ
சிலுவையில் அறைவதுபோல்
வலி உணர்கிறேன் நான்...

எந்த மனிதனும்
என்னை இவ்வளவு கொடூரமாய்
காயப்படுத்தியதில்லை...!

உன்னை சுமந்து கொண்டிருக்கும்
என் இதயத்தை
நீ காயப்படுத்தும்போது - அதன்
உள்ளுக்குள் இருக்கும் உனக்கு
கொஞ்சமும் வலிக்கவில்லை என்பது
ஆச்சரியம் தான்...!

கரடுமுரடான வாழ்க்கையில்
கடினமான என் பயணம்...!
நீ தூவும்
காதல் மலர்களின் மேல்
நடப்பது மட்டுமே
எனக்கான ஒரே சந்தோஷம்...!
அந்த சந்தோசத்தையும் - நீ
அபகரித்து சென்றுவிட்டாய்...!

காரணமில்லாத புறக்கணிப்புகள்...!
புதிதாய் முளைத்த முகசுளிப்புகள்...!!

எதுவுமே புரியாமல் - இப்போதும்
குழம்பி தவிக்கிறேன் நான்...!

சிரிக்கும் போது
சேர்ந்தே சிரித்திருக்கிறோம்...!
அழும்போதும் சேர்ந்தே
அழுதிருக்கிறோம்...!

ஆனால் இப்போது
அழவும் முடியாமல்,
சிரிக்கவும் தெரியாமல்
நான் மட்டும் தனியாக...!

என் உயிரோ
மரணிப்பது போல் வலிக்கிறது...!
உனக்கு அது
புரிகிறதா தெரியவில்லை...!

ஏமாற்றம் எனக்கு புதிதல்ல...!
நான் ஏமாளியாய் போனது
என் தவறுமல்ல...!!

என் ஏமாற்றங்கள் தான்
பொய் காதலையும்,
வேஷமிடும் அன்பையும்,
மோசமான
முகமூடி மனிதர்களையும்
எனக்கு
அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறது...!

ஒன்றை நீ
இப்போதாவது புரிந்துகொள்...!
என் கண்டிப்புகளும்
என் கோபங்களும்
வெறுப்பை உமிழும்
எந்திரங்களென்று நினைத்துவிடாதே...!
அவை அன்பின்
அடையாளமாக கூட இருக்கலாம்...!

இந்த காகித கடிதத்தில்
ஆங்காங்கே
காய்ந்து போன
கண்ணீர் துளியின் அடையாளங்களை - நீ
காணக்கூடும்...!

உலர்ந்த துளிகளை
காகிதத்தில் துடைக்க முயற்சிக்காதே...!
துடைக்கப்படாத என் கண்கள்
இன்னும் ஈரமாகத்தான் இருக்கிறது...!

ஒரு வேண்டுகோள்...!

உன் வாழ்க்கை புத்தகத்தில்
என் காதல் பக்கங்களை
நீ கிழித்தெறிய நினைத்தால்
கிழித்தெடுத்து விடு...!
ஆனால்
கிழித்தபின் எறிந்துவிடாதே...!

என்னை நீ
முழுவதும் தொலைத்த பின்பு
என்றாவது ஒருநாள்
என்னை நீ தேடினால்
அப்போது உடையும் - உன்
இதயத்தை ஒட்ட வைக்க
அந்த பக்கங்கள் பயன்படலாம்...!

என்னிடம் சொல்வதற்கு வேறெதுமில்லை...!

என்னை நீ வெறுக்க நினைத்தால்
இந்த கடிதத்தோடு,
என் ஞாபகங்களையும் சேர்த்து
குப்பைத்தொட்டியில் போட்டுவிடு...!

இன்னும் உன்னிடம்
காதல் கொஞ்சம் மிச்சமிருந்தால்
கடிதத்தோடு அன்பையும் இணைத்து
பத்திரப்படுத்திக்கொள்...!

தயவுசெய்து
பதில் மட்டும் போட்டுவிடாதே...!
உன்னை விட்டு
முகவரியில்லாத
தொலைவுக்கு சென்ற என்னை,
உன் கடிதம் கூட இனி
கண்டடைய முடியாது...!

இப்படிக்கு...
காற்றை சுவாசிப்பதை விட,
உன்னை நேசிப்பதையே விரும்பும்
நான்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

15 விமர்சனங்கள்: