22 Mar 2016

சொர்க்கத்திற்கான பாதை !


வழியில் எதிர்பட்ட
வழிந்தோடும் நதியொன்றில்
சடலங்கள் மிதந்துகொண்டிருந்தது...!

கையில் அணிந்திருந்த
கைக்கடிகார முட்களோ
பின்னோக்கி நகரதொடங்கியது...!

வானத்தில் பறந்த
கானகத்தின் கழுகள்
கண்களை கொத்த முயற்சித்தது...!

அணையாத அக்னியும்,
ஆணிபோன்ற முட்களும்
பாதையெங்கும் பரவிக்கிடந்தன...!

நெளிந்து ஓடும் பாம்பும்,
ஒளிந்து தாக்கும் சிங்கமும்
பின்தொடர்ந்தன...!

கண்களில்லா முகமும்
காலில்லா உடலும் கொண்ட
மனிதர்கள் சிலர் துரத்திவந்தார்கள்...!

ஆயிரம் டெசிபெல்லில் கத்தினாலும்
நிசப்தத்தின் சத்தமே
உதடுகள் வெளியேற்றியது...!

சொர்க்கத்தை அடைந்த மனிதனொருவன்
சொல்லிக்கொண்டிருந்தான் இவைகளை...!
'எப்படியிருந்தது பயணம்'
எனக்கேட்ட கடவுளிடம்...

----அனீஷ் ஜெ...



SHARE THIS

1 comment:

  1. வாசன்.செMarch 22, 2016 6:54 pm

    சொர்க்கதிற்கான பாதை கூட கடினமாதான் இருக்கும். கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது என்பதை இதைவிட நல்லா கவிதையா எழுத முடியாது. அருமை ப்ரோ

    ReplyDelete