31 Oct 2015

காகிதம் !

காகிதம் !


உலர்ந்தே கிடக்கிறது
அந்த காகிதத்துண்டு...!

எடுத்து எழுதுவதற்கு
எத்தனை முறை எத்தனித்தாலும்
ஏதோ ஒன்று தடுக்கிறது...!

இதயமும்,
இந்த பேனாவும்
இன்னமும் மூடியே கிடக்கிறது...!

என் மனம் பிரசவிக்கும்
எண்ணங்களுக்கும் எழுத்துகளுக்கும்
பேனா நுனியை அடைவதற்குள்ளேயே
ஆயுள் முடிகிறது...!

எழுதியாகவேண்டுமென்ற
எண்ணத்துடன்
புழுதி படிந்து கிடந்த - அந்த
வெற்றுக் காகிதத்தை - இன்று
கையிலெடுத்தேன்...!

மனதையும் பேனாவையும்
ஒருசேர திறந்தேன்...!

எதையெதையோ நினைத்து
எதையெதையோ கிறுக்க நினைத்தேன்...!

காகிதத்தை கண்களும் - என்
கண்களை காகிதமும்
முறைந்துப்பார்த்து கொண்டிருந்தன...!

ஒரே அமைதி...!

நீண்ட நேர நிசப்தத்திற்குபின்
காகித்தத்தின்மேல்
கொட்டித்தீர்த்துவிட்டன என் கண்கள்...!
கண்ணீர்துளிகளை...

இன்றும் என் கவிதைகள்
கருவறையிலே கல்லறையாகிவிட்டன...!

இன்றும் இங்கு
மாற்றமேதுமில்லை...!
ஈரமாய் போன
அந்த காகிதத்துண்டை தவிர...

----அனீஷ் ஜெ...

30 Sept 2015

தனிமை !

தனிமை !


இமை மூடி,
இதழ் சேர்த்து,
கன்னம் உரசி,
கைகள் கோர்த்து
காதல் செய்தோம் நாம் அன்று...!

இதயம் மூடி,
இரவுகள் சேர்த்து,
கவலைகள் உரசி,
கண்ணீர் கோர்த்து
தனிமை நெய்கிறேன் நான் இன்று...!

----அனீஷெ ஜெ...

31 Aug 2015

மரணப்புழுக்கள் !

மரணப்புழுக்கள் !


மரணப்புழுக்கள்
மனமெங்கும் நெளிகிறது !

வீசியெறிந்த வார்த்தைகள் - மனதை
விறகாக்கி உடைக்கிறது !

கரும்சோகங்கள்
கழுத்துக்குள் அடைக்குறது !

வலிகளெல்லாம் - இதயத்தின்
வாசற்படியிலே காத்திருக்கிறது !

பகலுக்கும் இரவுக்கும்
இரவுக்கும் பகலுக்குமான
இடைவெளிகள் மட்டுமே நீள்கிறது !

வாழ்ந்து முடிக்கையில்
வலிகளை மட்டுமே 

மிச்சம் வைத்து செல்கிறது வாழ்க்கை...!
வலிகளை மட்டுமே...

----அனீஷ் ஜெ...





31 Jul 2015

இயற்கை மாற்றம் !

இயற்கை மாற்றம் !


புயலென மூச்சு...!
மழையென வியர்வை...!!
பூகம்ப நடுக்கம்...!
எரிமலை வெப்பம்...!!

என்
ஒரு விரல் வருடலில்,
உனக்குள்
இத்தனை
இயற்கை மாற்றங்கள்...

----அனீஷ் ஜெ...

30 Jun 2015

துரோகம் !

துரோகம் !


ஆரம்பம் நான்
அடையாளம் காணவில்லை !

மெதுமெதுவாய் வளர்ந்தபோதும்
மனம் உணரவில்லை...!

மாற்றங்களும் இல்லை...!
நேற்றுவரை வலி தரவில்லை...!!

இன்றோ என்னை
ஒன்றுமில்லாமல் செய்து
மண்ணோடு சாய்த்துவிட்டது...!

உண்மைதான்...
புற்றுநோயை விட
பத்துமடங்கு கொடியதுதான்...!
இந்த துரோகம்...

----அனீஷ் ஜெ...


31 May 2015

17 Apr 2015

சரியான விடை !

சரியான விடை !


முறைத்துப் பார்த்தபடி - எனக்கு
விடைதெரியாத
ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...!

இறுக்கி அணைத்தபடி
இரு கைகளால் - அவள்
இடைதேடினேன் நான்...!

இமை மூடியபடி முனகினாள்...!
இதுதான் சரியான விடையென்று...

----அனீஷ் ஜெ...





10 Apr 2015

கவிதை எழுதுவது எப்படி?

கவிதை எழுதுவது எப்படி?


கவிதை எழுத தெரியாதென்கிறாய்...!
அப்படியென்றால்
உன் கன்னத்தில் விழும் குழிகளுக்கு
என்ன பெயர்...?

***********************************************************************************


கவிதை எழுதுவது எப்படியெனக்கேட்டு
கவலைகொள்கிறாய் நீ...!

நீ பேசும் வார்த்தைகளை
ஒரு காகிதத்தில் சேகரித்துவை...!

கவிதை எழுத தெரியாதென்கிற - உன்
கவலையும் நீங்கட்டும்...!

----அனீஷ் ஜெ...



31 Mar 2015

அச்சமில்லை !

அச்சமில்லை !


என் இருமலின்
இரைச்சல்களுக்கிடையில்
நடு இரவின்
நிசப்தங்களின் சத்தங்கள்...!

சட்டென விட்டுச்சென்ற தூக்கத்தினால்
கட்டிலின்மேல் விழித்துக்கொள்கிறேன்...!

முதுமையும் தனிமையும் - என்
முதுகை இழுத்து
நகரமுடியாமல் செய்கிறது...!

இதயத்தில் வழியே
மெதுவாய் வலியொன்று பரவுகிறது...!

இதயத்துடிப்புகளின்
இடைவெளி குறைய,
மூச்சுக்கும் மூச்சுக்குமிடையே
மிகப்பெரியதோர் இடைவெளி...!

என் கட்டளைகளுக்கு
கட்டுப்படாமல்
இமைகளோ
இறுக மூடிக்கொள்ள முயல்கிறது...!

மரணத்தின் கதவுகள்
திறப்பதுபோல உணர்வு...!

விரைவிலே நான்
மண்ணாடு மண்ணாகிவிடலாம்...!

ஆனாலும் எனக்கு அச்சமில்லை...!

எழுபது ஆண்டுகள்
வழ்ந்து முடித்துவிட்ட நான்,
இந்த மரணத்தின் நொடிக்காகதான்
இரண்டாண்டுகளாய் காத்திருக்கிறேன்...!

என்னை விட்டு
விண்ணில் சென்ற,
அவளோடு
அடுத்த ஜென்மத்திலும் வாழ...

----அனீஷ் ஜெ...






27 Feb 2015

எழுத்துப்பிழை !

எழுத்துப்பிழை !


உனக்காக
உருகி உருகி
காதல் கவிதைகளை
எழுதுகிறேன் நான்...!

வாசிக்கும் உனக்கோ
கவிதைகளில்
என் காதலை விட,
எழுத்துப்பிழைகளே
கண்ணில் தெரிகிறது !

----அனீஷ் ஜெ...