கவிதை எழுத தெரியாதென்கிறாய்...!
அப்படியென்றால்
உன் கன்னத்தில் விழும் குழிகளுக்கு
என்ன பெயர்...?
***********************************************************************************
கவிதை எழுதுவது எப்படியெனக்கேட்டு கவலைகொள்கிறாய் நீ...! நீ பேசும் வார்த்தைகளை ஒரு காகிதத்தில் சேகரித்துவை...! கவிதை எழுத தெரியாதென்கிற - உன் கவலையும் நீங்கட்டும்...! ----அனீஷ் ஜெ...
என் இருமலின் இரைச்சல்களுக்கிடையில் நடு இரவின் நிசப்தங்களின் சத்தங்கள்...! சட்டென விட்டுச்சென்ற தூக்கத்தினால் கட்டிலின்மேல் விழித்துக்கொள்கிறேன்...! முதுமையும் தனிமையும் - என் முதுகை இழுத்து நகரமுடியாமல் செய்கிறது...! இதயத்தில் வழியே மெதுவாய் வலியொன்று பரவுகிறது...! இதயத்துடிப்புகளின் இடைவெளி குறைய, மூச்சுக்கும் மூச்சுக்குமிடையே மிகப்பெரியதோர் இடைவெளி...! என் கட்டளைகளுக்கு கட்டுப்படாமல் இமைகளோ இறுக மூடிக்கொள்ள முயல்கிறது...! மரணத்தின் கதவுகள் திறப்பதுபோல உணர்வு...! விரைவிலே நான் மண்ணாடு மண்ணாகிவிடலாம்...! ஆனாலும் எனக்கு அச்சமில்லை...! எழுபது ஆண்டுகள் வழ்ந்து முடித்துவிட்ட நான், இந்த மரணத்தின் நொடிக்காகதான் இரண்டாண்டுகளாய் காத்திருக்கிறேன்...! என்னை விட்டு விண்ணில் சென்ற, அவளோடு அடுத்த ஜென்மத்திலும் வாழ... ----அனீஷ் ஜெ...
உனக்காக உருகி உருகி காதல் கவிதைகளை எழுதுகிறேன் நான்...! வாசிக்கும் உனக்கோ கவிதைகளில் என் காதலை விட, எழுத்துப்பிழைகளே கண்ணில் தெரிகிறது ! ----அனீஷ் ஜெ...
அந்தச் சாலையில் தலை நிமிர்த்திக்கொண்டு என்னை கடந்து போனவர்களின் எந்த முகமும் எனக்கு தெரியவில்லை...! தலை குனிந்தவாறே என்னை கடந்து சென்ற அவளின் முகம் தவிர... ----அனீஷ் ஜெ...
அவளை மறக்க சொல்கிறேன் நான்...! முடியாதென்கிறது என் மனது...!! எனக்கும் என் மனதிற்குமான போட்டியில், சில சமயம் நான் தோற்றுவிடுகிறேன்...! பல சமயங்களில் என் மனது ஜெயித்துவிடுகிறது...!! ----அனீஷ் ஜெ...
வரவாக வந்தது ஆக மொத்தம் ஆறு...! செலவு செய்தது எண்ணிக்கையில் எட்டு...!! எப்படி கூட்டிக் கழித்தாலும் தினம் தினம் வரவை விட செலவே அதிகமாகிறது...! அவளுக்கும் எனக்குமான முத்தக்கணக்கில்... ----அனீஷ் ஜெ
திருப்பித் தந்துவிட்டாய்...! இரவலாகவா வாங்கிச்சென்றாய்...? நீ என் இதயத்தை... ---- அனீஷ் ஜெ...
பால் வண்ணமோ, பசும்பொன்னின் நிறமோ துளிகூட இல்லை அவளிடத்தில்...! சந்திரனின் ஒளியோ, சூரியனின் விழியோ இல்லை அவள் முகத்தில்...! கட்டி இழுக்கும் காந்தமோ, சுண்டி இழுக்கும் பார்வையோ சிறிதும் இல்லை அவள் கண்களில்...! மொட்டு விரிந்ததுபோல் சட்டென வீழ்த்தும் இதழ்களும் இல்லை...! பஞ்சு கன்னங்களோ, கொஞ்சும் குரலும் கொஞ்சம் கூட இல்லவே இல்லை அவளிடம்...! சல்லடையில் சலித்தெடுத்ததுபோல மெல்லிடையுமில்லை அவளுக்கு...! ஆனாலும் மனமோ அவள் மட்டுமே வேண்டும் என்கிறது...! ஏனென்றால், அவள் என் தேவதை... ----அனீஷ் ஜெ...
நீ பற்றவைத்தாய்...!
வெற்றுக் காகிதம் கூட
பட்டாசானது...!!
----அனீஷ் ஜெ...
ஊருக்கே கேட்குமளவுக்கு உரக்க கத்துகிறான் அவன்...! முறைக்கும் அவன் விழிகளுக்கு முதன்முதலாய் பயப்படுகிறேன் நான்...!! கவிதை சொன்ன அவன் விழியும், காதல் பேசிய குரலும் - என்னை கடித்து குதற காலம் பார்க்கின்றன...! முகம் முழுதும் பயத்தையும், அகமெங்கும் அன்பையும் சுமந்துகொண்டு அதையும் நான் அவனுக்கு தெரியாமல் ரசிக்கின்றேன்...! அவனுக்கு நான் அடங்கி போவதில் ஆணவம் அவனுக்கு...! எனக்கும்தான்... எதிர்த்து பேச எத்தனிக்கும் என் மனதை உள்ளுக்குள்ளே ஊமையாக்குகிறேன்...! அமைதியாய் - நான் அமர்ந்திருப்பதாலென்னவோ ஒரு நிமிடத்திலே - அவன் ஒருவழியாய் ஓய்ந்துவிடுகிறான்...!! இறுகிய அவன் முகமும் இருண்டொரு மணி நேரத்தில் இதழ் முத்தமொன்றில் இயல்பாகிவிடுகிறது...!! ஒருவரின் கோபத்தை குறைக்க இன்னொருவரின் மவுனத்தை தவிர இங்கு எளிய வழியொன்றுமில்லை...! பின்பொருநாள்... உரக்க கத்துதலில் ஆரம்பித்த என் கோபமும், அவன் மவுனங்களின் முடிவில் அவன் எனக்களித்த உதட்டுக்காயத்திலே முடிந்தது... ---- அனீஷ் ஜெ...