திரும்பிப்பார்த்தேன்...! திரும்பிக்கொண்டாள்...!! புன்னகைத்தேன்...! முகம் மறைத்தாள்...!! காத்திருந்தேன்...! விலகி நடந்தாள்...!! தொடர்ந்து சென்றேன்...! வேகமாய் மறைந்தாள்...!! பேசி நின்றேன்...! முறைத்து சென்றாள்...! பெயரை கேட்டேன்...! மவுனம் தந்தாள்...!! நலமா என்றேன்...! சாத்தானே போ என்றாள்...!! என் காதல் சொன்னேன்...! நான் யார் தெரியுமா என்றாள்...!! தெரியும் என்றேன்...! விழிகள் விரித்தாள்...!! நான் சொன்னேன்...! நீ என்பவள் நான் என்னும் சாத்தானின் தேவதை... ----அனீஷ் ஜெ...
அமைதியில்லாத இரவுகளில் அருகில் துணையாக நிலா...! நடுஇரவு தாண்டினாலும் நாங்கள் இருவரும் சலிக்காமல் பேசிக்கொள்கிறோம்...! பகலில் பார்த்த சூரியன், பக்கத்தில் பார்த்த நட்சத்திரம், பவுர்ணமியின் ரகசியம் என எதையும் விட்டுவைக்காமல் என்னிடம் கூறியது நிலா...! எதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்த என்னிடம், எதாவது பேசச்சொல்லி கேட்டுக்கொண்டது நிலா...! நானோ அவளைப்பற்றி பேசினேன்...! நீண்ட நேரம் பேசியபின் மீண்டும் சந்திக்கலாமென சொல்லி விடைபெற்றுக்கொண்டோம் நாங்கள்...! காலையில் கண்விழித்ததும் கண்ணெதிரே நின்ற அம்மா கேட்டாள்...! உறக்கத்தில் ஏன் உளறுகிறாய் என்று... ----அனீஷ் ஜெ...
பார்த்து பார்த்து
கவனம் ஈர்த்து, பின்தொடர்ந்து,
பின்பொருநாள் காதலை சொல்ல அன்றிலிருந்து இதயத்தில் ஒற்றிக்கொண்டேன் நான் உன்னை...! குறுகுறு பேச்சும், சிறுசிறு முத்தமும், மிகப்பெரும் சண்டையும், அதில்பெரிய அன்புமாய் காதலை வளார்த்தோம் நாம்...! அம்மா அழுதது, அப்பா திட்டியது, அண்ணன் அடித்தது என ஏதோ ஒரு காரணத்திற்காய் உனை விட்டு பிரிந்தேன் நான்...! துரோகி என்ற ஒரே வார்த்தை சொல்லி தூரம் சென்றுவிட்டாய் நீயும்....! உனக்காய் நான் அழுத என் இரவுகளின் சத்தங்களை - நீ கேட்டிருக்க வாய்ப்பில்லை...! நீயும் அழுதிருப்பாய்...! உன் புதுமனைவியுடன் உன்னை என் தோழி, கடைத்தெருவில் கண்டதாய் கண்டுவந்து சொன்னாள் இன்று...! நீ நலமாகத்தான் இருக்கிறாயாம்...! உன்னை தவறவிட்டதாய் கதறி அழ தோன்றியது எனக்கு...! உயிர்கொல்லும் வலிகளுமாய் உயிர்வாழ பழகிவிட்டாலும் சிலசமயம் மனதில் நினைத்துக்கொள்கிறேன்...!
என்னை பார்த்த அந்த முதல் பார்வையை நீ தவிர்த்திருக்கலாம்... ----அனீஷ் ஜெ... Written By : Anish J. Requested By : Varshini.
வழியில் எதிர்பட்ட வழிந்தோடும் நதியொன்றில் சடலங்கள் மிதந்துகொண்டிருந்தது...! கையில் அணிந்திருந்த கைக்கடிகார முட்களோ பின்னோக்கி நகரதொடங்கியது...! வானத்தில் பறந்த கானகத்தின் கழுகள் கண்களை கொத்த முயற்சித்தது...! அணையாத அக்னியும், ஆணிபோன்ற முட்களும் பாதையெங்கும் பரவிக்கிடந்தன...! நெளிந்து ஓடும் பாம்பும், ஒளிந்து தாக்கும் சிங்கமும் பின்தொடர்ந்தன...! கண்களில்லா முகமும் காலில்லா உடலும் கொண்ட மனிதர்கள் சிலர் துரத்திவந்தார்கள்...! ஆயிரம் டெசிபெல்லில் கத்தினாலும் நிசப்தத்தின் சத்தமே உதடுகள் வெளியேற்றியது...! சொர்க்கத்தை அடைந்த மனிதனொருவன் சொல்லிக்கொண்டிருந்தான் இவைகளை...! 'எப்படியிருந்தது பயணம்' எனக்கேட்ட கடவுளிடம்... ----அனீஷ் ஜெ...
காகிதத்தில் - உங்கள் காதலின் கண்ணீர்களால் ஈரம் செய்வேன்...! ஆணியே அறைந்தாலும் அதை சிறுமுள்ளின் வலியென ஆறுதல் சொல்வேன்...! சருகுகளை சிலசமயம் பூக்களென்பேன்...! தேனென்று நீங்கள் சொல்வதை விஷமென்றும் வாதிப்பேன்...! கனவுகளின் கதைகளை கவிதையாக்குவேன்...! இமையென்னும் ஜன்னல் திறந்தால் எனக்கு பிரபஞ்சமே தெரிவதாய் எண்ணிக்கொள்வேன்...! சோகங்களையும் நினைவுகளையும் சேகரித்து வைப்பேன்...! நீங்கள் சிரிப்பீர்களோ, சிந்திப்பீர்களோ, கண்ணீர் வடிப்பீர்களோ, கசக்கி எறிவீர்களோ - இதில் ஏதாவது ஒன்றை என் பேனாவாலேயே சாதிப்பேன்...! ஏனென்றால் நான் கவிஞன்... ----அனீஷ் ஜெ...
நீண்டதொரு சண்டை...! நானா அவளா எங்களில் யார் பேசுவதென எங்களுக்கே தெரியாமல் எங்களுக்குள் போட்டி...! எதிர்படும் நேரத்தில் ஒரு அலட்சியப் பார்வைகளுடன் கடந்துவிடுகிறோம் நாங்கள்...! சமையலறையில் அவள் தனியாய் உளறும் சத்தம் சரியாக என் காதில் விழவில்லை...! ஆனால் பாத்திரங்களின் உரசல்சத்தம் அதிகமாய் இன்று...!! சமைத்த உணவை சலிப்போடு என் முன்னே வைத்து சட்டென முகம்திருப்பி செல்கிறாள்...! இன்றும் எப்போதும்போல இந்த சமையலில் குறையேதும் இல்லை...! ஆனாலும் அது இது சரியில்லையென அவள் காதில்விழ கத்துகிறேன்...! முகம் திருப்பல்களும், முறைக்கும் விழிகளுமாய் சண்டை தொடர்கிறது....! இரவு முடிந்து, இனிய காலை விடிந்த இன்னொரு புதிய நாள்...! நேற்றைய சண்டையில் தோற்றுத்தர விருப்பமில்லாதவளாய் தொடர்கிறாள் அவள்... நானும் விட்டுக்கொடுப்பதாய் இல்லை...! எங்கள் இருவருக்குமான சண்டை இன்றும் தொடர்கிறது...!
துடைத்தெறியப்படாத நேற்றை இரவின் முத்தங்களின் ஈரங்களுடன்... ----அனீஷ் ஜெ...
உன் காலடி மண்ணை உள்ளங்கையில் பிடித்து - என் உயிருக்குள் தூவுமளக்கு உன் மேல் காதலில்லை எனக்கு...! பேருந்து நிறுத்தம், கடைத்தெரு என - நீ போகும் இடங்களில் காத்திருக்கவும் விருப்பமில்லை எனக்கு...! எதிர்படும் உன்னை என் விழிகளாலே வீழ்த்தும் எண்ணமில்லை எனக்கு...! பக்கத்தில் நீ வந்தால் படபடக்கவும் இல்லை...! தூரத்தில் நீ போனால் - நான் துயரம் கொள்ளவும் இல்லை...!! கனவுகளில் நீ வருவதில்லை...! காலையின் முதல் நினைவும் நீயில்லை...!! என்றாவது நீ என் கண்ணில்பட்டு மறையும்போது, இன்னொருமுறை பார்க்க - என் இருவிழிகள் தேடும் யாரோ ஒருவள் நீ...! ----அனீஷ் ஜெ...
பட்டாம்பூச்சிகள் பறப்பதை நான் பார்த்திருக்கிறேன்...! இன்று பட்டாம்பூச்சியொன்று துப்பட்டா சிறகுகளை காற்றிலசைத்து நடந்து செல்கிறது...! தேன்களையும் பூக்களையும் தேடியலைய தேவையில்லை உனக்கு...! தேன் தடவிய - உன் பூமுக இதழ்கள் இருக்கும் வரை... புழுக்கள்தான் பட்டாம்பூச்சியாக மாறுமென்பதை புத்தகமொன்றில் படித்திருக்கிறேன்...! பூவொன்று பட்டாம்பூச்சியாகுமென்பது புரிந்தது எனக்கு உன்னால்... அருகில் அமர்கிறாய்...! தொட நினைத்தால் தொலைவில் செல்கிறாய்...!! பட்டாம்பூச்சிக்கு நீ சற்றும் சளைத்தவளில்லை...!!! இதயகிளைகள் உனக்காய் இன்னொருமுறை முளைக்கிறது...! வந்து அமர்ந்துவிடு பட்டாம்பூச்சி பெண்ணே... ----அனீஷ் ஜெ...
உடையணிந்து உலாவரும் நிலா நீ...! நீ அணியும் வரை நிர்வாணமாகவே கிடந்தது நீ அணிந்திருக்கும் ஆடை...! உலகத்தின் அழகனைத்தையும், ஐந்தடி ஆடையொன்றில் அடைத்து வைக்க முடியுமா என்றொரு ஐயம் எனக்கின்று உன்னை பார்த்ததும் நீங்கியது...! நீ அணிந்தால், காற்றில் பறக்க கூட முந்தானைகள் விரும்புவதில்லை...! இறுக்கமான ஆடைகளை - நீ அணியும் போதெல்லாம் மூச்சு முட்டுகிறது...! ஆடைகளுக்கு... உன் உடையாக பிறக்காதது எனது துரதிர்ஷ்டம்...! உன் உடை தடவி செல்லும்
தென்றலாககூட பிறக்காதது எனது மிகப்பெரிய துரதிர்ஷ்டம்...!! ----அனீஷ் ஜெ...
வாசித்து முடிக்கும்முன் சலித்துப்போன புத்தகம்..! சுவாரசியம் தொலைந்தபின் பத்திரப்படுத்தி வைப்பதில் பலனேதும் இல்லை...! கிழித்தெறிந்து, அழித்துவிடலாமென அடிக்கடி கைக்குள் மடிக்கிறேன்...! மனசாட்சியில்லாமல் கொல்ல - ஏனோ மனம் கொள்ளவில்லை...! தனிமையில் உட்கார்ந்து திரட்டிய பக்கங்களையெல்லாம் புரட்டிப்பார்க்கிறேன்...! படித்து முடித்த எந்த பக்கத்திலும், என்னை மகிழ்ச்சிப்படுத்துமளவுக்கு எந்த காரணமும் இல்லை...! இன்று படித்த பக்கதிலும் இதேதான் தொடர்கிறது...! நம்பிக்கையுடன் நாளை எனும் பக்கததை நான் திருப்பிதான் ஆகவேண்டும்...! அடுத்த பக்கத்தில் அதிசயங்கள் காத்திருக்கலாம்...! அழவைப்பதற்கான காரணங்களும் இருக்கலாம்...!! அதுவாகமே முடியும்வரை - நான் வாசித்துக்கொண்டிருக்கவேண்டும்...! வாழ்க்கை எனும் புத்தகத்தை... ----அனீஷ் ஜெ...