
நீண்டதொரு சண்டை...!
நானா அவளா
எங்களில் யார் பேசுவதென
எங்களுக்கே தெரியாமல்
எங்களுக்குள் போட்டி...!
எதிர்படும் நேரத்தில் ஒரு
அலட்சியப் பார்வைகளுடன்
கடந்துவிடுகிறோம் நாங்கள்...!
சமையலறையில் அவள்
தனியாய் உளறும் சத்தம்
சரியாக என் காதில் விழவில்லை...!
ஆனால் பாத்திரங்களின் உரசல்சத்தம்
அதிகமாய் இன்று...!!
சமைத்த உணவை
சலிப்போடு என் முன்னே வைத்து
சட்டென முகம்திருப்பி செல்கிறாள்...!
இன்றும் எப்போதும்போல
இந்த சமையலில் குறையேதும் இல்லை...!
ஆனாலும் அது இது சரியில்லையென
அவள் காதில்விழ கத்துகிறேன்...!
முகம் திருப்பல்களும்,
முறைக்கும் விழிகளுமாய்
சண்டை தொடர்கிறது....!
இரவு முடிந்து,
இனிய காலை விடிந்த
இன்னொரு புதிய நாள்...!
நேற்றைய சண்டையில்
தோற்றுத்தர விருப்பமில்லாதவளாய்
தொடர்கிறாள் அவள்...
நானும் விட்டுக்கொடுப்பதாய் இல்லை...!
எங்கள் இருவருக்குமான சண்டை
இன்றும் தொடர்கிறது...!
துடைத்தெறியப்படாத
நேற்றை இரவின்
முத்தங்களின் ஈரங்களுடன்...
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
கணவன் மனைவி சண்டையை அழகான வரிகளாக்கியுள்ளீர்கள். அழகு,
ReplyDeletenice
ReplyDelete