28 Feb 2011

பள்ளிக்கூட பாடம்

பள்ளிக்கூட பாடம்


அந்த பக்கம்
முதல் பெஞ்சில் நீ...!
இந்த பக்கம்
கடைசி பெஞ்சில் நான்...!

நமக்குள்
இடைவெளி இருந்தாலும்,
இடையிடையே
நீ வீசும் - அந்த
ஓரப்பார்வையில்
நமக்குள் இருக்கும் - அந்த
தூரம் கூட உடையும்...!

நீ சமைத்த உணவு என்று
நீ சொல்வதாலென்னவோ,
உணவு இடைவேளைகளில்
உன் வீட்டு உணவில்தான்
நான் பசியாறியிருக்கிறேன்...!

என் வீட்டுப்பாட புத்தகத்தில்
எதையும் நான்
எழுதியதில்லை...!
என் வீட்டுப்பாட புத்தகத்திலுள்ள - உன்
அழகிய கையெழுத்தின்
அடையாளங்களை - எந்த
ஆசிரியரும் கண்டுபிடித்ததுமில்லை...!

பள்ளிக்கூடத்திலிருந்து
உன் வீடுவரைக்கும்
பழுதடைந்த சாலை...!
கால்களை பதம்பார்க்கும்
கரடுமுரடான கற்கள்...!
நடப்பதென்னவோ நீதான்...
வலிப்பதோ என் கால்கள்...

விடுமுறை நாட்களில்
விட்டுவிட்டு சாவதுபோல் உணர்வு...!

காதலா நட்பா
கண்டுபிடிக்கமுடியாத
கேள்வியாய் அந்த உணர்வு...

அன்றொருநாள்,
அதிக மதிப்பெண் வாங்கவில்லையென
ஆங்கில ஆசிரியர் - உன்னை
அடித்துவிடவே,
பள்ளிக்கூடம் முடிந்து
போகும் வழியில்,
என் தோளில் சாய்ந்து
அழுதாய் நீ...!

நினைவாய் அந்த நிகழ்வு...!

உன்னை நான் தொலைத்து
வருடங்கள் பலவாகிவிட்டது...!

உன் கண்ணீர் துளிபட்ட
என் சட்டையும்
பழையதாகி கிழிந்துபோய்
பலநாளாகிவிட்டது...!
ஆனால்,
அந்த கண்ணீர் துளியை மட்டும்
அடிக்கடி இப்போதும்
நான் உணர்வதுண்டு...!!
என் கன்னங்களில்...

----அனீஷ் ஜெ...

23 Feb 2011

சாலையோர மழைத்துளிகள்...

சாலையோர மழைத்துளிகள்...


மேகக்குடம் உடைந்து
மழைத் தண்ணீர்
மண்ணை நோக்கி
கசிந்துருக தொடங்கியது...!!!

கருவானத்தையும்,
காற்றையும் கிழித்துக்கொண்டு
மழைத்துளிகள்
வந்துகொண்டிருந்தது...!
விண்வெளியின் வழிகளில்...

மழைத்துளிகள்
மகிழ்ச்சி பயணம் செய்துகொண்டிருந்தது...!
மண்ணை நோக்கி...

காற்றின் இரைச்சலுக்கிடையிலும்
சில்லென்ற மழைத்துளி,
சிரிக்கும் சத்தம்
சிலுசிலுவென கேட்டது...!

மேகத்தை பிரிந்த
பிரிவின் வருத்தம்,
இன்று ஏனோ
இந்த மழைத்துளிகளுக்கு
சிறிதளவும் இல்லை...!

மழைத்துளியின்
மகிழ்ச்சியின் ரகசியம் - என்
மனதிற்கு ஏனோ புரியவில்லை...!

மறைந்திருந்து நோட்டமிட்டேன் நான்...!

பூமியை அடைந்ததும் ஏனோ
புதிய கவலையின் சுவடுகள்...!
மழைத்துளிகளின் முகத்தில்...

சாலையோர மழைத்துளிகளில்
இப்போது எஞ்சியிருப்பது,
ஏமாற்றத்தின் கவலைகள் மட்டுமே...

சாலையில் விழுந்த
மழைத்துளிகளின்,
முந்தைய மகிழ்ச்சிக்கும்,
இப்போதைய வருத்தத்திற்குமான
காரணம் புரிந்தது எனக்கு...!

ஆம்...!
மழைத்துளிகள்
ஏமாற்றமடைந்தது உண்மையே...!!

அந்த சாலையில்
என்னவள்
நடந்துபோய்க்கொண்டிருந்தாள்...!
கையில் குடையோடு...

----அனீஷ் ஜெ...

17 Feb 2011

பலிக்காத கனவு...

பலிக்காத கனவு...


அவள் என்னை
வேண்டாமென்று சொன்ன
அந்த நொடி
இட நெஞ்சில் இதயம்
வெடித்துவிட்ட வலி...!

ஒருதலையாய் காதலிப்பவனுக்கு சொல்லும்
ஒற்றை பதிலல்லவா இது...!
அவளும் நானும்
ஓருயிராய் ஆனபின்பும்
அவள் உதட்டில் இது
ஓடி வந்து அமர்ந்தது எப்படியோ...!!

வேண்டாம் என்று என் காதலை
வேரோடு சாய்த்துவிட்டாள்...!
அடி நெஞ்சில்
ஆணிவேரை ஊன்றி நிற்கும்
அவள் காதலை நான் என்ன செய்வது...?

வங்க கடலும்
கங்கை நதியும் இப்போது என்
கண்ணிர் துளிகளாய்...

சாகும் வரை - நான்
உன்னோடிருக்க வேண்டுமென,
என்றொ ஒருநாள்
என்னிடம் அவள்
சத்தியம் வாங்கிக்கொண்டதாய் ஞாபகம்...!

அவள் என்னோடிருக்கும் வரைதான்
நான் உயிரோடிருப்பேன் என்பதை
இனிமேல் எப்படி நான்
அவளுக்கு புரியவைப்பது...!

கடற்கரையோர காற்றில்
தனிமையை ரசித்திருக்கிறேன்...!
காகிததுண்டில்
கவிதை கிறுக்கும் நேரங்களிலும்
தனிமையை ரசித்திருக்கிறேன்...!

ஆனால்,
அவள் இல்லாத தனிமைகள் - என்
அடிநெஞ்சில் வலிக்கிறதே...!
நிலவில்லாத இரவிலும் - அவள்
நிழல் தேடி மனம் தவிக்கிறதே...!!

மறந்து சென்றுவிட்டவளை - என்னால்
மறக்க முடியவில்லை...!
அவளை சுமந்த - என்
இதய கிண்ணத்தில்
இன்னும் மிச்சமிருக்கிறது...!
கொஞ்சம் நினைவு பருக்கைகள்...
 

அவள் நினைவுகள் முடிந்தால்
என் இதயம் மறுபடியும்
காலியாகியும் விடலாம்...!
இல்லை கல்லாகியும் விடலாம்...!

காதலில் நான்
கற்றுக்கொண்டது,
காதலை மட்டும்தான்...

காதலொன்றும்
கடவுள் இல்லை...!

இமை மூடி
இருட்டில் காணும்
கனவுதான் காதல்...!

சிலருக்கு பலித்துவிடும்...!

எனக்கு என் காதலோ
பலிக்காத கனவு...

----அனீஷ்...

14 Feb 2011

காதல்...

காதல்...


உயிரோடு உயிர் வந்து
மோதிய கணத்தில்
உடைந்து உறைகிறது...!
காதல் துளிகள்...

இதயம் சுருங்கி விரிகையில்
உடலெங்கும்
உருகி பாய்கிறது...!
ரத்தத்தோடு காதலும்...

சிறகுகளில்லாமலே
சிகரங்களுக்கும் உயரே
படபடவென பறக்கிறது...!
காதல் தீண்டலில் மனது...

கோபத்தை விடவும்
அன்பைதான் அதிகம்
அடையாளம் காட்டியிருக்கிறது..!
ஊடல் பொழுதுகள்...

மெல்லிய மவுனங்கள்...!
செல்ல சண்டைகள்...!!
கொஞ்சல்கள் - சில
கெஞ்சல்கள்...!!!
காதலில் மட்டுமே
இவையெல்லாம் அழகாக...

உச்சிவெயில் நிலா....!
கொஞ்சிபேசும் சிலை...!!
விழிமீன் - சிரிக்கும்
இதழ்வழி தேன்...!!
பொய்களும் ரசிக்கப்படுவது
காதலில் மட்டும்தான்...

வெயிலில் நனைவதும்
மழையில் வியர்ப்பதும்
காதலிலே சாத்தியம்...!
கவிதைகளே அதற்கு சாட்சியம்...!!

காதல்
சிரிப்பையும் தருவதுண்டு
சிலசமயம் கண்ணீரையும் தருவதுண்டு...!
சிலரை கரை சேர்த்ததுண்டு...!
சிலரது கனவுகளை தகர்த்ததுண்டு...!!

வலிகளை தருவதென்று தெரிந்தாலும்
வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிறது மனது...!
காதல் செய்ய...

காரணம்...
காதலில் மட்டுமே உணரப்படுகிறது...!
வலிகள் கூட சுகமாக...

----அனீஷ்...

10 Feb 2011

ஹைக்கூ கவிதை - உன் கண்கள்

ஹைக்கூ கவிதை - உன் கண்கள்


வெள்ளை வானம்...!
கறுப்போடு கலந்த
நீல வண்ணத்தில்
நிலவுகள் இரண்டு...!!
அதிசயமாகிறது என் இரவுகள்...!!!
கனவில் உன் இரு கண்கள்...


***********************************************************************************


எச்சிலின் அடையாளங்கள்...!
ஆனாலும் எனக்கு
துடைக்க மனமில்லை...!!
என் கன்னத்தில்
உன் உதட்டுச் சுவடுகள்...

----அனீஷ் ஜெ...


4 Feb 2011

என் தோழியாய் நீ...

என் தோழியாய் நீ...

தனிமையான
என் பயணங்கள்...!

பாலைவனமாம் என் மனதில்

பருவமழை போல்
பெய்தாய் நீ...!!

தனிமையில்

நடந்த எனக்கு
நட்புக்கரம் தந்து
நிழல் போல் துணையானாய்....!

உன் சந்தோஷங்களை

எனக்கு பரிசளித்து விட்டு
என் கவலைகளை நீ
களவாடிச் செல்கிறாய்....!

சின்னதாய் இப்போது ஒரு

சிறகு முளைத்ததாய் உணர்வு...!
உன் நட்பு கிடைத்தபின்
உயரத்தில் பறக்கிறேன் நான்...!!

நட்பாய் நீ என்

நரம்புகளில் பாய்கிறாய்...!
தோழியாய் நீ என்
சுவாசமாகிறாய்...!!

உன் நட்ப்பென்னும்

விரல் பிடித்து நடப்பதால்-இனி
விண்வெளிக்கு மேலே சென்று
விளையாடி வருவேன்...!

நட்ப்போடு சாய்ந்துகொள்ள-உன்

தோள்கள் இருப்பதால் இனி
தோல்விகளை கூட
தோற்கடித்து விடுவேன்...!!

ஆகாயம் ஒருநாள்

அழிந்து போகலாம்...!
உலகம் ஒருவேளை
உடைந்து போகலாம்...!!

ஆனாலும்

என் ஆயுள் முடியும் வரை
எனக்கு வேண்டும்...!
என் தோழியாய் நீ....

----அனீஷ் ஜெ...

31 Jan 2011

எங்கிருந்தோ நான்...

எங்கிருந்தோ நான்...


மாலை நேரம்...!
மணி ஐந்து...!!

கரை மீது கொண்ட
காதலால்
கடற்க்கரையை
கட்டியணைத்துக் கொண்டிருந்தது...!
கடல் அலை...

அந்த கடற்க்கரையோரம்
அவளுக்காய் காத்திருந்தேன்...!
நான்...

எப்போதும்
எனக்கு முன்னே வந்து
எனக்காக காத்திருப்பவளை
இன்று ஏனோ -நான் வந்து
இருபது நிமிடமாகியும் காணவில்லை...!

யோசித்துக்கொண்டிருந்த
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்
அவள் வந்தாள்...!

முழுநிலவாய் மின்னும் -அவள்
முகத்தில் இன்று
பிறை நிலவாய் ஏதோ
குறை தெரிந்தது...!

என்
பக்கத்தில் அமர்ந்து
பல கதைகள் சொல்பவள்
இன்று ஏனோ
இடைவெளி விட்டு நின்றாள்...!

எல்லாமே
எனக்கு புதிதாயிருந்தது...!

அவள் முகத்தையே
பார்த்து நின்றேன்...!

அவள் கண்களுக்குள்
கண்ணீர் துளி...!
என் இதயம் இப்போது
மவுனமாய் அழுதது...!!

கண்ணீர் துளிகளுக்கு
காரணம் கேட்டேன்...!
மவுனமே பதிலாய் கிடைத்தது...!!

இன்னொருமுறை கேட்டேன்...!
இப்போதும் மவுனமே பதிலானது...!!

அரைமணி நேரம்
அதே மவுனம்...!
அதற்க்குள்
ஆயிரம் முறை செத்துப்பிழைத்தது....!!
என் இதயம்...

அரைமணி நேரம் கழிந்து
அவள் வாய் திறந்தாள்...!

என்னை நீ
மறந்துவிடு என்றாள்...!
மறுத்தேன் நான்...!!

நீதான் என் உயிர் என்றவள் -இப்போது
நீங்கிப்போக சொல்கிறாள்...!
மரணம் உன் மடியில் என்றவள் -இப்போது
மறந்து போக சொல்கிறாள்...!!

இதயத்திற்க்குள்
இடி தாக்கியது போல்
இப்போது எனக்கு உணர்வு...!!

என்
உதடுகளோ பேசத்தெரியாமல்
ஊமையாகி நின்றது...!
கண்கள்
கண்ணீர் துளிகளாய் பேசியது..!!

விளக்கம் சொல்ல
விரும்பவில்லை அவள்...!
விலகி நடக்க தொடங்கினாள்...!!

தூரத்தில் அவள்
புள்ளியாய் மறையும் வரை
அவளை பார்த்து நின்றேன் நான்...!

என் கால்களோ
எனக்கே தெரியாமல்
ஆழ்கடலை நோக்கி
பயணமானது...!

அன்றிலிருந்து இரண்டாவது நாள்...

அவள் வீடு...

அன்றைய நாளிதளை
அவள் புரட்டிக்கொண்டிருந்தாள். ..!

அதன் ஆறாவது பக்கம்...
கடற்கரையோரம்
அடையாளம் தெரியாத
ஆண் பிணம்...!
அருகில் என் புகைப்படம்...!!
அலறினாள் அவள்...!!!

பார்த்தவள்
பதறியடித்துக்கொண்டு ஓடினாள்...!

ஊரே கூடியிருக்க
உயிரில்லாமல் கிடந்தேன் நான்...!
மூச்சு நின்று
மூன்று நாட்க்களாயிருந்தது...!!

அரைமணி நேரத்தில்
அங்கு வந்தாள் அவள்...!

உயிரில்லாத என்னை கண்டு -அவள்
உடலே நடுங்கியது...!
கட்டிப்பிடித்து
கதறினாள் அவள்...!!

ஆசையிருந்தும்
ஆறுதல் சொல்ல முடியாமல் நான்...!

மரித்துக்கிடந்த என்னிடம்
மறந்துவிட சொன்னதற்க்காய்
மன்னிப்பு கேட்டாள்..!

என்னை கட்டி அணைத்தப்படி
விட்டுப்போகாதே என அழுதாள்...!

எனக்கே தெரியாத
ஏதோ ஓரிடத்திலிருந்து
நடப்பதையெல்லாம்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான்
எனக்குள் நினைத்துக்கொண்டேன்....!
ஓ... கடவுளே...!
இந்த ஜென்மம் முழுவதும்
இவளோடு வாழ
நான்
உயிரோடிருந்திருக்க கூடாதா....

----அனீஷ் ஜெ...

26 Jan 2011

ஈரம்...

ஈரம்...

 

வெண்மேகம் கொஞ்சம் கொஞ்சமாய்
கருமேகமாய்
உருமாறிக்கொண்டிருந்தது...!

அமைதியாய் வீசி நின்ற
அழகிய தென்றல் காற்று,
அப்போதுதான்
ஆக்ரோஷமானது...!

வானத்தின் ஜன்னலை
கிழித்து வந்த மின்னல் ஒளி - என்
கண்ணெதிரில்
காற்றில் பட்டு தெறித்தது...!

சத்தங்களை
சலிப்பில்லாமல்
பிரசவித்துக்கொண்டிருந்தது
பின்னால் வந்த இடி முழக்கம்...!

மழைத்துளிகள் மண்ணிலே
புள்ளி வைக்காமல்
புதியதாய் ஒரு
நீர்க்கோலம் போட தொடங்கியது...!

என் வீட்டு திண்ணையில் நான்...!

மழையையும்,
மழையின் சலசலப்பையும்
என்றுமே நான் ரசித்ததில்லை...!

அப்போது ஏனோ
அடைமழையை ரசிக்க சொன்னது...!
அடி மனது...

மழையையும்,
மழைத்துளி சத்தத்தையும்
ரசிக்க பிடிக்குமென
என்றோ ஒரு நாள் - அவள்
என் காதில் சொன்னதாய் ஞாபகம்...!

மறந்து கிடந்த
மனதிற்குள்
மறுபடியும் மரணவலி...!

துடிக்கும் இதயம்
சட்டென்று
வெடித்தது போல் ஒரு உணர்வு...!

மழையில் நின்று கொண்டு
அவள் என்னை
அழைப்பது போல் இருந்தது...!

மழையில் நனைந்தால்
மறுநாளே அவளுக்கு
காய்ச்சல் வந்துவிடுமே...!
மழையில் குதிப்பவளை
கைகளால் கட்டியணைத்து
கரையேற்ற வேண்டும் போலிருந்தது...!

முட்டாள் நான்...!
இன்னும்
நிழல்களையும், பிம்பங்களையும்
நிஜமென்று
நினைத்துக்கொண்டிருக்கிறேன்...!

சிந்தி விழுந்த மழைத்துளியும்
என்னைப் பார்த்து
சில்லென்று
சிரிப்பது போலிருந்தது...!

மழைத்துளிகளுக்கிடையில்
மறுபடியும் ஒருமுறை - அவள்
முகத்தை தேடினேன்...!

கடைசியாய் சந்தித்த அன்று
மறந்துவிட சொல்லி
அவள் எங்கோ
மறைந்து போனது -என்
மனதிற்க்குள் இப்போது கனத்தது...!

தலைசாய்த்துக்கொண்டு
அப்படியே கண்மூடினேன் நான்...!

நான் கண்விழித்து பார்க்கும் போது
மழை மொத்தமாய்
நின்றுபோயிருந்தது...!

மண்ணை தொட்ட
மழைத்துளியின் ஈரம் - என்
கண் முன்னே மெதுவாய்
காணாமல் போய்க்கொண்டிருந்தது...!

ஆனால்,
என் கண்ணீர் நனைத்த
என் கன்னங்களும்,
அவள் நினைவுகள் நனைத்த
என் மனதும்
இன்னும் ஈரமாகவே இருந்தது...!

----அனீஷ் ஜெ...
 

20 Jan 2011

எனக்காய் படைக்கப்பட்டவள் அவள்...

எனக்காய் படைக்கப்பட்டவள் அவள்...


காதல்...!
என்னையும் அவளையும்
கட்டி இழுத்த
ஒற்றை காந்தம்...!!

இதயப் பரிமாறல்கள்
எங்களை இடமாற்றியது...!
இப்போது
நான் அவளிடத்திலும்,
அவள் என்னிடத்திலும்...

என் கறுப்பு கனவுகளுக்கு
காதலால் வண்ணம் பூசியவள் அவள்...!
ஒரு சொட்டு காதலால்
என்னை தொட்டுப்போனவள் அவள்...!!

சின்ன ஊடல்கள் இருந்தாலும் - என்
சிறு இதயம் துடிப்பதோ அவளுக்காகதான்...!

சுவாசிப்பதால் இல்லை...!
அவளை நேசிப்பதால்தான்
உயிரோடிருக்கிறேன் நான்...

இரு மனங்களும் பக்கத்தில்...!
ஆனால்
நாங்களோ தூரத்தில்...

பவுர்ணமி வானத்திலும்
பார்க்க முடியவில்லை நிலவை...!
இதயத்திற்க்குள் தங்கியிருந்தும்
இன்னும் பார்க்கவில்லை அவளை...!!

ஆசைகள்
அடிநெஞ்சில் குடியிருக்க
அவள் நினைவுகள்தான்
ஆகாரம் எனக்கு...!

இமைகளை மூடிக்கொண்டால்
இருள் தெரியவில்லை...!
அவள்தான் தெரிகிறாள்...

அவளிடம் பேச என்னிடம்
ஆயிரம் கதைகள் இருக்க - அவள்
காதுகள் ஏனோ
கண்ணுக்கெட்டாத தூரத்தில்...

தொலைவில் இருந்தாலும்
நினைவுகளில் தான்
விருப்பங்கள்
நெருக்கம் கொள்கிறது...!

ஆகாயத்திற்க்கு கீழ் பூமியில்
அவள் கடைசி பெண்னில்லை...!
ஆனாலும்
அவள் படைக்கபட்டதோ
எனக்காகத்தான்...

நித்திரையை மறந்து
நித்தம் அவளை நினைத்து
காத்திருந்தேன் நான்...!
அவளை சந்திக்க...

கடைசியில்,
காத்திருந்து
சந்தித்தேன் அவளை நான்...

மணிக்கணக்கில் பேசுபவள்
மவுனங்களால் பேசினாள் அன்று...!
வெழுத்திருந்த கன்னங்களோ
வெட்கங்களால் சிவந்தன...!!

பேச நினைத்ததெல்லாம்
உதடுகளுக்குள்ளேயே
உயிர் விட்டது...

புன்னகைத்தவள்
மவுனத்தால் புதிர் போட்டள்...

கடைசியில் மவுனங்கள் கரைய
மலரிதழ்கள் விரிய
வாய் திறந்தாள் அவள்...

நிறையவே பேசிக்கொண்டோம் அன்று...

இதயங்கள் இன்னும்
இறுக்கமாகி நெருக்கமானது...!

சோகங்கள்...!
கோபங்கள்...!!
எதிர்ப்புகள்...!!!
எல்லாவற்றையும் மீறி
எனக்கு சொந்தமானாள் அவள்...

அவள்
விரல் பிடித்தேன் நான்...

கனவுகண்ட வாழ்க்கை...!
கவலையற்ற வாழ்க்கை...!!
கைகூடியது எனக்கு...

கோடி சந்தோஷம்
கூடி வந்த உணர்வு...

வாழ்க்கை பாதையில்
அவளோடு சேர்ந்த பயணம்...!
அளவில்லாமல் மகிழ்கிறேன் நான்...

காலங்கள் கரைந்தோட
வயதாகிப் போனது எனக்கு...

பறிபோன பற்கள்...!
குழி விழுந்த கண்கள்...!!
நரைத்துப்போன தலை...!
உளறும் உதடுகள்...!!

தளர்ந்து போன கால்களோ
தரையில் பயணிக்க
தயக்கம் காட்டுகிறது...!

ஆனாலும்,
தள்ளாடும் வயதிலும் நான்
சந்தோஷமாய்
பயணித்துக்கொண்டிருக்கிறேன்...
எனக்கு துணையாய் வரும்
அவள் விரல்களை பிடித்துக்கொண்டு.....

----அனீஷ்...

17 Jan 2011

பாழாய்ப்போன மனசு!

பாழாய்ப்போன மனசு!


உன்
விழிகள் ஏற்றி வைத்த
பார்வை விளக்குகள்தான் - என்
இதயம் முழுவதும்
இடைவிடாமல் பற்றி எரிகிறது...!

உன்
முக தரிசனங்களோ,
கோடை மழையையும்
பகல் நிலவையும்
பார்த்த பரவசம் தருகிறது...!

உன்
மவுனப் புன்னைகை
உதிர்த்த சத்தமோ,
என் உயிரின் நுனியில்
எங்கோ ஓங்கி ஒலிக்கிறது...!

உன்
கன்னப் புத்தகத்தில்
கவிதை எழுத,
என் உதட்டுப் பேனா
எப்போதும் காத்துக்கிடக்கிறது...!

உன்
கைவிரல் அசைவுகளில்
காற்றும் வீணையாகி,
சத்தமில்லாமல் - ஒரு
சங்கீதத்தை தர தவமிருக்கிறது...!

உன்
துப்பட்டா மறைத்த பாகங்கள்
ஈட்டி முனையாய்,
தேடி என் இதயத்தை தாக்க,
தேகமெங்கும் காதல் காயம் படர்கிறது...!

உன்
பாதங்கள் இரண்டும்
பாதையில் நடந்தாலும் - என்
பாழாய்ப்போன மனசுதான் -உன்னை
பத்திரமாய் சுமப்பதாய் நினைக்கிறது...!

----அனீஷ்...